குற்றாலத்துக்கு குளிக்க போகிறவர்களின் ஆர்வத்தை ஒழுங்குபடுத்துவதுடன் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மகத்தான பணியும் காவல்துறைக்கு உண்டு. சீசன் நேரங்களில் இதற்காகவே அதிகப்படியான போலீசார் நியமனம் செய்யப்படுவர். மெயினருவி வளைவு மீது ஏறி நின்று, அருவியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நாள்முழுவதும் நனைந்தபடி குளிக்க வரும் அத்தனை பேரையும் ஒழுங்குபடுத்தும் இவர்களது பணி மகத்தானது.
பல ஆண்டுகளாக குற்றாலத்திற்கு வழக்கமாக வருபவர்களுடன், அந்தந்த ஆண்டு புதிதாக வருபவர்களின் எண்ணிக்கையும், ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டேதான் இருக்கிறது. அவர்களுக்கு எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல வேண்டியது காவல் துறையின் கடமை என்பதால், முக்கியமான அருவிகளில் பாதுகாப்பான குளியலுக்கு கடைபிடிக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை, ஒலிபெருக்கி மூலம் விடாமல் அறிவிப்பு செய்வர்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அந்த அறிவிப்பில், பெண்கள் தங்கள் நகை போன்ற உடமைகள் அருவியில் அடித்து செல்லாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஆண்கள் அருவியில் குளிக்கும் போது கூச்சல் போடக்கூடாது என்ற வார்த்தைகள் அடிக்கடி இடம் பெறும். இந்த அறிவிப்பை மாற்றி அறிவிக்கும்படியான நிகழ்வு நம் வாசகி உமாவால் இந்த ஆண்டு ஏற்பட்டது என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.
காரணம், வாசகர்கள் குளிக்க சென்றிருந்த போது அருவியும், சீசனும் அருமையாக இருந்தது. அதுவும், பழைய குற்றால அருவியில் குளிப்பது என்பது தனி சுகம். பூவாளியில் இருந்து சிதறிவிழும் தண்ணீரானது எப்படி பூக்களுக்கு வலிக்காமல் விழுமோ, அதே போல குளிக்கும் மக்களுக்கு வலிக்காமல் தண்ணீர் பூத்தூவலாக பழைய குற்றால அருவியில் விழும். இதனால்தான் இந்த அருவியில் குழந்தைகள் கூட அழாமல் குளிப்பர்.
பார்க்கவும், குளிக்கவும் பரவசம் தரும் பழைய குற்றால அருவியை பார்த்ததுமே, 'ஊ...லலலா' என்று பாடி, அருவிக்குள் ஊடுருவிய வாசகி உமாவின் உற்சாகத்தை பார்த்து, மற்ற வாசகிகளும் அருவிக்குள் பாய்ந்தனர். டூரின் இரண்டாவது நாள் காலையில், முதல் குளியல் என்பதால் உற்சாகம் இன்னும் அதிகரித்தது.
நேரம் ஆக ஆக வாசகி உமாவின் சந்தோஷமும், அதன் எதிரொலியான சத்தமும் அதிகரித்து கொண்டே போனது. கொஞ்ச நேரத்தில் அவரது சந்தோஷம் மற்ற வாசகிகளுக்கும் பரவி விட, அதுவரை சத்தம் போடாமல் குளித்த வாசகிகள் கூட, ஊ...லலலா போட ஆரம்பித்தனர். இந்த சத்தத்தை கேட்டதும் ஸ்பீக்கரில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த 'குளிக்கும் போது ஆண்கள் கூச்சல் போடக்கூடாது...' என்ற அறிவிப்பை நிறுத்திவிட்டு. கையில் மைக்கை எடுத்து. 'பெண்கள் பகுதியில் சிலர் சத்தம் போட்டபடி குளிப்பதாக தெரிகிறது தயவு செய்து சத்தமிடாமல் குளிக்கவும்...' என்று தொடர்ந்து அறிவிப்பு செய்தனர்.
அந்த அறிவிப்பை எல்லாம் கேட்கும் நிலையில் வாசகி உமா இல்லை. மாறாக சக வாசகிகளுடன் வட்டமாய் நின்று கைகோர்த்துக்கொண்டு குலை குலையா முந்திரிக்கா நரியே நரியே சுத்தி வா கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?
கூட்டத்துல இருக்கான் கண்டுபிடி குலை குலையா முந்திரிக்கா நரியே நரியே சுத்தி வா கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?
கூட்டத்துல இருக்கான் கண்டுபிடி...
என்ற விளையாட்டை விளையாடி, சிரிப்பு அலைகளை, நொடிக்கு ஒரு முறை பரவவிட்டுக் கொண்டு இருந்தார்.
இவர்களுக்கு அறிவிப்பு எல்லாம் பலன் தராது, வேலையும் நடக்காது என்பதை உணர்ந்த பெண் போலீஸ் அதிகாரி மைக்கை வைத்துவிட்டு 'விறுவிறு'வென நடந்து வாசகி உமா குளித்துக் கொண்டிருந்த இடமருகே வந்து, 'மேடம், இங்கே வாங்க...' என்று உமாவை கூப்பிட்டார்.
அருவியை விட்டு வெளியே வந்த உமாவின் முகத்தில் தாண்டவமாடிய சந்தோஷத்தையும், சிரிப்பையும் பார்த்ததும், பெண் போலீஸ் அதிகாரி, தன் கோபத்தை முற்றிலுமாக விட்டுவிட்டு, புன்னகைத்தபடி, 'குளிக்கும் போது சத்தம் போடாமல் குளிக்கக் கூடாதா...' என்று வேண்டுகோள் விடுத்தார்.
'இது சத்தமில்லை மேடம், சந்தோஷம். வேடிக்கையும், விளையாட்டும் சின்ன வயதில் மட்டும்தான் இருக்கவேண்டும் என்பது இல்லை. எந்த வயதிலும் இருக்கலாம். நீங்களும் எத்தனையோ முறை எத்தனையோ பேரோடு குளித்து இருப்பீர்கள். ஒருமுறை எங்களோடு அருவியில் குளித்து பாருங்கள். உங்களாலேயே சந்தோஷத்தை நிறுத்த முடியாது. ஆனந்தமாய் சத்தம் போடுவதையும் அடக்க முடியாது' என்றெல்லாம், 'லெக்சர்' கொடுத்தார்.
இன்னும் கொஞ்ச நேரம் வாசகி உமாவோடு பேசிக்கொண்டிருந்தால், தன்னையும் அருவியில் குளிக்க வைத்து விடு வதோடு, ஆனந்த கூச்சலும் போட வைத்து விடுவார் என்று நினைத்தாரோ என்னவோ, 'சரி சரி மெதுவா சத்தம் போடுங்க...' என்று சிரித்தபடி சொல்லி, அந்த இடத்தை விட்டு அகன்றார்.
ஆசை தீர குளித்து பழைய குற்றால அருவியிலிருந்து திரும்பும் போது, தோழியர் புடை சூழ சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியைப் பார்த்து வாசகி உமா நன்றி கூறும் போது, 'சாரி மேடம் உங்களுக்கு தொந்தரவு கொடுத்து விட்டோம்...' என்றார். அதற்கு அவர் பதில் தரும் போது, 'அய்யோ அப்படியெல்லாம் எதுவும் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் பொறாமையா இருக்கு. நான் மட்டும் யூனிபார்ம்ல இல்லைனா உங்களோடு சேர்ந்து, 'நரியே நரியே' விளையாட்டு விளையாடியிருப்பேன்...' என்றார்.
சிலரது பெயர்கள்தான், அவர்களது பெயர்களுக்கும் கேரக்டர்களுக்கும் பொருத்தமாக இருக்கும் அப்படிப்பட்டவர்தான் ஜான்சி ராணி.
போடியில் இருந்து வந்து கலந்து கொண்ட ஜான்சி ராணி பெயருக்கு ஏற்றாற்போல ஜான்சி ராணிதான், எப்படி என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.
— அருவி கொட்டும்.
குற்றாலமும், மைக்கேலும்...
குற்றால அருவிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது மக்கள், 36 கி.மீ., தூரத்தில் உள்ள அகஸ்தியர் அருவிக்கு செல்வர்.
அகஸ்தியர் அருவிக்கு போகும் மலைப்பாதையின் அடிவாரத்தில் புகழ்பெற்ற பாபநாசம் சிவன்கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான குளக்கரை, காலம் காலமாக ஊர் மக்களின் திறந்தவெளி கழிப்பறையாக இருந்து வந்தது.
இதை தாண்டி சென்ற மக்கள் எல்லாம் ஒன்று மூக்கை பிடித்துக்கொண்டு சென்றனர் அல்லது தங்கள் பங்கிற்கு தங்கள் கழிவுகளை விட்டு சென்றனர்.
ஆனால், சித்த மருத்துவம் படித்துவிட்டு சித்த வைத்தியம் செய்து வரும் மைக்கேல் ஜெயராஜ் என்பவருக்கு மட்டும், குளக்கரையின் இந்த இழி நிலை வேதனையைக் கொடுத்தது.
அறநிலையத்துறைக்கு எழுதிப்போட்டு முறைப்படி அனுமதி வாங்கி குளக்கரையை, தற்போது மூலிகை பண்ணையாக மாற்றி அமைத்துள்ளார். அங்கேயே இருந்து சித்த வைத்தியமும் செய்து வருகிறார். இதற்கு இவர், கடந்த ஐந்து ஆண்டு உழைப்பையும், சொந்த பணத்தையும் செலவழித்துள்ளார்.
ஆர்வத்துடன் வருபவர்களுக்கு, மூலிகை தோட்டத்தை சுற்றிக் காண்பிப்பதுடன், மூலிகை செடிகளையும் வழங்கி வருகிறார்.
எல்.முருகராஜ்