ஊருக்குப் போய் என் அம்மாவையும், அண்ணனையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதும், கம்பெனியிலுள்ள முக்கியமானவர்களிடம் சென்றேன். என் தமையனார் இறந்து விட்டதையும், நான் ஊருக்குப் போக வேண்டிய அவசியத்தையும் எடுத்துச் சொன்னேன்.
என் தமையனார் இறந்த செய்தியைக் கேட்டு அனுதாபப்பட்டனர்; ஆனால், ஊருக்குப் போக அனுமதி கிடைக்கவில்லை. ஏன் என்று இப்போதும் ஞாபகம் இல்லை. என் தமையனாரின் நினைவாகவே கொஞ்ச நாட்கள் இருந்தேன். நாட்கள் செல்லச் செல்ல, வேலையும் அதிகரிக்கவே, அதைக் கொஞ்ச கொஞ்சமாக மறந்துவிட்டேன்.
புதுப் படங்கள், புதுப் புது நாடகங்கள் அடுத்தடுத்து வரவே, வேலை மும்முரத்தின் நடுவே, அந்த ஒரே சம்பவத்தை நினைத்துக் கொண்டு இருக்க முடியுமா? வீட்டிலிருந்தும் எனக்குக் கடிதம் வரவில்லை; நானும் போடவில்லை. சொல்லப் போனால், கடிதப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை அப்போது நான் பரிபூரணமாகத் தெரிந்து கொள்ளவில்லை என்று சொல்லலாம்!
கம்பெனியில் அவ்வப்போது சினிமாவுக்கு அழைத்துப் போவர். திண்டுக்கல்லில் நாங்கள் முகாமிட்டிருந்தபோது, தியேட்டருக்கு படம் பார்க்க அழைத்துச் சென்றனர். அண்ணன் சிதம்பரம் ஜெயராமன் நடித்த, கிருஷ்ணருடைய வரலாற்றுப் படம்; பெயர் எனக்குச் சரியாக நினைவில்லை. படத்தில் நிறைய பாடல் இடம் பெற்றிருந்தன. அக்காலத்தில் இப்போதுள்ளதைப் போல, 'பிளே - பாக் சிஸ்டம்' அதாவது, பின்னணியில் பாடும் முறை கிடையாது.
படத்தில் நடிக்க வருவோருக்கு பாடத் தெரிந்திருக்க வேண்டும்; நடிக்கும் போதே பாட வேண்டும். அப்படியே, அங்கேயே ஒலிப்பதிவு செய்து விடுவர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது... அண்ணன் சிதம்பரம் ஜெயராமன், ஒரே இடத்தில் நின்றபடியே ஒரு முழுப் பாடலைப் பாடியிருப்பார். ஒரே, 'ஷாட்'டில் இந்தப் பாட்டு முழுவதும் எடுக்கப்பட்டிருக்கும்.
அக்காலத்துப் படங்களோடு, இப்போதுள்ள திரைப்படத் தொழில் வளர்ச்சியை எண்ணிப் பார்க்கும்போது, ஏணி வைத்தால் கூட எட்டாது.
அந்தக் குறைவான வசதிகளைக் கொண்டு, அவர்கள் உருவாக்கிய படங்களைப் பார்க்கும் போது, பிரமிப்பு தான் ஏற்படுகிறது. படம் பார்த்து விட்டு வந்த பின், அன்று முழுவதும், நாங்கள் ஒருவருக்கொருவர் படத்தில் வந்த பாடல்களைப் பாடியபடி, அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.
ஒரு ஊரைவிட்டு, இன்னொரு ஊருக்குப் போகும்போது, கடைசி நாளன்று, 'பட்டாபிஷேகம்' (ராமாயணம்) நடத்தி விட்டுத்தான் இடம் பெயர்வோம்; இதை, ஒரு வழக்கமாகவே வைத்திருந்தனர். இதே ராமாயணத்தை எத்தனை முறை நடத்தி இருந்தாலும், கடைசி நாளன்று நடக்கும் இந்த நாடகத்திற்கு நிறைய கூட்டம் வரும்.
பொதுவாக நாடக மேடையின் முன், ஒரு படுதா தொங்கும்; இதை, நாடகம் நடக்கும்போது, அப்படியே அவிழ்த்து விடுவர்.
சாதாரண நாட்களில் இப்படி எல்லாரும் வந்து நிற்க மாட்டார்கள். நடிகர்கள் தங்கள் காட்சியில் நடித்து முடித்த பின், உள்ளே போய்விடுவர். ஆனால், ஊரைவிட்டு கிளம்புவதற்கு முன், கடைசியாக நடத்தப்படும், 'பட்டாபிஷேகம்' நாடகத்தில், கடைசி காட்சி முடிந்ததும், எல்லா நடிகர்களும், மேடையில் அப்படியே நிற்பர். நாடகத்தில் வேலை செய்யும் மற்ற தொழில் துறை நண்பர்களும், கலைஞர்களும் கூட மேடையில் வந்து நிற்பர்.
கடைசி நாள், 'பட்டாபிஷேகம்' நாடகம் முடிந்து, மேடைக்கு முன் தொங்கவிடப்படும் படுதா சுருட்டி கட்டப்பட்டு, மேலே இருந்து அப்படியே கீழே இறக்கப்படும். நடிகர்கள் தங்கள் கைகளைக் கூப்பி வணக்கம் சொல்வர். சில நடிகர்களுக்கு பரிசுகளும் கிடைக்கும்; மாலையும் போடுவர்.
கம்பெனிக்கு நிறைய வெள்ளிக் கோப்பைகளும், பரிசுகளும் கிடைக்கும். அன்று எங்களுக்குக் கொண்டாட்டம் தான்!
கம்பெனி ஊரை விட்டுப் புறப்படுவதற்கு சில நாட்கள் ஆகும்; மூட்டைகளையெல்லாம் கட்ட வேண்டாமா?
அப்படிப்பட்ட நாட்களில் வழக்கம் போல பாடம் படிப்பது, பாட்டு சொல்லிக் கொள்வது, நடனப் பயிற்சி போன்றவை இருக்காது. விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாமல், அவரவர் இஷ்டப்படி, சுதந்திரமாக இரண்டு, மூன்று நாட்களுக்கு விடப்படுவர். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், கம்பெனியில் உள்ளவர்கள் ஊரைச் சுற்றிப் பார்ப்பதோ, அல்லது அக்கம் பக்கத்திலுள்ள உறவினர்களைப் பார்ப்பதற்கோ செல்வர்.
நாங்கள் ஒரு சிலர் சேர்ந்து, திண்டுக்கல் மலை மீதுள்ள கோட்டைக்குச் சென்றோம். அங்கிருந்த ஒருவர், 'இதுதான் ஊமையன் கோட்டை; இங்க தான் அவன், வெள்ளைக்காரர்களை எதிர்த்து சண்டை போட்டான்...' என்றெல்லாம் கூறினார்.
அதைக் கேட்க கேட்க, எனக்கு உடல் புல்லரித்தது.
'கட்டபொம்மன்' நாடகத்தைப் பார்த்துத் தான், நான் நடிப்புத் துறையில் ஈடுபட்டேன். அந்த, கட்டபொம்மனின் வலது கையாக விளங்கி வந்த ஊமைத்துரையின் கோட்டையில் நின்று, அவனது வீர பிரதாபங்களைக் கேட்ட போது, என்னை அறியாமலேயே, ஒரு சந்தோஷ உணர்ச்சி ஏற்பட்டது.
பல ஆண்டுகளுக்குப் பின், எங்கள் நாடகக் குழுவின் சார்பில், கட்ட பொம்மன் நாடகத்தை நடத்த முனைந்த போது, அது, ஊமையன் கோட்டையும் இல்லை; ஊமைத்துரை அந்தப் பக்கம் கூட வரவில்லை என்பதை, தெரிந்து கொண்டேன்.
எங்களது அடுத்த முகாம், பழனி - திண்டுக்கல்லில் இருந்து நடிகர்கள் அனைவரும் பஸ்சிலேயும், நாடக பொருட்கள் லாரிலேயும் வந்தன.
இங்கே, முதன் முதலில்,'கிருஷ்ணலீலா' நாடகத்தை தான் நடத்தினோம்.
இதில் யசோதை, ருக்மணி, பூதகி, நடனமாடும் கோபிகைப் பெண் - இப்படி பல வேடங்களை, நான் மாறி மாறிப் போடுவேன்.
ஒரு நாள், 'கிருஷ்ணலீலா' நாடகத்தின் போது, ஒரு சுவையான சம்பவம் நடைபெற்றது. அன்று, நான், பூதகி வேடம் போட்டிருந்தேன்.
தன் எதிரியாக வளர்ந்து வரும் கிருஷ்ணனைக் கொல்ல, கம்சன், தன் தங்கையான பூதகியை அழைத்து, விஷப்பால் கொடுத்து, கிருஷ்ணனைக் கொன்று விடும்படி கூறுகிறான்.
கோர ரூபம் படைத்த அந்த பூதகி, கிருஷ்ணனைத் தேடிப் புறப்பட்டு வருவாள்.
வரும் வழியில், நாரதர் அவளைப் பார்த்து,'எங்கே போகிறாய் பூதகி?' என்று கேட்பார்.
பூதகி விஷயத்தைச் சொன்னதும், அதைக் கேட்டு சிரிப்பார் நாரதர்.
'ஏன் சிரிக்கிறாய் நாரதா?' என்று பூதகி கேட்க, நாரதர், 'இந்த கோர உருவத்துடன் போனால் எந்தக் குழந்தை உன்னிடம் நெருங்கி வரும்? அழகான உருவத்துடன் போனால் தானே குழந்தைகள் உன்னிடம் ஆசையோடு ஓடி வரும்...' என்று சொல்வார்.
'உண்மைதான் நாரதா! இப்போதே நான், அழகான பூதகியாக மாறுகிறேன்...' என்று கோர பூதகி சொல்வாள்.
அப்போது மேடையில் விளக்கு அணையும். கோர பூதகி வேடம் போட்டவர் உள்ளே சென்று விடுவார்; அழகியான பூதகி வேடம் போட்டவர், வந்து நிற்பார்.
மீண்டும் விளக்கு எரியும். கோரபூதகி இருந்த இடத்தில், அழகான பூதகியை கண்டதும் மக்கள் மத்தியில் ஒரு ஆரவாரம் எழும்.
இவ்வளவும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடும். கோர பூதகியாக மாதவ அய்யர் வேடம் போடுவார். அவர், ரொம்பவும் சீனியர்; எங்களுக்கு நடனம் சொல்லித் தருவார்.
விளக்கு அணைந்ததுமே, அவர் தன் தலையிலுள்ள டோப்பாவைக் கழற்றிய படியே உள்ளே போய் விடுவார்; இது வழக்கம்.
மேடையிலே பக்கவாட்டில் இரண்டு பக்கமும் வழிகள் இருக்கும். அதன் வழியாகத்தான் அவர் உள்ளே போவார்; எல்லாருக்கும் அதுதான் வழி!
குறிப்பிட்ட தினம், இந்த மாதிரி பக்கவாட்டில் நுழைந்து, உள்ளே செல்வதற்குப் பதிலாக, மாதவ அய்யர், முன் பக்கம் பக்கவாட்டில், எங்கள் கம்பெனிக்குக் கிடைத்துள்ள பதக்கங்கள், கோப்பைகள் இவை எல்லாம் அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் வந்து நின்று விட்டார்.
விளக்கு மீண்டும் எரிந்த போது, கையில் டோப்பாவுடன் நின்ற மாதவ அய்யரையும், அழகான பூதகியாக நின்ற என்னையும் பார்த்த போது, பார்வையாளர்கள் சிரித்து, ஆரவாரம் செய்தனர்.
மாதவ அய்யர் உள்ளே ஓடிவிட்டார்.
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.