கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (4)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2014
00:00

என்னுடைய திகைப்புக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, இவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு, ' பிரமோஷன்' கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை; இரண்டு, 'பிரமோஷன்' கிடைத்தால், அது ஆண் வேடமாகத்தான் இருக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு கிடைத்ததோ பெண் வேடம்; அதுவும் கொஞ்சம் பெரிய வேடம் என்பது தான் திகைப்புக்குக் காரணம்.
பெரிய வேடம் என்றால், என்ன வேடம்?
சீதையாக இருந்த நான், சூர்ப்பனகையாக்கப் பட்டேன்!
ராமாயணத்தில் சீதையைவிட, முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமல்ல சூர்ப்பனகையின் வேடம்!
ஆனால், என்னைப் பொறுத்தவரை, சீதையை விட, சூர்ப்பனகையே முக்கியமானவராகக் காட்சி தந்தார். காரணம், அதுவரை, ராமாயணத்தில் நான் போட்டது, கன்னி மாடத்து சீதை; மூன்றே காட்சிகள்தான் வரும் என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் திறமையைக் காட்டவோ, பார்வையாளர்களை கவரவோ அதிக சந்தர்ப்பம் இல்லை.
ஆனால், சூர்ப்பனகையின் வேடம் அப்படி அல்ல, அழகு சுந்தரியாக அவள் வந்து, லட்சுமணனை மயக்க ஆடி, பாட வேண்டும்; அவனுடன் கொஞ்ச வேண்டும்; கடைசியில், லட்சுமணனிடம் மூக்கறுபட்டு, கோபத்துடன் செல்ல வேண்டும்; ஆடல், பாடல், காதல், கோபம் - இப்படி எல்லாம் நிறைந்த வேடம் அது!
'நல்ல வேடம் எது?' என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, சீதையைவிட, சூர்ப்பனகை வேடமே பெரிது என்று தோன்றியது. அதனால் தான் சூர்ப்பனகையின் வேடத்தை எனக்கு தரப்போவதாக சொன்ன போது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.
சாதாரணமாக, மூக்கும் முழியுமாக சிறிது லட்சணமாக இருக்கும் நடிகர்களுக்குத்தான் சூர்ப்பனகை வேடம் தரப்படும். எனவே, கம்பெனியின் பார்வையில், நானும் ஒரு அழகனாக கருதப்பட்டிருந்ததை எண்ணியபோது எனக்குப் பெருமையாகவே இருந்தது.
நான் சூர்ப்பனகையாக நடித்த போது, லட்சுமணனாக துறையூர் நடராஜன் நடித்தார். அவருக்கு கண்கள் சற்றுப் பெரியதாக இருக்கும்; அதனால் அவரை, முண்டக்கண் நடராஜன் என்று அழைப்போம்.
லட்சுமணனை மயக்குவதற்காக, கண்ணை ஒரு வெட்டு வெட்டி, இடுப்பை ஒரு ஒடி ஒடித்து, பாட ஆரம்பித்தால் போதும்... அந்தக் கண் வெட்டுக்கும், இடுப்பு ஒடிப்புக்குமே, 'அப்ளாசு'ம், 'ஆகா'வும் கொட்டகையில் எழும்!
என் வாத்தியாருக்கு இதையெல்லாம் கண்டு ரொம்பவும் சந்தோஷம்; என் மீது கொஞ்சம் அதிகமாகவே பிரியம் வைக்க ஆரம்பித்தார்.
அந்த பிரியத்தில் தான், 'அபிமன்யு சுந்தரி, பம்பாய் மெயில் மற்றும் வேதாள உலகம்' போன்ற நாடகங்களில் கதாநாயகியின் வேடம் கொடுத்து, அவற்றிற்கான பாடங்களை படிக்க வைத்து, அந்த வேடங்களை ஏற்று நடிக்க, எனக்கு சந்தர்ப்பம் தந்தார்.
இந்தப் பாடங்களை எல்லாம் பத்து, பதினைந்து நாட்களுக்குள்ளேயே மனப்பாடம் செய்து விட்டேன்.
பொதுவாகவே, நாடகக் கம்பெனிகளில் அப்போது ஒரு பழக்கம் உண்டு; முக்கிய நடிகர்கள் என்று சொல்லப்படுவோர் அனைவரும், அந்த நாடகக் கம்பெனி நடத்தும் நாடகங்களில் வரும் எல்லா கதாபாத்திரங்களின் வசனத்தையும் மனப்பாடம் செய்திருக்க வேண்டும். எந்த ஒரு காரணத்திலாவது, வழக்கமாக ஒரு வேடத்தைச் செய்பவர், அதைச் செய்ய இயலாமல் போய்விட்டால், நாடகம் நின்றுவிடக் கூடாதல்லவா? உடனே, யாராவது ஒருவர், அந்த வேடத்தில் நடிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த முன்னேற்பாடு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இந்த ஏற்பாட்டின்படி, நானும் எல்லா முக்கிய வேடங்களின் பாடங்களையும் படித்து, மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.
சுருங்கச் சொல்வதானால், பெரும்பாலான நடிகர்களுக்கு, ஒவ்வொரு நாடகமும் அப்படியே மனப்பாடம் ஆகி இருக்கும்.
ஒவ்வொரு ஊராகச் சென்று முகாமிட்டதும், கம்பெனியிலுள்ள முக்கியமானவர்கள் முதல் முக்கிய நடிகர்கள் வரை, முதல் வேலையாக அந்த ஊரிலுள்ள பெரிய மனிதர்களை, பெரிய அதிகாரிகளை தெரிந்து, அவர்களது வீட்டிற்கு நேரில் போய் பார்ப்பர்.
'நாங்கள் உங்கள் ஊருக்கு நாடகம் நடத்த வந்திருக்கிறோம்; உங்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும் தந்து எங்களை ஊக்கப்படுத்தி, கலையை வளர்க்க வேண்டுகிறோம்...' என்று பெண் வீட்டார், சம்பந்திகளை அழைப்பது போல அழைப்பர். இதனால், ஒவ்வொரு ஊரிலும் முகாமிடும்போது, அவ்வூரிலுள்ள முக்கியமானவர்களுக்கும், கம்பெனிகளுக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டு விடும்.
ஊர்ப்பெரியவர்களும், கம்பெனியில் உள்ளவர்களைக் கவுரவப்படுத்தும் வகையில், தங்கள் வீட்டுக்கு அழைத்து, விருந்து வைத்து, பரிசுகளும் கொடுத்து அனுப்புவர்.
அந்த மாதிரி விருந்துகளுக்கு போவதென்றால், எங்களுக்குத் தனி, 'குஷி!'
திண்டுக்கல்லில் நாங்கள் முகாமிட்டிருந்த போது, இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல்லின் புகழை, தமிழ்நாடெங்கும் பரப்பியவர்களில், 'அங்கு விலாஸ்' புகையிலை நிறுவனரும் ஒருவர். அதன் உரிமையாளர் முத்தையா பிள்ளை, எங்கள் கம்பெனி நாடகங்களைப் பார்த்து, பெரிதும் மனமகிழ்ந்து, மேடைக்கு முன் தொங்க விடுவதற்காக, பெரிய திரைச் சீலை ஒன்றை பரிசளித்தார். வெள்ளிச் சரிகையும், ரங்கூன் டைமண்ட் கற்களும் கொண்டு, சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, கவர்ச்சியுடன் விளங்கிய அந்தப் படுதாவின் விலை, அப்போதே பல ஆயிரம் ரூபாய் இருக்கும்.
அது மட்டுமல்ல, அவரது வீட்டுக்கு எங்கள் எல்லாரையும் அழைத்துச் சென்று, ஒரு பெரிய விருந்து அளித்தார். பின்னர் வேட்டி, பைஜாமா, ஜிப்பா என்று கம்பெனியிலிருந்த நடிகர்களுக்கு புது உடைகளையும் பரிசளித்தார்.
கம்பெனி நடிகர்களில், அவர்களது அனுபவத்திற்கும், அவசியத்திற்கும் ஏற்ப விடுமுறை தரப்படும்.
ஒரு சமயம் கம்பெனியில் இருந்த காக்கா ராதாகிருஷ்ணன் திருச்சிக்கு போய் வந்தார். திரும்பி வந்தபோது என்னை தனியே அழைத்து, என் அண்ணன் திருஞானசம்பந்தமூர்த்தி தவறி விட்ட சோகச் செய்தியைச் சொன்னார்.
அவர் இறப்பதற்கு முன்தினம், அவர் பக்கத்திலேயே காக்கா ராதாகிருஷ்ணன் படுத்திருந்ததாகவும், என்னைப் பற்றியும், என் கம்பெனி வாழ்க்கையைப் பற்றியும், அக்கறையுடன் அவர் விசாரித்தாக கூறினார். இதைக் கேட்டதும் நான் இடிந்து போய், கண்ணீர் விட்டேன்.
அன்று பூராவுமே, என் மனம் ஒரு நிலையிலும் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
வீட்டிலுள்ளவர்களைப் பார்க்க வேண்டும்; அதுவும் உடனடியாகப் போய் என் தாயார், அண்ணன், தம்பி, ஏன் எல்லாரையும் கண்டு பேசிவிட்டு வர வேண்டும் என்ற ஒரு ஆசை, ஏக்கம் என் நெஞ்சில் பீறிட்டு எழுந்தது.
பிரிவின் வேதனையை, என் மனம் மீண்டும் அனுபவிக்க ஆரம்பித்து விட்டது.
ஆனால், எப்படி, எதைச் சொல்லி விடுமுறை வாங்குவது என நினைத்த போது, கூடவே அந்த பயமும் பிடித்துக் கொண்டது.
தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shriram - chennai ,இந்தியா
27-அக்-201409:34:26 IST Report Abuse
Shriram சாமானியன் பெரிய மனுஷன்,ஆவர்துன்னா இப்படி எவ்வளவோ கஷ்டங்கள். இன்று இவர் மகன் பிரபு முதல் பேரன் வரை, விஜய் முதல் ஏனைய வாரிசுகள் இவர்கள் பெயரை வைத்து மட்டுமே பிரபலங்கள் ஆகிவிடுகின்றனர்,
Rate this:
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
26-அக்-201413:45:26 IST Report Abuse
sundaram என் அண்ணன் என்று சிவாஜி குறிப்பிட்டுள்ள திருஞானசம்பந்தமூர்த்தி சிவாஜியின் அண்ணனா? இதுவரை கேள்விப்பட்டதில்லையே
Rate this:
bharani - chennai,இந்தியா
29-அக்-201416:11:06 IST Report Abuse
bharaniஅது சிவாஜி அண்ணன் கிடையாது நன்றாக படியுங்கள் காக்க ராதாகிருஷ்ணன் அவருடைய அண்ணன்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X