களையெடுக்கப்பட்ட மனசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2014
00:00

''சுகுணா... டிபன் ரெடியா... நேரமாகுது, சீக்கிரம் கொண்டு வா.''
''இதோ... ரெடி,'' என்று கூறியபடியே தட்டில் முறுகலான தோசையை வைத்து, சட்னியை ஊற்றினாள்.
''இப்படி சாதா தோசையை ஊத்துவதுக்கு பதில், முட்டை தோசை செய்துருக்கலாம்ல?''
வாயில் தோசையை மென்று கொண்டே கேட்டாள் வாணி.
நிமிர்ந்து, வாணியைப் பார்த்த சுகுணாவின் கண்கள், கூசியது.
இள ரோஜா வண்ண டீ ஷர்ட்டும், கருப்பு நிற ஜீன்சும் அணிந்து, படு கவர்ச்சியாக இருந்தாள். அவள் பால் வெள்ளை நிற மேனியில், எந்த ஒரு நகையும் போடா விட்டாலும், அவ்வளவு அழகாக இருந்தாள்.
''என்னையே ஏன் அப்படி விழுங்குற மாதிரி பாக்குற?''
''உன்னைப் பாத்தா, ரொம்ப ஆச்சரியமா இருக்கு வாணி. பிறந்ததுல இருந்து ரொம்ப ஆச்சாரமா வளக்கப்பட்ட நீ, இப்படி மாறி போவன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல,''என்றாள் சுகுணா.
அவள் சொல்வது உண்மை தான்; வாணியும், சுகுணாவும் திருச்சி அருகில் இருக்கும், ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேரும், ஒரே வயதினர். பக்கத்து, பக்கத்து வீட்டில் வசித்தனர். இரண்டு பேர் தந்தைகளும், ஒரே பள்ளியில் வாத்தியார் வேலை பார்த்ததால், இரண்டு குடும்பமும் சிறு வயதிலிருந்தே நெருங்கி பழகியது. சுகுணா வீட்டினர் அசைவம் சாப்பிடுபவர்கள். ஆனால், வாணி வீட்டினரோ சுத்த சைவம்.
வாணி, சிறு வயதிலேயே மிக சூட்டிகையானவள். படிப்பில், எப்போதும் முதல் தான். அதிலும், பிளஸ் 2வில் மாநிலத்தில் முதல் மாணவியாக வந்தவள். சிலர், படிப்பில் கெட்டிக்காரத்தனமாக இருந்தால் மற்ற கலைகள் அறியாதிருப்பர். ஆனால், வாணி பாட்டு, நடனத்திலும் கெட்டிக்காரி. கற்பூர புத்தி. எதை சொல்லிக் கொடுத்தாலும், சட்டென்று பற்றிக் கொள்வாள்.
எல்லாரிடமும் பணிவுடனும், முகம் சுளிக்காமல் பேசினாலும், ஆண் பிள்ளைகளிடம் தேவையற்று பேச மாட்டாள். எப்போதும் ஓரடி தள்ளியே இருப்பாள்.
பிளஸ் 2வில் மாநிலத்தில் முதலாவதாக வந்ததால், எளிதாக ஸ்காலர்ஷிப்பில் இன்ஜினியரிங் சேர்ந்து, அங்கேயும் யூனிவர்சிட்டி ராங்க் எடுத்து, கேம்பஸ் இன்டர்வியூவில், சென்னையிலுள்ள, ஒரு பெரிய தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில், பொறியாளர் வேலை கிடைத்தது. காலை, 9:00 மணியிலிருந்து, 5:00 மணி வரை தான் வேலை நேரம். மதிய உணவு, அலுவலகத்திலேயே வழங்கப்பட்டுவிடும். காலை மற்றும் இரவு உணவை சுகுணாவும், வாணியும் வாரம் ஒருவர் என்று முறை வைத்து மாற்றி செய்தனர்.
சுகுணா, வாணி அளவிற்கு படிப்பவள் இல்லையென்றாலும், பி.காம்., முடித்து, வாணியின் அலுவலகத்திலேயே, அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை பார்க்கிறாள்.
இரண்டு பேரும் முதலில், பெண்கள் விடுதியில் தான் தங்கியிருந்தனர். அதன் பின் தான், தனியாக ஒரு சிறு, 'ப்ளாட்'டை வாடகைக்கு எடுத்து, தங்கியிருக்கின்றனர்.
வேலைக்கு சேர்ந்த புதிதில், 5:00 மணிக்கு வேலை முடிந்தால், உடனே, வீடு வந்து சேர்ந்து, 'டிவி' பார்ப்பது, புத்தகம் படிப்பது என்று இருந்த வாணி, இரண்டு மாதங்களில் மாறிப் போனாள்.
வேலை நேரம் முடிந்தவுடன், கூட வேலை பார்க்கும் தோழர், தோழிகளுடன் சேர்ந்து, கடற்கரை, ஷாப்பிங், சினிமா போன்ற இடங்களுக்கும், வார இறுதியில் டிஸ்கொதே, தீம் பார்க் ஆகியவற்றுக்கும் செல்லத் துவங்கினாள்.
புது இடங்கள், புது நண்பர்கள் அவளுக்கு ஒரு புது உலகை அறிமுகப்படுத்தியது. 'தாம் எவ்வாறு இந்த இனிய சுகங்களை அனுபவிக்காமல் விட்டு விட்டோம். வீட்டினர் எவ்வளவு கட்டுப் பெட்டியாக வளர்த்து விட்டனர்...' என்று ஆதங்கப்பட்டாள்.
மெது மெதுவாக அசைவம் சாப்பிடுவது, சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களும் அவளிடம் தொற்றிக் கொண்டன.
அது முதல், புடவை, சுடிதார் என்று வலம் வந்து கொண்டிருந்தவள், ஜீன்ஸ், மிடி போன்ற நவ நாகரிக உடைகளில், பவனி வரத் துவங்கினாள்.
அவள் அழகில் மயங்கி, பல ஆண்கள், அவளிடம் வழிய ஆரம்பித்தனர்.
எல்லாரிடமும் நன்றாக பேசினாலும், வரம்பு மீறி நடக்க மாட்டாள் வாணி.
டைனிங் டேபிளில், வாணியின் அருகே இருந்த மொபைல் போன், ரீங்காரமிட்டது. எடுத்துப் பார்த்த வாணி, முகம் மாறினாள். 'அப்பா' என்று டிஸ்ப்ளேயில் வந்தது.
''சுகுணா... அப்பா லைனில் வரார்; காலங்காத்தாலே ரம்பம் போட ஆரம்பிச்சுடுவார். நான், மீட்டிங்ல இருக்கேன்; போன் உன்கிட்ட இருக்குன்னு சொல்லி சமாளி. சாயந்திரம், நானே பேசறதா சொல்லு,'' என்றாள் வாணி.
வாணி சொன்ன மாதிரியே பேசிய சுகுணா, ''என்ன அங்கிள்... ஏதாவது முக்கியமான விஷயமா?''
''ஆமாம்மா... நம்ம வாணிக்கு, கல்யாணம் செய்துடலாம்ன்னு ஆன்ட்டி சொல்றா. தனியா, சென்னையில பொண்ணு இருக்கிறது, அவ மனசுக்கு சங்கடமா இருக்கு. நான் வேலையை விட்டுட்டு, அங்கே வர முடியாது. டிரான்ஸ்பர்க்கு கேட்டிருக்கேன்... ஆன்ட்டி என்ன தனியா விட்டுட்டு அங்க வரமாட்டா.
''இப்ப நல்ல வரன்களா வருது; அவளுக்கு எந்த மாதிரி விருப்பம்ன்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு, அப்புறமா எங்க வேலையை துவங்கலாம்ன்னு நினைக்கிறோம். வாணியும், முன்ன மாதிரி அடிக்கடி போன் செய்றது இல்லன்னு ஆன்ட்டி புலம்பறா... நாங்க பேசினாலும், சுரத்தா பேச மாட்டேன்றா. அவளுக்கு என்ன ஏக்கமோன்னு ஆன்ட்டி கவலைப்படுறாம்மா,''என்றார்.
''நீங்க கவலைப்படாதீங்க அங்கிள்... சாயந்திரம் வேலை முடிஞ்சு, வீட்டுக்கு போனதும் பேச சொல்றேன்,''என்றாள் சுகுணா.
''கொஞ்சம், நீயும் அவளை பார்த்துக்கோ சுகுணா... நீயும், என் பெண் மாதிரி தானே... அது தான் சொல்றேன்.''
''நீங்க சொல்ல வேண்டிய அவசியமே இல்லை அங்கிள்; நான் பாத்துக்கிறேன்.,''என்று கூறி, மொபைலை அணைத்த சுகுணாவை, பார்த்து,''என்ன... உன்கிட்ட அப்பா, ரம்பம் போட்டுட்டாரா?''
''வாணி... வர வர உன் பேச்சும், போக்கும் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை.''
''ஏய்... என்னடி திடீர்ன்னு உளர்ற?''
''நான் உளறல; உண்மையைத் தான் சொன்னேன். எவ்வளவு கட்டுக்கோப்பா வளக்கப்பட்ட நீ, ஒவ்வொரு கெட்ட பழக்கமா கத்துக்கிட்டு வர்ற. இவ்வளவு நாள் நீ நண்பர்கள், தோழிகள் கூட சேர்ந்து ஊர் சுத்துன. சரி, பிரண்ட்ஸ்க கூட ஒரு ஜாலிக்காக சுத்தறன்னு நினைச்சேன். ஆனா, இன்னிக்கு நீ அந்த பிரகாஷ் கூட, தனியா மகாபலிபுரம் போகப் போறன்னு ஆபிஸ்ல எல்லாரும் பேசிக்கிறாங்க; இதெல்லாம் சரியில்ல வாணி.''
''இத பாரு சுகுணா... நான் நெருப்பு; என்ன எந்த ஈயும் மொய்க்க முடியாது.''
''நீ நெருப்பா இருக்கலாம்... ஆனா, சூழ்நிலை உனக்கு பாதகமா இருந்தா என்ன செய்வ? சின்ன குழந்தைகளையே நாசம் செய்றானுவ சில ஆம்பளைங்க. நீ மகாபலிபுரம் போகும் போது, திடீர்ன்னு மழை பெய்து, 'வா... நாம கொஞ்ச நேரம் ரூம்ல வெயிட் பண்ணலாம்'ன்னு பிரகாஷ் சொல்லி, அங்கே பாலில் ஏதாவது கலந்து, உன்ன ஏதாவது செய்துட்டா, என்னடி செய்வ?''
''சுகுணா... நீ நிறைய தமிழ் படம் பாக்குறேன்னு தெரியறது. இந்த கொளுத்துற கோடையில மழையாம், ரூமாம்... அப்படியே இருந்தாலும் நான் கராத்தேல, 'பிளாக் பெல்ட்' வாங்கினவன்னு உனக்கே தெரியும். அப்புறம் என்ன பயம்?''
''இங்க பாரு... வாணி, அந்த பிரகாஷுக்கு ஆபிஸ்ல நல்ல பேரு இல்ல; அவன் ஒரு அமைச்சர் மகன். நாளைக்கு ஏதாவது சிக்கல்ன்னா கூட, அதிகார பலத்துல அவன் தப்பிச்சிடுவான்; நாம சாதாரணமானவங்க. ஏற்கனவே, அவன் நிறைய பொண்ணுங்கள ஏமாத்தியிருக்கானாம்.''
''அப்படின்னு மேகா சொன்னாளா... பிரகாஷ் ஏற்கனவே என்கிட்ட சொன்னான். நிறைய பொண்ணுங்க அவன் பின்னால சுத்தினாங்களாம்; அதுலயும் மேகா அவன எப்படியாவது கல்யாணம் செய்துக்கணும்ன்னு எவ்வளவோ கெஞ்சினாளாம். பிரகாஷுக்கு தான் யாரையும் பிடிக்கலயாம்; அதனாலதான் அவ, அவன் மேல வீண் பழி சுமத்துறா.''
''இருந்தாலும் தனியா ஒரு ஆண் கூட வெளியே சுத்தறது...'' முடிக்கவில்லை வாணி.
''எங்க வீட்டுல தான் என்ன ரொம்ப கட்டுப்பெட்டித்தனமா வளர்த்து, என்னை எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க விடல. இப்ப நீயும் இதே மாதிரி எனக்கு புத்தி சொல்றதா இருந்தா, நான் வேறு வீடு பாத்துட்டு போயிடுறேன். ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ... பிரகாஷ் என்னை விரும்பறான்னு எனக்கு தெரியும்; அதை என்கிட்ட வெளிப்படையா இன்னிக்கு சொல்லி, அவனை மணக்க, என் சம்மதத்தை கேட்க தான் கூப்பிடறான்னு நினைக்குறேன்... வரட்டுமா, பை...''என்று கூறி புறப்பட்டுச் சென்றாள்.
'டுப் டுப்' என்ற சத்தத்துடன், ஒரு அரேபிய குதிரையின் கம்பீரத்துடன் மகாபலிபுரத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தது அந்த புல்லட்.
வண்டியை பிரகாஷ் ஓட்டிக் கொண்டிருக்க, அவன் இடுப்பை வளைத்திருந்தது வாணியின் கைகள்.
''என்ன பிரகாஷ்... என்னவோ முக்கியமான விஷயம் பேசணும்ன்னு என்னை வரச் சொல்லிட்டு, இப்ப அமைதியா வண்டி ஓட்டிகிட்டு வர்ற?''
''முதல்ல மகாபலிபுரம் போயிடலாம்; அப்புறம் பேசலாம்.''
அவ்வளவு நேரம் கொளுத்திக் கொண்டிருந்த வெயில், மங்கி, திடீரென்று வானம் இருண்டது.
வண்டி, மகாபலிபுரத்தை அடையும் முன், தூறல் விழத் துவங்கியது. மழையில் சிறிது தூரம் சென்ற பிரகாஷ், ஒரு பெரிய ஓட்டல் கம் லாட்ஜின் முன், வண்டியை நிறுத்தினான். சுகுணாவை நினைத்துக் கொண்டாள் வாணி. அவள் சொன்ன மாதிரி கோடை மழை பெய்கிறதே!
''வா... கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்திட்டு, மழை நின்னவுடன் போகலாம்.''
''ரூமுக்கெல்லாம் நான் வரல,'' சட்டென்று சொன்னாள் வாணி.
''உன்ன யாரு ரூமுக்கு வரச் சொன்னது... ரெஸ்ட்டாரெண்ட்ல உட்கார்ந்து ஒரு காபி சாப்பிடலாம்.''
அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விட்டோமோ என்று நினைத்து வாணிக்கு வெட்கமாகி விட்டது.
சர்வரை கூப்பிட்டு சில உணவு வகைகளை, ஆர்டர் செய்தான் பிரகாஷ்.
''சொல்லு பிரகாஷ்... என்ன விஷயம்?''
''இதோ பாரு வாணி... எனக்கு, உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு; ஆனா, அதுக்காக உடனே கல்யாணம் என்ற பந்தத்துல சிக்க, நான் தயாரா இல்ல. அதனால, ஒரு ஐடியா சொல்றேன்... பேசாம நாம, 'லிவ்விங் டு கெதர்' முறையில வாழலாம். என்ன சொல்ற?''
''லிவ்விங் டு கெதரா?''
''ஆமா... அப்படின்னா, நாம ரெண்டு பேரும் ஒரே வீட்டுல இருக்கலாம், ஒண்ணா வாழலாம், செக்ஸ் வச்சிக்கலாம். ஆனா, என் சுதந்திரத்துல நீயோ, உன் சுதந்திரத்திலோ நானோ தலையிடக் கூடாது; எந்த கட்டுப்பாடும் இல்லாம வாழலாம். ஒரு கட்டத்துல ரெண்டு பேருக்கும் ஒத்து வந்தா கல்யாணம் செய்துக்கலாம்; நம்ம ரெண்டு பேருல யாராவது ஒருத்தருக்கு கொஞ்ச நாள்ல இந்த ஏற்பாடு பிடிக்கலன்னா விலகிக்கலாம். எனக்கு பணத்த பற்றி பிரச்னையில்ல; எல்லா செலவையும் நானே வேண்டுமானால் கூட ஏத்துக்குறேன். என்ன சொல்ற?''
சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவு, குமட்டியது வாணிக்கு.
'என்ன நினைத்துக் கொண்டான் இந்த மடையன்... என்னை பற்றி எவ்வளவு கேவலமாக நினைத்திருந்தால் இப்படி ஒரு கேள்விய கேட்பான்...' என்று நினைத்த வாணி, கோபத்துடன்,
''இதோ பாரு பிரகாஷ்... நான் உன்னிடம் கொஞ்சம் கூட அந்த மாதிரி எண்ணத்துடன் பழகல. இதுதான் விஷயம்ன்னு நீ முன்னாடியே சொல்லியிருந்தா, நான் அங்கேயே வேண்டாம்ன்னு பதில் சொல்லியிருப்பேன்; தேவையில்லாமல் இங்க வந்திருக்க வேண்டாம்.''
பிரகாஷின் முகம் கருத்தது. சட்டென்று முகத்தை இயல்பாக்கிக் கொண்டான்.
''சரி பிரகாஷ் கிளம்பலாமா?''
''இரு... ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துருக்கோம் இல்ல; சாப்பிட்டுட்டு போகலாம்.''
அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஐஸ்கிரீம் தட்டுடன் வந்த வெயிட்டர், கை தவறி, ஐஸ்கிரீம் கோப்பைகளை வாணி மேல் தவற விட்டான்.
ஐஸ்கிரீம் அவள் உடை எங்கும் திட்டு திட்டாக சிதறி அலங்கோலமாக்கியது.
பிரகாஷ் கோபத்துடன் எழுந்து, வெயிட்டரின் கன்னத்தில், 'பளா'ரென்று அறைந்தான்.
''சாரி சார்... சாரி மேடம்.... தெரியாம விழுந்துடுச்சு; வாங்க மேடம் கெஸ்ட் ரூம்ல போய் சுத்தப்படுத்திக்குங்க.''
அரையிருட்டில் கெஸ்ட் ரூமை நோக்கி நடந்த வாணி, ''சாரிப்பா... அவர் சடார்ன்னு கையை நீட்டிட்டார் மன்னிச்சுக்க,''என்றாள்.
ரூமை திறந்த வெயிட்டர் வழி விட, உள்ளே நுழைந்த வாணியின் முகத்தை பார்த்த வெயிட்டர் திடுக்கிட்டான்.
''வாணி அக்கா... நீங்களா?''
''நீ யாருப்பா?'' புரியாமல் பார்த்தாள் வாணி.
''உங்க அப்பாகிட்ட படிச்சவன்க்கா நான். நீங்க ஏன்க்கா இவன் கூட வந்தீங்க... இவன் ரொம்ப கெட்டவனாச்சே... நிறைய பெண்களை கல்யாணம் செய்துக்கறதா பொய் சொல்லி, தனியா வீடு பார்த்து வச்சு, அனுபவிச்சிட்டு கை விட்டுடுவான். சம்மதிக்காத பெண்களை, தனி ரூமுக்கு வர வச்சு, தண்ணி அடிக்கிற பொண்ணுங்களா இருந்தா, மயங்க வச்சுக் கெடுத்திடுவான். தண்ணி அடிக்காதவங்கள பலாத்காரம் செய்து, அதை மொபைல் போன் படம் எடுத்து மிரட்டி, அவன் விரும்புற வரை அவன் ஆளுமையில வச்சுப்பான். நீங்க உடனே போயிடுங்கக்கா...
''இந்த ஓட்டலே இவன் அப்பா, பினாமி பேர்ல தான் இருக்குது. இன்னிக்கு நான் கவனிச்சுக்கிற டேபிள்லே இவன் உட்கார்ந்ததால தான் எனக்கு ஐஸ்கிரீமை உங்க மேல கொட்ட சொல்லி, ஆர்டர் வந்தது. கூட வேலை பார்க்குற பசங்க கிட்ட காரணம் கேட்ட போது, அவங்க சொல்லி தான் எனக்கு இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சுது. நீங்க இல்லாம, வேறு எந்த பெண்ணாயிருந்தாலும், நான் உண்மையை சொல்லி காப்பாத்தியிருப்பேன்; இன்னையோடு இந்த வேலைக்கு முழுக்கு போடப் போறேன்,'' என்றான்.
அவள் கண்களுக்கு, அந்த சிறுவன், விஷ்ணுவின் வாமன அவதாரமாக தெரிந்தான்.
சட்டென்று தன் கம்பெனி விசிட்டிங் கார்டை, அவன் கையில் திணித்து, ''எனக்கு போன் பண்ணுப்பா... இல்லன்னா நேர்ல வா; உனக்கு நான் வேலைக்கு ஏற்பாடு செய்றேன். என் மானத்த காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி தம்பி,'' என்றாள்.
''அக்கா... நம்ம கிராமம் வெளியுலகுக்கு தெரியறதுக்கு காரணமே நீங்க பிளஸ்2வில் மாநிலத்துல முதல் மாணவியா வந்ததுனால தான் அக்கா. நம்ம கிராமத்துல முன் உதாரணத்துக்கு எல்லாரும் உங்களதான்க்கா சொல்லுவாங்க; உங்களுக்கு உதவுறது நம்ம ஊருக்கே உதவுற மாதிரிக்கா.''
'விறுவிறு'வென்று வெளிவாசலை நோக்கி நடக்கத் துவங்கிய வாணியின் எதிரே வந்து கொண்டிருந்தான் பிரகாஷ். ''என்ன வாணி... ரூம்ல டவல் இருக்குமே... எடுத்து சுற்றிக் கொண்டு உடையை சுத்தப்படுத்திக்கோ,''என்றான்.
''ஒண்ணும் வேண்டாம்; நான் வெளியில போய் பாத்துக்குறேன்.''
அவள் முகத்தை பார்த்த பிரகாஷுக்கு, அவளுக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று புரிந்தது.
''என்னடி... சும்மா வேஷம் போடுற; தினமும் தண்ணி அடிக்கிறது, சிகரெட் பிடிக்கிறது, கண்டவன் கூட ஊர் சுத்தறதுன்னு தானே இருக்க. இன்னிக்கு மட்டும் என்ன நடிப்பு?'' என சொல்லியவாறே அவள் கையை பிடிக்க, வாணி அடித்த கராத்தே வெட்டில், துடித்துப் போனான் பிரகாஷ்.
'தூ...' என்று காறி உமிழ்ந்து, திரும்பிப் பாராமல் ரோட்டில் இறங்கினாள் வாணி.
அதற்காகவே காத்திருந்த மொபைல் போன் அடிக்க, 'அப்பா' என்று ஒளிர்ந்தது.
மொபைல் போனை எடுக்க, ''கண்ணம்மா... எப்படிடா இருக்கே,'' என அப்பா கேட்க, ''அப்பா... உங்களையும், அம்மாவையும் பாக்கணும் போல இருக்குப்பா... இந்த வார கடைசியில, ஊருக்கு வர்றேன்ப்பா. அம்மா கையால சாப்பிடணும்; உங்க மடியில படுக்கணும்ன்னு ஏக்கமா இருக்குப்பா,'' என பேசியவாறே நடக்கத் துவங்கினாள் வாணி.

வி.ஜி.ஜெயஸ்ரீ

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X