பொதுவாக ஆப்பிள் நிறுவன சாதனங்கள் பயன்படுத்துவது இங்கு அரிதாகவே இருந்து வருகிறது. அதே போலத்தான் ஐபோனும் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது ஐபோனின் சில குறிப்பிட்ட வசதிகளுக்காக, பலர் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இந்த சூழ்நிலையில், தங்களின் ஐ.ஓ.எஸ்.8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தங்களின் கட்டுரை, பயனுள்ள தகவல்களைத் தருவதாய் அமைந்துள்ளது. இந்த சிஸ்டத்தினைப் பயன்படுத்த ஐபோன் 6 மற்றும் ப்ளஸ் போன் வருவதற்காகக் காத்திருக்கிறோம். முன்பு ஐ.ஓ.எஸ்.7 வந்த போதும், கம்ப்யூட்டர் மலரில் தான் இது குறித்து தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி.
எஸ். தனசேகரன், பொள்ளாச்சி.
ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டம் இவ்வளவு நல்ல வசதிகளைத் தருகிறது என்பது புதிய தகவலாகும். இது வந்தவுடன் சில பிரச்னைகள் ஏற்பட்டு, ஆப்பிள் தடுமாறியதாக செய்தி வந்தது. அது குறித்து அடுத்த வார, கம்ப்யூட்டர் மலரில் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
டாக்டர் எம். குணசீலன், மதுரை.
குரோம் பிரவுசர் டிப்ஸ் அனைத்துமே மிக அழகாக விவரமாகத் தரப்பட்டுள்ளன. இன்னும் பல டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். சாந்த குமார், திருச்சி.
நம் லாக் கீ பேடினைக் கொண்டு சில கேரக்டர்கள் மட்டுமல்ல, அனைத்து கேரக்டர்களையும் உருவாக்கலாம். ஏன், ஒரு பட்டியலாக நீங்கள் அதனைத் தரக் கூடாது?
கா. இறையரசன், தஞ்சாவூர்.
மொபைல் சாதனங்கள் இன்றைய நாகரிக உலகின் அளவுகோலாக மாறிவிட்டது. அவை இன்றி நாம் இயங்க முடியாத சூழ்நிலையும் உருவாகி வருகிறது. ஆனால், நாம் சில கலாச்சார பண்புகளை இதனால் இழந்து வருகிறோம் என்பதுவும் உண்மை. மிக அழகாக வருத்தம் தோய்ந்த சொற்களில் இதனைக் குறிப்பிட்டுள்ளீர்கள். பாராட்டுகள்.
என். பரந்தாமன், ராஜபாளையம்.
என்.எச்.எம். ரைட்டர் பயன்படுத்தி தமிழில் டைப் செய்து வந்த எனக்கு, கேள்வி பதில் பகுதியில், சென்னையைச் சேர்ந்த வாசகருக்கு ஏற்பட்ட அதே பிரச்னை தொடர்ந்து இருந்து வந்தது. என் நண்பர்களும் அதனைச் சந்தித்து வந்தனர். தாங்கள் கேள்வி பதில் பகுதியில் இதற்கான பதிலைத் தந்தது, எங்களில் பலருக்கு நிம்மதியைத் தந்தது. பல மாதப் பிரச்னையைத் தீர்த்து வைத்து, எங்களின் நேரம் வீணாவதைத் தடுத்த தங்களுக்கு மிக்க நன்றி.
பேரா. என். மரைக்காயர், போடி.
புளுடூத் ஸ்பீக்கர் குறித்த தகவல்களைப் பதிலாகத் தந்து அவை குறித்த சரியான கோணத்தைத் தந்திருக்கிறீர்கள். நம் ஊர்களில் இந்த ஸ்பீக்கர்கள் அவ்வளவாக விற்பனைக்கு வருவதில்லை. இணைய தளங்களிலும் சிலவற்றில் தான் விற்பனைக்கு வைத்துள்ளனர். தகவலுக்கு நன்றி.
என். கார்த்திக் ராஜன், தேனி.
ஐ.ஓ.எஸ்.8 குறித்த அறிமுகத் தகவல்களை மட்டும் தராமல், அதனை எந்த சாதனங்கள் ஏற்றுக் கொள்ளும் என்பதனையும், அதற்கு மாறும் முன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் தந்தமைக்கு நன்றி. இது குறித்த தகவல்கள் எந்த ஆங்கில இதழிலும் கூட வெளியாகவில்லை. தினமலரை எண்ணிப் பெருமைப் படுகிறேன்.
இரா. இளவரசன், மதுரை.
குரோம் பிரவுசர் டிப்ஸ்களில், இணைய தளத்திற்கான ஷார்ட் கட் கீ அமைப்பது குறித்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தொடர்ந்து மற்ற பிரவுசர்களுக்குமான டிப்ஸ்களையும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
ஆர். நாகராஜன், காரைக்கால்.