'ஈஸ்வரா...' கணேச குருக்களிடமிருந்து நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது. கோவில் காரியங்களை எல்லாம் முடித்து விட்டு அப்போது தான் அவர் வந்திருந்தார்.
வயதான உடம்பு, தலையில் கட்டுக் குடுமி, நெற்றி நிறைய திருநீரு, மார்பில் தவழும் பூணூல், இரண்டு காதுகளிலும் சிவப்புக்கல் கடுக்கன் போட்டு, சதா சர்வகாலமும் கடவுளே கதியென்று கிடக்கும் கணேச குருக்கள், அந்தக் காராமணிக் குப்பத்தில் ரொம்ப பிரசித்தம்.
காராமணிக் குப்பத்தில் உள்ள ஒரே கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில் தான். கோவில் சின்னது; ஆனால், கீர்த்தி மிக்கது. சுற்று வட்டாரத்தில் அதற்கு நிகராக வேறொரு கோவில் இல்லை என்பதால், எப்போதும் அங்கே கூட்டம் அதிகமாக இருக்கும். கோவிலை சுற்றி அழகிய நந்தவனம்; அதை ஒட்டி, கோவில் தேவஸ்தானம் ஒதுக்கிய சிறிய வீட்டில் கணேச குருக்களும், அவர் மனைவி பங்கஜம்மாளும் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர்.
'டன் டன் டன்...னாக்கு னாக்கு... டனக்கு டனக்கு...னாக்கு னாக்கு... டன் டன் டன்... னாக்கு னாக்கு... ' காதுகள் அதிரும் படியான பறை சத்தம், அந்தப் பகுதி முழுவதுமாக எதிரொலித்துக் கொண்டிருந்தது.
அது மார்கழி மாதத்தின் அதிகாலை நேரம்; எங்கும் மழைச் சாரலைப் போல பனிச்சாரல். வானத்திலிருந்து ஊசியைப் போல இறங்கி, உடம்பைத் துளைத்தெடுக்கும் குளிர். ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாதபடி, தெருவெங்கும் வெண் புகையைப் பரப்பி விட்டது மாதிரியான பனி. குளிருக்கு இதமாக எல்லாரும் இழுத்துப் போர்த்தியபடி தூங்கிக் கொண்டிருந்தனர்.
ஆதி நாதத்தை அடையாளப்படுத்தும் வட்ட வடிவான பறை. அதன் ஒரு பக்க ஓரம் இடது மார்பில் அழுந்த, எதிர்ப்பக்க ஓரம், இடது கை மணிக்கட்டின் உட்புறமாய் பதிய, பறையடிக்கும் குச்சிகளில் பெரியதை வலது கையிலும், சிறியதை இடது கையிலும் பிடித்துக் கொண்டு, பொறி பறக்கும்படியாக அடித்துக் கொண்டு வந்தான் கோவிந்தன். அவன் வாயில் பீடி புகைந்து கொண்டிருந்தது.
மார்கழி மாதம் வந்து விட்டால் போதும்; அதிகாலையில் யார் எழுந்திருக்கின்றனரோ இல்லையோ... கோவிந்தன் முதல் ஆளாக பறை முழங்கி, அந்தப் பகுதி மக்களை எழுப்பி விடுவான். அவனுடைய பறை சத்தத்தைக் கேட்ட பின்தான், சுப்ரமணிய சுவாமி கோவிலில் கூட மார்கழி மாதத்துக்கான, திருவிளையாடல் படப் பாடல்களையும், அதன் வசனங்களையும் போடத் துவங்குவார்.
கோவிந்தனின் மகன் சுப்பு, நல்ல கருப்பு. முன் பல் இரண்டும் தூக்கிக் கொண்டு, தடித்த சப்பையான மூக்குடன், கோவிந்தனைப் போலவே ஒடிந்து விழுகிற மாதிரியான உடல் வாகுடன் இருந்தான்.
அனிதா நகருக்கு கொஞ்ச தூரம் தள்ளியிருந்த வண்ணாங்குளத்தில், எட்டாவது வரை படித்தவனுக்கு மேற்கொண்டு படிக்க முடியாததால், தன் அப்பாவுக்கு உதவியாக, சில சமயங்களில் அவனும் ஒரு பறையை தோளில் மாட்டி கிளம்பி விடுவான். அவர்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து, மார்கழி மாதத்தின் பீடை போவதற்காகப் பறையடிக்கத் துவங்கினால், அந்தக் காலை வேளையிலும், காராமணிக் குப்பம் முழுவதுமாக, 'சுரீர்' என்று வெயில் அடித்தது போல இருக்கும்.
அன்று, மார்கழி மாதத்தின் கிருத்திகை; அதுவும், செவ்வாய்க்கிழமை. முருகனுக்கு உகந்த நாள் என்பதால், சுப்ரமணிய சுவாமி கோவிலில், வழக்கத்தை விடவும் கூட்டம் அதிகமாய் இருந்தது. காலை, 6:00 மணிக்கான, முதல் கால பூஜை நடந்து கொண்டிருந்தது.
பூஜை முடிந்த பின் கொடுக்கப்படும் சுண்டலை வாங்குவதற்காக, பிரகாரத்தின் ஓரம் கோவிந்தனின் மகன் சுப்பு நின்றிருந்தான்.
அபிஷேகம், பூஜையெல்லாம் முடித்து தீபாராதனையுடன் மூலஸ்தானத்தை விட்டு வெளியே வந்தார் கணேச குருக்கள். எல்லாரும் ஆளாளுக்கு கை நீட்டி ஒளிரும் கற்பூர சுடரைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டனர். கணேச குருக்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தவர்களின் கையில் திருநீறை வைத்தபடி, மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே வந்தார். தட்டில் சில்லரைக் காசுகள் தாராளமாய் வந்து விழுந்தன.
பிரகாரத்துக்கு அருகே நின்று கொண்டிருந்தவர்கள் பக்கமாக தீபாராதனையைக் காட்ட வெளியே வந்தார். அங்கே ஒதுங்கி நின்றிருந்த சுப்பு, தீபாராதனையை தொட்டுக் கும்பிட வேண்டும் என்ற ஆர்வத்தில், கணேச குருக்கள் பக்கம் கையை நீட்டினான். அவன் கை, தவறுதலாக அவர் மீது பட்டுவிட்டது. அவ்வளவு தான், கணேச குருக்கள் நெருப்பைத் தொட்டது போல பதறிப் போனார். தன்னுடைய தளர்ந்த உடம்பை உதறி, அருவருப்புடன் பின் வாங்கியவர், சுப்புவை எரித்து விடுவது போல பார்த்து, ''அபச்சாரம் அபச்சாரம்... ஏன்டா... நோக்கு அறிவில்ல... கடவுள் சன்னிதானத்தில இருக்கறச்சே என்னை தொடறியே... தீட்டாயிட்டா என்ன செய்றது... தூரப் போடா,'' என, ஒரு ஈனப் பிறவியை விரட்டுவது போல அவனை விரட்டினார் கணேச குருக்கள்.
அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டத்தின் பார்வையும் அவன் மீது விழுந்தது. அதை உடனே உணர்ந்து கொண்டவனாக, ''சாமி... தெரியாம கை பட்டிடுச்சி மன்னிச்சிடுங்க,'' என்றான்.
''ஏன்டா... செய்யறதையும் செய்துட்டு, வியாக்கியானமா பேசறே... போடா அந்தண்டை,''என்றார் கோபத்துடன்.
அந்த நேரம், சுப்புவை தேடி கோவிலுக்கு வந்திருந்த கோவிந்தன், கண் இமைக்கும் நேரத்தில் நடந்ததைப் புரிந்து கொண்டவனாய், யாரும் எதிர்பார்க்காத நிலையில், சுப்புவின் கன்னத்தில், 'பளா'ரென்று ஓங்கி ஒரு அறை அறைந்தான். காது சவ்வு அறுந்து விடுவதைப் போல விழுந்த அடியில், நிலைகுலைந்து அப்படியே கன்னத்தைப் பிடித்துக் கொண்டான் சுப்பு; அவன் கண்கள் கலங்கின.
இடது தோளில் தொங்கிக் கொண்டிருந்த பறையை, தன் இடுப்பின் பக்கவாட்டில் அணைத்து வைத்து,கணேச குருக்களை கையெடுத்து கும்பிட்டு, ''சாமி... பையன் தெரியாம செஞ்சிட்டான்; பெரிய மனசு பண்ணி அவனை மன்னிச்சுடுங்க,''என்றான்.
கணேச குருக்கள் சமாதானம் அடையவில்லை என்பது அவர் முகத்திலிருந்தே தெரிந்தது. கண்களை துடைத்தபடி தன் அப்பாவையும், கணேச குருக்களையும் பார்த்தான் சுப்பு. அவனுக்கு அப்பாவிடம் வாங்கிய அடியை விட, அவர் கூனிக் குறுகி நின்றதைப் பார்த்து மனசு வலித்தது.
தன் குடிசையின் வெளியே இருந்த திண்ணையில் சுருண்டபடி படுத்துக் கிடந்தான் கோவிந்தன். அவன் உடம்பு, 'கண கண' வென்று கொதித்துப் போய் ஒரே அனலாயிருந்தது. அழுக்கு வேட்டியை காலில் இருந்து மார்பு வரை இழுத்துப் போர்த்தியிருந்தான். ரெண்டு நாளாக கடுமையான ஜுரம். கூடவே வறட்டு இருமலும் சேர்ந்து கொண்டது; காலைப் பனி அவனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை.
குடிசையின் உள்ளே இருந்த சுப்பு, சவுக்குத் செத்தையை கொளுத்தி, பறையை இப்படியும், அப்படியுமாகக் காட்டியவன், சத்தம் நன்றாக வருகிறதா என்று, 'டன்... டன்... டன்...' என்று தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
வாசலில் யாரோ வந்து நிற்பது தெரிந்தது. கோவிந்தன் அந்த ஜுரத்திலும் மரியாதை தரும் விதமாக தட்டு, தடுமாறி எழுந்து,''வாங்கம்மா,''என்றான்.
எதிரே கணேச குருக்களின் மனைவி பங்கஜம்மாள் நின்று கொண்டிருந்தாள்.
''நீங்க எதுக்குமா வரணும்; யாரு கிட்டயாவது சொல்லி அனுப்பியிருக்கக் கூடாதா?''என்றான் கோவிந்தன்.
அவன் ஈனஸ்வரத்தில் பேசியதை பார்க்க பாவமாயிருந்தது. அதேசமயம், வந்த காரியத்தை எப்படி சொல்வது என்பது போல, கொஞ்ச நேரம் கோவிந்தனையே பார்த்துக் கொண்டிருந்த பங்கஜம்மாள், வேறு வழியில்லாமல் பேசத் துவங்கினாள்...
''கோவிந்தா... என் ஆத்துக்காரரு ஒரு வாரமா கழுத்த சுளுக்கிட்டு அவஸ்தைப் படறாரு. ஆஸ்பத்திரிக்குப் போய் கரன்ட் ஷாக்கெல்லாம் வச்சிப் பார்த்தாச்சு... நானும், நேக்குத் தெரிஞ்ச கை வைத்தியமெல்லாம் செஞ்சு பாத்துட்டேன்; ஒண்ணும் சரியாகல. கழுத்தை இந்தண்டை, அந்தாண்டை திருப்ப முடியாம, பாவம் மனுஷன் கிடந்து தவிக்கிறார்; நீ கழுத்து சுளுக்கெல்லாம் நன்னா எடுத்து விடுவேன்னு, ஊருக்குள்ள சொன்னா...''
''நீங்க சொல்றது வாஸ்தவந்தாம்மா; ரொம்ப நாளைக்கு முன்னாடி, இங்க இருந்த பாய் வூட்டு ஐயா தான் எனக்கு இந்தத் தொழில கத்துக் கொடுத்தாரு. இப்ப அவரு நம்ம ஊர விட்டுப் போயிட்டதால, சுத்துப்பட்டுல இருக்கிற மனுஷங்களுக்கு ஏதாச்சும் சுளுக்கு, கழுத்து இசுவுன்னு வந்துட்டா, எங்கிட்டதான் வருவாங்க; நானும் அந்தப் பெரியாண்டவன் துணையால, என்னால முடிஞ்சத அவங்களுக்கு செஞ்சி விடுவேன்.''
''அத தான் நானும் அவராண்ட சொன்னேன்; ஆனா, மனுஷன் அதெல்லாம் முடியாதுன்னு ஒரே பிடிவாதமா மறுத்திட்டார். அப்புறம், நான் தான் ஆபத்துக்கு தோஷமில்லேன்னு சமாதானப்படுத்தி, உன்னை அழைச்சிண்டு போகலாம்ன்னு வந்திருக்கேன்.''
''என்னால இப்ப முடியாது தாயி; உடம்பு சரியில்லாம இருக்கேன். வேணும்னா என் பையன் சுப்புவ அனுப்பறேன்; அவனுக்கும் இந்த வித்தைய சொல்லிக் கொடுத்திருக்கேன்; அவன், என்னை விட ரொம்ப நல்லா சுளுக்கு எடுப்பான்.''
கோவிந்தன் இதைச் சொல்லும்போதே அவனுக்கு மேலும், கீழுமாய் மூச்சிறைத்தது. கொஞ்ச நேரம் நிதானப்படுத்தி, உள்ளேயிருந்த சுப்புவை கூப்பிட்டான். சுப்பு பறையைச் சரி பார்ப்பதை விட்டுவிட்டு, குடிசையிலிருந்து வெளியே வந்தான்.
அங்கே நின்றிந்த பங்கஜம்மாளைப் பார்த்ததும், சுப்புவுக்கு எரிச்சலாய் இருந்தது. பங்கஜம்மாளும், தன்னுடைய அப்பாவும் பேசியதை, அவன் உள்ளே இருந்து கேட்டு கொண்டிருந்தான். 'அன்னிக்கி நம்மள அவமானப்படுத்தி பேசினாரே... அந்தக் கோவில் குருக்கள்... அந்த ஆளுக்கா நாம உதவி செய்யணும்...' என்பது போல முகத்தை இறுக்கமாக வைத்து பங்கஜம்மாளை முறைத்துப் பார்த்தான்.
நிலைமையை அவள் ஒருவாறு யூகித்திருக்க வேண்டும்; கெஞ்சுவது போல அவனைப் பார்த்து, ''அம்பி... அவர் கழுத்து வலியால ரொம்பவும் அவஸ்தைப்படறார்; கொஞ்சம் வந்தேன்னா நோக்கு புண்ணியமா இருக்கும்டா.''
எத்தனை தான் பழி வாங்கும் உணர்ச்சி இருந்தாலும், ஒருத்தர் நொந்துபோய் வந்து உதவி என்று கேட்டால், நல்ல மனசு உள்ளவர்களால் அதை உதாசீனப்படுத்த முடிவதில்லை. சுப்புவுக்கும் கண நேரத்தில் மனம் மாறத்தான் செய்தது. 'பங்கஜம்மாள் எவ்வளவு பெரிய மனுஷி... கேவலம் சிறு பையனான நம்ம கிட்ட வந்து கெஞ்சறாங்களே... பாவம்...' என்று நினைத்தான்.
''ஏன்டா... பெரியவங்க வீடு தேடி வந்து கேட்கறாங்க இல்ல; போடா... போயி நம்ம சாமிக்கு வேண்டிய ஒத்தாசய செஞ்சிட்டு வா,''என்று கோவிந்தன் ஒரு அதட்டுப் போட்டதும், பங்கஜம்மாளோடு கிளம்பினான் சுப்பு.
சுப்ரமணிய சுவாமி கோவிலின் ஒரு கதவு திறந்தே இருந்தது. பிரகாரத்தில் நாதஸ்வரம் வாசிக்கிற இடத்திலேயே, அவனை நிற்கச் சொல்லிவிட்டு பங்கஜம்மாள், 'விடு விடு' வென்று உள்ளே போனாள்.
கொஞ்ச நேரம் சென்றிருக்கும்; கணேச குருக்கள் மட்டும் தன் கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்துக் கொண்டு, மேல் கண்ணால் சுப்புவையே பார்த்தபடி, வலியால் முனகியவாறு, தயங்கித் தயங்கி நடந்து வந்தார்.
அந்த நிலையில் அவரைப் பார்த்தபோது, 'அன்னக்கி நம்மள காயப்படுத்தின குருக்கள் செத்துப் போயிட்டாரு; இவரு வேற புது மனுஷர்...' என்பது போல சுப்புவுக்கு தோன்றியது.
அருகில் வந்த கணேச குருக்கள் அவனிடத்தில் எதுவும் பேசப் பிடிக்காதவரைப் போல, மவுனமாய்த் தரையில் உட்கார்ந்தார். சுப்பு அமைதியாக அவர் கொண்டு வந்த கிண்ணத்தில் இருந்த எண்ணெயை எடுத்து, அவருடைய கழுத்தில் தொட்டுத் தடவி உருவி விட்டான். கணேச குருக்களுக்கு சொல்ல முடியாத வலியிலும், அவன் பிடித்து விட்டது தனி சுகமாய் தெரிந்தது. அவர் கண்களை மூடி, அதை அனுபவித்துக் கொண்டிருக்கும்போதே, சுப்பு அவரின் கழுத்தை இப்படியும், அப்படியுமாக மாற்றி மாற்றி அசைத்து, 'மளக்' என்று நெட்டி முறித்தான். 'மட மட' என்று சுளுக்கு விழுந்தது. கணேச குருக்களுக்கு இது வரையிலும் இருந்த வலியெல்லாம் எங்கோ பறந்து போய், ஒரு புதிய உணர்ச்சி வந்தது போல இருந்தது. அந்த உற்சாகத்தில் கழுத்தை மேலும், கீழும், பக்கவாட்டிலும் அசைத்துப் பார்த்தபோது, அது இயல்பான பழைய நிலைக்கு மாறிவிட்டதை, அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது. முகத்தில் சந்தோஷம் பரவ, நீண்ட பெருமூச்சு விட்ட அவர், 'ஈஸ்வரா...' என்று அடித் தொண்டையால் அழைத்தபடி திருப்தியோடு கையைத் தரையில் ஊன்றி எழுந்தார்.
அவரை நேருக்கு நேராக பார்த்த சுப்பு, கொஞ்சம் கூட தயக்கமின்றி, ''சாமி... அன்னைக்கி என் கை உங்க மேல தவறுதலா பட்டதுக்கு, அபச்சாரம்ன்னு என்னை தூரப் போகச் சொல்லி, எங்க அப்பா கையால அடி வாங்க வச்சீங்க; ஆனா, இன்னைக்கி நான் தான் உங்களுக்குக் கழுத்துச் சுளுக்க எடுத்துருக்கேன். தெரியாம கை பட்டதுக்கே அபச்சாரம்ன்னு சொன்ன நீங்க, தெரிஞ்சே இன்னைக்கி நான், உங்களோட உடம்ப தொட்டு, தடவி, உங்க நோவ சரியாக்கி இருக்கேனே... இப்ப ஒண்ணும் அபச்சாரமா தோணலியா?'' என்று கேட்டான்.
சட்டென்று நிமிர்ந்து பார்த்தார் கணேச குருக்கள். சுப்பு கேட்டது அவரைச் சங்கடத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும்; நெற்றியைச் சுருக்கியபடி அவனைக் கூர்ந்து பார்த்து, ''நோக்கு ரொம்ப சின்ன வயசுடா அம்பி... அதான் நல்லது, கெட்டது தெரியாம பேசறே,'' என்றார்.
''சின்ன வயசா இருந்தா என்ன சாமி... நம்ம அவ்வையாருக்கு புத்தி புகட்டணும்ன்னு வந்த முருகன் கூட, சின்னப் பையன் தானே!''
''அதெல்லாம் ஈஸ்வரனோட விளையாட்டு; அத, மனுஷாள் கடைபிடிக்கப்படாது. அன்னைக்கி நான் குளிச்சிட்டு சுத்தமா இருந்தேன்; அதுவும் மூலஸ்தானத்திலே இருந்து வந்தேன்; நீ தொட்டதும் தீட்டாயிடுத்து. ஆனா, இன்னைக்கி நான் குளிக்காம இருக்கேன்; நீ என்னைத் தொடலாம்...''
''அப்ப, குளிச்சிட்டா எந்தத் தோஷமும் நீங்கிடும்; அப்படித்தானே சாமி...''
''ஜலத்துக்கு அப்படி ஒரு மகிமை இருக்குடா... நோக்கு அதெல்லாம் தெரியாது.''
''நீங்க சொல்றது உண்மைன்னா, இப்ப நான் தெரிஞ்சே தொட்டதுக்காக குளிக்கப் போற நீங்க, அன்னைக்கி நான் தெரியாம தொட்டதுக்காக போனாப் போவுதுன்னு விட்டுட்டு, வீட்டுக்குப் போயி குளிச்சிட்டு சுத்தமாகி இருக்கலாமில்ல...''என்றான்.
கணேச குருக்களுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை.பேச நினைத்தும் ஊமையைப் போல இருந்தது அவர் நிலைமை.
''சாமி... நான் தொட்டது தோஷம்ன்னு தானே நீங்க அப்படி நடந்துக்கிட்டீங்க; இப்ப நான் உங்கள கேட்கறேன்... தோ... மூலஸ்தானத்தில இருக்கானே முருகன்... அவன் பக்கத்தில இருக்கிற வள்ளி, குறத்தி இல்லையா... உங்க கணக்குப்படி பார்த்தா அவளும் ஒரு தீண்டத்தகாதவதானே... நீங்க தினம் தினம் அபிஷேகம் பண்றப்போ அவள தொடுவீங்க இல்ல. அதுக்காக நீங்க என்ன பரிகாரம் செய்யறீங்க. கேட்டா... அது சாமி, நீ வெறும் மனுஷன்டா என்பீங்க... உடம்பில தீட்டுப்பட்டா குளிச்சா சரியாப் போயிடும்னு சொல்றீங்களே... மனசில தீட்டுப்பட்டா எங்க போயி குளிப்பீங்க சொல்லுங்க,''என்றவன், அவர் பதில் சொல்லாமல் நிற்பதைப் பார்த்ததும், அவரை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பிச் சென்றான்.
அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த கணேச குருக்களுக்கு, சடாரென்று ஆதிசங்கரருக்கு, புலையன் ஒருவன் ஆன்மா குறித்து உபதேசித்தது நினைவுக்கு வந்தது. வெளிறிப் போன முகத்துடன், முகத்தில் வழிந்த வேர்வையைத் துடைத்தபடி திரும்பி மூலஸ்தானத்தை பார்த்தார் கணேச குருக்கள்.
அங்கே, கையில் வேலோடு சலனமற்று நின்றிருந்தார் முருகன்; அவன் பக்கத்தில் இருந்த வள்ளி, கணேச குருக்களைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பது போலிருந்தது.
பாரதி வசந்தன்
சொந்த ஊர்: புதுச்சேரி.
புதுவை அரசின், மத்திய அச்சகத்தில் தலைமை பிழை திருத்துபவராக பணிபுரியும் இவர், கடந்த, 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது படைப்புகளுக்காக, புதுவை அரசின், 'கம்பன் புகழ் பரிசு' உட்பட பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார். இதுவரை எட்டு கவிதைத் தொகுப்பு, இரண்டு சிறுகதை தொகுப்பு, நாவல் ஒன்று, இரண்டு கட்டுரை தொகுதி ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் பரிசு பெறுவது, இதுவே முதல் முறை. ஆறுதல் பரிசு என்றாலும், முதல் பரிசு பெற்றது போன்று மகிழ்வதாக குறிப்பிட்டுள்ளார்