'கவிஞரின் வாழ்வில்' நூலிலிருந்து: நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை ஒரு கவிஞர் மட்டு மல்ல, சிறந்த ஓவியரும் கூட. இவரது ஆசான் லட்சுமண ஐயர் மறைந்த பின், அவரது உருவத்தை ஓவியமாக தீட்டினார் ராமலிங்கம் பிள்ளை. அந்த ஓவியம், நாமக்கல் நகர மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது.
ஒருமுறை நாமக்கல்லுக்கு வந்த சிம்சன் என்ற ஆங்கிலேயர், அந்த ஓவியத்தை பார்த்து வியந்தார். புகைப்படத்தைப் போன்று இருந்த அந்த ஓவியத்தை தீட்டியவர் குறித்து விசாரித்து, ராமலிங்கம் பிள்ளையை சந்தித்தார் சிம்சன்.
இறந்து போன தன் ஒரே குழந்தையின் படத்தை கவிஞரிடம் தந்து, அதை ஓவியமாக தீட்டித் தர வேண்டும் என்றும், அதற்கு ஐம்பது ரூபாய் சன்மானம் தருவதாகவும், ஓவியம் தனக்கு பிடித்தால் மேற்கொண்டு அதிகமாக தருவதாகவும் கூறினார். அதை ஏற்றுக் கொண்ட கவிஞர், குழந்தையின் ஓவியத்தை வரைந்து சிம்சனிடம் தந்தார். அப்படத்தை வாங்கி, ஒரு மேஜை மேல் வைத்து, சற்று விலகி நின்று, பல கோணங்களில் அந்த ஓவியத்தை பார்த்தார் சிம்சன்.
நெடுநேரம் இப்படி பார்த்து, 'ஓவியரே... நீர் வெற்றி பெற்று விட்டீர்; என் குழந்தையின் படம் உயிர் துடிப்போடு இருக்கிறது. இதை, என் மனைவி பார்த்தால் அழுது விடுவாள்...' என்று கவிஞரை பலவாறு பாராட்டி, 'பர்சி'லிருந்து ஒரு கற்றை நோட்டை உருவி, அதை கவிஞரிடம் கொடுத்தார்.
நோட்டுக்களை எண்ணிப் பார்த்த கவிஞர், 675 ரூபாய் இருப்பதை பார்த்து வியந்து, 'இவ்வளவு அதிகமாக கொடுத்திருக்கிறாரே...' என சந்தேகித்து, அந்த நோட்டு கற்றையை அப்படியே மேஜை மீது வைத்தார்.
'ஏன் போதாதா?' என்று கேட்டார் சிம்சன்.
'இல்ல; மிகவும் அதிகமாக இருக்கிறது...' என்றார் கவிஞர்.
சிம்சன் நோட்டுக்களை எண்ணிப் பார்த்த போது, ஒரு நண்பருக்கு கொடுக்க வைத்திருந்த, 500 ரூபாய் தாள்கள் கூடுதலாக அதில் சேர்ந்து விட்டது புரிந்தது. எனினும், அதற்காக அவர் தயங்காமல், 'உங்களுக்கு, 175 ரூபாய் கொடுக்க நினைத்தேன்; ஆனால், வேறொருவருடைய பணமும் அதில் சேர்ந்து விட்டது; இது, தெய்வசித்தம். உங்கள் அற்புத ஓவியத்துக்கு இது தகும்; இந்தப் பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்...' என்றார்.
வியப்புடன் அதை பெற்றுக் கொண்டு திரும்பினார் நாமக்கல் கவிஞரான ஓவியர்.
'வினோத திருமணங்கள்' என்ற நூலிலிருந்து: ஆந்திராவில் ஒரு கிராமத்தில், கூட்டுத் திருமணம் நடைபெற்றது. மணப் பெண்களில் சிலர் கருவுற்றிருந்தனர்; மணமகன்களில் சிலர் ஏற்கனவே கருத்தடை அறுவை சிகிச்சையை மேற்கொண்டு இருந்தனர், சில, 'புது' மணத் தம்பதியினரை சில சிறுபிள்ளைகள்... 'அம்மா, அப்பா...' என்று அழைத்து, சிணுங்கி அழுதபடி இருந்தனர்.
இது என்ன புதுமைக் கல்யாணம்!
அந்தக் கிராமத்தில், யாரிடமும் பண வசதி இல்லாததால், திருமணமாகும் முன்பே ஆணையும், பெண்ணையும் கணவன் - மனைவியாக வாழ அனுமதித்திருக்கின்றனர். திருமணம் செய்து கொள்ளக் கூடிய அளவுக்கு பணம் சேர்த்த பின், சம்பிரதாயப்படி கல்யாணம் செய்து கொள்கின்றனர்.
'தெரிந்து கொள்ளுங்கள்' நூலிலிருந்து: திரைப்படங்களுக்கான சென்சார் சர்டிபிகேட்டுகளை காட்டும் போது, பெரும்பாலும் ஒரு முக்கோண சின்னம், ஒரு மூலையில் காணப்படுவதைக் கவனித்திருப்பீர்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? படத்தில் சில காட்சிகள் சென்சார் போர்டால் வெட்டப்பட்ட பின் தான் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கவே, இந்த முக்கோணச் சின்னம் பதிக்கப்படுகிறது.
நடுத்தெரு நாராயணன்