கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2014
00:00

கேள்வி: நான் விண்டோஸ் 7 மற்றும் வேர்ட் 2007 பயன்படுத்தி வருகிறேன். இதில் யூனிகோட் தமிழில், என்.எச்.எம். ரைட்டர் பயன்படுத்தி டாகுமெண்ட்களைத் தயாரிக்கிறேன். இதில் தமிழில் டைப் செய்கையில், இரண்டு மெய்யெழுத்து தொடர்ந்து டைப் செய்தால், முதல் மெய்யெழுத்து, உயிர் நீங்கி மெய்யெழுத்தாக அமைகிறது. அதாவது, ”நிறுவனங்கள்” என்று டைப் செய்தால், நிறுவன்ங்கள் என்று ஆகிறது. இது எதனால்? ஆனால், என் நண்பர் லேப்டாப் கம்ப்யூட்டரில் சரியாக வருகிறது. செட்டிங்ஸ் பலமுறை புதியதாக அமைத்தும் பார்த்தேன். சரியாகவில்லை. இதற்கான சரியான வழி காட்டவும்.
-என். சம்பந்தன், சென்னை.
பதில்:
இந்த பிரச்னை தமிழ் யூனிகோட் பயன்படுத்தும் பலர் என்னிடம் தெரிவித்து, தீர்வினையும் பெற்றுச் சென்றுள்ளனர். உங்கள் வேர்ட் புரோகிராமில் தான் இதனைத் தீர்ப்பதற்கான செட்டிங்ஸ் வழி உள்ளது. வேர்ட் ரிப்பனில், கிளிக் செய்து Word Options தேர்ந்தெடுக்கவும். பின்னர், இந்த விண்டோவின் இடது புறம் Language Settings என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் Enabled Editing Languages என்பதில், English மற்றும் அதற்குக் கீழாக, Tamil என்று இருக்கும். Tamil என்பதனைத் தேர்ந்தெடுத்து, Remove என்பதில் கிளிக் செய்து, அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, நீங்கள் கூறும் மெய் எழுத்து பிரச்னை வராது.

கேள்வி: நான் புதிய மெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய பழைய ஹாட்மெயில் அக்கவுண்ட்டினை நீக்க விரும்புகிறேன். இதனை எப்படி செயல்படுத்துவது எனத் தெரியவில்லை. வழி காட்டவும்.
-என். கருணைச் செல்வன், காட்பாடி.
பதில்:
இது மிகவும் எளிது கருணைச் செல்வன். உங்களுடைய மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் ஓவர்வியூ பக்கத்தில் (Microsoft Account Overview page) நுழையவும். இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி https://account.live.com/summarypage.aspx. இந்தப் பக்கத்தில் கீழாகச் சென்று Close my account என்று உள்ளதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர் சில செயல்பாடுகளை மேற்கொள்ளச் சொல்லி உங்களை அந்த தளம் கேட்டுக் கொள்ளும். அனைத்தையும் மேற்கொண்டால், உங்கள் அக்கவுண்ட் நீக்கப்படும். ஆனால், ஒன்றை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த அக்கவுண்ட் தான் உங்கள் Microsoft ID. எனவே, இதனை அழித்தால், உங்களுடைய ஆபீஸ் 365 கணக்கு, எக்ஸ் பாக்ஸ் அக்கவுண்ட் போன்றவையும் நீக்கப்படும். இவை எல்லாம் இல்லை என்றால், தாராளமாக நீங்கள் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட்டினை நீக்கிக் கொள்ளலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8, அதன் பின்னர் விண்டோஸ் 8.1 சிஸ்டம் பயன்படுத்துகிறேன். விண்டோஸ் 8 செயல்படுகையில், போட்டோ அல்லது படம் ஒன்றின் மீது ரைட் கிளிக் செய்து, அதனை டெஸ்க்டாப் பின்னணியாக அமைக்கும் வசதி இருந்தது. விண்டோஸ் 8.1ல் இது இல்லை. அல்லது வேறு எங்கோ உள்ளது. இதனைப் பெற வழி காட்டவும்.
என். ஸ்வர்ணமாலா, திருநெல்வேலி.
பதில்:
இந்த செயல்பாட்டிற்கான வழி விண்டோஸ் 8.1லும் உள்ளது. டெஸ்க்டாப் நிலைக்கு (desktop mode) செல்லவும். பின்னர், குறிப்பிட்ட போட்டோ அல்லது படம் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் set-as-desktop ஆப்ஷன் கிடைக்கும். இதில் நீங்கள் மெட்ரோ மாடர்ன் ஸ்டைல் போட்டோ அப்ளிகேஷனுக்குச் சென்று தேடி இருக்கலாம். போட்டோ டெஸ்க்டாப் மேலாக இருந்தால், கவலை இல்லாமல், அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள்.
இந்த போட்டோ அல்லது படத்தினை, உங்கள் லாக் ஸ்கிரீனுடைய படமாக அமைக்க விரும்பினால், அடுத்துள்ள குறிப்பின்படி செயல்படவும். மெட்ரோ ஸ்கிரீன் சென்று, அந்த போட்டோ அப்ளிகேஷனுக்குச் செல்லவும். குறிப்பிட்ட படத்திற்கான Set as ஆப்ஷனைப் பெறவும். இதன் மூலம் உங்கள் லாக் ஸ்கிரீன் படமாகவோ அல்லது டைல் போட்டோ ஆகவோ மாற்றி அமைக்கலாம்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு சப்போர்ட் நிறுத்தப்பட்டதால், கம்ப்யூட்டர் பயனாளர்கள் அனைவரும் அல்லது பெரும்பாலானவர்கள், லினக்ஸ் அல்லது மேக் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளும் வாய்ப்பு உண்டா? அல்லது இந்த மாற்றம் நடைபெற்றுக் கொண்டுள்ளதா? தகவலாகவும் எச்சரிக்கையாகவும் அறிய ஆவல்.
என். சுரேந்திரன், மதுரை.
பதில்:
உங்கள் கேள்விக்கு அல்லது சந்தேகத்திற்கு, நிச்சயமாக ”இல்லை” என்ற பதிலையே தருவேன். சென்ற மாதம், நெட் அப்ளிகேஷன் (Net Applications) என்னும் அமைப்பு வெளியிட்ட தகவல்களின்படி, பன்னாட்டளவில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில் 50% கம்ப்யூட்டர்கள் விண்டோஸ் 7 இயக்க முறைமையையே பயன்படுத்தி வருகின்றன. 24% கம்ப்யூட்டர்களில், இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி இயங்கி வருகிறது. விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 ஆகியவையும் குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கு மாறாக, ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஓ.எஸ். எக்ஸ் இயக்க முறைமை, 4% கம்ப்யூட்டர்களில் உள்ளது. மற்ற மேக் சிஸ்டம் சேர்த்து மொத்தம் 7% கம்ப்யூட்டர்களே, இதனைப் பயன்படுத்துகின்றன.
இலவசமாகக் கிடைக்கும் லினக்ஸ் சிஸ்டம் குறித்து பலர் ஆவலுடன் கருத்து தெரிவித்தாலும், பாராட்டினாலும், மொத்தம் 2% கம்ப்யூட்டர்களே இதனைப் பயன்படுத்துகின்றன.
இன்னொரு தகவலையும் தருகிறேன். பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தை சுருங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் இதற்குப் பதிலாக, டேப்ளட் பி.சி. மற்றும் ஸ்மார்ட் போன் எனச் சென்று கொண்டிருக்கின்றனர். ஸ்மார்ட் போன் சந்தையிலும், 44% போன்கள் ஐபோன்களாகவும், 45% போன்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் போன்களாகவும் உள்ளன.
விண்டோஸ் மீது என்ன குற்றச்சாட்டுகள் உலகெங்கும் வந்தாலும், உலக அளவில் கம்ப்யூட்டர்களில் 90% விண்டோஸ் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களாகவே உள்ளன.

கேள்வி: புளு டூத் ஸ்பீக்கர் என்பவை என்ன வகையைச் சேர்ந்தவை? வை பி ஸ்பீக்கர்கள் உள்ளனவா? புளு டூத் ஸ்பீக்கர்கள் வழக்கமான இனிமையான இசையைக் கொடுக்குமா?
என். கந்தவேல், திருப்பூர்.
பதில்:
பொதுவான சூழ்நிலையில், ஸ்பீக்கர்கள், ஏதேனும் ஒரு சாதனத்துடன் வயரால் இணைக்கப்பட்டு, ஒலியை நமக்குத் தரும். புளுடூத் ஸ்பீக்கர்கள் இந்த வயர் தேவையை நிராகரித்து, ஒலி தரும் சாதனத்துடன் இணைந்து இனிமையான இசையைத் தருகின்றன. மொபைல் போன், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், கார்களில் இயங்கும் ஆடியோ சாதனங்களுடன் புளு டூத் ஸ்பீக்கர்கள் இணைந்து செயல்பட்டு இசையை வழங்குகின்றன. சிறிய, பெரிய அளவுகளில் புளு டூத் ஸ்பீக்கர்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஒலி தரும் சாதனத்தில் புளுடூத் வசதி இருக்க வேண்டும். அதனையும் புளுடூத் ஸ்பீக்கரையும் இணைத்து (paired and connected) இயக்க வேண்டும். சிறிய புளுடூத் ஸ்பீக்கர்களை கோட் பாக்கெட்டில் வைத்து எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். மொபைல் போன்களில் போல, இவற்றில் சார்ஜ் செய்யக் கூடிய பேட்டரிகள் இருக்கும். சார்ஜ் செய்து பயன்படுத்தலாம். மொபைல் போன்களுடன் இணைத்து செயல்படுத்துகையில், போனுக்கு அழைப்பு வந்தால், பாடல் இயங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, போன் அழைப்பு செயல்படுத்தப்படும். நாம் போன் அருகே செல்லாமல், ஸ்பீக்கர்கள் வழியாகவே பேசலாம். அதற்கான மைக் இருக்கும்.
சற்றுப் பெரிய ஸ்பீக்கர்களில், சார்ஜ் செய்யக் கூடிய பேட்டரி இருப்பதில்லை. (சில மாடல்கள் இவற்றைத் தருகின்றன) மின்சக்தி வழங்கும் சாக்கெட்களில் பொருத்தியவாறு இயக்கலாம். பேட்டரிகளைப் பொருத்தியும் இயக்கலாம். ஒலியின் அளவு சின்ன புளுடூத் ஸ்பீக்கர்களில் குறைவாகவும், பெரிய ஸ்பீக்கர்களில் அதிகமாகவும் இருக்கும். இணைப்பின் தூரம் 30 அடிக்குள் இருக்கும்.
வை பி இணைப்பில் செயல்படும் ஸ்பீக்கர்களும் உள்ளன. ஆனால், இவற்றைப் பயன்படுத்த வீடு முழுவதும் வை பி இயக்கம் செயல்பாட்டில் இருக்க வேண்டும். இவை நேரடியாக, ஒலி தரும் சாதனத்துடன் இணையாததால், ஒலியின் சிறப்பு தன்மை, புளுடூத் ஸ்பீக்கர்களைக் காட்டிலும் சற்றுக் குறைவாகவே இருக்கும்.
நாம் நினைத்த இடத்தில் அமர்ந்து கொண்டு இசையை ரசிக்க புளுடூத் ஸ்பீக்கர்கள் நமக்கு உதவுகின்றன.

கேள்வி: டைஸன் சிஸ்டம் என்பது மொபைல் போனுக்கா? கம்ப்யூட்டருக்கா? அல்லது விண்டோஸ் போன் சிஸ்டம் போல ஒன்றா?
-எஸ். சீத்தாராமன், தஞ்சாவூர்.
பதில்:
உங்களின் கேள்வி, அதில் உள்ள சந்தேகங்கள் நியாயமானவையே. டைஸன் (Tizen OS) ஆப்பரேட்டிங் சிஸ்டம், சாம்சங் நிறுவனம் உருவாக்கிய, மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம். தனக்குச் சொந்தமான இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இணைந்த ஸ்மார்ட்போன்களை வரும் நவம்பரில், இந்தியாவில் அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளது. தன் ஸ்மார்ட் போன்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு, கூகுள் ஆண்ட்ராய்ட் மீது ஏன் சார்ந்திருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், சாம்சங் தனக்கென ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்க சாம்சங் விரும்புகிறது. ”நாங்கள் சற்றுத் தாமதமாகத்தான் சொந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். இருப்பினும், மிகச் சிறப்பாக இதனைக் கொண்டு செல்ல விரும்புகிறோம் என சாம்சங் இயக்குநர் தருண் மாலிக் கூறியுள்ளது இங்கு நினைவு கூரத்தக்கது.

கேள்வி: எனக்கு 73 வயதாகிறது. லேப்டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். இதில் எந்த அப்ளிகேஷன் புரோகிராம் சென்றாலும், அதில் உள்ள மெனு மற்றும் பிற இடங்களில் உள்ள சொற்கள், மிகவும் சிறிய அளவில் தெரிகின்றன. இதனை நிரந்தரமாக பெரிய எழுத்தில் எப்படி அமைப்பது?
கா. பரமசிவன், அய்யம்பாளையம், திண்டுக்கல்.
பதில்:
உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்த்துகள். இதோ உங்களுக்கான செயல்முறைக் குறிப்புகள். (இவற்றை வயதில் குறைந்தவர்களும் பயன்படுத்தலாம்.)
ஸ்டார்ட் மெனு செல்லவும். இதில் கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவின், மேல் வலது மூலையில் உள்ள தேடல் கட்டத்தில் Change window colors and metrics என டைப் செய்திடவும். இது Personalization என்ற ஆப்ஷனைக் காட்டும். இங்கு காணப்படும் Change window colors and metrics என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் Windows Color and Appearance என்ற விண்டோவில் அடுத்து இருப்பீர்கள். நீங்கள் விண்டோவின் எந்த பகுதியினை மாற்ற விரும்புகிறீர்களோ, அதனை அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில் தேர்ந்தெடுக்கவும். இதில் காட்டப்படும் ஒவ்வொரு வகைக்கும் எழுத்து வகை அளவு மற்றும் வண்ணத்தினை மாற்ற ஆப்ஷன் கிடைக்காது. எடுத்துக் காட்டாக, Menu விண்டோவில் மாற்ற வேண்டும் எனில், நீங்கள் எழுத்து வகை, மாற்ற விரும்பும் அளவு, வண்ணம், அழுத்தமாகவா என்ற விருப்பம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் மாற்ற விரும்பும் அனைத்திற்கும் முன் தோற்றக் காட்சி விண்டோவின் மேலாகக் காட்டப்படும். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாம் வழக்கமாகப் பார்க்கும் அளவில் வண்ணங்கள், சிஸ்டம் விண்டோவில் தோன்றாது. எடுத்துக் காட்டாக, ஒரு வாழ்த்து அட்டையில், ஒரு வண்ணம் மிக அழகாக இருக்கலாம். ஆனால், அதே அளவில் சிறப்பான தோற்றம் சிஸ்டம் விண்டோவில் கிடைக்காது. முன் தோற்றக் காட்சியைப் பார்த்த பின்னர், அது உங்களுக்குப் பிடித்தமாக இருந்தால், OK கிளிக் செய்து வெளியேறவும். மறுபடியும் பிடிக்கவில்லை என்றால், மறுபடியும் இதே போல சென்று மாற்றிக் கொள்ளலாம்.

கேள்வி: பலமுறை “ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்” என்று கம்ப்யூட்டர் பாடங்களில் படித்திருக்கிறேன். இது எதனைக் குறிக்கிறது. கம்ப்யூட்டர் செயல்பாட்டில் இதன் பொறுப்புகள் என்ன என்று விளக்கவும்.
- ஞான சேகரன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
பதில்:
நீங்கள் மாணவராக இருப்பதனால், அனைத்தையும் தெளிவாக அறியத் துடிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. பாராட்டுகள். இதோ விளக்கமும் பதிலும்.
ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் என்பவை அடிப்படையில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சிறிய புரோகிராம்கள். இவை விண்டோஸ், விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகியவை, அப்ளிகேஷன்களை அவர்களின் எல்லைக்குள்ளேயே இயக்க இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் புரோகிராம்கள் உதவுகின்றன. ஏறத்தாழ ஜாவா ஆப்லெட் எனப்படும் புரோகிராம்களின் செயல்பாட்டினை ஒத்ததே இவை.
இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் புரோகிராம்கள் இயங்குவதன் மூலம், அடிப்படையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாமல், சிறிய அளவில், இயக்கத்தில் மாற்றங்களை மேற்கொள்ள இயலும். மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசர், தன் வாடிக்கையாளர்கள், ஆக்டிவ் எக்ஸ் புரோகிராம்களை அணுக ஓர் ஆட் ஆன் தொகுப்பினைக் கொண்டுள்ளது.
ஆனால், இவை இயங்குவதில் சிக்கல் உள்ளது. இந்த புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் தாக்கும் அளவிற்கு இடம் அளிக்கும் வகையில் இயங்குகின்றன. இவற்றைப் பயன்படுத்தி கம்ப்யூட்டருக்குள் நுழையும் மால்வேர் புரோகிராம்களின் வழியை “drive-bys” என அழைக்கின்றனர். மேலும் தூரத்தில் இருந்தே நம் கம்ப்யூட்டர்களைக் கட்டுப்படுத்தத் திட்டமிடுபவர்களுக்கும் இவை வாகாக அமைகின்றன.
அப்படியானால், இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கலாமே என்று நீங்கள் எண்ணலாம். அதனையும் நாம் மேற்கொள்ள வழி உள்ளது. கண்ட்ரோல் பேனல் சென்று, அங்கு Internet Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இடையே Network and Internet என்ற விண்டோவினைப் பெறவும். இங்கு Internet Options என்ற பிரிவில், Manage Browser Add-ons” என்ற ஆப்ஷனைப் பார்க்கலாம். இந்த விண்டோவிற்குச் சென்றவுடன், “Security” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு நம் பாதுகாப்பு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை செட் செய்திட, ஒரு ஸ்லைடர் பார் ஒன்று தரப்பட்டிருக்கும். இதில் High என்பதில் செட் செய்தால், ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் புரோகிராம்கள் அனைத்தும் தடுக்கப்படும். இதில் என்ன பிரச்னை ஏற்படும் என்றால், சில இணைய தளங்கள், இவற்றைத் தடை செய்துவிட்டால், சரியாக இயங்காது.
இதற்குப் பதிலாக, நம் பிரவுசர்கள், இந்த தளம் வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கும் தளங்களுக்குச் செல்லாமல் இருப்பதே நல்லது.

கேள்வி: தற்போது வந்திருக்கும் ஐபோன் 6 மற்றும் ப்ளஸ் மாடல் போன்கள், 2015 ஆம் ஆண்டில் கோடிக்கணக்கில் விற்பனையாகும் என்று எதிர்பார்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர். இது நடக்குமா?
-எஸ்.ஸ்ரீலேகா ஸ்ரீதர், சென்னை.
பதில்:
நிச்சயம் நடக்கும். இந்த பதிலை எழுதும்போதே, ஒரு கோடி போனுக்கு பதிவு ஏற்பட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. இவை அறிமுகமாகும் முன்னரே, 2015 ஆம் ஆண்டில், 23 கோடியே 50 லட்சம் ஐபோன்கள் விற்பனையாகும் என ஒரு கணிப்பு கூறியது. அக்டோபர் தொடங்கி, ஐபோன்கள் 64 நாடுகளில் விற்பனையாக உள்ளன. எனவே, நிச்சயம் பல கோடி ஐபோன்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X