தாய் மனசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2014
00:00

அதிகாலை நிசப்தத்தை கிழித்தபடி, ஒலிபெருக்கி அலறியது. தூக்கம் தொலைந்த எரிச்சலில் கண் விழித்தான் முனியாண்டி.
''என்ன விசேஷமுன்னு இந்நேரத்துல பாட்டு போடுறானுங்க?'' தூக்க கலக்கம் மாறாமல், மனைவி கொண்டு வந்த சொம்பு நீரை வாங்கி, முகம் கழுவியபடி மனைவியை ஏறிட்டான் முனியாண்டி.
''தெரியலீங்க,'' கொட்டாவி விட்டபடி, நின்றாள் மனைவி.
''உன்கிட்ட கேட்டதே தப்பு; நானே தெரிஞ்சுக்கிறேன்... லிங்கம் டீக்கடைக்கு போனால் விபரம் தெரிஞ்சுட்டுப் போவுது.''
முருக்கு தட்டியில் தலைவார், அரிவாள் பெட்டி, பதநீர் ஊற்றும் தகரம் போன்ற தன் தொழிலுக்கு தேவையான பொருட்களை கோர்த்தபடி நடந்தான்.
''வாண்ணே... எப்பவும் அஞ்சரை மணிக்கு மேலதான் பனங்காட்டுக்கு போவ... இன்னைக்கு அஞ்சு மணிக்கெல்லாம் வந்துட்ட...''
''அட நீ வேற... காலையில நாலரைக்கே ரேடியோவ போட்டுட்டானுங்க. அந்த அலறல் சத்தத்துல எப்படி தூங்குறது?'' அங்கலாய்த்த முனியாண்டியிடம், ''உனக்கு விஷயம் தெரியாதா... இன்னிக்கு நம்ம வேலு கிழவனோட நினைவு நாள். அதான் அவங்க பசங்கெல்லாம் சேர்ந்து இன்னிக்கு வடை, பாயசத்தோட அன்னதானம் போடறாங்க... நீயும் சீக்கிரம் பனை சீவிட்டு அத்தாச்சியோட சாப்பிட வந்துரு.''
''ஓஹோ... அதான் விஷயமா... அப்ப கண்டிப்பா வந்திடுறேன்.''
''பாவம்... நல்ல மனுஷன். இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம்; அதற்குள்ளே போய் சேர்ந்துட்டாரு...'' வருத்தத்துடன் சொன்னான் டீக்கடைக்காரன்.
''இரண்டு பொண்ணுங்க, எட்டு பசங்கன்னு எல்லாரையும் கரை சேர்த்து, பேர பசங்க மூணு பேரையும் வளர்த்து ஆளாக்கி விட்டாரு மனுஷன். கடைசியிலே உடம்புக்கு முடியாம மண்டையப் போட்டுட்டாரு,'' என, அவனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டான் முனியாண்டி.
''வேலு கிழவன விடுங்க... அந்த பேச்சி கிழவியை யாராவது பாத்துக்குறாங்களா... பாவம், இட்லி, சுண்டல் அவிச்சி வித்து வயித்த கழுவுது,'' பரிதாபப்பட்ட டீக்கடைக்காரனே தொடர்ந்தான்...
''நேத்து ராத்திரியே வெளியூர்ல இருந்து இரண்டு பொண்ணுங்க வீட்டாரும், பொண்டாட்டி வீட்டோட செட்டில் ஆன நாலு மகன்களும் குடும்பத்தோட வந்துட்டாங்க. பெரியவர் வீடே திருவிழா கொண்டாட்டமா மாறிடுச்சு.
''அது மட்டுமா... பொண்ணுங்க ரெண்டு, பசங்க எட்டுப் பேருன்னு மொத்தம் பத்து பேர் தலைக்கு ரெண்டாயிரம்ன்னு பிரிச்சு, நினைவு நாளை கொண்டாடுறாங்க. உயிரோடு இருந்தப்போ இல்லாத நிம்மதி, செத்த பின்னாடியாவது வேலு கிழவனுக்கு கிடைக்கட்டும்,'' என்றான்.
டீக்கடையின் பக்கவாட்டு சுவரிலும், பேருந்து நிறுத்த நிழற்குடையின் பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரை, தான் படித்த நான்காம் வகுப்பு படிப்பின் உதவியுடன் தட்டுத் தடுமாறி படித்து முடித்தான் முனியாண்டி.
மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் அனைவரும் கண்ணீரோடு சுவரொட்டியில் அஞ்சலி செலுத்தியிருந்தனர். சுவரொட்டியில் புன்னகைத்தபடி இருந்தவரை பார்த்தவனுக்கு, அது ஆனந்த புன்னகையா, ஏளன புன்னகையா என புரியவில்லை.
பிள்ளையார் கோவில் தெரு வழியே நடந்து சென்றவன், ஒரு நிமிடம் நின்று கவனித்தான். அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கூடாரத்தில் அமர்ந்து இட்லி, சுண்டல் அவித்துக் கொண்டிருந்த பேச்சியை பார்த்ததும் உருகினான்.
தன் ஒன்றுவிட்ட உறவின் முறையில் பெரியம்மாவான பேச்சி, இந்த வயதிலும் உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி பெண்மணி.
தான் சிறுவனாய் இருந்த காலத்தில், அந்த பேச்சியின் கடையில் தான், பெரும்பாலும் காலை சிற்றுண்டி முடித்திருக்கிறான். தற்போது, அவனது பிள்ளைகளும் அதே பேச்சியிடம் தான், காலை உணவு சாப்பிடுகின்றனர்.
கணவனின் சம்பளத்தை மட்டும் நம்பியிராமல், தன் உடலை வருத்தி, ஆவியில் வேகும் இட்லி போல, தானும் புகைமூட்டத்தில் வெந்து சம்பாதித்து கணவரையும், பிள்ளைகளையும் நன்கு கவனித்துக் கொண்டாள்.
திருமணமானதும் படிப்படியாக பிள்ளைகள் அனைவரும் அவர்களை விட்டுச் சென்றனர்.
ஒரு கட்டத்தில், கணவருக்கு உழைக்க முடியாமல் போக, முழு சுமையையும் தாங்கிக் கொண்டாள் பேச்சி. எந்த விதத்திலும் உதவாத மகன்கள், பேரக் குழந்தைகளுக்காக உருகுவாள். பேரப் பிள்ளைகள் காலை சிற்றுண்டியை தவறாமல் வந்து சாப்பிட்டு செல்வர். அவ்வப்போது உரிமையுடன் உள்ளூரில் இருக்கும் மகன்களும் வந்து உணவருந்தி செல்வதுண்டு.
ஆனாலும், பேச்சி அவர்களை கடிந்து கொள்ளவோ, வெறுப்பு காட்டவோ மாட்டாள். ஆனால், பேச்சியின் கணவர் வேலு மட்டும் அவ்வப்போது சத்தம் போடுவார்.
'ஏன்டீ... அவனுக நல்லா சம்பாதிக்கிறானுக; நல்லா இருக்கட்டும். நமக்குத் தான் எந்த உதவியும் செய்றதில்ல. அவனுக பெத்த பிள்ளைகளுக்கு இட்லி வாங்க காசு கூடவா கொடுக்க முடியாது. இதோ... பெத்த அப்பன் உடம்புக்கு முடியாம படுத்திருக்கேன். எவனாவது என்ன, ஏதுன்னு கேட்கிறானுங்களா... இல்ல செலவுக்கு ஏதாவது கொடுக்கிறானுங்களா... இனிமே, யாருக்கும் எதுவும் கொடுக்காதே...' என கண்டிப்புடன் வேலு கிழவன் சொன்னாலும், 'அட... புள்ளைங்க, பேரக் குழந்தைகளை விட வியாபாரமா பெரிசு?' என்பாள் பேச்சி.
'இவனுக தான் இப்படின்னா... அந்த ரெண்டு பொட்டக் கழுதைகளும், அவனுகளை விட ஒரு படி மேலே இருக்குதுங்க. அதுக பெத்த பிள்ளைகளை வளக்கிறோமே... எப்படியிருக்குதுங்க, என்ன செய்றாங்கன்னாவது வந்து பார்த்துட்டு போதுகளா... எட்டிப் பார்க்கிறதே இல்லை...' என கோபத்துடனும், ஆற்றாமையுடனும் கூறும் அவரை, தேற்றுவாள் பேச்சி.
கால்வலி, முதுகுவலி இப்படி பல வலிகளில் உடம்பு கெட்டு படுக்கையில் விழுந்தவரை, பேச்சிதான் அவ்வப்போது வைத்தியரை அழைத்து வந்து கவனிப்பாள்.
'நான் கொடுக்குற மருந்துகள் மட்டும் போதாது பேச்சி; சத்தான பழங்கள், பால் போன்ற ஊட்டச்சத்து பானம் எதாவது கொடு; ரொம்ப வீக்கா இருக்காரு...' என்று வைத்தியர் ஆலோசனை சொன்னார்.
'வர்ற வருமானம் வீட்டு செலவுகளுக்கும், வைத்திய செலவுகளுக்குமே சரியாக இருக்கு. ஏதாவது வச்சிருந்தா, பசங்க, 'இந்தா தாரே'ன்னு வாங்கிட்டு போறானுக; எவனும் திருப்பி தர்றதில்லை; கேட்டா அடிக்க வர்றானுக...' என்று அழுது கொண்டே கூறுவாள் பேச்சி.
'செலவுக்கு பணம் கேட்டா பஞ்சப்பாட்டு பாடுறானுக; இருக்குறதையும் பிடுங்குறானுக. பெத்த பிள்ளைகளால எந்த உதவியும் இல்லைன்னாலும் உபத்திரவத்துக்கு குறையில்லை...' என்று படுக்கையில் இருந்தபடியே வேலு பொருமுவார்.
நாளாக நாளாக, உடல் நிலை மோசமாகி, இறந்தும் போனார்.
இதோ ஓராண்டு ஓடிவிட்டது.
''ஏலே முனியாண்டி... என்னடா, இங்கேயே பாத்துட்டு நிக்கிறே?''
''இல்ல ஆத்தா... உனக்கு என்னைக்கு இந்த புகையிலிருந்து விடுதலை கிடைக்கும்ன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.''
''நான் செத்த பிறகு தான் விடுதலை,'' என விரக்தியாய் சிரித்தாள்.
''என்னால முடியல ஆத்தா... அப்பச்சி உயிரோடு இருந்தப்ப எனக்கு துணையா பனங்காட்டுக்கு வருவாரு; ஒரு பட்டை கள் குடிச்சிட்டு, தெம்பா பேசிட்டு வருவாரு. இந்த போலீஸ்காரனுங்க மிரட்டுனதால கள் இறக்குறதில்லை; படிப்படியாய் அவர் பனங்காட்டுக்கு வர்றதை நிறுத்திட்டாரு. கடைசியில உடம்பு முடியாம இறந்தும் போயிட்டாரு.
''அவரு உயிரோட இருக்கும்போது, ஒத்த பைசா செலவு செய்யாதவனுக, ஆறுதலா ஒரு வார்த்தை கூட பேசாதவனுக, இன்னிக்கு பாரு... ஏதோ கோவில் திருவிழா மாதிரி பாட்டு போட்டு, அன்னதானம் போட்டு தம்பட்டம் அடிக்கிறானுக... இதிலே உண்மையான பாசம் இருக்கும்னா நெனைக்கிறே?'' என்றான் முனியாண்டி.
''எனக்கு தெரியாதா முனி... உயிரோடு இருக்கும்போது ஒவ்வொருத்தனையும் கெஞ்சினேன்... 'அப்பாவ நல்ல ஆஸ்பத்திரியில வச்சு பார்க்கணும்; நல்லா ஊட்டமா சாப்பிட எதாவது வாங்கி குடுக்கணும்'ன்னு... எவன் கேட்டான்... ஒருத்தனும் கண்டுக்கல்ல. போனவரை விடு... உயிரோடு இருக்குற என்னையாவது கண்டுக்கிறானுகளா... உடம்பு முடியாட்டாலும், தினமும் இந்த அடுப்பு புகையில ஆவியோட ஆவியா வெந்து சாகிறேன்,'' என கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரை சேலைத் தலைப்பால் துடைத்தாள்.
வெந்த இட்லியை ஒரு பாத்திரத்தில் அடுக்கியபடி, ''இவனுக யாரையும் நான் நம்பல முனி; இன்னிக்கு செய்ற இட்லி, சுண்டலை காசுக்கு விக்காம எல்லாத்தையும் சின்னப் பிள்ளைகளுக்கு சும்மா கொடுத்திடப் போறேன். தனியா சமைச்சு, படையல் செஞ்சு சாமி கும்பிடப் போறேன்; அவனுக செய்ற எதிலும் கலந்துக்க மாட்டேன்,'' என உறுதியாக சொன்னாள்.
''என்ன ஆத்தா சொல்றே?'' என்றான் பதற்றத்துடன்.
''ஆமாம்... இதுதான் என் முடிவு; உயிரோடு இருந்த வரை கவனிக்காம சாகடிச்ச அவனுங்களோட அன்னதானத்திலே எனக்கென்ன வேலை... நான் போக மாட்டேன்,'' தீர்மானமாக சொல்லி வேலைகளை கவனித்தாள்.
'என்ன நடக்கப் போகிறதோ...' என, கவலையுடன் தன் வேலையை கவனிக்க புறப்பட்டான்.
மதியம், 2:00 மணியளவில் மனைவி, குழந்தைகளோடு சாப்பிடச் சென்றவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது .
மகன்கள் எடுத்துக் கொடுத்த புதிய புடவையை அணிந்து, சாமி கும்பிட்டு, அன்னதானத்தை துவக்கி வைத்தாள் பேச்சி. 'அவ்வளவு பேசிய ஆத்தா, எப்படி இங்கு வந்துச்சு...' ஆச்சர்யம் தாங்கவில்லை முனியாண்டிக்கு. பந்தியில் அமர்ந்து உண்ணத் துவங்கினான். திரும்பி வேலுவின் சமாதியை பார்த்தான். சமாதி மீது போர்த்தியிருந்த வேட்டி, துண்டு, படையலில் வைத்த இனிப்பு, பழ வகைகளையும் காணவில்லை. வெறும் சாதம் மட்டுமே இருந்தது.
ஆனாலும், ஒன்றைக் கவனித்தான்...பேச்சிக் கிழவி சாப்பிடாமல், தன் குடிசைக்கு சென்று கொண்டிருந்தாள். ஓடோடி சென்று, பேச்சிக் கிழவியின் கரம் பற்றினான் முனியாண்டி.
''என்ன கேட்க வர்றேன்னு புரியுது முனி... என்னதான் என் பிள்ளைங்க மேலே கோபம் இருந்தாலும், நான் போகலைன்னு வை... எல்லாரும் என் பிள்ளைகளத் தான் தப்பா பேசுவாங்க. அதனால, என் பிள்ளைங்களுக்குத் தானே தலைகுனிவு. அதுமட்டுமல்ல, அவங்களுக்கு ஒரு அவமானம்னா எனக்கு மனசு தாங்காது. அதான், அங்க வந்தேன். நான் வீட்டிலேயே சமைச்சு, படையல் பண்ணி, விரதம் விட்டுட்டேன்; எனக்கு எதுவும் செய்யாட்டியும், அவர் நினைவு நாள்ல பல பேர் வயிறார சாப்பிடுறத, நான் எப்படி வேண்டாம்ன்னு சொல்ல முடியும்?'' என்றாள்.
அவன் பதில் பேசாது நிற்க, பேச்சி கிழவி தொடர்ந்து நடந்தாள்.

எஸ்.முருகன்.
வயது: 34, கல்வித்தகுதி: பி.லிட்., (டி.பி.டி.,)
பணி: மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையில் திட்டக்களப்பணியாளர்.
சிறுகதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். இவரது படைப்புகள், பல்வேறு வார இதழ்களில் வெளிவந்துள்ளன. திருநெல்வேலி மற்றும் இலங்கை வானொலிகளிலும் இவரது படைப்புகள் ஒலிபரப்பாகி உள்ளன. சிறுகதை போட்டியில் பரிசு கிடைத்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
05-நவ-201411:00:47 IST Report Abuse
JeevaKiran பிள்ளைய பெத்தா கண்ணீரு தென்னைய வளர்த்தா தண்ணீரு. கண்ணதாசன் சொல்லலையா? அதுதான் உலகம்
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
02-நவ-201405:43:37 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> பத்துபிள்ளைகளை ஒரு தாய் ஆயிரம் கஷ்டம்பட்டு வளைத்து ஆளாக்கிடுவா ஆனால் அவள் பெரும் பாரம் ஆயுடுவா பெத்த பிள்ளைகளுக்கு சீன பழமொழி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X