அந்துமணி பா.கே.ப., | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2014
00:00

'கையில் ஒரு தொழில் இருந்தால் கவலையே இல்லை...' என்பதற்கு உதாரணமாக, கோவிந்தசாமி என்ற ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் லென்ஸ் மாமா. 'கோவிந்தசாமி ஒரு, 'இன்ட்ரஸ்டிங் கேரக்டர்' என் வீட்டில் மரம் ஏறி தேங்காய் பறித்துப் போடுவது அவர் தான்...' எனக் கூறினார் லென்ஸ் மாமா.
கோவிந்தசாமியிடம் பேச்சுக் கொடுத்தேன்...
'திருவொற்றியூர் தாங்க என் சொந்த ஊர். திருவொற்றியூரில் ஒரு கம்பெனியில தொழிலாளியா வேலை பாத்தேங்க... அந்த கம்பெனிய, 1990ல் மூடிட்டாங்க. 'அதப்பத்தி எல்லாம் நான் கவலைப்படல... படிக்கும் போதே எங்கப்பாகிட்டே இருந்து, தென்னை மரம் ஏற கத்துக் கிட்டேன். இப்போ எனக்கு, 45 வயசு; ரெண்டு பையனும், ரெண்டு பொண்ணுங்களும் இருக்காங்க. கம்பெனிய மூடுனதும், எங்கப்பா விட்டுப் போன மரம் ஏறும் சாமான்களை எடுத்து இடுப்பில் கட்டிக்கிட்டேன். சென்னையில் உள்ள பங்களாக்களில், தேங்காய் பறிக்கும் வேலய இப்போ செஞ்சுகிட்டு இருக்கேன். கம்பெனியில வாங்கின சம்பளத்துக்கு குறையாமல் வரும்படி வருது; இப்ப என் பெண்ணோட கல்யாணத்துக்கு வரன் பார்த்துக்கிட்டு இருக்கேன்.
'என்னோட ரெண்டு பசங்களும் லேத், டர்னிங் தொழில்களை பத்தி படிக்கிறாங்க; என் கடைசி மகளை மட்டும் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புறேன். என் கையில் தொழில் இருக்கு... எதுக்கும் கவலை இல்லே...' என்று சந்தோஷமாக கோவிந்தசாமி சொல்லி முடித்தபோது, லென்ஸ் மாமா ஆரம்பித்தார்...
'அப்போது, ராஜாஜி சென்னை ராஜதானியில், (பின், ஆந்திரம் பிரிந்தது.) முதல்வராக இருந்தார்; சுதந்திர நாட்டில் கல்வி கற்க நிறைய பள்ளிகள் தேவைப்பட்டன. செங்கல் கட்டடத்திற்கும், மரபெஞ்சுகளுக்கும் நிறைய செலவிடுவதற்கு பதில், இருக்கும் பள்ளிகளில், 'ஷிப்ட்' முறையை கொண்டு வரலாம் என்றார் ராஜாஜி. 'மிச்ச நேரத்தில் மாணவர்கள் என்ன செய்வர்...' என்று, 'ஷிப்ட்' முறையை எதிர்த்தவர்கள் கேட்டனர். 'தகப்பனார் செய்யும் தொழிலை செய்யட்டும்; பல பெற்றோர், தங்கள் தொழிலுக்கு பிள்ளைகளின் உதவி தேவை என்பதால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். இம்முறையால் கல்வியும் கற்கலாம்; தகப்பன் தொழிலுக்கும் உதவ முடியும்...' என்று கூறினார் ராஜாஜி. அதற்கு பயங்கர எதிர்ப்பு மூண்டது. ராஜாஜி, முதல்வர் பதவியை துறக்க, இதுவும் ஒரு காரணமாகி விட்டது. 'கோவிந்தசாமி இன்னைக்கு கூறும் அறிவுரையை ராஜாஜி, 60 வருடங்களுக்கு முன்பே எண்ணிப் பார்த்துள்ளார்...' என்றார் லென்ஸ் மாமா.
- கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்ள, நாமும் ஏற்பாடு செய்து கொள்வோமா?

படித்து விட்டு வேலைக்காக பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் வாசகர் ஒருவர், 'ஆப்ஜக்டிவ் டைப்' தேர்வுகளில் புதுவிதமாக, காப்பி நடக்கிறது... அதை நீங்கள் நேரில் பார்த்தால், 'இன்ட்ரஸ்டிங்' ஆக இருக்கும்; தேர்வு நடக்கும் நேரத்தில் சொல்கிறேன்... வருவீர்களா?' எனக் கேட்டார்.
'ஓ... வருகிறேன்; ஆனால், தேர்வு நேரங்களில் வெளியாட்களை உள்ளே விட மாட்டார்களே...' என்றேன்.
'கவலைய விடுங்கள்; நான் அழைத்துச் சென்று, வசமான இடத்தில் உங்களை உட்கார வைக்கிறேன். அந்த இடத்தில் இருந்தே தேர்வு அறையின் உள்ளே நடப்பதை நீங்கள் தெளிவாகக் பார்க்கலாம்...' என்றார்.
அந்த நாளும் சமீபத்தில் வந்தது. வாசக நண்பர், தான் தேர்வு எழுதும் கல்லூரிக்கு அழைத்துச் சென்று, அவர் கூறியபடியே பாதுகாப்பான இடத்தில் அமர வைத்தார்.
மணி அடித்தது... அதுவரை பரபரப்பாக இருந்த கல்லூரி வளாகம் அமைதியானது. தேர்வு எழுத வந்தவர்கள், அவரவர் இருக்கையில் அமர, பரீட்சை பேப்பர் வினியோகம் ஆரம்பமானது.
எல்லாம் வழக்கப்படி நடக்க, ஒரு விஷயம் மட்டும் வினோதமாகப் பட்டது.
அது, தேர்வு எழுத வந்தவர்களில் பலரும் நான்கு பேனாக்கள், பென்சில்கள், ரப்பர்கள் என மேசை மீதும், தத்தம் சட்டைப் பைகளிலும் வைத்திருந்தனர். இரண்டு பேனாவும், ஒரு பென்சிலும், ஒரு ரப்பருமே அதிகப்படி எனும் போது, இத்தனை எதற்கு என, எண்ணிக் கொண்டிருக்கும் போதே, தேர்வு எழுத வந்தவர்களின் சேஷ்டைகள் ஆரம்பமானது.
ஒரு பேனாவைத் தூக்கிக் காட்டுவதும், இரண்டு பேனாக்களைத் தூக்கி பிடிப்பதும், பேனா, பென்சில், ரப்பர் என எடுத்துக் காட்டுவதுமாக இருந்தனர்.
வாசகர் சொன்ன, 'டுபாக்கூர்' வேலை இது தான் என்பது தெரிந்தாலும், விஷயம் முழுமையாகப் புரியவில்லை. தேர்வு முடித்து வந்த அந்த வாசகர், பின்னர் விளக்கினார்:
'நம்ம மக்கள் எந்த அளவுக்கு புத்திசாலிகள் என்பதற்கு இது ஒரு உதாரணம்... சரியான விடை தெரிந்தவர்களிடமிருந்து விடைகளைப் பெற, மற்றவர்கள் சங்கேத அடையாளங்களை பயன்படுத்துகின்றனர். இதன்படி தலையைச் சொறிந்தால், முதல் விடை சரியானது; நெற்றியைத் தொட்டால், இரண்டாவது விடை சரியானது; அதே போல கண்ணைத் தொட்டால், மூன்றாவது விடையும், மூக்கைத் தொட்டால், நான்காவது விடையும் சரியானவை...' என்றார்.
'சரி... கேள்விகள் இருநூறு வரை இருக்குமே... இதை எப்படி சொல்கின்றனர்...' எனக் கேட்டேன்.
'பேனா மூடி காட்டினால் ஒன்று; பேனாவை காட்டினால் இரண்டு, பென்சில் - ஐந்து, ரப்பர் - பத்து, கர்சிப் - ஜீரோ என மதிப்பு கொடுத்துள்ளனர். விடை கேட்பவர்கள் பேனா, பென்சில், ரப்பர் போன்றவற்றில் தலா மூன்று, நான்கு வைத்திருப்பர். உதாரணமாக, இருபத்தாறாவது கேள்விக்கு விடை கேட்க வேண்டும் என்றால், ஒரு பேனா அதை அடுத்து ஒரு பென்சில், அதன் மேல் ஒரு பேனா மூடி என வைத்துவிட்டு தேர்வு எழுத வந்திருக்கும் புத்திசாலியான நண்பனை ஒரு பார்வை பார்ப்பர்; அவர் தலையையோ, மூக்கையோ, சொறிந்து சரியான விடையைச் சொல்வார். அதே போல், ஐம்பதாவது கேள்விக்கு விடை தேவை என்றால், பென்சிலை வைத்து, அதை அடுத்து கர்சிப்பை வைப்பர்.
'இந்த சங்கேத அடையாளத்தை போட்டித் தேர்வு எழுத வருபவர்களும், கல்லூரி மாணவர்களும் பரவலாகப் பயன்படுத்துகின்றனர்...' என்றார் வாசகர்.
- இப்படி பரீட்சை பாஸ் பண்ணிட்டு வர்றவங்க கிட்ட இருந்து என்ன, 'குவாலிட்டி' எதிர்பார்க்க முடியும்?

'மேல் ஜாதியினர் எல்லாம் பணக்காரர் அல்ல, மற்ற ஜாதியினர் எல்லாம் ஏழைகள் அல்ல...' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை:
தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில், யாருக்கும் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. மனிதாபிமானமுள்ள, தேசபக்தி, தெய்வ பக்தியுள்ள ஒவ்வொரு மனிதனும் இதை விரும்புவான்; இதைச் செய்ய வேண்டும் என்பான். ஆனால், முன்னேறிவிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பறித்து, அபகரித்து பின் தங்கிய சமுதாயத்திற்கு அளிக்கிறேன் என்பது புத்திசாலித்தனமாகாது.
தொண்ணூறு. மார்க் வாங்கிய மாணவனுக்கு, மேல் படிப்புக்கு இடமில்லை; தகுதியும், திறமையும் இருந்தும் வெளியே தள்ளப்படுகிறான். ஏன்? அவன் மேல் ஜாதியாம்! அறிவாளிக்கு அங்கீகாரம் இல்லை என்றால், இந்த நாட்டில் விஞ்ஞானி எப்படி தோன்றுவான், கெட்டிக்காரத் தொழில் வல்லுனர்கள் தான் எப்படி உருவாவர்? ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பரீட்சையில் தமிழ் நாட்டான் எப்படி தேறுவான்?
நம் கேள்விக்கு அரசியல்வாதிகளும், அரசாங்கமும் பதில் அளிக்காது; ஏனெனில், அவர்களுக்கு வெகு ஜன ஓட்டுகள் வேண்டும். 69 சதவீதம் என்பது, அரசு கஜானாவிலிருந்து செலவு செய்யும் பணம் அல்ல; அரசியல் கட்சிகளின் பொக்கிஷங்களிலிருந்து வாரி வழங்கும் நிதி உதவியும் அல்ல!
அரசும், அரசு நீதியும், இந்தியர் அனைவரும் ஓர் நிறை என்று தானே சொல்கிறது... பெரும்பாலான மக்களை கொண்ட ஜாதிகளுக்கு மட்டுமே சுதந்திர இந்தியாவில் சலுகைகள், உதவிகள், உபகாரங்கள்... குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களை கொண்ட ஜாதியினருக்கு உபத்திரவங்கள், உதாசீனங்கள், அலட்சியங்கள்...
- எதேச்சையாக என் கையில் கிடைத்த ஒரு இதழில் படித்த கட்டுரை ஒன்றின் சுருக்கமே, இதுவரை நீங்கள் படித்தது. புத்தக முகப்பு, கம்யூனிஸ்ட் சிவப்பிலும், புத்தகத்தின் பெயர் பெரிய எழுத்தில், 'புரட்சி' என்றும், சிறிய எழுத்தில், 'ஓங்குக' என்றும் இருந்ததால், ஏதோ கம்யூனிஸ்ட் இதழ் என்ற எண்ணத்துடனேயே புரட்டி, பின், மீண்டும் அட்டையைப் பார்த்தபோது, தலைப்பின் மீது ஆங்கிலத்தில், 'முற்படுத்தப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரே இதழ்' என அச்சிடப்பட்டு இருந்தது.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X