மல்லன் மாறப்பன்! (4)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2014
00:00

சென்றவாரம்: மாறப்பனை பாத்ஷாகானுடன் சண்டையிட திம்மராயன் அழைத்துச் சென்றான். திருமலை பெர்னாண்டஸுடன் சேர்ந்து மாறப்பனை தோற்கடிக்க சதி செய்தான். பாத்ஷாகானின் கையில் இருந்த ஈயக்குண்டை திம்மன் கண்டுபிடித்தான் இனி-

""இது யாருடைய வேலை? பாத்ஷாகானுக்கு இத்தனை சூது தெரியாது. அவன் கைக்குள் ஈயத்துண்டை வைத்துக் கட்டியது உங்களில் யார்? உண்மையைச் சொல்லி விடுங்கள்...'' என்று இருவரின் கழுத்தையும் தன் இரு கைகளின் கொக்கிப் பிடிக்குள் அழுத்தி நெறித்தான் திம்மன்.
திணறிப் போன பெர்னாண்டஸ்... ""இது உன் திருமலையின் யோசனை தான்... என்னை விட்டுவிடு...'' என்று கெஞ்சினான்.
இரண்டு அயோக்கியர்களையும் அருகில் இருந்த கழிவு நீர்க்குட்டையில் தூக்கி வீசினான் திம்மராயன்.
""ஐயோ! எனக்கு நீந்தத் தெரியாதே!'' என்று அலறினான் திருமலை.
""அதில் அதிகத் தண்ணீரில்லை. மூன்றடி சகதிதான்... அதில் புரண்டு வாருங்கள்... பன்றிகளா!'' என்று சொல்லிவிட்டு, மாறப்பன் அருகே சென்றான்.
""நண்பரே! உங்களால் நான் பெரிய வீரனாக கவுரவிக்கப்பட்டேன். என்னுடைய இந்த வெற்றிக்கு நீங்களே காரணம்,'' என்று நன்றிப் பெருக்கோடு, திம்மனின் கைகளைப் பற்றிக் கொண்டான் மாறப்பன். அவன் விழிகளில் நீர் பளபளத்தது.
ஐயாயிரம் வராகன்களை அனாயாசமாக வெற்றி கொண்டதோடு, திம்மராயனின் நட்பும் கிடைத்ததில், மாறப்பனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பழக்கமில்லாத ஊரில் யார் உதவியை நாடுவது, எப்படி மகாராயரைச் சந்திப்பது என்று கவலைப்பட்டவனுக்கு, திம்மராயனின் நட்புக் கிடைத்ததும் நிம்மதிப்பட்டான். இருவரும் குதிரையை சாவதானமாக நடத்தியபடி போய்க் கொண்டிருந்தனர்.
""மாறப்பா! மன்னர் கிருஷ்ண தேவராயரைச் சந்திக்க அவசரப்படாதே! முதலில் என் குருவிடம் உன்னை அழைத்துப் போகிறேன். அவர் உன்னைக் குத்துச் சண்டையில் அசகாய சூரனாக்கிவிடுவார்,'' என்றான் திம்மராயன்.
""உன் விருப்பம் எதுவோ அதன்படி நான் நடந்து கொள்கிறேன் திம்மா. என் வாழ்க்கையை உருவாக்குவது நண்பனான உன் பொறுப்பு,'' என்றான் மாறப்பன்.
அவர்கள் போர்த்துக்கீசியக் குடியிருப்புப் பகுதியில் போய்க் கொண்டிருந்தனர். பறங்கியர்கள் பலரும் திம்மராயனுக்குத் தெரிந்தவர்களாக இருந்தனர். அவனைக் கண்டதும் நலன் விசாரித்தனர்.
""திம்மராயா...இது யார் புதிதாக இருக்கிறாரே... உன் நண்பனா?'' என்று மாறப்பனைக் காட்டி வினவினர்.
""நேற்று நடந்த பந்தயத்திலே நீ பங்கு கொள்ளவில்லையாமே ஏன்?'' என்று கேட்டனர்.
""இனி நான் போட்டிகளில் கலந்து கொள்ளப்போவதில்லை,'' என்றான் திம்மன்.
மாறப்பனின் முதுகில் தட்டி, ""இதோ, என் நண்பன் மாறப்பன். உங்கள் குத்துச்சண்டை கோதாவில் இனி இவனைத்தான் நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள். உங்களுக்கு சவால் விடப் போகிறவன் இனி மாறப்பன்தான்,'' என்று பெருமையோடு தன் நண்பனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினான் திம்மராயன்.
இருவரும் பறங்கியர் வசிக்கும் வீதிவழியே தொடர்ந்து போய்க் கொண்டிருந்தனர். கோட்டை போன்ற கட்டடங்களின் கம்பீரத்தைப் பார்த்து வியந்தான் மாறப்பன்.
""பறங்கியர்களின் வீட்டைப் பார்த்தே இப்படி வியக்கிறாயே... எங்கள் ராயரின் கோட்டையைப் பார்த்தால் மூர்ச்சை போட்டே விழுந்துவிடுவாய்,'' என்று கலகலவென்று சிரித்தான் திம்மன்.
""நாம் இப்போது பெட்ரோவைச் சந்திக்கப் போகிறோம். அவர்தான் என் குரு. எனக்கு மட்டுமல்ல... இங்குள்ள குத்துச் சண்டை வீரர்கள் அனைவருக்குமே அவர்தான் வாத்தியார். அற்புதமான உடற்பயிற்சி சாலை நடத்தி வருகிறார். பல இந்தியர்களும், பறங்கியர்களும் அவரிடம் பயிற்சி பெற வருகின்றனர். அவருக்கு ஒரு கால் கிடையாது. ஆனால், வெல்ல முடியாத வீரர்!''
திம்மராயன் ஒரு மாளிகைக்குள் மாறப்பனைக் கூட்டிப் போனான். அங்கு கட்டுமஸ்தான தேகமுடைய பறங்கியர் ஒருவர் இவர்களை வரவேற்றார். ஒரு காலை இழந்த அவரைக் கண்ட மாறப்பன், அவர்தான் பெட்ரோ என்பதைத் தெரிந்து கொண்டான்.
""பெட்ரோ அவர்களே! இவன் என் நண்பன். மாறப்பன் என்று பெயர். தென்னாட்டிலிருந்து வந்திருக்கிறான். என்னை விடத் திறமை மிக்கவன்; பலசாலியும் கூட,'' என்று மாறப்பனை அவருக்கு அறிமுகப்படுத்தினான் திம்மராயன்.
""உங்கள் நாட்டுக் குத்துச் சண்டையில் வல்லவனாக இவனுக்கு நீங்கள் பயிற்சியளிக்க வேண்டும்,'' என்று கேட்டுக் கொண்டான்.
""நேற்று நடந்த பந்தயத்தில் பாத்ஷாகானை வீழ்த்தியவன்தானே உன் நண்பன்? கேள்விப்பட்டேன்,'' என்று கூறிய பெட்ரோவின் பார்வை மாறப்பனை ஆராய்ந்து கொண்டிருந்தது.
""குத்துச் சண்டையின் விதிமுறைகளை அறியாதவன் என் நண்பன். அப்படி இருந்தும் அந்த அபிசீனியனை அலற வைத்திருக்கிறான். உங்கள் பயிற்சி கிடைக்குமானால் தேர்ந்த வீரனாவான். <உங்களுக்கும் அதனால் புகழுண்டாகும்,'' என்றான் பெட்ரோவிடம்.
பெட்ரோ, மாறப்பனைப் பார்த்து, ""உன் திறமையைப் பார்க்கலாம் வா!'' என்று அவனை அழைத்துக் கொண்டு பயிற்சிக் கூடத்துக்குப் போனார். அங்கு வாலிபர்கள் பலர் பல்வேறு போர்ப்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். ஒருபக்கம் குத்துச் சண்டையும் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் அருகே சென்ற பெட்ரோ, ""உன் நண்பனை இங்கு கோதாவில் இறங்கச் சொல்,'' என்றார் திம்மராயனிடம்.
""என் மாணவர்களோடு சண்டை போடட்டும். அதைப் பார்த்து அவன் தகுதியைத் தீர்மானிக்கிறேன்,'' என்றார்.
""மாறா! இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள். தைரியமாகக் களத்தில் இறங்கு. பெட்ரோவின் பாராட்டைப் பெறு. உன்னை வெல்ல முடியாத வீரனாக்கி விடுவார் பெட்ரோ. கப்பல் போரில் ஒருகாலை இழந்தாலும், குத்துச்சண்டையில் அசகாய சூரர் பெட்ரோ,'' என்று உற்சாக மூட்டினான் திம்மராயன்.
மேலங்கியைக் கழற்றிவிட்டுக் களத்தில் இறங்கத் தயாரானான் மாறப்பன்.
""இங்குள்ள வீரர்கள் ஒவ்வொருவருடனும் நீ போராடி அவர்களை வீழ்த்த வேண்டும். இது பயிற்சியின் முதல்படி. ம்... எங்கே உன் திறமையைப் பார்க்கலாம்,'' என்றார் பெட்ரோ.
தங்களோடு சண்டையிட, தங்களுக்கு மேலானவனாகப் பயிற்சி பெற வந்திருக்கும் இந்தியனை, பெட்ரோவிடம் பயிற்சி பெறும் பறங்கியர்கள் ஒரு மாதிரியான ஏளனத்துடன் பார்த்தனர். மாறப்பனை ஒரே குத்தில் வீழ்த்தி ஓடச் செய்வதென்ற முனைப்புடன் தயாராயினர்.
மாறப்பன் ஒவ்வொரு பறங்கி முரடர்களுடன் மோதும் போதும், அவர்களை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்ற நெளிவு, சுளிவுகளைத் திம்மராயனும், பெட்ரோவும் அரங்கின் வெளியிலிருந்து அவனுக்குக் கூவி ஊக்கமூட்டினர். மாறப்பனும் தன் உடல் வலிமையாலும், அவர்கள் கூறிய யோசனைகளாலும் போர்த்துக்கீசிய வீரர்களைத் திணற அடித்தான். ஒரு பரங்கியனை வீழ்த்தியதும், ""என் குத்துக்கள் எப்படி திம்மா?'' என்று கேட்டான்.
""அற்புதமான தாக்குதல்தான் மாறப்பா. எதிரியின் செயல்களுக்கு ஏற்றபடி உன் உடல் மின்னலாகச் செயல்படுகிறது. குத்துச் சண்டையில் முக்கியமாகக் கடைப் பிடிக்கப் வேண்டிய விஷயம் அது. அதில் நீ கவனமாக இருக்கிறாய்,'' என்று பாராட்டினான் திம்மராயன்.
ஐந்து ஆறு வீரர்களை மிக எளிதாக வெற்றிகொண்டு விட்டான் மாறப்பன். தன் வெற்றிக்கு திம்மராயன் கூறிய யோசனைகளே காரணம் என்று அவனுக்கு நன்றி கூறினான்.
""பெட்ரோவிடம் பயிற்சி பெற்று, அவர் அன்புக்குப் பாத்திரமானால் உன்னை யாராலும் மிஞ்ச முடியாது மாறப்பா. பறங்கியர்களின் குத்துச் சண்டையில் பாரத மைந்தன் நிகரற்று விளங்குவதை அறிந்தால், மன்னர் கிருஷ்ண தேவராயர் மகிழ்ச்சியில் பூரித்துப் போவார்,'' என்றான் திம்மராயன்.
மகாராயரின் பாராட்டுக்குரியவனாகி, அவரைச் சந்திக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பெட்ரோவிடம் பயிற்சி பெற்றான் மாறப்பன். அவனது ஆர்வம், உழைப்பு, குருபக்தி ஆகியவை அவனை ஒப்பற்ற குத்து சண்டை வீரனாக்கியது.
அதே சமயம், பறங்கியர்களிடம் பொறாமையையும் வளர்த்தது.
""தங்கள் நாட்டுக் கலையைத் தங்களிடம் கற்றுக் கொண்ட ஒரு சுதேசி தங்களையே மிஞ்சுவதா?'' என்று எரிச்சலும், ஆத்திரமும் அடைந்தனர்.
ஒருநாள்-
மாறப்பன் தனியாக திம்மராயனைச் சந்திக்க சாலையில் போய்க் கொண்டிருந்தான். அவன் வரவை எதிர் பார்த்து, ஒரு மாளிகையின் மறைவில் சிலர் பதுங்கி இருந்தனர்.
-தொடரும்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X