வர இருக்கும் செப்டம்பர் மாதம், புதிய ஸ்மார்ட் போன்களைத் தேடி வாங்க இருப்பவர்களுக்கு சரியான விருந்து அளிக்க இருக்கிறது. உலகெங்கும் பன்னாடுகளில் பெரிய நிறுவன்ங்களின் ஸ்மார்ட் போன்கள் வர இருக்கின்றன. மைக்ரோசாப்ட்,மோட்டாரோலா, சோனி மற்றும் சாம்சங் ஆகியவை இவற்றைக் கொண்டு வர உள்ளன. அனைத்து கசிந்த தகவல்களும் உண்மையானால், ஆப்பிள் நிறுவனமும் இந்த வரிசையில் சேர்ந்து கொண்டு தன் ஐபோன் 6 ஐக் கொண்டு வரலாம். இந்த போன்களைக் கொஞ்சம் இங்கு பார்க்கலாம்.
சோனி எக்ஸ்பீரியா இஸட் 3: சென்ற பிப்ரவரி மாதம் தன் எக்ஸ்பீரியா இஸட் 2 (Xperia Z2) மாடல் போனை ஸோனி விற்பனைக்குக் கொண்டு வந்தது. அப்போதே, இதன் தொடர்ச்சியான மாடலாக ஒன்றைக் கொண்டு வர இருப்பதாகத் தகவல்கள் வந்தன. வரும் செப்டம்பர் 3ல், புதிய மாடல் போனை இஸட் 3 என்ற பெயரில் சோனி கொண்டு வர இருக்கிறது. இதில் கூடுதல் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் 805 ப்ராசசர் இயங்குகிறது. மற்ற சிறப்பு அம்சங்களைப் பொறுத்த வரை, எக்ஸ்பீரியா இஸட் 2 மாடலில் தரப்பட்டவையே இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5.2 அங்குல திரை 1920 X 1080 பிக்ஸெல் திறனுடன் டிஸ்பிளே தரும். இதன் ராம் மெமரி 3 ஜி.பி. இதன் அதிவேக ப்ராசசர் நிச்சயம் ஒரு கூடுதலான சிறப்பு மிக்க அம்சமாகவே கருதப்படும். ஏற்கனவே இந்த ப்ராசசர், எல்.ஜி.ஜி3 மற்றும் சாம்சங் காலக்ஸி எஸ்5 ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எக்ஸ்பீரியா இஸட் 3 மாடலின் சின்ன அளவிலான மாடல் போன் ஒன்றையும் கொண்டு வர சோனி திட்டமிட்டு வருகிறது. ஆகஸ்ட் இறுதியில், சோனி தண்ணீர் புகாத எக்ஸ்பீரியா எம்2 அகுவா என்ற மாடலை அறிமுகப்படுத்தியது நினைவிருக்கலாம்.
லூமியா 730: விண்டோஸ் போன் தொடர்ந்து மொபைல் போன் சந்தையில் விற்பனை ஆக வேண்டும் என்றால், நோக்கியாவினை முன்னிறுத்தியே வர முடியும் என்பதனை மைக்ரோசாப்ட் நன்றாக உணர்ந்துள்ளது. அதன்படி, மத்திய நிலையிலான விலையில் சில மாடல் ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வெளியிட வேண்டிய அவசியத்தினையும் மைக்ரோசாப்ட் உணர்ந்துள்ளது. அந்த வகையில், செப்டம்பர் 4ல், லூமியா 730 என்ற மாடல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. முதல் அறிமுகம் ஜெர்மனியில் பெர்லின் நகரில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதில் 6.5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, முன்புறமாக 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா ஆகியவை உள்ளன. முன்புறக் கேமரா இந்த அளவிற்குக் கூடுதல் திறன் கொண்டதாக இருப்பதால், செல்பி என்ற வகையில் தங்களைத் தாங்களே போட்டோ எடுத்துக் கொள்பவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இந்த சிறப்பு வசதியை மற்ற நிறுவனங்களும் பின்பற்றி, முன்புறத்திலும் அதிக திறன் கொண்ட கேமராவினைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். மைக்ரோசாப்ட், மேலும் ஒரு ஸ்மார்ட் போனை லூமியா 830 என்ற பெயரில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கேமரா 13 எம்.பி. திறனுடன் கூடியதாக இருக்கும். குவால்காம் நிறுவனத்தின் Snapdragon 800 ப்ராசசர் இதில் இயங்கும். லூமியா 820 சென்ற ஆண்டு வெளியானதால், அதனை மேம்படுத்தி அடுத்த மாடலைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் முடிவெடுத்துள்ளது.
மோட்டாரோலா ஜி: மோட்டோ ஜி மாடல் ஸ்மார்ட் போனும், அதனைத் தொடர்ந்து வந்த அதன் எல்.டி.இ. மாடல் போனும், மோட்டாரோலா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல பெயரைக் கொடுத்து, புதிய வாழ்வைக் கொடுத்துள்ளன. இந்நிறுவனமும், சிக்காகோ நகரில், செப்டம்பர் 4 அன்று, தன் புதிய ஸ்மார்ட் போனை வெளியிட இருப்பதாக அழைப்பிதழ் தந்துள்ளது. மோட்டோ ஜி போனுக்கு அடுத்தபடியான வரிசையில் இது இருக்கும். மோட்டாரோலா ஜி என இது அழைக்கப்படும். 5 அங்குல திரை (1280 x 720 பிக்ஸெல் ரெசல்யூசன்) திரை இதில் அமைக்கப்படலாம். இப்போது இருக்கும் மோட்டோ ஜி போனில் 4.5 அங்குல அளவிலான திரை, இதே பிக்ஸெல் டிஸ்பிளேயுடன் உள்ளது. இதில் 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது. கேமரா கூடுதல் திறனுடன் புதிய மாடல் போனில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வெளியீட்டு விழாவில், மோட்டோ எக்ஸ் போனின் புதிய மாடல் ஒன்றும் வெளியிடப்படலாம்.
சாம்சங் நோட் 4: சாம்சங் நிறுவனம் எச்சரிக்கை மணி ஒலியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ள நேரம் இது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், அதன் போன் விற்பனை சற்று தள்ளாட்டம் அடைந்துள்ளது. எனவே, தன் சரிந்த சந்தையை நிலை நிறுத்த, புதிய சாம்சங் நோட் 4 ஐக் கொண்டு வருகிறது. இது நிச்சயம் ஒரு ஹிட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. தன் காலக்ஸி எஸ் மாடல் போன்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தினை இதற்கு வழங்கி வருகிறது. பெர்லின் நகரத்தில், சாம்சங் நோட் அறிமுகம் செப்டம்பர் 3ல் நடைபெற உள்ளது. இதில் 5.7 அங்குல திரை 2560 x 1440 பிக்ஸெல் ரெசல்யூசனுடன் இருக்கும். இதன் ப்ராசசர் ஸ்நாப்ட்ரேகன் 805 ஆக அமைக்கப்படும். இதில் தரப்படும் மற்ற புதிய அம்சங்கள் குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம்.
ஆப்பிள் ஐபோன் 6: இது குறித்து பல தகவல்கள் தொடர்ந்து கசிந்த வண்ணம் உள்ளன. மற்ற நிறுவனங்கள் தங்கள் புதிய போன்களின் அறிமுகம் குறித்து உறுதியான தகவல்களை வெளியிட்டுள்ள நிலையில், ஆப்பிள் இன்னும் ஐபோன் 6 குறித்து அறிவிக்கவில்லை. ஆனால், நிச்சயம் செப்டம்பரில் இது மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. ஐபோன் 6, இரண்டு மாடல்களில் 4.7 மற்றும் 5.5 அங்குல திரைகளுடன் வெளியிடப்படலாம். இவற்றின் ரெசல்யூசன் 1704 x 960 ஆக இருக்கும். திரை வேறு வேறு அளவில் இருந்தாலும், இவற்றின் எடை ஒரே அளவில் இருக்கும் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. இதில் சபையர் கிளாஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட திரை இருக்கும் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. அமெரிக்காவில், வர இருக்கும் ஐபோன் ஏதேனும் பல புதிய அம்சங்களுடன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அங்குதான், ஐபோன்கள் அதிகம் விற்பனையாகிறது என்பதுவும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.