அந்துமணி பதில்கள் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 நவ
2014
00:00

ம.சில்வியா, காரைக்குடி: காதலிக்கும் பெண்கள், தன் காதலன் செய்யும் தவறுகளைக் கூட பெருமையாக நினைக்கின்றனரே...
எல்லாம் கல்யாணம் வரை இழுத்துச் செல்லத்தான். அப்புறம், கரண்டியைக் கையில் தூக்கி விட மாட்டார்களா என்ன?

என்.ராஜலட்சுமி, மயிலாப்பூர்: வேலைக்கு செல்லும் பெண்களையே பெரும்பாலான ஆண்கள் மணம் செய்து கொள்ள விரும்புவது போல, வீட்டு வேலைகளில் ஆண்கள் உதவ வேண்டும் எனப் பெண்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லையே...
உதவி செய்ய வேண்டாம்; காலை ஆட்டிக் கொண்டு, 'டிவி' பார்த்தபடியே, 'அடியே... தண்ணீ கொண்டா... காபி கொண்டா, சட்டைய எடு... ஷூ பாலிஷ் போடு... சாக்ஸ் கொண்டா...' என, உபத்திரவம் தராமல் இருந்தாலே போதாதா?

எஸ்.அனுசுயா, லட்சுமிபுரம்: ஆண்கள், தங்கள் தொப்பையையும், பெண்கள், உடல் பருமனையும் குறைக்க முயற்சி செய்வதில்லையே... ஏன்?
'இனி என்ன இருக்கு? கல்யாணம் முடிஞ்சு, குழந்தை, குட்டி பெற்றாச்சே... இனி யார் நம்மை கவனிக்கப் போகின்றனர்? எதற்காக உடலை வருத்தி பயிற்சிகள் செய்ய வேண்டும்...' என்ற தவறான நினைப்புதான் இதற்கு காரணம், 'சிக்' என்று இருந்தால், நோய்க்கான வாய்ப்பே இல்லை என்பதை, இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

சி.ஆர்.பத்மநாபன், காசிமேடு: பிழைக்க வழி தெரியவில்லை; இது யாருடைய தவறு?
சந்தேகம் இல்லாமல் உங்களுடைய தவறுதான். துணிந்தவனுக்கு துக்கம் இல்லை. பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தில் கொட்டிக் கிடக்கிறது கோடி வழி; நீங்கள் கண்ணை மூடிக் கொண்டுள்ளீர்கள். சாரி பிரதர்!

எஸ்.மரியபுஷ்பம், நெய்வேலி: பணியிடத்தில்,'ஜொள்ளர்'களிடமிருந்து தப்பிக்க ஒரு யோசனை கூறுங்களேன்...
மூச்சுக்கு மூன்று முறை,'அண்ணா' போடுங்கள்; 'ரக் ஷாபந்தன் தினத்தில் ராக்கி கட்டி விடுங்கள்... பணியவில்லை என்றால்,'அண்ணியிடம் இது பற்றி பேசட்டுமா?' எனக் கடைசி அஸ்திரத்தை எடுத்து விடுங்கள். 'பார்ட்டி' வாலைச் சுருட்டிக் கொள்கிறதா இல்லையா பாருங்கள்!

வி.ஆர்.கோச்சடைமுத்து, சிவகங்கை: வாழ்க்கையில் ஊக்கமும், உற்சாகமும் உண்டாக வழி என்ன?
நம்மால் முடியும் என்ற எண்ணத்தை, மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். நார்மன் பிராய்டு போன்ற அறிஞர்களின் புத்தகங்களை சோர்வு ஏற்படும் போதெல்லாம் படிக்க வேண்டும். அவை ஊக்கத்தையும், நம்பிக்கையையும் தரும். மனதில் ஊக்கம் இருக்கும் போது, உற்சாகம் தானே வரும்; முயன்று தான் பாருங்களேன்!

பொ.பெருமாள்கண்ணு, கடலூர்: மனைவி உங்களை திட்டும் போது, எதிர்த்து பேசுவது, பேசாமல் காதைப் பொத்திக் கொள்வது, வெளியில் சென்று விடுவது - இந்த மூன்றில் எதைச் செய்வீர்கள்?
அட போங்க சார்... அதுக்கெல்லாம் இங்கே சான்ஸே இல்லை. இருந்தாலும், இந்தக் கேள்விகளைத் தூக்கி மாமாவிடம் போட்டேன். 'இது பெரிய விஷயமாப்பா... மகாநதி படத்துல கமலஹாசன் செய்வாரே... அது மாதிரி, கத்திக்கிட்டிருக்கிற மனைவி வாயை, உம் வாயால் மூடி விட வேண்டியது தானே...' என போடு போட்டார். ஓடியே போயிட்டேன் நான்!

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X