வலிமை மட்டும் போதுமா? | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
வலிமை மட்டும் போதுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 நவ
2014
00:00

அழியும் உடல்களை பெற்றுள்ள சாதாரண மானுட ஜீவன்களாகிய நாம், ஏதேதோ அற்ப விஷயங்களை நினைத்து பெருமை கொண்டு, அதன் பொருட்டு ஆணவம் கொள்கிறோம். ஆனால், இப்பிரபஞ்சத்தின் முன், நாம் தூசுக்கு சமம். இவ்வுலகில் கடவுள் மட்டுமே பெரியவன்; அவனே அனைத்திற்கும் ஆதாரம் என்று நினைத்தால், மனமானது ஆணவ சேற்றில் அமிழ்ந்து விடாது.
சிவனிடம் பெற்ற வரத்தாலும், தன்னுடைய வீரத்தின் பேரில் தான் கொண்ட ஆணவத்தாலும் தேவர்களையும், முனிவர்களையும் மதிக்காமல் இருந்ததுடன், அவர்களை துன்புறுத்தியும் வந்தான் ராவணன்.
ஒரு சமயம், தன் அமைச்சர் மகோதரனுடன் உலகின் பல இடங்களை சுற்றி வந்தான் ராவணன். அவர்களுடைய பயணம் பாதாள லோகத்தை அடைந்தது; அங்கே, மகாபலி சக்கரவர்த்தி இருந்தார்.
மகாபலியைப் பற்றி அறிந்திருந்தாலும், தன் வீரத்தின் பேரில் இருந்த ஆணவத்தால், 'நானே ரொம்பப் பெரியவன்; என்னை மிஞ்சிய வீரன் இவ்வுலகில் இல்லை...' என்ற எண்ணத்துடன், ராவணன், மகாபலியைப் பார்த்து, 'நான் ராவணன் வந்திருக்கிறேன்...' என்றான்.
மகாபலியோ, 'ஓ... இலங்கையில் ராவணன் என்ற பெயரில், ஒரு சிறுவன் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்; அது நீ தானா... சரி... பக்கத்து அறையில், இரண்டு கடுக்கன்கள் இருக்கின்றன, அவற்றை எடுத்து வா...' என்றார்.
அந்த அறைக்குச் சென்ற ராவணன், நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. கடைசியில் வெறுங்கையோடு திரும்பி, தன் இயலாமையை ஒப்புக் கொண்டான்.
மகாபலி சிரித்து, 'ராவணா... அந்த இரண்டு கடுக்கன்களும், என் கொள்ளுத் தாத்தா இரண்ய கசிபுவினுடையவை; பரந்தாமன், நரசிம்ம அவதாரம் எடுத்து, இரண்ய கசிபுவை தூக்கிப் பிடித்து சுற்றிய போது, இரண்ய கசிபுவின் காதுகளில் இருந்த கடுக்கன்கள் சிதறி விழுந்தன. அவற்றை எடுத்துப் பத்திரமாக வைத்திருந்தனர் என் முன்னோர். நானும், அவற்றைப் பாதுகாத்து வருகிறேன்; அவற்றைத் தான், உன்னால் தூக்க முடியவில்லை என்கிறாய்...' என்று விவரித்தார்.
தலை கவிழ்ந்து திரும்பினான் ராவணன். ஆனால், அதிலிருந்து அவன் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. 'என்னால் தூக்க முடியாத அந்த கடுக்கன்களை அணிந்து, இரண்ய கசிபு நடமாடியிருக்கிறான்; அவ்வளவு பெரிய பலசாலியான அவனும் அழிந்து போய் விட்டானே...' என்று ராவணன் நினைத்திருந்தால் ராவணன் தவறு செய்திருப்பானா, அவனுக்கு அழிவு தான் வந்திருக்குமா?
கடவுள் ஒருவனுக்கு, திறமையைக் கொடுக்கிறார்; ஆணவமும், திமிரும் தானாகவே வந்து ஒட்டிக் கொள்கிறது. அழிவைத் தேடிக் கொள்கிறான்.

- பி.என்.பரசுராமன்

விதுர நீதி!: அறிவுள்ள மனிதன், தயங்காமல் மற்ற அறிஞர்களிடமுள்ள அறிவையும் திரட்டிப் பெற்று, மேலும் அறிஞனாவான். அவன் நற்பண்புகளை கடைபிடிப்பான். நேர்மையான முறையில் வாழ்க்கை வசதிகளை சேகரித்துக் கொள்வான். இதனால், மேன்மேலும் மகிழ்ச்சி அடைந்து முன்னேறுவான்.
என்.ஸ்ரீதரன்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X