ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2014
00:00

தொடர்ந்த இணையத் தொடர்பு, இக்கால வாழ்க்கையில் அத்தியாவசியத் தேவையாக மாறிவருகிறது.
இதற்கென அனைவரும் லேப் டாப் கம்ப்யூட்டரையும், இணைய இணைப்பு பெற டேட்டா கார்ட் என அழைக்கப்படும் இணைய சிறிய மோடங்களையும் எடுத்துக் கொண்டு அலைய முடியாது. இந்த தேவையை நிறைவு செய்திடவே, நமக்கு ஸ்மார்ட் மொபைல் போன்கள் அதிக அளவில் வந்துவிட்டன. அனைவரும் வாங்கும் வகையில், பட்ஜெட் விலையிலும் இவை கிடைப்பதால், அநேக மக்கள் இவற்றை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே பயன்படுத்தப்படுகிறது. அடிப்படை போன்களில் கீ போர்டுடனும், அழைப்புக்கான பட்டன்களுடனும், முகவரிகளில் ஒருவகையான தேடும் வசதியுடனும் மட்டும் பழகி வந்த மக்கள், ஸ்மார்ட் போன்கள் தரும் நவீன வசதிகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இதற்குக் காரணம் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் தரும் வசதிகள் குறித்தும், அவற்றை அமைத்து இயக்கும் வழிகள் குறித்து அறியாமல் இருப்பதுவும் தான். இங்கு அவற்றின் சில முக்கிய வசதிகள் குறித்துப் பார்க்கலாம்.

நிறுவனங்கள் தரும் சில வேறுபாடுகள்: நீங்கள் வாங்கிப் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனை எந்த நிறுவனம் தயாரித்து வழங்கி உள்ளது என்ற அடிப்படையில் சில மேம்போக்கான வேறுபாடுகள் இருக்கலாம். இவை பெரும்பாலும், தொடக்க திரை தரும் மெனுக்களில் மட்டுமே இருக்கும். மற்ற இயக்க பயன்கள் பொதுவானதாகவே இருக்கும். எச்.டி.சி. மற்றும் சாம்சங் போன்களில் அனைத்துமே ஒரே மாதிரியாகத் தரப்பட்டிருக்கும். ஆனால், இந்த வேறுபாடுகள் குறித்து யாரும் கவலைப்படத் தேவை இல்லை.
உங்களுடைய பழைய மாடல் போனில், அழைப்புகளை ஏற்படுத்தலாம், பெறலாம், டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பலாம். படங்களை எடுக்கலாம், பார்க்கலாம். ஆனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட போனிலும் இவற்றை மிக நன்றாகவும், திறன் கூடியதாகவும் மேற்கொள்ளலாம். இருப்பினும் ஒரு வேறுபாடு உள்ளது. ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இயக்கத்தின் அடிப்படை அவற்றின் அப்ளிகேஷன்களே. இவற்றை Apps என அழைக்கின்றனர். நாம் ஆண்ட்ராய்ட் போனில் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளும், இந்த ஆப்ஸ் என்ற அப்ளிகேஷன்கள் வழிதான் மேற்கொள்ளப்படுகின்றன. உங்கள் போன் திரையின் (Home Screen) கீழாக, போன் ஐகான் உள்ளதா? அதனைத் தொடுங்கள். உடனே அழைப்பு ஏற்படுத்துவதற்கான திரை கிடைக்கும். இதனுள்ளாக, அழைப்புகளை ஏற்படுத்தலாம், வாய்ஸ் மெயில் இயக்கலாம், நீங்கள் ஏற்படுத்திய, பெற்ற அழைப்புகளின் பட்டியலைக் காணலாம். முகவரிகள் பட்டியல் கிடைக்கும். உயர் வகை ஆண்ட்ராய்ட் போன் என்றால், இந்த முகவரிகளை குழுவாகப் பிரித்து அமைக்கலாம். பட்டியலில் உள்ள எண்களைக் கொண்டவர்களின் மின் அஞ்சல் முகவரிகளையும் பதிந்து வைக்கலாம்.

மெசேஜ் அனுப்பும் வசதி: உங்கள் போனைப் பொறுத்து, இது Messages அல்லது Messaging என அழைக்கப்படும். நவீன போன்களில், Hangouts அப்ளிகேஷனிலும் டெக்ஸ்ட் மெசேஜ் கையாளலாம். மெசேஜிங் ஐகான அழுத்திக் கிடைக்கும் திரையில், ஒரு + ஐகான் கிடைக்கும். இதனை அழுத்தினால், புதிய மெசேஜ் ஒன்றை அமைக்கலாம். டெக்ஸ்ட் மெசேஜ் ஒன்றை அனுப்ப அதனைப் பெறுபவர் (recipient) குறித்த தகவல்கள் இருக்க வேண்டும்.
காண்டாக்ட்ஸ் (contacts): நம் டெக்ஸ்ட் மெசேஜைப் பெறுபவர் எண் நம் முகவரிப் பட்டியலில் இருக்கும். இவற்றிலிருந்து டெக்ஸ்ட் பெறுபவரின் எண்ணைத் தேர்ந்தெடுத்தால், அது தானாக அமைக்கப்படும். அல்லது புதிய எண்ணையும் டைப் செய்து அமைக்கலாம். ஏற்கனவே உள்ளவருக்கு அனுப்ப வேண்டும் எனில், முகவரிகள் பக்கத்தில் கிடைக்கும் தேடல் கட்டத்தில், விரலை அழுத்த, கர்சர் ஒன்றும், கீழாக டைப் செய்திட, ஆன் ஸ்கிரீன் கீ போர்ட் ஒன்றும் கிடைக்கும். இந்த கீ போர்டில் எழுத்துக்களை ஒவ்வொன்றாக அமைக்கும் போதே, அந்த எழுத்துக்குரியவர்களின் பெயர்ப் பட்டியல் காட்டப்படும். முழுமையாக அமைக்கும் முன்னரே, முகவரி பட்டியலில் உள்ள, டெக்ஸ்ட் பெறுபவரின் பெயர் காட்டப்படும். அதனை ஏற்கும் வகையில், கீ போர்டில் எண்டர் அழுத்தினால், அவருக்கான எண் இடம் பெறும். ஒரே செய்தியைப் பலருக்கு அனுப்பவும் இதில் வசதி தரப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஹோம் ஸ்கிரீன்: போன் இயக்கத்திற்கு வரும்போது நமக்குக் கிடைக்கும் ஸ்கிரீன் இது. இதனை நாம் செட் அப் செய்திட வேண்டும். நமக்கு அப்ளிகேஷன்கள் (apps) தான் முக்கியம் என்பதால், நம் போனில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு “all apps” என்ற ஐகானை அழுத்தலாம். அழுத்தியவுடன் கிடைக்கும் திரையை ஹோம் ஸ்கிரீன் ஆக வைத்துக் கொள்ளலாம். இதனை app drawer எனவும் அழைக்கின்றனர். அப்ளிகேஷன் ஒன்றை இந்தத் திரையில் அமைத்திட வேண்டும் என்றால், அதன் ஐகானில் விரல் வைத்து, அழுத்தியவாறே இழுத்துத் திரையில் விட்டுவிடலாம். இப்படியே எத்தனை ஹோம் ஸ்கிரீன்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். உங்கள் ஹோம் ஸ்கிரீனில் உள்ள அப்ளிகேஷன் ஐகான், அந்த அப்ளிகேஷனுக்கான ஷார்ட் கட் தான். ஏதேனும் ஒரு ஹோம் ஸ்கிரீனை நீக்க வேண்டும் எனில், அதில் உள்ள ஐகான்கள் அனைத்தையும் நீக்கிவிட்டால், அந்த ஸ்கிரீனும் மறைந்துவிடும். அப்ளிகேஷன்கள் ஐகான்களை நீக்க, அவற்றின் மீது விரலை வைத்து X என்னும் அடையாளம் கொண்ட இடத்தை நோக்கி இழுத்துவிட வேண்டும். இதனால், அப்ளிகேஷன் உங்கள் போனில் இருந்து நீக்கப்படாது. ஷார்ட் கட் மட்டுமே மறையும்.

விட்ஜெட்ஸ் (Widgets): அப்ளிகேஷன்களுக்கான ஷார்ட்கட் ஐகான்கள் மட்டுமின்றி, விட்ஜெட்கள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும். இதனை interactive tool என்றும் கூறலாம். ஒரு விட்ஜெட், அப்ளிகேஷன் அல்லது சேவை ஒன்றின் குறிப்பிட்ட அளவினைப் பெற்றுப் பயன்படுத்த உதவுகிறது. நாம் ஹோம் ஸ்கிரீனை விட்டு விலகாமலேயே சேவையைப் பெறலாம். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், இவை நமக்கு நம் நேரத்தை மிச்சப்படுத்துகின்றன. எடுத்துக் காட்டாக, சீதோஷ்ண நிலையைக் காட்டும் அப்ளிகேஷன் ஒன்றில், அதனை அறிய முழுமையாக அதனை இயக்காமல், குறிப்பிட்ட முக்கிய இடத்தின் சீதோஷ்ண நிலையை மட்டும் அறியலாம். பங்கு விலை தகவல், காலண்டரில் குறித்து வைத்திருக்கும் வர இருக்கும் நிகழ்வுகள், அண்மையில் வந்த மின் அஞ்சல்கள் போன்றவை விட்ஜெட்
களுக்கான எடுத்துக் காட்டுகள். அப்ளிகேஷன் ஷார்ட்கட்களை இணைப்பது போல, விட்ஜெட்டுகளையும் தேர்ந்தெடுத்து, இழுத்து, திரையில் நாம் விரும்பும் இடத்தில் அமைக்கலாம்.
வை பி, மொபைல் டேட்டா மற்றும் பிற (Wi-Fi, Mobile Data, And More): பழைய மொபைல் போன்களில், நமக்கு அளிக்கப்படும் தொடர்பு குறித்து நாம் எதுவும் செய்திட முடியாது. நமக்கு சிக்னல் கிடைக்காத போது, நாம் உள்ள இடத்தில் இருந்து சற்று விலகிச் சென்று முயற்சிக்கலாம். ஆனால், அதுவும் உறுதியாக சிக்னலைத் தரும் என்று சொல்ல முடியாது. ஆனால், இப்போது பழக்கத்தில் உள்ள ஸ்மார்ட் போன்களைப் பொறுத்தவரை, அதனை இணைக்கும் தொழில் நுட்பம் குறித்து பல சொல்லாடல்களைச் சந்திக்கிறோம். வை பி, 3ஜி, புளுடூத் மற்றும் எல்.டி.டி. (Wi-Fi, 3G, Bluetooth, and LTE) எனப் பல சொற்கள் நமக்குப் பழக்கமாகின்றன. இவை என்ன? இவை என்ன

மாதிரியான இணைப்பினை நமக்குத் தருகின்றன?
வை பி: இது வயர் எதுவுமின்றி நமக்கு, நாம் இருக்கும் இடத்திற்குள்ளாகவே (local area connection) கிடைக்கும் இணைப்பு. எந்த வயர் இணைப்பும் இன்றி, இணையத் தொடர்பினை இது நமக்குத் தரக்கூடியது. பொதுமக்கள் கூடும் இடங்களான விடுதிகள், வணிக வளாகங்கள், விமான, ரயில் நிலையங்களில், “இங்கு வை பி இணைப்பு இலவசமாய்க் கிடைக்கும்” என்றோ, “ இந்த வளாகம் வை பி இணைப்பில் உள்ளது” என்றோ அறிவிக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். வீட்டிலும் சரி, பொதுவான பெரிய இடங்களிலும் சரி, இந்த இணைப்பினைத் தர, இணைய இணைப்பும் அதன் சிக்னல்களை பரப்பிட, வயர்லெஸ் ரெளட்டரும் இருந்தால் போதும். நம் ஸ்மார்ட் போனை, வீட்டில் உள்ள வை பி இணைப்பில் எந்தவித பயமும் இன்றிப் பயன்படுத்தலாம். ஆனால், பொது இடங்களில், சற்று கவனத்துடனேதான் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், உங்கள் பயன்பாட்டினை, அதே இணைப்பினைப் பயன்படுத்தும் மற்றவர்களும் தெரிந்து கொள்ள முடியும். எனவே, வங்கிக் கணக்கு போன்ற உங்கள் தனி நபர் தகவல்களை அத்தகைய இணைப்புகளில் பயன்படுத்தவே கூடாது.
பொதுவாக, இத்தகைய வை பி இணைப்புகளில் கிடைக்கும் சிக்னல்கள், ரெளட்டர் அருகே மிகவும் சிறப்பாகவும், அதைவிட்டு விலகும் தூரங்களில் சற்று குறைவான திறனுடனும் கிடைக்கும்.

மொபைல் டேட்டா: மொபைல் டேட்டா அல்லது டேட்டா (Mobile Data or Data) நம் ஸ்மார்ட் போனிற்கு சேவை செய்திடும் நிறுவனம் வழங்கும் இணைய இணைப்பினை இது குறிக்கிறது. அந்நிறுவனம் தரும் இணைய இணைப்பிற்கான சிக்னல், சிறப்பாகக் கிடைக்கும் இடங்களில் இதனை நன்கு பயன்படுத்தலாம். இந்த நெட்வொர்க் இணைப்பு 3ஜி, 4ஜி அல்லது எல்.டி.இ. ஆக இருக்கலாம். 3ஜி, 4ஜி நமக்கு தெரிந்தவை தான். எல்.டி.இ. (Long Term Evolution)என்பது இப்போது வந்திருக்கும் அதிவேக நெட்வொர்க் இணைப்பாகும். குறிப்பாக போன் போன்ற மொபைல் சாதனங்களுக்கான தொழில் நுட்பமாகும்.

ஜி.பி.எஸ்.: இந்த வசதி, உங்கள் மொபைல் போனை, இவ்வுலகில் அதன் இடத்தினைத் துல்லியமாகக் காட்டும். இதற்கு இணைய இணைப்பு தேவை இல்லை. வை பி அல்லது மொபைல் டேட்டாவும் தேவை இல்லை. எனவே, எந்த இடத்திலும் இதனைப் பயன்படுத்தலாம்.

புளுடூத்: குறுகிய தூரத்தில் சாதனங்களுக்கிடையே, வயர்கள் இல்லாமல் இணைப்பினை ஏற்படுத்தி, தகவல் பரிமாற்றத்திற்கு உதவக் கூடியது. இதன் மூலம் ஆடியோ சிக்னல்களை, வீடியோ மற்றும் பிற பைல்களை பரிமாறிக் கொள்ளலாம். இதற்கு இணைய இணைப்போ, மொபைல் டேட்டாவோ தேவை இல்லை. இப்போது கார்களில் அமைக்கப்பட்டுள்ள ஆடியோ சாதனங்களுடன், புளுடூத் மூலம் நம் மொபைல் போன்களை இணைத்து போன் இல்லாமல் பேசலாம்.

ஏரோ பிளேன் மோட்: இந்த நிலைக்கு போனைக் கொண்டு சென்றால், நமக்கு அழைப்புகள் வசதி துண்டிக்கப்படும். இணைய இணைப்பு கிடைக்காது. ஆனால், போனில் விளையாட்டுக்களை விளையாடலாம். இசையைக் கேட்கலாம். விமானப் பயணத்தின் போது கூட இதனைப் பயன்படுத்தலாம்.

இனி ஒவ்வொரு நாளும்: மேலே சொன்ன நெட்வொர்க் வசதிகளைப் பயன்படுத்தாத போது, அவற்றை பயன்படுத்தா நிலையில் (off) வைத்திட வேண்டும். ஏனென்றால், அவை இயக்கத்தில் இருக்கும்போது, பேட்டரியின் சக்தியை எடுத்துக் கொண்டே இருக்கும். புளுடூத் கூட, பயன்படுத்தாத போது, அணைக்கப்பட வேண்டும். இது மிக எளிது. அந்த ஐகானை ஒருமுறை தொட்டால் இயங்கும்; இன்னொரு முறை தொட்டால் இயக்கம் முடக்கப்படும். இது வை பி இணைப்பிற்கும் பொருந்தும்.
மற்ற வசதிகள் நீங்கள் ஏற்கனவே சாதாரண மொபைல் போனில் பயன்படுத்தியவை தான். மேலே தரப்பட்டுள்ளவற்றில் ஏதேனும் புரியவில்லை என்றால், இணையத்தை நாடவும். நிறைய குறிப்புகள் கிடைக்கும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X