கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 நவ
2014
00:00

கேள்வி: புதியதாக சாம்சங் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். இதில் உள்ள பேட்டரியின் மின் சக்தியை, புளுடூத் மற்றும் வை பி தொடர்புகள் அதிகம் உறிஞ்சும் என்றும், இவற்றை அணைத்து, இயக்காமல் வைப்பது நல்லது என்று கூறுகின்றனர். உண்மையா? வழி காட்டவும்.
-எஸ்.கோமளா, தாம்பரம்.
பதில்:
ஆண்ட்ராய்ட் போன்களில், வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். போன்ற ரேடியோ அலை பயன்பாட்டு வசதிகள் அனைத்தும், பேட்டரியின் சக்தியை அதிகம் எடுத்துக் கொள்ளும். எனவே, புளுடூத் ஹெட்செட் பயன்படுத்தவில்லை எனில், புளுடூத் வசதியை எப்போதும் அணைத்தே வைக்கலாம். ஜி.பி.எஸ். வசதியை ஒரு சிலரே பயன்படுத்துகின்றனர். இதனையும் அணைத்தே வைக்கலாம். அதே போல வை பி இணைப்பும். பயன்படுத்தாத நேரத்தில், இவற்றை அணைத்து வைப்பதே நல்லது. இதனால், பேட்டரியின் மின் சக்தி பயன்பாடு குறையும். மின்சக்தி வெகு நேரம் இருக்கும். பேட்டரி பயனின்றிப் போவது தள்ளிப்போடப்படும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில், என் பேக் அப் ட்ரைவ் இடம் காலியாகிவிட்டது என்று எனக்கு எச்சரிக்கை செய்தி கிடைக்கிறது. இதனால் என்னால், பேக் அப் செய்திட முடியவில்லை. இதற்கு என்ன காரணம்?
ஆ. சித்தார்த்தன், பொள்ளாச்சி.
பதில்:
நல்ல கேள்வி. இந்த கேள்வியின் காரணத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சற்று விரிவான பதிலைத் தருகிறேன். சில கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள், கம்ப்யூட்டரில் Recovery drive என்ற ஒன்றைத் தற்போது தந்து வருகின்றனர். இது ஹார்ட் ட்ரைவிலிருந்து தனியே வைக்கப்பட்டுள்ள ட்ரைவ் இல்லை. ஹார்ட் ட்ரைவில் ஒரு பார்ட்டிஷன். ஆனால் நமக்குக் காட்டப்படாமல், மறைத்து வைக்கப்படும். பல வாசகர்கள் தங்கள் கடிதங்களில், “புதியதாக ஒரு கம்ப்யூட்டர் வாங்கியுள்ளேன். அதில் C, E, F என்று ட்ரைவ்கள் உள்ளன. ஆனால், D இல்லை” எனத் தங்கள் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளனர். இந்த ரெகவரி ட்ரைவ் பெரும்பாலும், D ட்ரைவ் ஆகவே உள்ளது. நாம், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி, கம்ப்யூட்டரை restore செய்திட முயற்சிக்கையில், இந்த ட்ரைவ் நமக்குக் காட்டப்படும். இதன் மூலம், கம்ப்யூட்டரை பேக்டரியில் இருந்து வந்த போது எப்படி இருந்ததோ, அந்நிலைக்குக் கொண்டு செல்லலாம். முன்பு நாம் கம்ப்யூட்டர் வாங்கும் போது, அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அடங்கிய சி.டி. ஒன்று நமக்குத் தரப்படும். அதே போல், அதற்குப் பதிலாக, இந்த டி ட்ரைவ் நமக்கு வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இந்த பேக்டரி நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்வதனை, நாம் வேறு வழியே இல்லாதபோதுதான் பயன்படுத்த வேண்டும். இதனைப் பயன்படுத்தினால், கம்ப்யூட்டரில் நாம் மேற்கொண்ட அனைத்து வேலைகளும் இல்லாமல் போய்விடும்.
எனவே, இந்த ட்ரைவில் நாம் எதனையும் சேவ் செய்து வைக்க முடியாது. அப்படி எதனையாவது சேவ் செய்தால், கம்ப்யூட்டரை பழைய நிலைக்குக் கொண்டு செல்லும் Restore வேலையைச் செவ்வனே மேற்கொள்ள முடியாது. இந்த ட்ரைவ் எடுத்துக் கொள்ளும் இடம் மிகவும் குறைவானதே ஆகும். சிஸ்டம் ரெகவர் ஆவதற்கு எவ்வளவு இடம் தேவையோ, அவ்வளவு தான் இதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும். எனவே, இந்த ட்ரைவில் பேக் அப் பைல்களைக் கொண்டு செல்வதனைத் தவிர்க்கவும்.

கேள்வி: என்னுடைய ஜிமெயில் அக்கவுண்ட்டில் கிட்டத்தட்ட 99% மின் அஞ்சல்களைத் திடீரெனக் காணவில்லை. நான் எதனையும் அழிக்கவில்லை, நீக்கவில்லை. என்னுடைய போல்டர்களயும் காணவில்லை. இவற்றை நான் எப்படி மீண்டும் பெற முடியும். அன்பு கூர்ந்து உடனே எனக்கு வழிகளைக் காட்டவும்.
என். அமுதா ஸ்ரீநிவாசன், சென்னை.
பதில்:
வழக்கமாக நாம் பயன்படுத்தும் ஜிமெயில் அக்கவுண்ட்டில் நுழைந்து, நம் மெயில்கள் எல்லாம் காணவில்லை என்றால், அது பெரிய அதிர்ச்சியைத்தான் தரும். கவலைப்படாதீர்கள். கீழ்க்கண்ட இடங்களில் தேடவும். அவை எப்படியும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
1. ட்ராஷ் (Trash): ட்ராஷ் என்னும் குப்பைத் தொட்டியைக் கிளிக் செய்து பார்க்கவும். இங்கு தவறுதலாக மொத்த மெயில்களையும் நீங்கள் அனுப்பி இருக்கலாம். ஒரு மெயிலை அழிக்க முற்படுகையில், அனைத்தையும் தேர்ந்தெடுத்த நிலையில் அனுப்பி இருக்கலாம். எனவே, இந்த போல்டரில் இருந்தால், அவற்றை மீண்டும் இன்பாக்ஸ் போல்டருக்கு அனுப்பலாம். ட்ரேஷ் போல்டருக்கு மெயில்கள் சென்றால், அவை ஒரு மாதம் மட்டுமே வைக்கப்படும். பின் நிரந்தரமாக அழிக்கப்படும். எனவே உடனடியாகச் செயல்படவும்.
2. ஆல் மெயில் (All Mail): இதுதான் அனைத்து மெயில்களும் காத்து வைக்கப்படும் இடமாகும். உங்கள் மெயில் ட்ரேஷ் பெட்டியில் இல்லை என்றால், இங்கு இருக்க வாய்ப்புண்டு. டூல்பாரில் உள்ள archive பட்டனை, உங்களை அறியாமல் அழுத்தி, அனைத்து மெயில்களையும் நீங்கள் அனுப்பி இருக்கலாம். இருந்தாலும், All Mail போல்டர் காட்டப்படா நிலையிலும் இருக்கும். இதனைப் பெற, ட்ரேஷ் போல்டர் இடதுபுறம் மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லவும். அங்கு More என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். இங்கு கிளிக் செய்தால், All Mail போல்டர் உட்பட அனைத்து போல்டர்களும் கிடைக்கும்.
3. ஸ்பேம் (Spam): நீங்களோ அல்லது உங்கள் அக்கவுண்ட்டைப் பயன்படுத்திய ஒருவரால், அனைத்து மெயில்களும் ஸ்பாம் எனக் குறியிடப்பட்டு, இந்த போல்டருக்குச் சென்றிருக்கலாம். இதனையும் ஆல் மெயில் போல்டரைத் தேடிக் காண்பது போல பெற்று, உங்கள் மெயில்கள் இருக்கின்றனவா எனப் பார்க்கவும்.
4. இமெயில் கிளையண்ட் மாற்றம் (POP/IMAP Email Clients): அண்மையில், அவுட்லுக், தண்டர்பேர்ட் போன்ற தர்ட் பார்ட்டி இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் எதனையேனும் இன்ஸ்டால் செய்தீர்களா? அல்லது இன்ஸ்டால் செய்தவற்றில், ஜிமெயில்களை எடுத்துத் தரும் வகையில் அமைத்தீர்களா? அப்படியானால், ஜிமெயில் அஞ்சல்களை அவை எடுத்த பின்னர், அனைத்தும் ஜிமெயில் சர்வரிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம். இந்த அமைப்பினை மாற்றிவிடவும்.
5. மேலே சொன்ன அனைத்து இடங்களிலும் உங்கள் ஜிமெயில் அஞ்சல்கள் இல்லை என்றால், உங்கள் அக்கவுண்ட்டினை வேறு ஒருவர் கையாண்டு கொண்டிருக்கும் சூழ்நிலை ஏற்படலாம். அப்படியானால், உடனடியாக https://www.google.com/settings/security என்ற தளம் சென்று, உங்கள் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டை மாற்றவும்.

கேள்வி: ஜிமெயிலில், லேபிள்கள் அமைத்து பிரிவுகளை அமைத்த பின்னர், நமக்கு வரும் குறிப்பிட்ட மெயில்களை, நேரடியாக மெயில் சார்ந்த லேபிள்களின் பிரிவுகளுக்கு அமைக்க முடியுமா? அதற்கான வழிகள் என்ன? ஜிமெயில் செட்டிங்ஸ் பார்த்துவிட்டேன். அதில் எதுவும் இல்லை. இந்த லேபிள், பில்டர் வழிமுறை எங்கு தரப்பட்டுள்ளது? பதில் தரவும். நன்றி.
-என். கலைச் செல்வி, தூத்துக்குடி.
பதில்:
நல்ல கேள்வி. விரிவான பதில் தருகிறேன். நமக்குப் பலவகையான மெயில்கள் நாம் விரும்பாமலே கூட வருகின்றன. ஜிமெயில் அவற்றைத் தற்போது மூன்று டேப்களில் பிரித்துத் தருகிறது. இருப்பினும், நமக்கான மெயில்களிலும், நமக்கு வழக்கமாக அனுப்பும் நபர்களின் மின் அஞ்சல் முகவரியின் அடிப்படையில் பில்டர்கள் உருவாக்கி, பின் அவர்களுக்கான போல்டர்களை உருவாக்கி, அவற்றிற்கு லேபிள்கள் கொடுத்து, மெயில்களைக் காணலாம். இதற்கான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.
ஜிமெயிலில் நமக்கு வரும் எண்ணற்ற மெயில்களை வடிகட்டிப் பயன்படுத்த, இதற்கான வடிகட்டிகள் (filters) உதவுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி, மெயில்கள் தாமாகவே, குறிப்பிட்ட லேபில்களில் இணையும்படி செய்திடலாம்; ஆர்க்கிவ் எனப்படும் இடங்களில் பாதுகாக்கலாம்; அழிக்கலாம்; ஸ்டார் அமைத்து வேறுபடுத்தலாம் அல்லது மற்றவர்களுக்கு பார்வேர்ட் செய்திடலாம்.
வடிகட்டிகளை உருவாக்குதல்: இந்த filter எனப்படும் வடிகட்டியை உருவாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
1. ஜிமெயில் தளத்தில் உள்ள சர்ச் பாக்ஸ் ஓரமாக உள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். உங்களுடைய தேடல் வகை என்ன என்று பெற்றுக் கொள்ள ஒரு விண்டோ காட்டப்படும்.
2. உங்களுடைய தேடல் வகையினை இதில் இடவும். உங்கள் தேடல் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்திட சர்ச் பட்டனை அழுத்திக் கிடைக்கும் அஞ்சல் தகவல்களைப் பார்த்து உறுதி செய்திடவும்.
3. சரியாக இருந்தது என்றால், இந்த சர்ச் விண்டோவில் கீழாக உள்ள Create filter with this search என்பதில் கிளிக் செய்திடவும்.
4. இனி இந்த வடிகட்டி மூலம் என்ன செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என்று இங்கு தேர்ந்தெடுக்கவும். பலர், இவற்றை மெயில்கள் தாமாக, குறிப்பிட்ட லேபில் கீழ் அமையும்படி அமைக்கின்றனர். இதனால், இன்பாக்ஸ் அடைபடாமல், மெயில்கள் தாமாக, தனி லேபில் பெட்டியை அடைகின்றன. நமக்கு நேரம் கிடைக்கையில் இவற்றைத் திறந்து பார்க்கலாம். இதற்கு Skip the Inbox (Archive it) and Apply the label என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்படியே பலவேறு வேலைகளுக்கான வடிகட்டிகளை உருவாக்கலாம்.
5. அடுத்து Create filter என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வடிகட்டி தயார்.
நீங்கள் வடிகட்டிகளைத் தயார் செய்தவுடன், அதில் செட் செய்ததற்கேற்ற மெயில்கள் அனைத்தும் வடிகட்டப்பட்டு, அந்த அந்த பிரிவுகளில் ஒதுங்கும். ஏற்கனவே கிடைக்கப்பட்ட மெயில்களும் அந்த வகையில் இருந்தால், அவையும் ஒதுக்கப்படும். ஆனால், செயல்பாடுகள் பின்னால் வரும் மெயில்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும். எடுத்துக் காட்டாக, குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும் மெயில்களை இன்னொரு மின்னஞ்சல் முகவரிக்கு பார்வேர்ட் செய்யும்படி வடிகட்டி ஒன்று அமைக்கப்பட்டால், அமைக்கப்பட்டதற்குப் பின்னர் வரும் மெயில்கள் மட்டுமே பார்வேர்ட் செய்யப்படும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் பார்க்கையில், (வேர்ட் 2007) அதன் ரிப்பன் மெனு பார் மிக அகலமாக அதிக இடத்தைப் பிடித்துக் கொண்டு காட்சி அளிக்கிறது. தேவையற்றது எல்லாம் காட்டப்படுகிறது. எனக்கு மேலே உள்ள மெனு பாரில் உள்ள தலைப்பு மட்டும் இருந்தால் போதும். எவை எங்கே இருக்கிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும். இதன்படி, மேலே உள்ள பார் மட்டும் தெரியும்படி அமைக்க முடியுமா?
என்.ஸ்ரீதரன், தாம்பரம்.
பதில்:
மிக எளிதாக மாற்றலாம். மெனுவில் தரப்பட்டுள்ள, ரிப்பன் கொண்டுள்ள அனைத்தும் தெரியும் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளது, வேர்ட் பயன்படுத்துவதில், உங்கள் அனுபவத்தைக் காட்டுகிறது. மேலாகக் காட்டப்படும் ரிப்பன் மற்றும் மெனு எதிலாவது கர்சரைக் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடவும். உடன் சிறிய கீழ் விரி பட்டியல் ஒன்று காட்டப்படும். இதில் மூன்று ஆப்ஷன்கள் காட்டப்படும். கீழாக, மூன்றாவதாக Minimize the Ribbon என்று ஓர் ஆப்ஷன் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், நீங்கள் கேட்டுள்ளபடி, மேலாக இருக்கும் மெனு பார் மட்டும் இருக்கும். பின்னர், எப்போது வேண்டுமானாலும், இதில் கிளிக் செய்து, உங்களுக்குத் தேவையான அனைத்தும் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X