பசுமை நிறைந்த நினைவுகளே! (60) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
பசுமை நிறைந்த நினைவுகளே! (60)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2014
00:00

மருமகளாக இருந்த போது குற்றால டூருக்கு கூப்பன் போட்டு விண்ணப்பித்த உமா என்ற வாசகிக்கு, ஒரு மருமகள் வந்தபிறகே குற்றால டூரில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அப்படி அவர் கலந்து கொண்ட, 2014 குற்றால டூரில், மருமகள் திவ்யாவுடன் குதூகலமாக கலந்து கொண்டார்.
மாமியார் - மருமகளாக இருந்தாலும், தோழிகளைப் போலவே இருவரும் நடந்து கொண்டனர்.
சேலை, சுடிதார் என எது போட்டாலும் ஒரே விதமாக, ஒரே வண்ணத்தில் புதிது புதிதாய் அணிந்தனர். எப்படி இப்படி என்று கேட்டபோது, 'எப்போது டூருக்கு தேர்வு செய்யப்பட்டோமோ அப்போதிலிருந்தே, இந்த இந்த வேளைக்கு இப்படித்தான் உடை உடுத்த வேண்டும் என்று திட்டமிட்டோம்...' என்றனர்.
சபையில் மருமகளை முன்நிறுத்தி, 'நீ ஆடும்மா...' என்று சுதந்திரம் கொடுத்ததுடன், அவர் ஆடுவதை முன் வரிசையில் உட்கார்ந்து பார்த்ததுடன், தானும் உடன் ஆடி, கைதட்டி என, மருமகளை பாராட்டி, உற்சாகப்படுத்தி மகிழ்ந்த உமாவைப் போல மாமியார் மட்டும் இருந்துவிட்டால், உலகில் மாமியார்-மருமகள் பிரச்னையே வராது என்று விருந்தினராக வந்திருந்தோர் பாராட்டி மகிழ்ந்தனர்.
நமக்குதான் பூரண சுதந்திரம் கிடைத்து விட்டதே என்பதற்காக எல்லாவற்றிலும், 'நான் நான்' என்று மருமகள் திவ்யாவும் முந்திக்கொண்டு ஆஜராகவில்லை. அத்தையிடம் சொல்லி, அவர்களது ஆசீர்வாதம் பெற்று, அதன் பிறகுதான் களமிறங்கி கலக்கினார்.
இப்படி ஒரு அன்பான, அறிவான மருமகள் மட்டும் கிடைத்துவிட்டால் எந்த வீடும் கோவில்தான்; எந்த குடும்பமும் பல்கலைக்கழகம்தான்.
மதுரையில் இருந்து வாசகர்களுடன் புறப்பட்ட பஸ்சில், பழைய பாடல் போடுவதா அல்லது புதுப்பாடலா, இல்லை, 'டிவி'யை ஓடவிடுவதா... அப்படியே, 'டிவி'யை ஓடவிட்டால் அதில் எந்த படத்தை போடுவது என்பது போன்ற சர்ச்சை எழுந்ததும், 'பாட்டை நிப்பாட்டு...' என்றபடி வீறுகொண்டு எழுந்தார் திவ்யா.
'நாம ஆடியோ கேட்கவும், வீடியோ பாக்கவும் வரவில்லை; ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, அவரவர் திறமையை வெளிப்படுத்தி, அதன் மூலம் சந்தோஷப்படவே வந்துள்ளோம். அதனால, இனிமே ஆடியோ பாடாது, வீடியோ ஒடாது; இந்த நிமிடத்தில் இருந்து நாமதான் ஆடியோவும், வீடியோவும் என்ன சரியா?' என்றதும், 'சரி' என்ற பதில், நிதானமாக வந்தது. 'இந்த சத்தம் பத்தாது; இன்னும் சத்தமாக சொல்லுங்க...'என்றதும், 'சர்ர்...ரி' என்று கோரசாக உரத்து ஒலித்த குரலில், பஸ் நிஜமாகவே குலுங்கியது.
சீட்டைவிட்டு வெளியே வந்த திவ்யா, 'நீ என்ன... அம்மாகூடயே ஒட்டிக்கிட்டு இருக்கே, வெளியே வா...' என்று பஸ்சின் இளமைப்பட்டாளங்களை தனியாக பிரித்து, தனி அணி அமைத்தார்.
'நாங்கள் ஆடத்தயார்; எங்களை ஆட்டுவிக்கும் படி பாட யாராவது தயாரா?' என்று அடுத்த கேள்வியை விட, இவர்களது ஆட்டத்தை பார்ப்பதற்காகவாவது பாடியே தீர்வது என்ற முடிவுடன், வண்ணக்கிளி படத்தில் இடம் பெற்ற, 'சித்தாடை கட்டிக்கிட்டு...' என்ற பழைய பாடலை சீனியர் வாசகர்கள் பாட, இப்படி அந்த வருட குற்றால டூரை அமர்க்களமாக துவக்கி வைத்தார் திவ்யா.
குற்றாலத்தில் புலியருவி என்பது மிக குறைந்த தூரத்தில் இருந்து விழுந்து, பிறகு சிறு ஓடையாக ஓடி, மீண்டும் அருவியாக பிரிந்து விழுந்து, பின், மலைப்பாறை வழியாக வழிந்து, பின்னர் வயல்வெளிகளுக்குள் பாயும்.
இந்த தண்ணீரின் பாதை வழியாகவே பயணித்து, குளித்து களிப்பவர்கள் குற்றாலத்திலேயே இல்லை. ஆனால், உமாவும், திவ்யாவும் புலியருவியின் சுகத்தை அணு அணுவாக ரசித்து அனுபவித்தனர்.
அதே போல பழைய குற்றால அருவியில் ஜோடி போட்டு முதலில் நுழைந்தவர்களும், கடைசி ஆளாக, வர மனமில்லாமல் வந்தவர்களும் இவர்கள்தான்.
பழைய குற்றால அருவிக்கு குளிக்க போவோர், அங்குள்ள ஒலிபெருக்கியில் அடிக்கடி அறிவிக்கப்படும் போலீஸ் அறிவிப்பு ஒன்றை கேட்டு இருக்கலாம்; அது:
அருவியில் ஷாம்பூ மற்றும் எண்ணெய் தேய்த்து குளிக்ககூடாது; ஆண்கள் மது அருந்தி அருவிக்கு வரக்கூடாது; குளிக்கும் போது அமைதிகாக்க வேண்டும். குறிப்பாக, கூச்சல் போட்டு குளிக்க கூடாது.
- என்பது மாதிரியான அறிவிப்புகள் தொடரும்.
இந்த அறிவிப்பு மூலம் ஆண்கள் என்றால், கூச்சல் போட்டுக் குளிப்பவர் என்றும், பெண்கள் என்றால் அமைதியாக குளிப்பர் என்ற அர்த்தம் அடங்கியுள்ளது.
இந்த அர்த்தத்தையே மாற்றி அமைத்து விட்டார் வாசகி உமா.
பழைய குற்றால அருவியில், அவர், தம் வாசக தோழியரோடு குளிக்கும் போது போட்ட கும்மாளம் காரணமாக, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலிபெருக்கி அறிவிப்பை நிறுத்தி, புதிதாக ஒரு அறிவிப்பை, காவல் துறை, 'மைக்' பிடித்து அறிவித்தது.
அது என்ன அறிவிப்பு என்று அடுத்த வாரம்
சொல்கிறேன்.
அருவி கொட்டும்.

குற்றாலமும், சிங்கமுக அருவியும்...
குற்றாலம் மெயினருவியில் இருந்து ஐந்தருவி போகும் வழியில், இடது பக்க சாலையை ஒட்டி, சிங்க முகத்துடன் இருக்கும் நீர் போக்கி ஒன்றின் வழியாக, 'பொது பொது'வென தண்ணீர் விழுவதை பலரும் பார்த்து இருக்கலாம்.
அருவி கழிவுநீரை வெளியேற்ற அந்தக்காலத்தில், சிங்க முகத்துடன் அமைக்கப்பட்ட கழிவுநீர் குழாய்தான் இது.
இதில், பெரும்பாலும் யாரும் குளிப்பது கிடையாது. அதற்கு மூன்று காரணங்கள் உண்டு; ஒன்று, பலரும் குளித்துவிட்ட அருவி தண்ணீரின் மிச்சம். அடுத்து, சாலையை ஒட்டியுள்ளதால் அரைகுறை உடையுடன் குளிப்பதை பலரும் பார்க்க வேண்டி வரும்; மூன்றாவதாக, இதில் குளிக்க வேண்டுமென்றால், வாய்க்கால் போன்ற பகுதியில் இறங்கி சிரமப்படவேண்டும் என்ற காரணங்களால் குளிப்பது இல்லை.
இவ்வளவையும் தாண்டி இதில் ஒருவர் குளிக்கிறார் என்றால். அவர், 'டாஸ்மாக்' வாடிக்கையாளராகத்தான் இருப்பர்.

-எல்.முருகராஜ்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X