குழந்தை மனம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2014
00:00

வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த அப்பா முத்துவின் பின்னால் சிணுங்கியபடி நின்று கொண்டிருந்தாள் ரோஜா.
''சொன்னா கேளும்மா... அங்க கல்லும், மண்ணுமா கிடக்கும். அப்பா வேலைக்குப் போனா, திரும்ப பொழுது சாஞ்சுடும்; நீ அங்க வந்து என்னா செய்யப் போறே...'' என்றான் முத்து.
''ஸ்கூல் லீவு தானேப்பா... அங்க வந்தா எனக்கு பொழுது போகும்... ப்ளீஸ்ப்பா... நானும் வரேன்.''
காபி கொண்டு வந்த அகிலா, மகள் கணவனிடம் கெஞ்சுவதைப் பார்த்து, ''இன்னைக்கு ஒருநாள் தானே போனாப் போகுது கூட்டிட்டு போங்க,'' என்றவள், ''ரோஜா... அங்க போயி அப்பாவ தொந்தரவு செய்யக் கூடாது; அப்பா சொல்றதக் கேட்டு, எங்கேயும் போகாம அப்பா பக்கத்திலேயே இருக்கணும்,'' என்றாள்.
''சரி... அம்மாவும், பொண்ணுமாக முடிவு செய்துட்டீங்க; இனி, நான் சொன்னா கேட்கவா போறீங்க...அவளுக்கு நல்ல கவுனாக போட்டு அனுப்பு,'' என்றான் முத்து.
கொத்தனார் வேலை பார்க்கிறான் முத்து. திருமணமாகி ஐந்து வருடங்கள் கழித்துப் பிறந்தவள் என்பதால் ரோஜா மீது, கணவன், மனைவி இருவருக்கும் அளவற்ற அன்பு. நான்காம் வகுப்பு படிக்கும் மகளுக்கு, தங்கள் கஷ்டத்தை சொல்லாமல், தேவையானதை அவளுக்கு வாங்கிக் கொடுத்து, நல்லபடியாக வளர்த்து வந்தனர்.
முத்து, வாசலில் நிறுத்தியிருந்த சைக்கிளை எடுக்க, சந்தோஷமாக ஏறி உட்கார்ந்து கொண்டாள் ரோஜா.
சாப்பாட்டுக் கூடையை கணவனிடம் கொடுத்த அகிலா, ''என்னங்க, மழை நாள் ஆரம்பிக்கப் போகுது... வீடு பிரிச்சு வேலை பார்க்கணும்; போன மழைக்கு நிறைய இடத்தில ஒழுகிடுச்சு. சொன்னா காதிலே வாங்க மாட்டேங்கறீங்க,'' என்றாள்.
''பணம் இல்லாம என்னத்த செய்யறது... பாப்போம்,'' என்று சொல்லி, புறப்பட்டான்.
அந்த பிரமாண்ட வீட்டின் முன், சைக்கிளை நிறுத்தினான்.
''அப்பா, இதுதான் நீ வேலை செய்யற வீடாப்பா,'' என்று ஆச்சரியம் மேலிட கேட்டாள் ரோஜா.
''ஆமாம்மா. அப்பா கட்டின வீடுதான்; நல்லாயிருக்கா...''
''ம்... ஜோரா இருக்கு; எவ்வளவு பெரிய வீடு...'' என்றபடி முத்துவின் கைபிடித்து உள்ளே நுழைந்தாள்.
'என்ன முத்து, உன் மகளா... வேலைக்கு வரும்போது கூட்டிட்டு வந்திருக்கேயே...' என்று வேலை பார்க்கும் ஆட்கள் கேட்டனர்.
''ஆமாம்பா... ஒரே அடம் பண்ணி என் கூடவே கிளம்பிடுச்சு,'' என்று சொன்னவன், ''ரோஜா... வீட்டு வேலை முடிஞ்சு, உள்ளே பெயின்ட் வேலை நடக்குது; எதிலேயும் கையை வைக்காம, உள்ளே போய் சுத்தி பாத்துட்டு வா; நாங்க வெளியே காம்பவுண்ட் சுவர் கட்டற வேலை பாக்கிறோம்,'' என்றான்.
வீட்டினுள் நுழைந்து ஒவ்வொரு அறையாகப் பார்த்தாள் ரோஜா. 'இந்த வீடு எவ்வளவு அழகாக இருக்கிறது... பாத்ரூம் எல்லாம், 'வழவழ'வென்று, 'டைல்ஸ்' ஒட்டப்பட்டு, சினிமாவில் பார்ப்பது போல இருக்குதே...' என நினைத்து, ஆச்சரியம் ததும்ப வீட்டை வளைய வந்தாள்.
வெளியில் செங்கல்களை அடுக்கி சிமென்டை பூசிக் கொண்டிருந்த அப்பாவிடம் ஓடிவந்தாள் ரோஜா.
''அப்பா, இந்த வீடு ரொம்ப அழகா இருக்குப்பா. நிறைய அலமாரி, நாலு பாத்ரூம், பெரிய அடுப்படி எல்லாம் இருக்கு,'' என்றாள்.
''நம்ப மாதிரி ஆளுங்க எல்லாம் இத மாதிரியான வீட்டை கட்டத்தான் முடியும்; அதை அனுபவிக்க முடியாது,'' என்று சாந்து சட்டி தூக்கியபடி வந்த ஒரு கிழவி சொன்னாள்.
''ஏ... கிழவி, இதென்ன குழந்தைகிட்ட பேசற பேச்சா... ரோஜா, அதோ உள்ளே மணல் கொட்டிக் கிடக்கு பாரு... அங்கே போய் நிழல்ல விளையாடு,'' என்று முத்து சொல்ல, ''சரிப்பா,'' என்று கூறி, சிட்டாக ஓடினாள் ரோஜா.
மணலைக் குவித்து, கோபுரம் கட்டி விளையாடிக் கொண்டிருந்த ரோஜா, படகு போல பெரிய கார் வந்து நிற்பதைப் பார்த்தாள். அதிலிருந்து இரண்டு ஆண்களும், ஒரு பெண்மணியும் இறங்க, அவள் கைபிடித்து, ரோஜாவின் வயதையொத்த சிறுமி ஒருத்தி இறங்கினாள். பளபளக்கும் ஆடையில், தேவதையாக சிரித்தபடி வரும் அவளை, வைத்த விழி வாங்காமல் பார்த்தாள் ரோஜா.
பவ்யமாக வேலையாட்கள் அவர்கள் முன் நிற்க, ''என்ன முத்து, கான்ட்ராக்டர் வரலையா?''
''வர்ற நேரம்தான் சார்; உள்ளே வேலையெல்லாம் முடிஞ்சு, பெயின்டிங் வேலை நடந்திட்டிருக்கு போய் பாருங்க,'' என்றான்.
''அடுத்த மாசம், கிரகப் பிரவேசம் வச்சிருக்கு; அதக்குள்ள எல்லா வேலையும் முடிஞ்சா சரி,'' என்றபடி அவர்கள் வீட்டினுள் நுழைய, அங்கே மணலில் விளையாடிக் கொண்டிருக்கும் ரோஜாவைப் பார்த்தாள் அந்தச் சிறுமி.
பால்கனி கதவைத் திறந்து வந்த சிறுமி, ரோஜாவைப் பார்த்து, ''உன் பேரென்ன... என்ன விளையாடிட்டு இருக்கே,'' என்று கேட்டாள்.
குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த ரோஜா, ''என் பேரு ரோஜா; நான் கோவில் கட்டி விளையாடறேன். கோபுரம் கட்டியாச்சு; குளம் கட்டப் போறேன். உன் பேர் என்ன... நீ எந்த கிளாஸ் படிக்கிறே?''
''நான் வர்ஷினி; போர்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்.''
''ஐ... நானும் அதேதான்; நாலாம் வகுப்பு பி செக் ஷன், நகராட்சி பள்ளி.''
''இந்த ரூம் என்னோடது; இந்த பால்கனி, நான் நின்னு வேடிக்கை பாக்கறதுக்காக அப்பா கட்டச் சொன்னாரு. உள்ளே நிறைய அலமாரி இருக்கு; அதில் எல்லாம் என்னோட விளையாட்டு சாமான்கள வச்சுக்கப் போறேன்.''
''உனக்கு தனியா ரூமா... நிறைய விளையாட்டு சாமான் வச்சிருக்கியா...''
''ஆமாம்; ரிமோட் கார், டெடி பேர், பார்பி பொம்மை, ஏரோபிளேன், வீடியோ கேம்ஸ்ன்னு நிறைய இருக்கு.''
''நான், வீட்டுல இரண்டு மரப்பாச்சி பொம்ம வச்சிருக்கேன்; என்னோட விளையாட வர்றியா?''
''ம்கூம்... அம்மா திட்டுவாங்க; நான் போட்டிருக்கிற கவுன் மண்ணிலே விளையாடினா அழுக்காயிடும்.''
''என்னோட கவுனும் அழுக்காகத்தான் இருக்கு; ஆனா, எங்கம்மா அழுக்கு போக சுத்தமா துவைச்சிடுவாங்க.''
அதற்குள் அங்கு வந்த சிறுமியின் தாய், ''வர்ஷினி, வா போகலாம்; நேரமாச்சு,'' என்று கூறி அழைத்துச் சென்று விட்டாள்.
அம்மா கட்டிக் கொடுத்த புளி சாதத்தை, அப்பாவுடன் உட்கார்ந்து சாப்பிட்டபடி, ''அப்பா... காரில் வந்துட்டு போனாங்களே... அவங்கதான் இந்த வீட்டுக்கு வரப்போறாங்க; உனக்குத் தெரியுமா...'' என்றாள்.
''ஆமாம்மா. அவங்க தான் இந்த வீட்டுக்கு சொந்தக்காரங்க.''
''அப்பா, அவங்களோட வந்துச்சே... அந்த பொண்ணு வர்ஷினி, அவளுக்கு மாடியிலே தனி ரூம் கொடுத்திருக்காங்களாம். அதோ பால்கனி தெரியுதே பார்த்தீங்களா... அதுதான் அவ ரூம். நிறைய விளையாட்டு சாமான்கள் வச்சிருக்காளாம்; அதையெல்லாம் அந்த ரூமில இருக்குற அலமாரியில வச்சுப்பாளாம்; அவளும் நாலாம் வகுப்புதான் படிக்கிறா. விளையாட கூப்பிட்டேன்; கவுன் அழுக்காயிடும், வரமாட்டேன்னு சொல்லிட்டாப்பா.''
பதில் சொல்லாமல் மவுனமாக சாப்பிட்டான் முத்து. 'இந்த மாதிரி பெரிய மனுஷங்க புழங்கற இடத்துக்கெல்லாம் ரோஜாவ அழைச்சுட்டு வந்திருக்கக் கூடாது. அவளையொத்த சிறுமி, தன்னிடம் இருப்பதை பெருமையாக சொல்லியிருக்கிறா. ஒழுகுற ஓட்டு வீட்டில இருக்கும் என் பெண்ணுக்கு, பெருமைப்பட என்ன இருக்கு... இனிமேல் இந்த மாதிரி இடங்களுக்கு கூட்டி வந்து, அந்த பிஞ்சு மனசுல தேவையில்லாத ஆசைகளை வளக்கக் கூடாது...' என்று நினைத்துக் கொண்டான்.
''அப்பா, அந்த வர்ஷினியும், நானும் ஒண்ணுப்பா,'' என்றாள் ரோஜா.
மகளைப் புரியாமல் பார்த்தான் முத்து.
''ஆமாம்ப்பா. அவளும் என்னை மாதிரி நாலாம் வகுப்பு படிக்கிறா; அவங்க அம்மாவைப் போல, என் அம்மாவும் என் மேல பாசமா இருக்காங்க. அவங்க அப்பாவைப் போல நீயும் என்னைப் பார்த்து பார்த்து வளக்கிற. அப்படின்னா, எனக்கும் அவளைப் போல அன்பான அம்மா, அப்பா கிடைச்சிருக்காங்க. நானும் நாலாம் வகுப்புப் படிக்கிறேன்; அப்ப, நானும், அவளும் ஒண்ணுதானே,'' என்றாள்.
அந்த பிஞ்சு மனதில், அந்த பெரிய வீடோ, அவளிடம் இருக்கும் பொருட்களோ, பகட்டான அவள் உடையோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
தனக்கும், அவளுக்குமான ஒப்பீடு அன்பு மட்டுமே! அவளுக்குக் கிடைத்ததுபோல், தனக்கும், தன்மேல் அன்பும், அக்கறையுமுள்ள பெற்றவர்கள் கிடைத்திருக்கின்றனர் என்ற நிறைவே இருக்கிறது. கள்ளமில்லாமல் சிரிக்கும் தன் மகளை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான் முத்து.

பரிமளா ராஜேந்திரன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maanangetta Mannangatti - Tempe,யூ.எஸ்.ஏ
29-அக்-201419:35:14 IST Report Abuse
Maanangetta Mannangatti கடைசி வரிகளை படிக்கும் பொழுது கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது
Rate this:
Cancel
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
28-அக்-201405:59:27 IST Report Abuse
Uma நல்ல கதை
Rate this:
Cancel
Anantharaman - Porur, Chennai,இந்தியா
26-அக்-201421:14:11 IST Report Abuse
Anantharaman கதை அருமை....ஆனால் இன்றைய நிஜ உலகில் .......நூற்றில் ஒரு குழந்தை தான் இவாறு இருக்கும் ...அவர்களே பின்னாளில் நல்ல மனிதர்களாக வரும் வாய்ப்பும் உண்டு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X