விஜய் படத்துக்காக பிரமாண்ட அரண்மனை!
கத்தி படத்தை தொடர்ந்து, சிம்புதேவன் படத்தில் நடிக்கிறார் விஜய். தீபாவளிக்கு, கத்தி வெளியானதையடுத்து விஜய்யின், 58வது படத்தை இயக்குவதற்காக தற்போது மகாபலிபுரத்தில், 100 ஏக்கர் நிலத்தில் ஒரு பிரமாண்டமான அரண்மனை, 'செட்' போட்டு வருகிறார் சிம்புதேவன். விஜய் முதன்முதலாக நடிக்கும் இந்த சரித்திர படத்தில், அவருடன் ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் ஜோடி சேருகின்றனர். நான் ஈ பட வில்லன் சுதீப் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே வடிவேலு நடித்த, இம்சை அரசன் ௨௩ம் புலிகேசி என்ற சரித்திர படத்தை இயக்கிய சிம்புதேவன், விஜய் நடிக்கும் இப்படத்திலும், அவரை இரண்டு வேடங்களில் நடிக்க வைக்கிறார். அதில் ஒன்று காமெடி கதாபாத்திர வேடம்.
— சினிமா பொன்னையா
அஜீத்தை இயக்க ஷங்கர் தயார்!
கோலிவுட்டில் உள்ள மெகா கதாநாயகர்களுக்கு பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடித்தால் தான், ப்ரமோஷன் கிடைத்த மாதிரி. ஆனால் அவர் படத்தில் நடிப்பது அத்தனை சுலபமில்லை. இரண்டு, மூன்று ஆண்டுகள் தியாகம் செய்ய வேண்டும். அவர் உடம்பை எப்படி மாற்றச் சொன்னாலும், அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதால், விஜய் மற்றும் அஜீத் போன்ற நடிகர்கள் தயங்குவதுண்டு. ஆனால், நண்பன் படத்தில் உடம்பை வருத்த வேண்டிய பிரச்னை இல்லாததால் விஜய் நடித்தார். இதையடுத்து, 'அஜீத்தை வைத்தும் படம் இயக்க வேண்டும்...' என்று அவரது ரசிகர்கள் இணையதளம் வாயிலாக, ஷங்கரை கேட்டு வருகின்றனர். அதற்கு, 'நான் அவரை வைத்து படம் இயக்க எப்போதும் தயார் தான்; நான் சொல்லும் கதைக்கேற்ப அவர் மாறினால், உடனே ஆக் ஷன் சொல்லத் தயாராக இருக்கிறேன்...' என்று கூறியுள்ளார்.
- சி.பொ.,
இலியானா விவாதம்!
இந்தியில், பர்பி என்ற படத்தில் அறிமுகமான இலியானா தற்போது, ஹேப்பி எண்டிங் என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், 'என்னுடைய 16 வயதிலேயே என் தந்தையிடம், 'செக்ஸ்' பற்றி நான் விவாதித்திருக்கிறேன்...' என்று, ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் இலியானா. இதையடுத்து, அவரது சமூக வலைதளத்திற்குள் செல்லும் ரசிகர்கள், 'செக்ஸ்' பற்றிய சந்தேகங்களை கேட்டு, டென்ஷன் செய்கின்றனர். இன்னும் சிலர், தங்கள் அரை நிர்வாண படங்களை அனுப்பி, இந்த உடம்பு, உங்கள் உடம்புக்கு இணையாக செக்ஸியாக உள்ளதா, இல்லையா என்றெல்லாம் கேட்கின்றனர். இதனால், 'செக்ஸ்' விவாதம் பற்றிய செய்தியை வெளியிட்டது பெரிய தலைவலியாகி விட்டதே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் இலியானா. வேலியில் போற ஓணானை எடுத்து, மடியில் கட்டிக்கிட்டு, குத்துதே குடையுதே என்ற கதை!
— எலீசா
விஸ்வரூபம் - 2 டிசம்பர் 2ல் ரிலீஸ்!
விஸ்வரூபம் படத்திற்கு பின் கமல் நடித்த விஸ்வரூபம் - 2 மற்றும் உத்தம வில்லன் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிவடைந்து விட்டன. அதையடுத்து, அவர் தற்போது, பாபநாசம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், 'நீங்கள் நடித்த இரண்டு படங்களும் வெளிவராமல் உள்ளதே...' என்று கமலிடம் கேட்ட போது, 'என் வேலையை முடித்துக் கொடுத்து விட்டேன்; படங்களை வெளியிடுவது அந்தந்த கம்பெனிகளின் பொறுப்பு. இனி, அதற்கும், எனக்கும் சம்பந்தமில்லை...' என்று கூறி விட்டார். இந்நிலையில், தற்போது விஸ்வரூபம் - 2 படத்தை, டிசம்பரில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக அப்படத்தை தயாரித்துள்ள, ஆஸ்கர் பிலிம்ஸ் அறிவித்திருக்கிறது.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
'நயன் நடிகையின் நட்பு காரணமாகத்தான் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்கவில்லை...'
என்று சினிமா வட்டார நண்பர்களிடம், சேட்டை நடிகர் சொல்லி வருவதால், அவர் மீது செம காண்டில் இருக்கிறார் தாரா நடிகை. 'நானா இவர் பின்னாடி சுற்றினேன்; இவர்தானே என் பின்னாடி சுற்றினார். தவறையெல்லாம் இவர் செய்துவிட்டு, இப்போது என் மீதே பழி போடுவதா...'என்று நடிகரை தன் நட்பு வட்டாரங்களில் வசை பாடிக்கொண்டு வருகிறார் தாரா.
'நடிகைகளுடனான என் போட்டி நடிப்பில் மட்டுமே இருக்கும், கவர்ச்சியில் இருக்காது...' என்று கூறிவந்த அஞ்சான் நடிகை, இப்போது பிகினி நடிகையாக உருவெடுத்திருப்பதால், தான் நடிக்கிற படங்களில் யாரேனும் குத்து டான்ஸ் நடிகைகள் இடம்பெற்றால், அவர்கள் முன் காணாமல் போய்விடக்கூடாது என்பதற்காக, பாடல் காட்சிகளில், துக்கடா டிரஸ் அணிந்து நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். அந்த வகையில், அஞ்சானைத் தொடர்ந்து சீயானுடன் நடிக்கும் படத்தில், கவர்ச்சி கொடியை பறக்க விட்டிருக்கிறார் மேற்படி நடிகை.
துளிகள்!
* விஜயசேதுபதியுடன் நடிக்க விருப்பம் தெரிவித்த நயன்தாரா, இப்போது அவருடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததையடுத்து, அந்த படத்திற்கு அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
* பிரபுசாலமனின், கயல் படத்தில் நடித்து வரும் ஆனந்தி, தற்போது வெற்றி மாறன் இயக்கிவரும், விசாரணை என்ற ஒரு மணி
நேர படத்தில், அட்டகத்தி தினேஷுடன் நடித்து வருகிறார்.
* தமிழில் சித்தார்த்துடன், தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சமந்தா, அவருடன் ஜோடியாக நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.
* ஜெயம்ரவி, த்ரிஷா மற்றும் அஞ்சலி இணைந்து நடித்து வரும், அப்பாடக்கர் என்ற படத்தில் நடிகை பூர்ணா ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடுகிறார்.
அவ்ளோதான்!