கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2014
00:00

கேள்வி: ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், சில பாராக்களை மட்டும், அதன் மார்ஜினில் சற்று சுருக்கமாக இண்டெண்ட் செய்து, அடுத்த டேப் இருக்கும் இடத்தில் அமைக்க முடியுமா? அதற்கான வழிகள் என்ன? நான் பயன்படுத்துவது எம்.எஸ். ஆபீஸ் 2007.
-என். பொன்குமார், விருதுநகர்.
பதில்:
ரிப்பனில் உள்ள ஹோம் டேப் மூலம், நீங்கள் விரும்பும் வகையில், டாகுமெண்ட் பாரா ஒன்றின் பாரா மார்ஜினை மாற்றி அமைக்கலாம். நீங்கள் ஏற்கனவே டேப் செட்டிங்ஸ் அமைத்திருந்தால், அடுத்த டேப்பிற்கு பாரா முழுமையாகத் தாவிக் குதித்து அமர்ந்து கொள்ளும். எந்த டேப்பும் குறிக்கப்படாமல் இருந்தால், மாறா நிலையில் உள்ள அடுத்த டேப்பிற்கு நகர்த்தப்படும் (வழக்கமாக இது அரை அங்குலம் இருக்கும்). பாரா ஒன்றை அடுத்த டேப் நிறுத்தத்திற்குக் கொண்டு செல்ல கீழ்க்குறிப்பிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
1. எந்த பாராவினை அடுத்த டேப் நிறுத்தத்திற்கு அனுப்ப வேண்டுமோ, அந்த பாராவினுள் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.
2. ரிப்பனில் ஹோம் டேப்பினைக் காட்டவும். இங்கு உள்ள குரூப்களில், பாராகிராப் (Paragraph) குரூப் செல்லவும். இப்போது அதன் மேலாக பல ஐகான்கள் இருக்கும். கர்சரை அவற்றின் மீது நகர்த்தினால், Increase Indent டூல் காட்டப்படும். இதனைக் கிளிக் செய்தால், கர்சர் உள்ள பாரா அடுத்த டேப் நிலைக்குச் செல்லும். அதிக டேப்கள் கடந்து விட்டதாக கருதினால், அருகே இடது புறம் உள்ள டூலில் கிளிக் செய்தால், இடது பக்கம் பாரா நகர்ந்து இடம் பிடிக்கும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் பட்டியலைத் தயார் செய்கையில், புல்லட் பட்டியல் என்றும், எண்கள் பட்டியல் என்றும் இரண்டு வகை உள்ளதாக என் ஆசிரியர் பாடம் நடத்தினார். எண்கள் பட்டியல் என்பது என்ன?
-என். ரங்கநாதன், வந்தவாசி.
பதில்:
நீங்கள் குறிப்பிடும் bulleted மற்றும் numbered பட்டியல்கள் குறித்த சந்தேகத்திற்கு அடிப்படை எதுவும் இல்லை. புல்லட்களுக்குப் பதிலாக, இரண்டாவது வகைப் பட்டியலில் எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டாவது வகை எண்கள் கொண்ட பட்டியலில் தரப்படும் தகவல்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். இந்த தொடர்பு புல்லட் பட்டியலில் இருக்கலாம்; அல்லது இல்லாமலும் இருக்கலாம். அவ்வளவுதான்.
'Bulleted' என்பது தனித்தனியான தகவல்கள் தரும் ஒரு பட்டியல். இந்த பட்டியலில் வரிகளின் முன்னே, ஏதேனும் ஒரு வகை அடையாளத்தினைக் (Symbol) கொண்டிருக்கும். இந்த அடையாளமே புல்லட் என அழைக்கப்படுகிறது. இது சிறிய புள்ளியிலிருந்து எந்த வகை அடையாளமாக வேண்டுமானாலும் இருக்கலாம். A numbered list என்பது, இதே பட்டியலில், அடையாளப் படத்திற்குப் பதிலாக, வரிசையாக எண்கள் இருக்கும். தொடர் கருத்து அல்லது தகவல்களைத் தருகையில், இந்த லிஸ்ட் வகை பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு இல்லாமல், நம் கவனத்தைக் கவரும் வகையில் தரப்படும் தொடர்பற்ற, ஆனால், முக்கியமான தகவல்கள் புல்லட் இணைந்த பட்டியலாகத் தரப்பட வேண்டும். வேர்ட் இதனைத் தயாரித்து வழங்க எளிய வழிகளைக் கொண்டுள்ளது. முதலில், ஒவ்வொரு தகவலையும் டைப் செய்து, அதன் முடிவில் என்டர் அழுத்தவும். ஒரு தகவல், ஒரு வரிக்கு மேல் சென்றாலும், இறுதியில் மட்டுமே என்டர் அழுத்தவும். ஒவ்வொரு வரி முடிவிலும் என்டர் அழுத்த வேண்டாம்.
அனைத்து தகவல்களையும் பட்டியலாகத் தந்த பின்னர், மொத்தமாக அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ரிப்பனில், ஹோம் பட்டனைக் கிளிக் செய்திடவும். அடுத்து பாரா குரூப்பில் உள்ள Bullets tool மற்றும் Numbering tool என்பவற்றில், எது உங்களுக்கு தேவைப்படுமோ, அதில் கிளிக் செய்து பட்டியலை நிறைவு செய்திடவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் எழுத்துப் பிழைகளைக் கண்டறிந்து திருத்துவது போல, எக்ஸெல் ஒர்க் ஷீட்டிலும் அதே போல் மேற்கொள்ள முடியுமா? முடியும் என்றால், அதற்கான டூல் எந்த மெனுவில் கிடைக்கும்? நான் எம்.எஸ். ஆபீஸ் 2003 பயன்படுத்தி வருகிறேன்.
என். கலா சேகரன், திருமுல்லைவாயில்.
பதில்:
எக்ஸெல் புரோகிராமிலும் இதே எழுத்துப் பிழை திருத்தும் வசதி உள்ளது. கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. எழுத்துப் பிழை அறிய விரும்பும் ஒர்க்ஷீட் அல்லது ஒர்க் ஷீட்களைத் தேர்ந்தெடுக்கவும்.
2. Tools மெனு சென்று Spelling என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது F7 கீ அழுத்தவும். எக்ஸெல் உங்கள் ஒர்க் ஷீட்டினை ஸ்பெல் செக் செய்திடத் தொடங்கும். ஸ்பெல்லிங் டயலாக் பாக்ஸ் காட்டப்பட்டு அதில், ஸ்பெல் செக்கர், பிழை என எண்ணும் இடங்கள் எல்லாம் காட்டப்படும். இதில் காட்டப்படும் spelling suggestions குறித்து நீங்கள் உங்கள் முடிவை அமல்படுத்தலாம்.
ஸ்பெல் செக்கரை ஒர்க் ஷீட் முழுவதும் மேற்கொள்ளாமல், சில செல்களில் மட்டும் கூட மேற்கொள்ளலாம். இதற்கு,
1. எந்த செல்களில் சோதனை மேற்கொள்ள வேண்டுமோ, அந்த செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
2. வழக்கம் போல Tools மெனு சென்று Spelling என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது F7 கீ அழுத்தவும். இங்கும் காட்டப்படும் தவறுகளுக்கு உங்கள் கணிப்புப்படி முடிவெடுத்துச் செயல்படவும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் ஸ்பெல் செக் முடிந்த பின்னர், எக்ஸெல், உங்கள் ஒர்க் ஷீட்டின் மீதப் பகுதியையும் சோதனை செய்திடவா? என்று கேட்கும். விருப்பமிருந்தால் தொடரலாம். அல்லது No கிளிக் செய்து, ஸ்பெல் செக்கிங் சோதனையை முடிக்கலாம்.

கேள்வி: நான் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், வேர்ட் 2007 பயன்படுத்துகிறேன். ஒரே பக்கத்தில் பல பக்கங்கள் அச்சிட வேண்டிய சூழ்நிலை சில நேரங்களில் ஏற்படுகிறது. இதனை எப்படி செட் செய்து அச்சிடுவது?
எஸ். தங்கதுரை, திருப்பூர்.
பதில்:
தாள் ஒன்றின் ஒரு பக்கத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை அச்சிடும் வசதியினை வேர்ட் புரோகிராம் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, உங்கள் டாகுமெண்ட்டிலிருந்து இரண்டு பக்கங்களைத் தேர்ந்தெடுத்து, அந்த இரண்டினையும் ஒரே பக்கத்தில் அச்சிடலாம். பக்கங்கள் 1,2,4,6,மற்றும் 16 எனக் கூடத் தேர்ந்தெடுத்து, ஒரே பக்கத்தில் அச்சிடலாம். ஆனால், படிப்பதற்குச் சற்று சிரமமாக இருக்கும். இந்த வசதியினைக் கையாள கீழ்க்காணும் செயல்பாடுகளை வேர்ட் 2007ல் மேற்கொள்ளலாம்.
1. நீங்கள் அச்சிட விரும்பும் டாகுமெண்ட்டினைத் திறக்கவும்.
2. கண்ட்ரோல் + ப்பி (Ctrl+P) அழுத்தவும். வேர்ட் பிரிண்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
3. அங்கு Pages Per Sheet என்ற கீழ்விரி மெனு கிடைக்கும். இது கீழாக வலது மூலையில் இருக்கும். இங்கு எத்தனை பக்கங்கள் ஒரே பக்கத்தில் அச்சிடப்பட வேண்டும் என்பதனைக் குறிக்கவும்.
4. அச்சிடும் வகையில் வேறு ஏதேனும் விருப்பங்கள் இருப்பின், அதற்கான தேர்வுகளையும் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். தேர்ந்தெடுத்து அமைத்தபடி பக்கங்கள் அச்சிடப்படும்.

கேள்வி: ஒன் ட்ரைவில் பைல் சேமிக்கும் அளவு உயர்ந்துள்ளதா? கட்டணம் செலுத்தி எவ்வளவு சேவ் செய்திடலாம்? செலுத்தாமல் இலவசமாக எவ்வளவு சேவ் செய்திடலாம்?
கா. நிலவரசன், தேனி.
பதில்:
மைக்ரோசாப்ட் தரும் அற்புதமான க்ளவ்ட் பிரிவு சாதனம் ஒன் ட்ரைவ். இதில் கட்டணம் எதுவும் செலுத்தாமல், 15 ஜி.பி. அளவு வரை பைல்களை சேவ் செய்து வைத்துப் பயன்படுத்தலாம். அனுப்பப்படும் பைல் ஒன்றின் அளவு 2 ஜி.பி.க்கு மேல் இருக்கக் கூடாது. அண்மையில் இந்த பைலுக்கான 2 ஜி.பி. அளவினை மைக்ரோசாப்ட் நீக்கியுள்ளது. இதனால், ஒரு பைல் 2 ஜி.பி. அளவிற்கு மேல் இருந்தாலும், அதனை ஒன் ட்ரைவில் சேவ் செய்திட முடியும். இதனால், ஒருவர் மொத்த சேவ் செய்திடும் அளவினை வெகு சீக்கிரம் எட்டுவார் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. ஆபீஸ் 365 பயனாளர்களின் பைல் சேமிக்கும் அளவு ஒரு டெரா பைட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒன் ட்ரைவில் இதுவரை பைல்களை சேமித்து வைத்துள்ளவர்களில் 75% பேர் 15 ஜி.பி.க்கும் குறைவாகவே பைல்களை சேமித்து வைத்துள்ளனர். எனவே, ஒரு டெராபைட் என்பது அளவற்ற நிலையை ஒத்த்தாகும். இப்பபோது பலரும் ஹை டெபனிஷன் மூவி பைல்களை சேவ் செய்து வருகின்றனர். இந்த வகை பைல் ஒன்றின் அளவு நிச்சயம் 3 அல்லது 4 ஜி.பி. இருக்கும். எனவே தான், சேமிக்கப்படும் பைல் அளவின் உச்சத்தை மைக்ரோசாப்ட் நீக்கியுள்ளது. இது வரவேற்கத் தக்கதுதான். பைல் அளவு வரையறை இல்லை என்றால், வாடிக்கையாளர்கள், எதனையும் யோசிக்காமல் சேவ் செய்திட முயற்சிப்பார்கள். மொத்த அளவு நெருங்கிய பின்னரே, இது குறித்து யோசிப்பார்கள். ஒற்றை பைல் அளவு வரையறை நீக்கப்பட்டதால், தங்களின் மொத்த அளவை எட்டும் வாடிக்கையாளர்கள், கட்டணம் செலுத்தி ஒன் ட்ரைவில் சேமிக்க இடம் வாங்குவார்கள் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. கட்டணம் செலுத்தி வாங்குவதாக இருந்தால், நாம் கேட்கும் இடத்திற்கேற்றபடி செலுத்த வேண்டியதிருக்கும்.

கேள்வி: எனக்கு வரும் மின் அஞ்சல்களில், பலவற்றில், ஏதேனும் லிங்க் அல்லது இணைப்பில் பைல் ஒன்று தரப்படுகிறது. உங்களுடைய அறிவுரையைப் பின்பற்றி, நான் இவற்றைத் திறப்பது இல்லை. இருப்பினும் ஏதேனும் உண்மையான வைரஸ் இல்லாத முக்கிய அட்டாச்மெண்ட் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இது போல் வருபவற்றை, ஆன்லைன் தளம் ஒன்றுக்கு அனுப்பி, வைரஸ் உள்ளதா என சோதனை செய்திடலாம் என்று முன்பு கம்ப்யூட்டர் மலரில் தகவல் வந்ததாக என் நண்பர் கூறுகிறார். அந்த வழியை மீண்டும் தர முடியுமா?
ஆர். செந்தில்நாதன், சென்னை.
பதில்
: உங்களுக்கு மட்டுமின்றி, கம்ப்யூட்டர் மலர் வாசகர்கள் அனைவருக்குமாக இந்த தகவலை மீண்டும் தருகிறேன். https://www.virustotal.com என்பது அந்த தளத்தின் பெயர். பொதுவாக, சில அண்மைக் காலத்திய வைரஸ்களை, ஒரு சில ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் சரியாகக் கணிக்காமல், வைரஸ் இல்லை என்ற தகவலைத் தரும். ஒரு சில புரோகிராம்கள் வைரஸ் இருப்பதனை அறிவிக்கும். இந்த தளத்திற்கு பைலை அனுப்பினால், 45 வெவ்வேறான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு, வைரஸ் உள்ளதா என்ற தகவல் தரப்படும். ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் வைரஸ் உள்ளது என்று அறிவித்தால், உடனே அதனைத் திறப்பதனை நிறுத்திவிட வேண்டும். அடுத்து அதனை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும்.

கேள்வி: என்னுடைய பெர்சனல் கம்ப்யூட்டரில் சென்ற மாதம் முதல் விண்டோஸ் 7 இயங்குகிறது. பொதுவாக இணைய இணைப்பு ஏற்பட்டவுடன், அதற்கான இரண்டு கம்ப்யூட்டர் மானிட்டர் கொண்ட ஐகான் ஒன்று காட்டப்படும். ஆனால், என் கம்ப்யூட்டரில் அது இல்லை. இதற்கான காரணம் என்ன? எப்படி அவற்றை உருவாக்குவது?
ஆர். திருமேனி, மேலூர்.
பதில்
: இணைய இணைப்பினைக் காட்டும் கம்ப்யூட்டர் ஐகான்களை நோட்டிபிகேஷன் ஐகான் என அழைப்பார்கள். இவை ஏதோ ஒரு காரணத்தால், உங்கள் செயல்பாட்டின் காரணமாக மறைக்கப்பட்டிருக்கலாம். டாஸ்க்பாரில், வலது மூலையில், சில ஐகான்களுக்குப் பக்கத்தில் ஒரு சிறிய மேல்நோக்கிய அம்புக் குறி இருக்கும். அதனைக் கிளிக் செய்தால், செயல்பாட்டில் இருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் காட்டப்பட்டு, கீழாக customize எனத் தரப் பட்டிருக்கும். இதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் விண்டோவில், Network என்பதைக் கவனிக்கவும்.இதன் எதிரே “Show icons and notifications” என்று உள்ளதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். இப்போது உங்களின் நெட்வொர்க் ஐகான் காட்டப்படும்.
இப்போதும் அவை காணப்படவில்லை என்றால், கண்ட்ரோல் பேனல் சென்று Network Connections என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து நெட்வொர்க் இணைப்புகளும் காட்டப்படும். அதில் ஒன்றில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் திரையில் Show icon in notification area when connected என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி வெளியேறவும். இனி, இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், இந்த ஐகான் காட்டப்படும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X