கேள்வி: எனக்கு அலுவலகத்தில் புதியதாக, விண்டோஸ் 7 மற்றும் ஆபீஸ் 2007 உள்ள கம்ப்யூட்டர் தந்துள்ளனர். இதில் வேர்ட் புரோகிராமில் பணியாற்றுகையில், அதில் புதியதாகத் தரப்பட்ட மினி டூல் பார் கிடைக்கவில்லை. இது குறிப்பிட்ட அந்த புரோகிராமின் நிலையா? அல்லது செட்டிங்ஸ் ஏதேனும் மாற்றப்பட்டிருக்குமா?
என். கோகில வாணி, கும்பகோணம்.
பதில்: எம்.எஸ். ஆபீஸ் 2007 தொகுப்பில் நமக்குப் புதியதாகத் தரப்பட்ட டூல், மினி டூல் பார் ஆகும். வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்தவுடன், இந்த மினி டூல் பார் தானாகத் தோன்றும். நாம் அந்த சொல்லின் பார்மட்டை மாற்ற (அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடிட, எழுத்தின் அளவு மற்றும் நிறம் மாற்ற) இதனைப் பயன்படுத்தலாம். மேலாக உள்ள மெனு செல்லவேண்டியதில்லை. ஆனால், பலர் இது தேவையற்றது என எண்ணி, அதன் இயக்கத்தை நிறுத்திவிடுகின்றனர். உங்களிடம் உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய ஒருவர் இதன் இயக்கத்தினை முடக்கி இருக்க வேண்டும். அதனாலென்ன? நீங்கள் கீழே கண்டுள்ள செட்டிங்ஸ் மேற்கொண்டு, அதன் இயக்கத்தினை மீண்டும் கொண்டு வரலாம்.
1. Office பட்டன் கிளிக் செய்திடவும்.
2. Word Options கிளிக் செய்க.
3. இடது பக்கம் உள்ள பிரிவில் Popular என்பதில் கிளிக் செய்திடுக.
4. இங்கு கிடைக்கும் பிரிவில் Show Mini Toolbar என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
உடன் இன்னொரு தகவலும் தருகிறேன். பலர் ஆபீஸ் 2010 தொகுப்பினை இப்போது பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். அவர்களுக்கான செட்டிங்ஸ் அமைப்பு இது.
1. File டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. இடது பக்கம் உள்ள பிரிவில் Help என்பதன் கீழாக உள்ள Options என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு General என்பதில் கிளிக் செய்திடுக.
4. இங்கு User Interface Options என்ற பிரிவில், Selection என்ற தலைப்பில், Mini Tool Bar என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
கேள்வி: நான் விண்டோஸ் 7 என் கம்ப்யூட்டரில் பயன்படுத்துகிறேன். பல சூழ்நிலைகளில், கம்ப்யூட்டரில் ஏதேனும் பிரச்னை ஏற்படுகையில் (என் ராம் நினைவகம் மிகவும் குறைவு) கம்ப்யூட்டர் உடனே ரீஸ்டார்ட் ஆகிறது. எதனால் பிரச்னை என்று காட்டப்படும் எர்ரர் செய்தி, மின்னல் போல் தோன்றி மறைகிறது. இந்தக் குறையை எப்படி நிவர்த்தி செய்திடலாம்.
-கே. பிரதாப், சென்னை.
பதில்: கம்ப்யூட்டர் நன்றாக இயங்கும் வகையில் அது நமக்கு உற்ற நண்பன். ஆனால், இது போல சிக்கலையும் ஏற்படுத்தி, நம்மையும் எரிச்சலுக்கு ஆளாக்குகையில் அது விரோதி போல தோற்றமளிக்கும். உங்கள் நீண்ட கடிதம் இதனை நன்கு காட்டுகிறது. கவலைப்பட வேண்டாம். இதற்கான தீர்வினை இங்கு தருகிறேன்.
பிரச்னை ஏற்படுகையில், தானாக சிஸ்டம் ரீஸ்டார்ட் ஆனால், கிடைக்கும் பிழைச் செய்தி நமக்குத் தெரியாமலே போய்விடும். பின் எப்படி தீர்வினைப் பெறுவது? ரீஸ்டார்ட் ஆவதைத் தடுக்கும் வகையில் சில செட்டிங்ஸ் அமைப்பு ஏற்படுத்திவிட்டால், சிக்கல் தீர்ந்துவிடும்.
1. ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, “Control Panel” தேர்ந்தெடுக்கவும்.
2. நீங்கள் ”expanded Control Panel” பயன்படுத்துபவராக இருந்தால், “System” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இல்லை எனில், “System and Security” என்பதனைத் தேர்ந்தெடுத்துப் பின்னர், “System” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இடது பக்கப் பிரிவில், “Advanced system settings” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு User Account Control டயலாக் பாக்ஸ் கிடைத்தால், அதில் “Yes” என்பதில் கிளிக் செய்திடவும்.
5. இப்போது பல டேப்கள் கொண்ட “System Properties” என்னும் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Advanced” என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.
6. இங்கு “Startup and Recovery” என்பதின் கீழாக, “Settings” பட்டனில் கிளிக் செய்திடவும்.
7. இனி “Startup and Recovery” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “System failure” என்பதன் கீழாக, “Automatically restart” என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.
8. பின்னர், ஓகே கிளிக் செய்து அனைத்து டயலாக் பாக்ஸ்களையும் மூடி வெளியேறவும். இனி, உங்கள் சிஸ்டம் முடங்கிப் போகையில், புளு ஸ்கிரீன் கிடைக்கையில், அதற்கான காரணங்களாகக் காட்டும் தகவல்களை நீங்கள் பெற முடியும்.
கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில், டெஸ்க்டாப் கிளீன் என தனியே ஒரு ஐகான் தரப்பட்டு செயல்படுத்தப்பட்டது. ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் அது இல்லை. இதனைப் பெற செட்டிங்ஸ் அமைப்பில் என்ன மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்?
எஸ். கருணாநிதி, கடலூர்.
பதில்: ஆம், நீங்கள் கூறுவது சரியே. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில், டெஸ்க்டாப் கிளீன் டூல் தனியாகத் தரப்பட்டது. இது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் அவ்வாறு தரப்படவில்லை. ஆனால், அதன் செயல்பாடு இதிலும் கிடைக்கிறது. System Maintenance என்பதில் இதுவும் இணைத்துத் தரப்பட்டுள்ளது. வழக்கமாக, இது தானாகவே செயல்பட்டு தன் பணியை மேற்கொள்ளும். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் மேற்கொண்டது போல நீங்களாக, இதனை இயக்க வேண்டும் என விரும்பினால், கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, அதன் தேடல் கட்டத்தில் Troubleshooting என டைப் செய்தால், அந்த மெனு கிடைக்கும். கிடைக்கும் தகவல்களில், முதல் தகவல் மீது கிளிக் செய்திடவும்.
2. கிடைக்கும் அடுத்த விண்டோவில் System and Security என்பதனைத் தேடிப் பெறவும். இதில் Run Maintenance Tasks என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இது System Maintenance என்ற விண்டோவினைத் திறக்கும். தொடர்ந்து செயல்பட Next என்பதில் கிளிக் செய்திடவும்.
4. உடன் வரிசையாகப் பல பராமரிப்பு பணிகளை இந்த டூல் மேற்கொள்ளும். விண்டோஸ் 7 சிஸ்டம் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதனைத் தானே கண்டறியும். இந்த பணிகளில் ஒன்றாக, விண்டோஸ் டெஸ்க்டாப் கிளீன் செய்யப்படும்.
இதில் ஏதேனும் பிரச்னையை நீங்கள் சந்திக்க நேர்ந்தால், சிகிளீனர் (CCleaner) மூலம் இதே பணியை மேற்கொள்ளலாம். இந்த புரோகிராமினை, மற்ற புரோகிராம்களைத் தொடங்குவது போல, இருமுறை கிளிக் செய்து தொடங்கவும். இதன் System மெனுவில் Desktop Shortcuts என்பதன் அருகே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். Windows மற்றும் Applications டேப்களில் கிடைக்கும் மற்ற ஆப்ஷன்களையும் காணவும். இங்கு கிடைக்கும் Analyze என்ற பட்டனில் கிளிக் செய்தால், சி கிளீனர் குப்பை பைல்களைக் காட்டும். இதன் பின்னர், இடதுபுறமாக உள்ள Run Cleaner என்ற பட்டனில் கிளிக் செய்தால், குப்பை பைல்கள் அனைத்தும் நீக்கப்படும். இதில் தேவையற்ற டெஸ்க்டாப் ஷார்ட்கட் ஐகான்கள் நீக்கப்படும். அதனுடன், நீங்கள் விரும்பினால், மற்ற தேவையற்ற பைல்களும் நீக்கப்படும். சிகிளீனர் என்னும் புரோகிராமினை இலவசமாக இதனைத் தயாரித்து வழங்கும் Piriform என்னும் நிறுவனத்தின் இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
கேள்வி: அண்மையில் ஆண்ட்ராய்ட் டேப்ளட் ஒன்றை வாங்கினேன். என் மின் அஞ்சல்களைத் திறந்து பார்க்க முயற்சிக்கையில், பல அஞ்சல்கள், அவற்றைக் காண அடோப் ப்ளாஷ் வேண்டும் என்ற செய்தியைக் காட்டின. இந்த டேப்ளட் கூகுள் அடிப்படையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்டதாக உள்ளது. எனவே, அடோப் ப்ளாஷ் தொகுப்பினை டவுண்லோட் செய்திட மறுக்கிறது. அனைத்து ஆண்ட்ராய்ட் டேப்ளட்களும் இப்படித்தான் செயல்படுகின்றனவா? நான் வாங்கிய கடையில் சென்று விசாரித்த போது, அதனைத் திருப்பிக் கொடுத்துவிட்டு புதிய இன்னொரு நிறுவன டேப்ளட் ஒன்றைக் கொடுத்தார்கள். இது பற்றிய கூடுதல் தகவல்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சி. ரத்ன குமார் சிங், மும்பை
பதில்: சற்று வித்தியாசமான கேள்வியாக இருந்தாலும், இதில் உள்ள தகவல்களை அனைவரும் அறிந்து கொள்ள விரும்பி இந்த பதிலைத் தருகிறேன். அண்மையில் விற்பனைக்கு வந்துள்ள ஆண்ட்ராய்ட் டேப்ளட் பி.சி.க்களில் நீங்கள் கூறும் அனுபவம் கிடைக்கிறது. ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.1 மற்றும் அதற்குப் பின்னர் வந்துள்ள சிஸ்டம் பதிப்புகளை, உங்கள் ஆண்ட்ராய்ட் டேப்ளட் கொண்டிருந்தால், அடோப் ப்ளாஷ் பிளேயர் தேவைப்படும் எதனையும் நீங்கள் அணுக முடியாது.
ஏனென்றால், அடோப் நிறுவனம் மொபைல் சாதனங்களுக்கான அடோப் ப்ளாஷ் தயாரித்து வழங்குவதனை 2011 நவம்பரில் நிறுத்திவிட்டது. அதற்கு முன்னால், ப்ளாஷ் இயக்கத்தில் செயல்பட்டவை தொடர்ந்து செயல்படுகின்றன. இவற்றிற்கு சிறிய அளவில் அப்டேட் பைல்கள் கிடைத்து வருகின்றன. இப்போது ஆண்ட்ராய்ட் டேப்ளட்களில், ப்ளாஷ் ப்ளேயர் என்பது இல்லாத ஒன்றாகவே மாறிவிட்டது.
இருப்பினும், நீங்கள் கூறிய ஆண்ட்ராய்ட் டேப்ளட் பி.சி.க்களில், ப்ளாஷ் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என விரும்பினால், Puffin வெப் பிரவுசர் போன்ற அப்ளிகேஷனை இயக்கலாம். இது https://play.google.com/store/apps/details?id=com.cloudmosa.puffin&hl=en என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது.
கேள்வி: டெரா காப்பி புரோகிராமினைப் பயன்படுத்தினால், நம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு கேடு விளையுமா? இணையத்தில் இருந்து இதனைக் காப்பி செய்து பயன்படுத்தலாமா? மற்றவற்றில் இல்லாத சிறப்புகள் இதில் என்ன உள்ளன?
எஸ். பூங்குழலி, கோவை.
பதில்: மற்றவற்றில் இல்லாத சிறப்புகள் என்ன உள்ளன? என்று கேட்டு இந்த கேள்வியை அனுப்பி உள்ளீர்கள். அந்த மற்றவை காப்பி செய்திட உதவும் புரோகிராம்கள் என்ற அடிப்படையில் இந்த பதிலைத் தருகிறேன்.
டெரா காப்பி (TeraCopy) புரோகிராமினை http://www.box.net/shared/o16me8egx3 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து பயன் படுத்தலாம். ஏதேனும் ஒன்றை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்திடுகையில் அதனை விரைவாக மேற்கொள்ள இந்த புரோகிராம் உதவும். இதனைப் பதிவு செய்து இயக்கிவிட்டால், பின்னர் எதனைக் காப்பி செய்தாலும், இதன் மூலமே காப்பி செய்யப்படும். இதன் ஒரு சிறப்பு அம்சத்தை இங்கு கூறுகிறேன். (ஆனால், அது மற்ற சில காப்பி செய்திடும் புரோகிராம்களிலும் இருக்கிறது.) காப்பி செய்திடுகையில் அந்த செயல்பாடு நின்று போனால், மீண்டும் இணைப்பு கிடைக்கையில், விட்ட இடத்திலிருந்து காப்பி செயல்பாடு தொடரும். பைல்களை மொத்தமாகக் காப்பி செய்திடக் கட்டளை கொடுத்தால், பைல் ஒன்றில் பிரச்னை ஏற்பட்டால், அதனை விடுத்து, அடுத்த பைலைக் காப்பி செய்திடத் தொடங்கும். எந்த பைலில் பிரச்னை இருந்தது என்றும் நமக்குக் காட்டும். எந்த ஒரு பைலை எடுத்து, அதன் பெயர் மீது ரைட் கிளிக் செய்தால், கிடைக்கும் மெனுவில், டெரா காப்பி புரோகிராம் இயக்கத்திற்கான ஆப்ஷன் தரப்படும். இதனுடன் வழக்கமாக விண்டோஸ் காப்பி ஆப்ஷனும் கிடைக்கும்.