கேள்வி-பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2014
00:00

கேள்வி: திடீரென ஸ்கைப் பயன்படுத்துவதில் சிக்கல். புதிய பதிப்பினை இன்ஸ்டால் செய்தேன். இதனைப் பயன்படுத்த படிவத்தினை நிரப்பினேன். ஸ்கைப் பயன்படுத்துவது இலவசம் என்றாலும், அது ஒரு டாலர் ($1) கட்டணம் என்று சொல்கிறது. போன் அழைப்புக்குத்தானே கட்டணம். ஸ்கைப் பயன்படுத்த ஏன்? எங்கு தவறு?
-செ. இன்னாசி, ஏரல்.
பதில்:
இன்னாசி, ஸ்கைப் வழி வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்புகளை, உலகின் எந்த மூலையில் இருந்தும் இலவசமாகப் பயன்படுத்தலாம். ஆனால், லேண்ட் லைன் அல்லது மொபைல் போனுக்கு அழைப்பு விடுத்தால், அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தியாவில் இந்த வசதியையே ஸ்கைப் எடுத்துவிடப் போவதாகவும் தகவல் உள்ளது. நீங்கள் யாருடனாவது தொடர்பு கொண்டு வீடியோ அல்லது வாய்ஸ் அழைப்பில் தொடர்பு கொள்வதாக இருந்தால், அவருக்கு ஸ்கைப் முகவரி ஒன்று இருக்க வேண்டும். அதனை உறுதி செய்து கொண்டீர்களா? அல்லது அவரின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்தீர்களா?

கேள்வி: விண்டோஸ். விஸ்டா மக்களிடம் எடுபடாமல் போனதற்குக் காரணம் என்ன? விண்டோஸ் 8 மக்களிடம் எடுபடாமல் போனதன் பின்னணியில், இதனைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
-ஆ. புனிதா சந்திரன், மதுரை.
பதில்:
ஒரு சிலர் இன்னும் விண்டோஸ் விஸ்டாவினைப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். நெட்மார்க்கட் ஷேர் மையம் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, விஸ்டா சிஸ்டம் 3.07% கம்ப்யூட்டர்களில் இயங்குகின்றன. (லினக்ஸ் பயன்படுத்துபவர்கள் 1.64% என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). ஆனாலும், விஸ்டா மக்களிடம் எடுபடவில்லை என்பது உண்மையே. இது முந்தைய விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்ததே, இது புறக்கணிக்கப்பட்டதற்கான காரணமாகும். முற்றிலுமாக மாறுதலை மேற்கொள்ள மக்கள் தயாராக இல்லை. இதனைப் பின்னாளில் உணர்ந்த மைக்ரோசாப்ட், விண்டோஸ் விஸ்டாவின் சுவடு இல்லாமல், விண்டோஸ் 7 சிஸ்டத்தினைத் தந்து மக்களிடம் தங்கள் பெயரைத் தக்க வைத்துக் கொண்டனர்.
இதே கதைதான் விண்டோஸ் 8 சிஸ்டம் அறிமுகத்திலும் இருந்தது. விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்து முற்றிலும் புதிய வழிகளைக் கொண்டதாக இருந்ததால், மக்களிடம் விண்டோஸ் 8 எடுபடவில்லை. இதனைச் சமாளிக்க, விண்டோஸ் 8.1 கொண்டு வரப்பட்டது. இருப்பினும் பயனாளர்கள் மனது நிறைவடையவில்லை. எனவே, விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 7 ஆகிய சிஸ்டங்களில் உள்ள, மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அனைத்தையும் இணைத்து விண்டோஸ் 10 இப்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மக்களிடம் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உங்களுக்குத் தெரியுமா! இன்றும் விண்டோஸ் 7 தான், பெரும்பாலானவர்களால், 52/71%, பயன்படுத்தப்படுகிறது. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவது ஆபத்தானது என்றாலும், அதனை 24% பேர் பயன்படுத்தி வருகின்றனர். விண்டோஸ் 8 மற்றும் 8.1 பயன்படுத்துவோர் 12%க்கும் சற்று அதிமானவர்களே.

கேள்வி: என் பெர்சனல் கம்ப்யூட்டரில் எப்போது “Safely Remove Hardware” பயன்படுத்தி, யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினை எடுக்க முயன்றாலும், ”இந்த சாதனம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதனைப் பயன்படுத்தும் விண்டோஸ் அல்லது வேறு புரோகிராமினை நிறுத்தி, பின் வெளியில் எடுக்க முயற்சிக்கவும்” என்ற செய்தி கிடைக்கிறது. ஆனால், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் எந்த வகையிலும் அப்போது பயன்பாட்டில் இருக்கவில்லை. பின் ஏன் இந்த செய்தி கிடைக்கிறது? என விளக்கவும். இதனைத் தவிர்க்க என்ன செய்திட வேண்டும்?
எஸ். முத்து மோகன சுந்தரம், காரைக்குடி.
பதில்:
“Safely Remove Hardware” என்னும் டூல், நாம் பயன்படுத்தும், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவில் எழுதப்படும் பைல்கள், குறுக்கீடுகளால், கரப்ட் ஆகாமல் இருக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதில் பைல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போதோ, அதில் உள்ள டேட்டா படிக்கப்பட்டு, கம்ப்யூட்டரின் மெமரிக்கு மாறும்போதோ, உங்கள் ட்ரைவ், கம்ப்யூட்டரின் யு.எஸ்.பி. போர்ட்டிலிருந்து எடுக்கப்பட்டால், அந்த பைல் நிச்சயம் கெட்டுப் போவதற்கு வாய்ப்புண்டு, மேலே சொல்லப்பட்ட டூல், இந்த நிகழ்வு ஏற்படாமல் நம்மை எச்சரிக்கிறது. இருப்பினும், நீங்கள் குறிப்பிடுவது போல, எந்த பைலும் படிக்கப்படாமலும், எழுதப்படாமலும் இருக்கும்போதும் பிழைச் செய்தி கிடைக்கலாம். இதற்கு ஒரு காரணம் உண்டு. விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற, நீங்கள் எதிர்பார்க்காத புரோகிராம்கள், அதனுடைய ”மியூசிக் நூலகத்தை” அமைக்கப், புதியதாக ஏதேனும் மியூசிக் பைல்கள் வந்துள்ளனவா என்று, கம்ப்யூட்டரின் மற்றும் அதனுடன் இணைந்துள்ள ட்ரைவ்களில் தேடிப் பார்க்கும். இந்த செயல்பாடுகள் கூட, உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவ் பயன்பாட்டில் உள்ளது என்று கூறச் சரியான காரணமாகும்.
இந்த சூழ்நிலையில், உங்கள் கம்ப்யூட்டரில் பின்னணியில் இயங்கும் புரோகிராம்கள் எவை என்று அறிந்து அவற்றின் இயக்கத்தினை நிறுத்த வேண்டும். இதற்கு “Ctrl,” “Alt,” மற்றும் “Delete” கீகளை ஒரு சேர அழுத்தி, டாஸ்க் மானேஜர் விண்டோவினைக் கொண்டு வர வேண்டும். இதில் “Processes” டேப்பில் கிளிக் செய்தால், இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் எவை என்று தெரிய வரும். அதில் மேலே சொல்லப்படும் வகையில் இயங்கி, ட்ரைவில் பைல்களைத் தேடும் புரோகிராம்களின் இயக்கத்தினை நிறுத்த வேண்டும்.
இதன் பின்னரும், யு.எஸ்.பி. ட்ரைவினை வெளியே எடுக்க முயற்சிக்கையில், அது பயன்பாட்டில் இருக்கிறது என்ற பிழைச் செய்தி வந்தால், உங்கள் கம்ப்யூட்டர், ட்ரைவின் மெமரியை, ராம் மெமரிக்கான இடமாக எடுக்க முயற்சிக்கிறது என்று பொருள். இந்நிலையில், ஸ்டார்ட் மெனு அழுத்தி, “Computer,” என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், யு.எஸ்.பி. ட்ரைவின் பெயரில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Properties” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இதில் “ReadyBoost” டேப் செல்லவும். இங்கு “Do Not Use This Device” என்று தரப்பட்டுள்ள ரேடியோ பட்டனைக் கிளிக் செய்திடவும். அதன் பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது யு.எஸ்.பி. ட்ரைவினை எடுக்க முயற்சித்தால், “உங்கள் ட்ரைவினை பாதுகாப்பாக நீக்கலாம்” என்ற செய்தி கிடைக்கும்.

கேள்வி: என்னுடைய தற்போதைய கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி ப்ரோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளது. இதன் ஹார்ட் ட்ரைவினை எஸ்.எஸ்.டி. ஹார்ட் ட்ரைவாக, புதிய ஒன்றுக்கு மாற்ற விரும்புகிறேன். மிக எளிதாக இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உட்பட அனைத்து பைல்கள், ட்ரைவர்கள் ஆகியவற்றை மாற்றுவதற்கான வழி தரவும்.
ஆ. சுந்தர ராமன், பெரியகுளம்.

பதில்: மெக்கானிகல் ஹார்ட் ட்ரைவிலிருந்து, எஸ்.எஸ்.டி. (solid state drive) க்கு மாற இருப்பதாகக் கூறுகிறீர்கள். (ஏன், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மாற்றுவது குறித்து எதுவும் சொல்லவில்லை?) ஓ.எஸ். உட்பட அனைத்து பைல்களும் புதிய ஹார்ட் டிஸ்க்கிற்கு மாற்றப்பட வேண்டும். இதற்கு க்ளோனிங் (Cloning) எனப்படும் அப்படியே பதிப்பு நகல் எடுக்கக் கூடிய புரோகிராம் ஒன்று தேவைப்படும். இந்த புரோகிராம், உங்கள் ஹார்ட் ட்ரைவில் உள்ளவற்றை, அப்படியே நகல் எடுத்து வைத்து மாற்றும். ஆனால், இதற்கு, தற்போதைய ஹார்ட் ட்ரைவ் அளவில், அல்லது அதற்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட ஹார்ட் ட்ரைவ் ஒன்று தேவைப்படும். அப்போதுதான் பார்ட்டிஷன் போன்ற பிரச்னை எதுவும் இன்றி, காப்பி செய்திடலாம்.
இதனை மேற்கொள்ள உங்களுக்கு EasyUS Disk Copy என்ற புரோகிராம் தேவைப்படும். இதன் ஹோம் எடிஷன் பதிப்பு, இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. தளத்தின் முகவரி: http://www.easeus.com/disk-copy/home-edition/
இதனை முதலில் டவுண்லோட் செய்து, இயக்க வேண்டும். உடன், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்று அல்லது சி.டி. ஒன்று, எந்த பைலும் பதியப்படாத நிலையில் கேட்கும். இவற்றில், சி.டி. நல்ல பலனைத் தரும். தொடர்ந்து இந்த புரோகிராமே, உங்களை வழி நடத்தும். பழைய ஹார்ட் ட்ரைவின் காப்பி அடங்கிய டிஸ்க் உருவாக்கப்படும். உருவாக்கியவுடன், உங்கள் எஸ்.எஸ்.டி. டிஸ்க்கினை இன்ஸ்டால் செய்திடவும். பின்னர் நகலெடுத்த சி.டி.யினைப் பயன்படுத்தி, உங்கள் கம்ப்யூட்டரை பூட் செய்திடவும். அதற்கேற்ற வகையில், உங்கள் பயாஸ் அமைப்பில், சி.டி. வழியாக பூட் செய்திடும் வகையில் செட்டிங்ஸ் மாற்றப்பட வேண்டும். பழைய ஹார்ட் டிஸ்க்கினைப் பயன்படுத்த வேண்டாம்.
இப்போது Disk Copy புரோகிராம் திறக்கப்பட்டு, நீங்கள் “disk copy” கட்டளையைத் தேர்ந்தெடுத்து அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். பழைய ஹார்ட் ட்ரைவினை source hard drive ஆக தேர்ந்தெடுக்கவும். இலக்கில் கொள்ள வேண்டிய ஹார்ட் ட்ரைவாக SSD ட்ரைவினைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து பைல்களை காப்பி செய்திட கட்டளை அமைக்கவும். இது சற்று நேரம் எடுத்துக் கொள்ளவும். பொறுமையாகக் காத்திருக்கவும். கம்ப்யூட்டருக்கான மின் சக்தியும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். முழுமையாக முடிந்தவுடன், பழைய ஹார்ட் ட்ரைவினை நீக்கிவிட்டு, எஸ்.எஸ்.டி. டிஸ்க் வழியாக, கம்ப்யூட்டரை இயக்கவும். கூடுதல் தகவல்களுக்கும் வழி காட்டுதல்களுக்கும், இந்த EasyUS சாப்ட்வேர் தொகுப்பினை வழங்கும் நிறுவனத்தின் கேள்வி பதில் பகுதியைப் பார்க்கவும். தள முகவரி: http://www.easeus.com/disk-copy/faq.htm

கேள்வி: புதியதாக விண்டோஸ் 8 பதியப்பட்ட லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்று வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். இதில், எச்.பி.நிறுவனம் தந்துள்ள பல சாப்ட்வேர் தொகுப்புகள் தாங்களாகவே தொடங்கிவிடுகின்றன. இவற்றை நிறுத்துவதற்கான வழி எங்குள்ளது என்று தெரியவில்லை. Msconfig கட்டளை கொடுக்கும் இடமும் புரியவில்லை. வழி காட்டவும்.
-என். ஸ்ரீதேவி குமரன், சென்னை.
பதில்:
விண்டோஸ் 8 பயன்படுத்துவோருக்கு எழும் எரிச்சல் மிக்க இடங்களில் இதுவும் ஒன்று. ஏற்கனவே அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும், எளிய வழியில் கிடைத்து வந்த Msconfig புரோகிராம் இருக்கும் இடம் மாற்றப்பட்ட வழியிலேயே கிடைக்கிறது. இதுதான், உங்கள் பிரச்னையின் மூல காரணமாக உள்ளது. ஆனால், Msconfig எப்படியும் இருந்தே ஆக வேண்டும் அல்லவா! அது எங்கு கிடைக்கிறது என்பதனைப் பார்க்கலாம். முதலில் Charms menu மெனுவினைத் திறக்கவும். இதற்கு உங்கள் திரையில் மேல் அல்லது கீழாக மவுஸைச் சுழற்றவும். பின்னர், டாஸ்க் மேனேஜரைக் (Task Manager) கண்டறிந்து திறக்கவும். இந்த இடத்தில் Startup டேப்பினை நீங்கள் காணலாம். இதனைக் கிளிக் செய்து ஸ்டார்ட் அப் மெனுவில், நீங்கள் நீக்க விரும்பும் புரோகிராம்கள் அனைத்தையும் நீக்கலாம். இதற்கு அந்த புரோகிராம்கள் மீது ரைட் கிளிக் ஏற்படுத்தி, கிடைக்கும் மெனுவில் Disable என்பதனை இயக்கவும். இனி, கம்ப்யூட்டர் தொடங்குகையில், இந்த புரோகிராம்கள் தொடங்காது.

கேள்வி: பல ஆண்டுகளாக, ஜிமெயில் பயன்படுத்தி வருகிறேன். சில வாரங்களாக, எனக்கு வந்த மெயில்கள் படிக்கப்பட்டதுபோல காட்சி அளிக்கிறது. முக்கிய மெயில் கடிதங்கள் மட்டும் படித்தபடி எனக்குக் கிடைக்கின்றன. இது எதனால் ஏற்படுகிறது? வைரஸ் இது போலச் செயல்படுமா?
-என். கல்யாண சுந்தரம், சிவகாசி.
பதில்:
இது நிச்சயமாக வைரஸ் இல்லை. உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைக் கண்டறிந்த, உங்களுக்கு வேண்டிய நபர் ஒருவர் செய்திடும் வேலைதான் இது. சில வேளைகளில் நாம் அஜாக்கிரதையாக இருந்து நம் பாஸ்வேர்டினைக் காட்டிக் கொடுக்கும் வகையில் பயன்படுத்துவதனால், வந்த வினை. இதனை முதலில் உறுதிப் படுத்திக் கொண்டு, பின், அதிலிருந்து தப்பிக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.
உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் செல்லவும். பின், அதே பக்கத்தில் கீழ் பகுதிக்கு உருட்டிச் செல்லவும். வலது மூலையில் Details என்று ஒரு பகுதி இருக்கும். அதில் கிளிக் செய்திடவும். இங்கு, அந்த நேரத்தில், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில், வேறு ஒரு இடத்தில் இருந்து, இன்னொருவர் உள்ளே நுழைந்திருக்கிறாரா என்பதனை அறியலாம். இதனுடன், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் எப்போதெல்லாம் லாக் இன் செய்யப்பட்டது என்ற தகவல்களும் கிடைக்கும். அப்படி ஏதேனும் தெரிய வந்தால், உடனடியாகப் பாஸ்வேர்டினை மாற்றவும். சில வேளைகளில், ஜிமெயில் இது போன்ற நேரங்களில், எச்சரிக்கை செய்தியினை நமக்கு வழங்கும். வழக்கமான கம்ப்யூட்டர் இல்லாமல், வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து, அல்லது இணைய முகவரியிலிருந்து உங்கள் ஜிமெயில் பார்க்கப்பட்டதாக உங்களுக்கு அது தெரிவிக்கும். இது போன்ற சூழ்நிலைகளில் பாஸ்வேர்டினை மாற்றிவிட்டால் போதும். மாற்றப்பட்ட பாஸ்வேர்டினை மற்றவருக்குத் தெரியாமல் வைப்பதுதான், தொடர்ந்து இது போல நடக்காமல் பார்த்துக் கொள்ளும் பாதுகாப்பு வழியாகும். பொதுவாக, ஜிமெயில் பயன்படுத்தும் அனைவருமே, இது போல Details பகுதி சென்று, நம் மின் அஞ்சல்கள் வேறு ஒருவரால் படிக்கப்படுகின்றனவா என்று சோதனை செய்வது நல்லது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X