அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2014
00:00

அன்புள்ள சகோதரிக்கு,
என்னுடைய வயது, 35; நான் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவள். அப்பா இறந்துவிட்டார்; அம்மாவும், தங்கையும், அண்ணனும் உள்ளனர். நான் ஒரு கல்வி நிறுவனத்தில் வேலை செய்கிறேன்; இங்கு, கான்ட்ராக்டில் வேலை செய்யும் இன்ஜினியரிடம் என் மனதை பறிக்கொடுத்தேன். எனக்கு திருமணம் ஆகவில்லை; அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. நான் முதலில் போனில் பேச ஆரம்பித்து, பழகியது தப்பாகிவிட்டது. காதலிப்பதாக சொன்னது அவர்தான். 'உங்களுக்கு திருமணம் ஆகி, பிள்ளையும் இருக்கிறது; உங்க மனைவிக்கு துரோகம் செய்யாதீங்க...' என்று முதலில் மறுத்தேன்.
ஆனால், அவர், 'இதை எல்லாம் நீ யோசிக்காதே... உனக்கு, என்னை பிடிச்சு இருக்கு; அதை ஒத்துக்கொள்...' என்று கூறி என்னை வற்புறுத்தி சம்மதிக்க வைத்துவிட்டார். தற்போது நான் அவரைவிட்டு விலக நினைக்கிறேன், முடியவில்லை. எனக்கு அவரிடம் பேசாவிட்டால் பைத்தியம் பிடிப்பது போல் உள்ளது; என்ன செய்வது என்று தெரியவில்லை.
அவர் என்னை இருமுறை நெருங்கி உள்ளார்; நான் முடியாது என்று மறுத்த போது, கெஞ்சி என்னை நெருங்கிய போது, நான் பயந்து அலறியதால் விட்டு விட்டார். ஆனால், 'உனக்கு ஆசை இருக்கு, ஏன் அதை மறுக்கிறாய், எனக்கு மனைவி இருக்கா, உனக்காக தான் நான் இதை செய்கிறேன்...' என்று அடிக்கடி கூறுவார். நான் அவரிடம் தவறு என்று சொன்னாலும், காதில் போட்டுக் கொள்வதில்லை; எனக்கு அவரிடம் இருந்து பிரியணும், அதற்கு வழி சொல்லுங்கள். நான் அவரை மறக்க முடியாமல் தவிக்கிறேன். இவ்வளவு அசிங்கமான காரியத்தில் நானா இறங்கினேன் என்று நினைத்து துடிக்கிறேன். தற்கொலை செய்யலாம் என்று தோன்றுகிறது; ஆனால், முடியவில்லை.
நான் செய்துள்ள காரியம், பட்டப்படிப்பு படித்த பெண் செய்யக்கூடியதா? நான் இப்பிரச்னையில் இருந்து விடுபட்டு, நிறைய சாதிக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். என் மனதை அடக்க, நல்ல பதிலை எதிர்நோக்கி உள்ளேன். தயவு செய்து உடனடியாக நல்ல பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
குறிப்பு: இப்பிரச்னைக்கு நான் ஒருத்தி தான் காரணம்; அவரை காரணம் சொல்ல மாட்டேன். நான் ஒழுங்காக இருந்திருந்தால், இப்படி நடந்திருக்காது. அவருக்கு போன் செய்யக்கூடாது என்று நினைத்தாலும், என்னால் இருக்க முடியவில்லை; திரும்ப திரும்ப அதே தவறை செய்கிறேன்.
இப்படிக்கு
அன்பு சகோதரி.


அன்புள்ள சகோதரிக்கு,
'கண்ணிருந்தும் காணும் திறமையற்ற பெண்களின் கூட்டமடி கிளியே... பேசிப் பயனென்னடி...' என்று பெண்களின் அறியாமை குறித்து, அன்று பாடினார் பாரதியார். அது, இன்றும் எப்படி எல்லாம் பொருந்தி வருகிறது பார்...
திருமணமான ஒருவன், உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னவுடனே, நீ என்ன செய்திருக்க வேண்டும்... அவன் சங்காத்தமே வேண்டாம் என்று அவன் தொடர்பை துண்டித்திருக்க வேண்டும். இல்லை என்றால், 'உன் மனைவியை விவாகரத்து செய்துட்டு வா; பிறகு நாம திருமணம் செய்து கொண்டு காதலிக்கலாம்'ன்னு சொல்லியிருக்க வேண்டும். இப்படி நீ சொல்லியிருந்தால், அவன் நீ இருக்கும் திசை கூட திரும்பி பார்த்திருக்க மாட்டான்.
ஆனால், நீ, வெளிவார்த்தைக்கு, சம்பிரதாயமாக, 'மனைவிக்கு துரோகம் செய்யாதே...' என்று கூறினாலும், உள்ளுக்குள் இந்த உறவை விரும்பவே செய்திருக்கிறாய்; அதனால் தான், ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலைப்பட்ட கதையாக, 'எனக்கு மனைவி இருக்கா, உனக்காக தான் இதை செய்கிறேன்...' என்று அவனால் உன்னை எளிதாக அணுக முடிந்துள்ளது; நீ சொன்னது போல், தவறு உன் மேல் தான் உள்ளது சகோதரி.
நீ ஒன்றும் உலகம் அறியாத சிறு பெண்ணும் இல்லை; கல்வி அறிவு இல்லாத பாமரப் பெண்ணும் இல்லை. இது, தவறு என்று உனக்கு நன்றாகவே தெரியும்; இருந்தும், மனதை அலைபாய விட்டு, மறக்க முடியவில்லை என்று இப்போது புலம்புகிறாய்!
படித்து பட்டம் பெற்றால் மட்டும் போதாதும்மா; அன்னிய ஆண்களிடம் பேசும் போதும், பழகும் போதும் ஒரு எல்லைக் கோட்டை வரையறுக்க தெரிந்திருக்க வேண்டும். இல்லை என்றால், வாழ்க்கை அவிழ்க்க முடியாத சிக்கலைப் போல் பயமுறுத்தி, இப்படித்தான் மன உளைச்சலை ஏற்படுத்தும்.
திருமணமான சபல ஆண்கள், காதலில் வல்லவர்கள் சகோதரி... பேசிப்பேசி மூளைச் சலவை செய்து விடுவர். அவர்களைப் பொறுத்தவரை, திருமண பந்தம் மீறிய தொடர்பு என்பது திருமணத்தில் மட்டன் பிரியாணி சாப்பிடுவதற்கு சமம். இவர்களுக்கு வேறொரு பெண் கிடைத்து விட்டாலோ, உறவு வைத்திருக்கும் பெண்ணின் உடல் சலித்து விட்டாலோ கிளை தாவி விடுவர். கள்ள உறவு மனைவிக்கு தெரிந்துவிட்டால் ஒன்று மனைவியின் காலைப் பிடித்து தாஜா செய்வர் அல்லது அதட்டி, மிரட்டி அடிபணிய வைப்பர்.
ஆட்டைக் கொழுக்க வைப்பது கறிக்குத்தான் என்ற தத்துவம் தான், திருமணம் தாண்டிய உறவில் ஆண்கள் காட்டும் அன்பு. இதை, முதலில் உணர்ந்து கொள்; அப்போது தான் உன் மனம் தெளிவடையும்.
நீ, உன் காதலனை விட, அவனின் மொபைல் பேச்சுக்கு தான் அடிமையாகி விட்டாய் என்று நினைக்கிறேன். அதனால் தான், அவரிடம் போனில் பேசாமல் இருக்க முடியவில்லை என்றும் அவரிடம் பேசாவிட்டால் பைத்தியம் பிடித்தது போல் உள்ளது என்றும் புலம்பித் தவிக்கிறாய். முதலில் அந்த மொபைலைத் தூக்கி கடாசு. வீட்டிற்கு அலுவலக எண்ணையும், அலுவலகத்திற்கும், முக்கியமானவர்களுக்கும் மட்டும் வீட்டு லேண்ட் லைன் போன் அல்லது உன் அம்மாவுடைய மொபைல் எண்ணைக் கொடு. உன் காதலனும், நீயும் ஒரு இடத்தில் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி இருந்தால், அந்த வேலையை உதறி, வேறு வேலையைத் தேடிக் கொள். உன் காதலனை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்ற நினைப்பு உன் மூளையை குடையும் போது, ஒரு, 'நோட் - புக்'கில் உன் இஷ்டத் தெய்வத்தின் நாமத்தை, ௧௦௮, ௧௦௦௮ என எழுதி, அந்த நினைப்பை அகற்று. தனிமை தவிர்; அம்மா மற்றும் அண்ணன், தங்கையுடன் கலந்துரையாடு; பக்கத்து வீட்டு குழந்தைகளை எடுத்துக் கொஞ்சு; வயதானவர்களின் வாழ்க்கை அனுபவத்தை செவி மடு. மனதை ஒருநிலைப் படுத்த யோகா கற்றுக்கொள்.இது எல்லாவற்றிக்கும் மேலாக, இனியும் காலம் தாழ்த்தாமல், நல்ல வரன் வந்தால், உன் காதலனுடன் ஒப்பிட்டு பார்க்காமல், மணந்து கொள்; வீட்டினர் மாப்பிள்ளை பார்ப்பதில் முயற்சி செய்யாவிட்டால், 'மணமகன் தேவை' பகுதிக்கு விளம்பரம் கொடு. அதில் வரும் வரன்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து நேரில் வரவழைத்துப் பேசு; இருவரின் அலைவரிசையும் ஒத்துப்போனால், பதிவுத்திருமணம் செய்து கொள்ளுங்கள்.
உடலில் தோன்றிய தேவையற்ற கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது போல, உன் மனதிலிருந்து அந்த சம்சாரி காதலனை தூக்கி எறி. இன்று புதிதாய் பிறந்தோம் என்ற மனோநிலைக்கு வா. வில்லிலிருந்து கிளம்பிய அம்பு, தூரத்து இலக்கை தைக்கும் கால இடைவெளியே, மனித இளமை நீடிக்கும் நேரம்; அதற்குள் வாழ்க்கையை ஆக்க பூர்வமாக மாற்று.
என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (24)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divaharan - Tirunelveli,இந்தியா
01-நவ-201413:54:00 IST Report Abuse
Divaharan முற்போக்காளர்கள் (?) சிலர் சொல்லும் அறிவுரை அரிப்பு இருக்கும் இடத்தில சொறிந்துகொண்டு இருந்தால் சுகமாக இருக்கும் என சொல்வதை போன்றது. அந்த இடத்தில புண் வந்து பெரிதாகிவிட்டால் பிறகு அதற்கு வைத்தியம் பார்க்க வேண்டும். அதையும் சொன்னால் நல்லது
Rate this:
Cancel
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
28-அக்-201403:49:46 IST Report Abuse
HoustonRaja வணக்கம். இங்கே கருத்து எழுதியிருக்கும் பெண்ணிற்கு "குற்ற உணர்வு" தான் பிரச்சனையாக தெரிகிறதேயன்றி, "கள்ள உறவு" அல்ல. 35 வயது "முதிர்கன்னியின்" உணர்சிகளை/தேவைகளை ஒரு அளவிற்கு மேல், அடக்குவது அத்துணை எளிதல்ல. அவர், அந்த உணர்வுகளுக்கு இங்கே தேர்ந்தேடுத்த வடிகால் தான் சிக்கலாகக்கூடிய ஒன்று. ஏதோ சில/பல காரணங்களால் திருமணத்தால், கிடைக்ககூடிய ஆணின் உடல் சார்ந்த/சாராத நெருக்கம் தொடர்ந்து மறுக்கப்படுவதால் (அல்லது தனக்கு திருமணமே ஆகாது என்று தவறாக நம்புவதாலுமே) - இந்த திருமணமான ஆணின் நெருக்கத்தை இவர் தடுக்கவில்லை. இது முற்றிலும் புரிந்துகொள்ளகூடிய உணர்வுதான், நியாயமானதும் கூட. இன்னொரு பெண்ணின் வாழ்கையை பறிக்கிறோமோ என்ற குற்ற உணர்வு தான் இப்போது இவரது பிரச்சனை. ஆனால், இந்த உறவு இப்படியே தொடர்ந்தால் - இப்பெண் அந்த ஆணின் Sex Slave ஆகக்கூடும், மேலும் இவளின் பொருளாதாரத்தையும் அந்த ஆண் கறக்கலாம், இப்போதுள்ள இவளின் உளவியல் வலிகளும் தீவிரமாகலாம். ஆகையால், இந்த உறவை இந்த அளவிலேயே துண்டித்து விட்டு கூடிய விரைவிலேயே தனக்கேற்ற "வில்லங்கமில்லாத" வேறு துணையை நாடுவதே இப்பெண்ணிற்கு சிறந்தது. அத்தகைய துணை கிடைக்கும் வரை - உடல் நெருக்கத்தின் தேவைகளுக்கு "சுய-இன்ப" வழிகளையும் உளவியல் நெருக்கத்திற்கு தோழியர், உறவினர் வட்டத்தை விரிவாக்கும்/ஆழமாக்கும் வழிகளையும், சுற்றலா, மற்றும் பல மனதிற்கு பிடித்தவற்றையும் நாடலாம். தியானம்/மூச்சுப்பயிற்சி/இறை வழிபாடு - இவை ஆன்மீக வேர்களை திடமாக்கும். மன அமைதிக்கு, மகிழ்ச்சிக்கு "இம்மூன்றுமே" சம அளவில் அவசியம். மற்றபடி - இந்த வார பிரச்னைக்கு திருமணம் பற்றிய விவாதத்திற்கு அவசியமே இல்லை என்பது என் தாழ்மையான எண்ணம். பொதுவாகவே, திருமணம் என்பது 1) செயற்கையான ஒன்று 2) ஒரு உறவின் நலனிற்கு அவசியமில்லாதது 3) உறவில் மலரும் குழந்தைகளின் "பாதுகாப்பான வளர்ச்சிக்காகவும்", உள்ளிருப்பு (default) சொத்துரிமைக்காகவும் உருவாக்கப்பட்டது. 4) மனிதனின் மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் உத்தரவாதம் அளிக்காத ஒன்று (சொல்லப்போனால், எந்த ஒரு அமைப்பும் வாழ்க்கையில் நமக்கு அந்த இரு உத்தரவாதங்களை அளிக்கமுடியாது). மேலும், நன்னெறி (Ethics) என்பது ஒவ்வொரு தனி மனிதனாலும் தழைப்பதேயன்றி, சமூக ஆணையாலோ / எதிர்பார்ப்பாலோ வளராத ஒன்று என்பதையும் என் உள்ளத்திற்கினிய நண்பர்கள் மறந்து விடவேண்டாம். நன்றி.
Rate this:
Raman - Chennai,இந்தியா
28-அக்-201406:38:28 IST Report Abuse
Ramanதிருமணம் என்றால் என்ன என்பதை - அப்பட்டமாக, ரிசர்வேஷன் இன்றி - சொன்னததை பாராட்டுகிறேன்....
Rate this:
Cancel
VSK - CARY,யூ.எஸ்.ஏ
27-அக்-201422:36:07 IST Report Abuse
VSK இவ்ளோ நடந்ததுக்கப்பறம், பொட்டி, ப‌டுக்கையோட‌ நேரா‌ அவ‌ர் வீட்டுக்கேப் போயி, அவ‌ரோட‌ ம‌னைவியின் ச‌ம்ம‌த‌த்துட்ன், நீங்க‌ளும் ஒருத்த‌ரா அங்கியே ஜோதில ஐக்கியமாயிடுங்க. அதான் நல்ல வழி
Rate this:
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
28-அக்-201405:53:40 IST Report Abuse
Umaஉங்க கருத்த படிச்சி விழுந்து விழுந்து சிரிப்பு. நல்ல யோசனை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X