கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2014
00:00

கேள்வி: எனக்குத் துபாயில் வேலை கிடைத்து செல்ல இருக்கிறேன். அங்கு சென்று நானே சமையல் செய்து சாப்பிடத் திட்டமிட்டுள்ளேன். இணையத்தில் நம் உணவு வகைகள் தயாரிப்பது குறித்த இணைய தளங்கள் பற்றிய தகவல்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் இணையத்தில் தேடியபோது கிடைத்தவை எல்லாம் எனக்கு திருப்தியாக இல்லை. முன்பு ஒருமுறை கம்ப்யூட்டர் மலரில் இது குறித்து தாங்கள் எழுதியதாக, என் நண்பர் என்னிடம் கூறினார். தயவு செய்து எனக்கு அந்த தகவல்களைத் தந்து வாழ்வில் ஒளி ஏற்றவும்.
என். சுகவனம், சிதம்பரம்.
பதில்:
பரவாயில்லை சுகவனம். வெளிநாட்டுக்கு போக இருக்கையில் நல்ல ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறீர்கள். எனக்கும் கம்ப்யூட்டர் மலரில் எழுதியது நினைவில் இல்லை. இருப்பினும், உங்களுக்காகத் தேடியபோது, கிடைத்த தகவல்கள்.
1. http://www.indobase.com/recipes: ஏறத்தாழ நாம் எதிர்பார்க்கும் அனைத்து உணவு வகைகளுக்கான குறிப்புகளும் இதில் விளக்கமாகக் கிடைக்கின்றன. அத்துடன், எந்த பண்டிகைக்கு என்ன செய்திட வேண்டும் எனவும் எக்ஸ்ட்ரா டிப்ஸ் தரப்பட்டுள்ளது. எந்த மாநிலத்தில் என்ன தின்பண்டம் விசேஷம் என்றும் கூறப்படுகிறது.
2. http://www.manjulaskitchen.com/ என்னிடம் இந்த பொருட்கள் உள்ளன. என்ன உணவுப் பதார்த்தம் தயாரிக்கலாம்? என்ற நோக்கில் இந்த தளத்தில் குறிப்புகள் கிடைக்கின்றன. இதில் தரப்பட்டுள்ள வீடியோ படங்களை தரவிறக்கம் செய்து, பின் நாளில் கூடப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. http://www.ifood.tv/. பலவகை, கலாச்சார அடிப்படையில் உணவு தயாரிக்கும் முறை வழங்கப்படுகிறது. இந்தியர்களின் உணவுப் பழக்க முறை, தயாரிக்கும் முறை குறித்து பல குறிப்புகள் உள்ளன. வீடியோவாகக் காட்டப்படுவது மிகவும் சிறப்பு. தரவிறக்கம் செய்து, பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம். தயிர்சாதம் எப்படியெல்லாம் தயாரிக்கலாம் என்ற குறிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இவை தவிர, இணையத்தில் எத்தனையோ தளங்கள் உள்ளன. சில சைவ, அசைவ தளங்கள் எனப் பிரித்தும் பார்க்கலாம்.
உங்களுக்குக் கூடுதலாக ஒரு தகவல் தருகிறேன். நீங்கள் இந்த தளங்களைப் பார்த்து உணவு தயாரிக்கும்போது, சில மாற்றங்களை மேற்கொண்டால், உணவின் ருசி மாறும் என அனுபவத்தில் உணர்கிறீர்களா! அதனை குறிப்பாக்கி தந்தால், ஓர் இணைய தளம் ஏற்றுக் கொள்கிறது.
இந்த தளத்தின் பெயர் புட்டிஸ்ட்டா (Foodista). இதன் முகவரி http://www.foodista.com/. “The Cooking Encyclopedia Everyone Can Edit” என்றே இதன் முகப்பில் இந்த தளத்திற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே நம் உணவு முறைகளைப் பற்றிய குறிப்புகள், இதில் தரப்பட்டுள்ள உணவு முறைகளுக்கான குறிப்புகளில் மாற்றங்கள் ஆகியவற்றை நீங்கள் தாராளமாக இந்த தளத்திற்கு அனுப்பலாம். மேலும் நீங்கள் தயார் செய்திடும் உணவு இப்படித்தான் இருக்கும் என்று காட்ட அதனைப் போட்டோ எடுத்தும் அனுப்பலாம்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் உருவாக்கப்படும் அட்டவணைகளைப் பிரிக்கும் வழி குறித்த டிப்ஸ் வேர்ட் 2003க்கு தந்துள்ளீர்கள். வேர்ட் 2007ல் எப்படி பிரிக்கலாம் என்று விளக்கவும்.
ஆ. மனோகரன், திருப்பூர்.
பதில்:
வேர்ட் 2007ல், மிக அருமையான டேபிள் எடிட்டர் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் வழியாக, நீங்கள் உங்கள் டேட்டாவினை, அழகான, வசதியான டேபிளில் அமைக்கலாம். பொதுவாக மிகப் பெரிய டேபிளை நாம் உருவாக்கினால், ஒரு நிலையில் அதனைப் பிரித்து அமைக்க திட்டமிடுவோம். அந்த தேவையினை நிறைவேற்றும் வழி முறைகளைப் பார்க்கலாம்.
1. எந்த படுக்கை வரிசையிலிருந்து டேபிளைப் பிரித்து, அதனை முதல் வரிசையாக அமைக்க வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களோ, அந்த வரிசையில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும்.
2. அடுத்து ரிப்பனில் Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். டேபிளின் உள்ளாக உங்கள் கர்சர் இருந்தால் தான், இந்த டேப்பினைப் பார்க்கலாம்.
3. அடுத்து Merge group குரூப் உள்ளாக உள்ள Split Table டூலைக் கிளிக் செய்திடவும்.
4. உடன் வேர்ட், சாதாரணமாக அமைக்கப்படும் பாரா போன்ற பார்மட் ஒன்றினை, அந்த வரிசைக்கு முன்பாக இணைக்கும். இதனால், இரண்டு டேபிள்கள் தனித்தனியாக அங்கே உருவாக்கப்படும்.

கேள்வி: FPS -என்பது frames per second என்பதன் சுருக்கம் தானா? இது கேமராவின் அம்சமா? அல்லது அதன் விடியோ பதியும் திறனா? முழுமையாக விளக்கவும்.
எஸ். மஞ்சுளா, கோவில்பட்டி.
பதில்
: நல்ல கேள்வி. ஏனென்றால், மொபைல் போன் தொழில் நுட்பக் குறிப்புகளில் இதனை அடிக்கடி காணலாம். frames per second என்பது, கம்ப்யூட்டரில் திரையில், ஒரு காட்சி, ஒரு நொடியில் எத்தனை முறை ரெப்ரெஷ் செய்து காட்டப்படும் வகையில் படம் பதியப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. இந்த ரெப்ரெஷ் ரேட் எவ்வளவு அதிகம் உள்ளதோ, அந்த அளவிற்கு படம் தெளிவாக இருக்கும். கம்ப்யூட்டர் கேம்ஸ் எனப்படும் விளையாட்டிலும் இது முக்கியம். நொடிக்கு 30க்கும் கீழாக ரேட் இருந்தால், கேம் இயக்குவதில் சிக்கல் ஏற்படும். பொதுவாக, குறைந்தது 60 பிரேம் இருப்பதே நல்லது எனப் பலர் எண்ணுகின்றனர். ஆனால், 30 இருந்தாலே போதும். தற்போது 100 பிரேம்கள் வரை காட்சி அமைக்கக் கூடிய தொழில் நுட்பம் எளிதாகக் கிடைக்கிறது. இதற்கேற்ப அந்த சாதனத்தின் விலையும் உயர்த்தப்படும் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேள்வி: அலுவலகத்தில் வேலை பார்க்கும் நாங்கள், ஒரே அறையில் நண்பர்கள் நான்குபேர்கள் தங்கியுள்ளோம். நான் விண்டோஸ் 7 லேப்டாப் கம்ப்யூட்டர் வைத்துள்ளேன். என் நண்பர்களிடம் கம்ப்யூட்டர் இல்லை. அவர்கள், தனித்தனி யூசர் அக்கவுண்ட் போட்டு பயன்படுத்த அனுமதி கேட்கின்றனர். இதனை எப்படி அமைப்பது? பாஸ்வேர்ட் தனித்தனியே அமைக்க முடியுமா?
- கே. என். ஆராவமுதன், திருப்பூர்.
பதில்:
நண்பர்களுக்கு உதவ முன்வந்த உங்களுக்கு பாராட்டுகள். அடுத்து உங்கள் கேள்விக்கு வருவோம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், யூசர் அக்கவுண்ட்களை உருவாக்க எளிதான வழிகளைத் தருகிறது. இதன் மூலம், ஒரு பயனாளர், எந்த பைல்கள் மற்றும் போல்டர்களைப் பயன்படுத்தலாம் என்று வரையறை செய்து விண்டோஸ் சிஸ்டத்திற்குச் சொல்கிறது. ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரில், ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்களை உருவாக்கலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், எப்படி இவற்றை உருவாக்கலாம் என்பதனை இங்கு பார்க்கலாம்.
1. ஸ்டார்ட் மெனுவிலிருந்து Control Panel ஐத் திறக்கவும்.
2. இதில் User Accounts என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உங்கள் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருந்தால், Give other users access to this computer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இல்லை எனில், Manage another account என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருந்தால், ஏற்கனவே அந்த நெட்வொர்க்கில், அல்லது பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள அக்கவுண்ட்கள் காட்டப்படும். இங்கு Add என்பதில் கிளிக் செய்திடவும். உடன் யூசர் நேம் (User Name) ஒன்று தரும்படி நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். அத்துடன் டொமைன் பெயரும் தர வேண்டியதிருக்கும். அத்துடன், புதிய யூசருக்கு Standard account அல்லது Administrator account ஆகியவற்றில் எந்த அக்கவுண்ட் உரிமை தர இருக்கிறீர்கள் என்பதனைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அடுத்து Finish என்பதனை அழுத்தவும்.
4. உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் தனியாக வைத்துப் பயன்படுத்தக் கூடியதான இயக்கத்தில் இருந்தால், யூசர் நேம் மட்டும் தர வேண்டியதிருக்கும். உடன் எத்தகைய தன்மை உடைய அக்கவுண்ட் என்பதனையும் குறிப்பிட வேண்டும். அதன் பின்னர், Create Account என்பதில் அழுத்தவும்.
5. யூசர் அக்கவுண்ட்டுக்கு பாஸ்வேர்ட் தேவை இல்லை எனில், மைக்ரோசாப்ட், நீங்கள் அதனை உருவாக்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது. குறிப்பிட்ட கம்ப்யூட்டரில் லாக் இன் செய்து, கண்ட்ரோல் பேனலைத் திறந்து, User Accounts தேர்ந்தெடுத்து அடுத்து Create a password, என்பதில் கிளிக் செய்து, உங்கள் அக்கவுண்ட்டிற்கான பாஸ்வேர்டை அமைக்கலாம். பாஸ்வேர்டை இரண்டாவது முறையும் டைப் செய்து உறுதி செய்திட வேண்டும். தேவைப்பட்டால், பாஸ்வேர்டினை நினைவு படுத்திப் password hint) பார்க்க ஏதேனும் தகவல்களையும் அமைக்கலாம். நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டிருந்தால், அட்மினிஸ்ட்ரேட்டர் மட்டுமே பாஸ்வேர்டை அமைக்க முடியும்.
6. இதற்கு, Control Panel திறந்து User Accounts தேர்ந்தெடுத்து, Manage another account, தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கு, நீங்கள் எந்த அக்கவுண்ட்டிற்கு பாஸ்வேர்ட் அமைக்க வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Create a password என்பதில் அழுத்தவும். பின்னர், பாஸ்வேர்டினை டைப் செய்திடவும். பின்னர் மீண்டும் அதனை உறுதிப்படுத்தும் வகையில், டைப் செய்திடவும். பின்னர் Create password என்பதில் அழுத்தி வெளியேறவும்.

கேள்வி: ரெப்ரெஷ் ரேட் என்பது சி.பி.யு செயல்பாட்டிற்கா? அல்லது கம்ப்யூட்டரின் மானிட்டருக்கா?
கா. திருஞானம், செய்யாறு.
பதில்:
ரெப்ரெஷ் ரேட் என்பது மானிட்டரின் காட்சித் தோற்றத்துடன் சம்பந்தப்பட்டது. கம்ப்யூட்டர் திரையில் நமக்குக் காட்சியாகக் கிடைக்கும் டிஸ்பிளே ஒரு நொடியில் எத்தனை முறை ஒளியூட்டப்படுகிறது ((Illuminating)) என்பதனையே இது குறிக்கிறது. இது பிரேம் ரேட் (Frame Rate) என்பது போல் இருக்கிறது என்று நீங்கள் எண்ணினாலும், இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. பிரேம் ரேட் என்பது ஒரு டிஸ்பிளே ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு எத்தனை முறை மாறுகிறது என்பதைக் குறிக்கிறது. ஆனால் ரெப்ரெஷ் ரேட் என்பது அந்த பிரேம்களில் காட்சிகள் எத்தனை முறை ஒரு நொடியில் ஒளியூட்டப்படுகின்றன என்பதனைக் குறிப்பதாகும். உங்கள் மானிட்டரின் ரெப்ரெஷ் ரேட்டினை எப்படிக் கண்டறிவது? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Settings டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் கிடைக்கும் Advanced பட்டனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் புதிய விண்டோவில் Monitor என்னும் டேப்பினை கிளிக் செய்திடவும். பின் Monitor settings என்னும் ஏரியாவில் உங்கள் மானிட்டரின் ரெப்ரெஷ் ரேட்டினைக் காணலாம். அதில் ஒரு கீழ் விரியும் மெனுவிற்கான பட்டி தெரியும். இதில் உள்ள அம்புக் குறியினை அழுத்தினால் பல ரெப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவரும். 60,70, 72, 75 மற்றும் 85 என இவை தரப்பட்டிருக்கும். இவற்றின் அலகு Hertz ஆகும். பெரிய 17 அல்லது 19 அங்குல மானிட்டர் என்றால் ரெப்ரெஷ் ரேட் 85 ஆகக் கொள்ளலாம். மானிட்டர் அளவு குறைய குறைய இதனையும் குறைத்துக் கொள்ளலாம்.

கேள்வி: ஷவல் வேர் (Shovelware) என்று அப்ளிகேஷன் புரோகிராம் குறித்து படிக்கும் போது தெரிய வந்தது. ஆனால், அது எதனைக் குறிக்கிறது என்று எந்த விளக்கமும் அந்த நூலில் இல்லை. இது சாப்ட்வேர் சம்பந்தப்பட்டதா? அல்லது ஹார்ட்வேர் சம்பந்தப்பட்டதா?
ஜி. ஜெபராஜ், மதுரை.
பதில்
: கம்ப்யூட்டர் வாங்கும்போது, அதனுடன் பதியப்பட்டு கிடைக்கும் தேவையற்ற, அதிகப் பயனில்லாத புரோகிராம்களை இந்த பெயரிட்டும் அழைப்பார்கள். பொதுவாக இவற்றை Crapware அல்லது Bloatware என்றே பெயரிட்டு ஒதுக்கப்படுவது உண்டு. முதல் முறை கம்ப்யூட்டர் வாங்குபவர்கள், தங்கள் கம்ப்யூட்டருடன் இலவசமாக இத்தனை புரோகிராம்கள் தருகிறார்கள் என்று ஆச்சரியப்படுவதுண்டு. அந்த ஆச்சரிய உணர்வின் அடிப்படையில், இந்த புரோகிராம்களை Shovelware என அழைக்கின்றனர்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரை வாங்கியுள்ளேன். இதில் வால் பேப்பர் மற்றும் பேக் கிரவுண்ட் வண்ணத்தினை மாற்றும் வழிகள் தெளிவாக எனக்குத் தெரியவில்லை. செட்டிங் வழி கூறவும்.
பா. வளர்மதி, கோவை.
-பதில்:
புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறினால், நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் கூட தெரியாதவை போலத் தோற்றமளிக்கும். இனி செட் செய்வதற்கான வழிகளைப் பார்ப்போம்.
முதலில் டெஸ்க்டாப்பில், ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனு வில் Personalize என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, கீழாக உள்ள Desktop Background என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்த விண்டோவில், Desktop Background என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் விண்டோவில், Change background color என்பதில் கிளிக் செய்திடவும். இது Picture position heading என்பதில் இடம் பெற்றிருக்கும். இப்போது, நீங்கள் விரும்பும் வண்ணத்தில் அமைத்திட, வண்ணத் தேர்வு கட்டம் கிடைக்கும். இதிலிருந்து மனதிற்குப் பிடித்த வண்ணத்தினத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bala - Singapore  ( Posted via: Dinamalar Android App )
12-செப்-201409:17:49 IST Report Abuse
bala www.arusuvai.com this website very usefull for coocking
Rate this:
Share this comment
Cancel
Jeganathan - Mangalore,இந்தியா
10-செப்-201412:09:32 IST Report Abuse
Jeganathan android போனில் ஆபீஸ்/வோர்ட் எப்படி உபயோகபடுத்தலாம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X