நாற்பது முதல் ஐம்பது வயதான திருமணமான ஆண்களின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்கள் ஒன்று கூடினால் என்னென்ன பேசிக் கொள்வர்?
இவற்றை தெரிந்து கொள்ள, இந்த குரூப் ஆசாமிகளுடன் தொடர்பு இருக்க வேண்டும்; அப்படியே தொடர்பு இருந்தாலும், அவர்கள் தமக்குள் அந்தரங்கமாக பேசிக் கொள்ளும்போது, தம்மை விட வயது குறைந்தவர்களை, தம் உரையாடலைக் கேட்க அனுமதிப்பரா; தெரியவில்லை. ஆனால், அந்தரங்கமாக, 40 - 50கள் என்ன பேசிக் கொள்வர், தம் மனைவியோ, குழந்தைகளோ இல்லாத நேரத்தில் ஒன்று சேர்ந்தால், இவர்கள் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை, தொலைக்காட்சி ஆங்கில தொடர் ஒன்றில் ஒளிப்பரப்புவதாகக் கூறினார் லென்ஸ் மாமா.
மனித மனங்களை ஆராய்வதிலும், அவர்களது நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகம் என்பதால், மாமா கூறிய தொலைக்காட்சித் தொடரை பார்த்தேன்.
கதைக்கு நாயகன் என்று யாரும் கிடையாது; ஏழு நண்பர்கள், இவர்கள் அனைவரும் ஒரு நண்பர் வீட்டில், நண்பரின் மனைவி இரவு நேர, 'பார்ட்டி' ஒன்றுக்கு சென்று இருக்கும் போது, கூடிப் பேசுகின்றனர்.
இந்த ஏழு பேரில் இருவர், பிறன் மனைவி நோக்காதவர்கள்; ஒருவர், திருமணமான, 15 ஆண்டுகளில், ஒருநாள் கூட இரவில் வெளியே தங்காதவர்.
அடுத்தவர், தன் ஒரே பெண் குழந்தைக்கு ஸ்கூல் யூனிபார்ம் அணிவிப்பது, அதற்கு உணவு கொடுத்து அனுப்புவது, மனைவியின் தோழியர் வீட்டிற்கு விருந்துக்கு வந்தால், மனைவியை தோழியருடன் பேச அனுமதித்து விட்டு, அவர்களுக்கு காபி தயாரித்துக் கொடுப்பது, விருந்து தயார் செய்வது என, எல்லா வேலைகளையும் தன் தலையில் இழுத்துப் போட்டுக் கொள்ளும் ரகம்.
மூன்றாமவர் கொஞ்சம் தமாஷ் பேர்வழி; நண்பர்கள் கூட்டத்திலேயே வயது முதிர்ந்தவர். சிங்கம், புலி போன்ற அட்டை முக மூடிகளை அணிந்து வந்து, தன் மனைவியை தமாஷுக்கு பயம் காட்டும் ரகம். ஆனால், மனைவிக்கு இவரது நகைச்சுவை உணர்வை ரசிக்க முடிவதில்லை; ஆசாமி ஆபிஸ் சென்று இருக்கும் போது, ஒரு நாள், வீட்டைக் காலி செய்து, கம்பி நீட்டி விடுகிறார் மனைவி.
நண்பர்கள் அனைவரும் தத்தமது விருப்பத்திற்கு ஏற்ப விஸ்கி, பீர், ஜின் என உற்சாக பானங்களை உள்ளே தள்ளியபடி, வெண்குழல் வத்தியையும் ஊதியபடி தம் பெண் தோழியர், மனைவி இவர்களைப் பற்றி விமர்சித்தும், 'ஜோக்' அடித்துக் கொண்டும் இருக்கின்றனர்.
ஒருவர், தம் மனைவியைப் பற்றி மட்டமாக, 'ஜோக்' ஒன்றைச் சொல்ல, குழந்தைக்கு யூனிபார்ம் அணிவித்து பள்ளிக்கு அனுப்பும் கணவன், மற்றவர் மத்தியில் மனைவியைப் பற்றி கீழ்த்தரமாக விமர்சிப்பது கூடாது. அது, நாகரிகமற்ற செயல் என்று கூற, இன்னொரு நண்பர், 'நீ மனைவிக்கு அடிமை...' என, விமர்சிக்கிறார்.
ஒரு நண்பர், திருமணமான பெண்மணி ஒருவரை, தான் வசப்படுத்திய கதையையும், மற்றவர், திருமணமான பெண், தன்னை வசப்படுத்த முயன்று கொண்டிருப்பது பற்றியும், தனக்கும் விருப்பம் தான் என்றாலும், உடனே சம்மதித்தால் தான், 'சீப்' ஆகி விடுவோம் என்ற எண்ணத்தில், ஒத்திப் போட்டு வருவதாகவும் கூறுகிறார்.
இதனிடையே இரு நண்பர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி அடிதடியில் இறங்க, மற்றவர்கள் தடுத்து, அமைதிப்படுத்துகின்றனர்.
விருந்து கொடுக்கும் நண்பர், குறிபார்த்து கத்தி எறியும் போட்டி ஒன்றை ஆரம்பித்து வைக்கிறார். சமையல் அறை கதவில் வட்டமிடப்பட்டு, கத்தி எறிகின்றனர். நண்பர்களிலேயே வயதானவரால் மட்டுமே வட்டத்திற்குள் கத்தியை எறிய முடிகிறது. போட்டி பலமாகத் தொடரவே, சமையல் அறை கதவே பொத்தல் விழுந்து ஓட்டையாகி விடுகிறது.
அதன் பின், நாய் போல யாரால் தத்ரூபமாக ஊளை இட முடியும் என போட்டி வைக்கின்றனர்; தனித்தனியே ஒவ்வொருவரும் ஊளையிட்டு முடித்த பின், ஒருவர் தோள் மீது, ஒருவர் கை போட்டு வட்டமாக நின்று வானத்தை பார்த்தபடி சேர்ந்து ஊளை இடுகின்றனர்.
அந்த நேரத்தில் விருந்து கொடுப்பவரின் மனைவி, தன்னிடம் உள்ள சாவியால் வீட்டு வாயில் கதவைத் திறந்து உள்ளே வர, முதலில் கணவன் முகத்தில் பயம் கலந்த அசட்டுத்தனம்; நண்பர்கள் அனைவர் முகத்திலும் கிலி. மனைவியின் முகம் அங்கு கண்ட காட்சியால் சிவந்து, கண்களில் கோபக் கனல்...
கணவன் அசட்டுச் சிரிப்புடன் மனைவியை நெருங்கி அடிக்குரலில் சமாளிக்க, மனைவி, பல்லை கடித்துக் கொண்டே மெதுவாக, வார்த்தைகளால் கணவனைக் குதறுகிறார். அதே சூட்டோடு சமையல் அறையினுள் சென்று, கைப்பிடி வைத்த பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து, கணவன் மண்டையில் ஓங்கி ஒரு போடு போட்டுவிட்டு, 'தட தட'வென மாடி ஏறிச் சென்று விடுகிறாள்.
தலையில் இருந்து ரத்தம் கொட்டினாலும், சிரிப்பை இழக்காமல், நண்பர்களை வழி அனுப்பி வைக்கிறார் விருந்தளித்தவர். அத்துடன் கடைசியாக நண்பர்கள் வெளியேறுமுன், 'ஜாலியா பலான வீட்டிற்கும் சென்று விட்டு போங்கள்...' என, வேண்டுகோளும் விடுக்கிறார்.
இந்த வேண்டுகோளை சிரமேற்கொண்டு, பலான இல்லத்தை நோக்கி நண்பர்களும் செல்கின்றனர். போகும் வழியிலேயே ஒரு டெலிபோன் பூத்தில் இருந்து பலான வீட்டிற்கு போன் செய்கிறார், நண்பர்களில் வயதில் மூத்தவர். 'நாங்க ஆறு பேர் இருக்கோம்; எல்லாருக்கும் பெண் துணை தேவை...' என, வேண்டுகோளும் விடுக்கிறார். அங்கிருந்து, 'வாருங்கள்...' என்ற பதில் கிடைத்ததும், உற்சாகமாக பாடியபடியே அவ்வீட்டை நோக்கி காரைச் செலுத்தி, மாட மாளிகையாக உள்ள அவ்வீட்டை அடைகின்றனர்.
வீட்டின் தலைவி, 'நீங்கள் எங்களது உறுப்பினர் என்பதற் கான அடையாள அட்டை இருக்கிறதா?' எனக் கேட்க, பெரியவர் அட்டையை எடுத்துக் காட்ட, இன்முகத்துடன் ஆறு பேரையும் அனுமதிக்கிறார் தலைவி.
உள்ளே, மீண்டும் உற்சாக பானம், நண்பர்களில் மூவர் தமக்கு பிடித்த ஜோடிகளுடன் காணாமல் போக, இருவர் சேர்ந்தும், 15 வருடம் இரவில் வெளியே தங்காதவர் தனியாகவும் அமர்கின்றனர். அவர் தனக்குத் தானே... 'ஒன்றுமே உலகத்தில் வேண்டாம்... நம் நட்பு ஒன்றே உன்னதமானது, பிரிக்க முடியாதது என்றெல்லாம் வசனம் பேசிய பயல்கள், அழகான பொம்பளைகளைப் பார்த்ததும், துண்டைக் காணோம், துணியைக் காணோமென, சிட்டாக அவர்களுடன் மறைந்து விட்டனரே... இது தான் நட்பு போலும்...' என புலம்பிகிறார்.
ஜோடியாக அமர்ந்திருக்கும் மற்ற இரு நண்பர்களில் ஒருவர், குழந்தைக்கு யூனிபார்ம் அணிவித்து பள்ளிக்கு அனுப்புபவர். அவர், மற்ற நண்பரிடம், 'உனக்கும், மனைவிக்கும் என்ன பிரச்னை... ஏன் இது போன்ற வீட்டுக்கெல்லாம் வருகிறாய்?' எனக் கேட்க, 'என் மனைவி, வேறு ஒருவனை விரும்புகிறாள் என்று நினைக்கிறேன். அந்தக் கவலையை மறக்கவே குடிக்கிறேன்; இது போல சுற்றுகிறேன்...' என்கிறார்.
'நீ இதுபோல சுற்றுவதால் தான் உனக்கு சந்தேகம் வருகிறது; மனைவி என்பவள் வெறும் ஜடம் அல்ல, அவளுக்கும் ஆசாபாசங்கள் உண்டு. அவள் கொடுக்கும் அன்பில், கால் பாகம் நீ திரும்ப செலுத்து; பின்னர் அங்கிருந்து பொழியப் போகும் பாச மழையில் நீ மூழ்கியே போவாய்...' என, அறிவுரை கூறுகிறார்.
'அட... போப்பா...' என்ற ரீதியில் இவர் பதில் கூறி, மற்றொரு பெண்ணை அழைத்துக் கொண்டு, ஒரு அறைக்குச் சென்று கதவை பூட்டிக் கொள்கிறார்.
அட்வைஸ் கொடுத்த நண்பர் கரும சிரத்தையாக, பலான வீட்டில் இருந்தபடியே தன் வீட்டிற்குப் போன் செய்து, மனைவியுடன் பேசுகிறார். எதிர் முனையில் இருந்து, தாமதத்திற்கு காரணம் கேட்டு, 'காச் மூச்' என்ற கேள்வி வருவதை, இவரது முகம் போகும் போக்கில் இருந்து நம்மால் உணர முடிகிறது. மனைவியிடம் எதையும் மறைக்காமல், தான், தன் நண்பர்களுடன் பலான வீடு ஒன்றில் இருந்து பேசுவதாகவும், ஆனால், தான் எந்த தீய செயலிலும் ஈடுபடவில்லை என்று கூறுகிறார்.
எதிர் முனையில் அவரது மனைவி, 'என்ன வேணுமுன்னாலும் செய்துக்குங்க... காலையில 5:30க்கு வீட்டுக்கு வந்து பால் காய்ச்சி, சாப்பாட்டு பாத்திரங்களை துலக்கி, குழந்தையை பள்ளிக்கு அனுப்பற வேலையை பாருங்க...' எனக் கூறி போனை, 'டொக்' என வைத்து விடுகிறார்.
ஆசாமி, இந்தப் பேச்சுக்கு பிறகும் சளைக்காமல் சந்தோஷமாக இருக்கிறார்.
- இப்படியே செல்கிறது தொடரின் கதை!
திருமணமான நடுத்தர வயது ஆண்களின் பேச்சும், பழக்கமும், எண்ணங்களும் எப்படி இருக்கும் என்பதை இத்தொடர் மூலம் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஏழு ஆம்பளைக்கு இரண்டு பேர் தான் தேறுகின்றனர்; பெண்களே... உஷார்!
(தொடரின் ஆங்கில வசனங்களை தமிழில் கூறியவர் லென்ஸ் மாமா!)