சினிமா பத்திரிகையாளர், 'திரை ஞானி' தன், 'சில கலைஞர்கள் சில அனுபவங்கள்...' நூலில் எழுதுகிறார்: 'சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடில், எல்டாம்ஸ் ஓட்டல் (இன்று வேறு பெயர்) வாசலில் லுங்கி கட்டி, கட்டம் போட்ட சொக்காய் அணிந்து, கைகளைக் கட்டிக் கொண்டு ஒருவர், நிற்பார். அந்த ஓட்டலில், நானும், என் நண்பர் இருவரும் அடிக்கடி சந்திப்போம். அப்போது, வெளியில் கையைக் கட்டிக் கொண்டு நிற்பவரும் எங்கள் அறைக்கு வருவார். நாங்கள் அனைவரும் டீ, காபி சாப்பிடுவோம்.
கட்டம் போட்ட சொக்காய் அணிந்த அந்த நபர் தான் கவுண்டமணி. பயணங்கள் முடிவதில்லை படத்தில், அவர் வீட்டு ஓனராக வந்து, குடித்தனக்காரர்களை விரட்டுபவராக நடித்து பிரபல மானார். அந்த சமயங்களில் கூட, அவர் ஓட்டல் வாசலில் முன்போலவே நிற்பார். காரணம், அந்த ஓட்டலுக்கு எதிரே உள்ள ஒரு சந்தில், ஒண்டுக் குடித்தனத்தில் தான் குடியிருந்தார்.
பின், அவர் புகழ் பெற்று, கவுண்டமணி இல்லாத படம் ஓடாது என்ற நிலை ஏற்பட்ட அந்த சமயத்தில், ஒரு நாள் முழுவதும் கவுண்டமணியுடன் கூடவே இருந்து, அவரிடம் உள்ள இயற்கையான நகைச்சுவை உணர்வுகளை, 'இதயம் பேசுகிறது' பத்திரிகையில் எழுத விரும்பினேன்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டதற்கு, தி.நகரில் ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடப்பதாகவும், என்னை அங்கே வரும்படியும் கூறினார். நான் போயிருந்தேன்; சில மணி நேரம் கூட ஆகியிருக்காது, பெரிய, 'செவர்லெட்' காரில் வீட்டிற்கு புறப்பட்டார்.
என்னுடைய கட்டுரைக்கான செய்திகள் பூர்த்தி அடையாததால், அதை, அவரிடம் சொன்னேன்.
'காரில் ஏறுங்க; போகலாம்...' என்று சொல்வார் என எதிர்பார்த்தேன். ஆனால், அவர் காரில் ஏறிக் கொண்டு, 'நீங்க வாங்க; நான் போகிறேன்...' என்று சொல்லி, தான் மட்டும் காரில் ஏறிக் கொண்டார்.
கமல், ரஜினி, ஜெமினி கணேசன், விஜயகாந்த் இப்படி அனைத்து பிரபல நட்சத்திரங்களுடனும், காரில் பயணம் செய்திருக்கிறேன். அப்போது எனக்கு, எல்டாம்ஸ் ஓட்டலில், நான் பார்த்த மணிக்கும், சற்று முன் காரில் ஏறிச் சென்ற மணிக்கும், மடுவுக்கும் - மலைக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்தது.
'புறப்படுங்கள், போலாம்...' என்று புகைப்படக்காரரிடம் சொன்னேன்.
'கவுண்டமணி வீட்டிற்குத் தானே...' என்றார்.
'நோ... நீங்க ஆபீசுக்குப் போங்க; நான் வீட்டுக்குப் போகிறேன்...' என்றேன்.
அதற்குப் பின், நான் அவரைத் தேடிப் போகவில்லை.
முத்துராமலிங்க தேவர், 1930ல் பர்மாவுக்கு சென்றிருந்தார்; பர்மிய ஜனாதிபதி அளித்த வரவேற்பு ஏற்பாட்டில் பிரதான அம்சமாக இருந்தது, ஒரு விசித்திரமான வரவேற்பு முறை.
அது, பர்மியப் பெண்கள் வரிசையாக, இருபுறமும் தரையில் அமர்ந்து, தங்கள் கூந்தலைத் தரையில் படிந்திருக்கும்படி விரித்து வைப்பர். பிரதான விருந்தினர், அந்தக் கூந்தலை மிதித்தபடி நடந்து செல்வர். இத்தகைய வரவேற்புக்காக அழைத்து வரப்பட்ட தேவர், கூந்தல் தரையில் பட வரிசையாக அமர்ந்திருந்த பெண்களைப் பார்த்தார். அது பற்றிய விபரத்தைக் கேட்டறிந்தவர், அத்தகைய வரவேற்பு ஏற்பாட்டில் கலந்து கொள்ள மறுத்து விட்டதோடு, அந்த வரவேற்பு முறையை நீக்கும் படி ஜனாதிபதியை கேட்டுக் கொண்டார். அன்றோடு அந்த வரவேற்பு முறையை ஒழித்து விட்டனர்.
அரசரைப் பாடி, பரிசு பெற்றுச் செல்ல புலவர் ஒருவர், அரசவைக்கு வந்தார். பருத்த உடல் கொண்டிருந்த மன்னரைப் பார்த்ததும், 'ஆகா... நீங்கள் மகாராஜா... பசி வந்தால், ஆனையும் தின்பீர்கள், பூனையும் தின்பீர்கள்...' என்றார்.
'ஓய், புலவரே... நிறுத்தும்; இது தான் எம்மைப் புகழ்ந்து பாடும் அழகா...' என்று கோபித்தார், மன்னர்.
'அரசே... நான் தவறாகவே சொல்லவில்லை; அரசராகிய தாங்கள் ஆனையும், ஆ+நெய் அதாவது, பசு நெய்யையும், பூனையும் - பூ+நெய், அதாவது தேனையும் உண்பீர்கள் என்று கூறினேன்; இது தவறா?' என்றார்.
நடுத்தெரு நாராயணன்