கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2014
00:00

கேள்வி: விண்டோஸ் லைவ் இமெயில் கிளையண்ட் புரோகிராமில், நம் மின் அஞ்சல்களைப் பெற்ற நபர், அதனைப் படித்துவிட்டார் என்பதற்கான அத்தாட்சியைப் (receipt) பெறும் வகையில் செட்டிங்ஸ் செய்திட முடியுமா?
என்.பிரகாஷ், சென்னை.

பதில்: மிக எளிதாக மேற்கொள்ளலாம், பிரகாஷ். விண்டோஸ் லைவ் இமெயில் (Windows Live e-mail) இதற்கான வசதியைக் கொண்டுள்ளது. இங்கு receipt என்பது, நாம் யாருக்கு அனுப்பினோமோ, அவர் அதனைப் படித்துவிட்டார் என்ற மெயில் செய்திதான். இதனை குறிப்பிட்ட சர்வர்களே, தாமாக நமக்கு அனுப்பி வைக்கும். ஆனால், அது போல “ரசீது” அனுப்பக் கூடாது என்று செட்டிங்ஸ் அமைத்துத் தடுக்க, உங்கள் நண்பருக்கும் உரிமையினை விண்டோஸ் லைவ் மெயில் தருகிறது. நீங்கள் ரசீது பெற என்ன செட்டிங்ஸ் அமைக்க வேண்டும் என்பதனைப் பார்க்கலாம்.
1. முதலில் Live Mail inboxஐத் திறக்கவும். மேலாக இடது பக்கம் உள்ள கீழ்விரி அம்புக் குறியை அழுத்தவும்.
2. கிடைக்கும் மெனுவில், Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. தொடர்ந்து Mail என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Mail Options விண்டோ திறக்கப்படும். இங்கு Receipts டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர் Request a read receipt for all sent messages என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இறுதியில் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். இதே இடத்தில், மற்றவர்களிடமிருந்து நீங்கள் பெறும் அஞ்சல்களை நீங்கள் படிப்பது குறித்த ரசீதுகளை அனுப்புவது குறித்தும் செட்டிங்ஸ் அமைக்கலாம். இது போன்ற அமைப்புகளை, அனைத்து அஞ்சல்களுக்குமாக அமைப்பதே சரி. ஒவ்வொருவருக்காக தனித்தனியே செட்டிங்ஸ் அமைக்க வேண்டியதில்லை.

கேள்வி: ஆங்கிலத்தில் Monopoly என்ற சொல் ஒருவரின் தன்னாளுமையைக் குறிக்கும். ஆனால், கம்ப்யூட்டர் ஓ.எஸ். குறித்துப் படிக்கையில் Duopoly என்ற சொல் பயன்பாட்டினைப் படித்தேன். இது எதனைக் குறிக்கிறது?
எஸ். கார்த்திக், தாம்பரம்.

பதில்: Duopoly என்பது இரண்டு விஷயங்களின் ஆளுமையைக் குறிக்கும். குறிப்பிட்ட ஒரு விற்பனைச் சந்தையில் இரண்டு நிறுவனங்கள் மட்டும் பெரிய அளவில் அதனை இயக்கி, தங்கள் ஆளுமைக்குள் சந்தையை வைத்துக் கொண்டால், அது Duopoly ஆகும். இந்த வகையில், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் இயக்க முறைமைகள் ஆட்சி செலுத்தி வருகின்றன. மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். என இரண்டும் தங்கள் ஆளுமையை நிலை நாட்டி வருகின்றன.

கேள்வி: ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தும்போது, அது தரும் கீ போர்ட் வழி இணைய முகவரி அமைக்கையில், .com அமைக்க தனி கீ தரப்பட்டுள்ளது. ஆனால், மற்ற .net, .org, .gov, .edu, and .tv. அமைத்திட கீகள் இல்லை. இது தனியாகத் தரப்பட்டுள்ளதா? அவற்றைப் பெறும் வழி என்ன? அவசியம் பதில் கூறவும்.
ஆ. கனகவள்ளி, திண்டுக்கல்.

பதில்: பலருக்குப் பயன்படும் கேள்விகளுக்கு முன்னுரிமை கொடுத்து பதில் அளிப்பது நம் வழக்கம். அந்த வகையில் இந்த கேள்விக்கு உங்களுக்கு நன்றி. இதோ “அவசியமான” பதில். நீங்கள் குறிப்பிடும் .com கீயைச் சற்று நேரம் அழுத்திப் பிடித்தால், .net, .org, .gov, .edu, and .tv. என்பவை வரிசையாகக் கிடைக்கும். அதில் உங்களுக்குத் தேவையானது கிடைத்தவுடன், அழுத்திக் கொண்டிருப்பதை விட்டுவிட்டால், அது முகவரியில் அமைக்கப்படும்.

கேள்வி: இப்போது விண்டோஸ் 7 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரை வாங்கலாமா? அல்லது விண்டோஸ் 8 / 8.1 சிஸ்டம் கொண்டவற்றை வாங்கவா? எதனைப் பரிந்துரை செய்தாலும், தயவு செய்து சரியான காரணங்கள் கூறவும்.
பேரா. சிதம்பர நாதன், மதுரை.

பதில்: விண்டோஸ் 7 இருப்பதனை வாங்கவும். இன்று உலக அளவில், பெர்சனல் கம்ப்யூட்டர்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது இந்த சிஸ்டம் தான். விண்டோஸ் 8 மற்றும் 8.1 சிஸ்டங்கள், இதுவரை விண்டோஸ் பயன்பாட்டில் இருந்த சில அடிப்படை இயக்க முறைகளில் மாற்றம் கொண்டு வந்ததனால், மக்கள் இவற்றை ஏற்க மறுத்தனர். இதனாலேயே, மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இவை விற்பனை செய்யப்படுகின்றன. சில நிறுவனங்கள் இவற்றைத் தருவதே இல்லை.
அடுத்ததாக, வரும் சில மாதங்களில், நமக்கு விண்டோஸ் 10 கிடைக்க இருக்கிறது. இதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமா என்பது தெரியவில்லை. ஆனால், பலரின் எதிர்பார்ப்பின்படி, விண்டோஸ் 8 மற்றும் 8.1 வைத்திருப்பவர்கள் கட்டணம் பெறப்பட மாட்டாது என்று கூறுகின்றனர். மைக்ரோசாப்ட் இன்னும் இது பற்றி எதுவும் கூறவில்லை.
விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு “mainstream support,” வரும் ஜனவரியுடன் நிறுத்தப்பட்டாலும், பாதுகாப்பு குறித்த அப்டேட் பைல்கள், 2020 ஆம் ஆண்டு வரை கிடைக்கும். அதன் பின்னரே இது எக்ஸ்பி போல கைவிடப்படும்.
எனவே, விண்டோஸ் 10 வரும் வரை, விண்டோஸ் 7 உள்ள கம்ப்யூட்டரை வாங்கலாம். சற்று சிரமம் எடுத்து கம்ப்யூட்டரை இயக்க முடியும், அதற்கான விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே, விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 உள்ள கம்ப்யூட்டர்களை வாங்கலாம்.

கேள்வி: எக்ஸெல் புரோகிராமில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து பணியாற்றுகையில், அவற்றிற்கிடையே மாறி மாறிப் பணியாற்ற வேண்டியுள்ளது. இதற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று மாற்றாமல், கீ போர்ட் வழியாக மாற்றிக் கொள்ள முடியுமா? அதற்கான ஷார்ட் கட் கீ எவை?
எஸ்.கே. ஷண்முகம், திருவண்ணாமலை.

பதில்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை பல வேளைகளில் ஏற்படும். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான சுருக்கு வழி ஒன்று எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் தரப்பட்டுள்ளது. ஒர்க் ஷீட் மாற விருப்பப்படுகையில், Ctrl+F6 கீகளை அழுத்தவும். இந்த கீகளை அழுத்துகையில், ஒர்க் புக்குகளின் டேப்கள் வரிசையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதனைப் பார்க்கலாம். ஐந்து ஒர்க்புக்குகள் திறந்திருந்தால், ஐந்தாவது ஒர்க் ஷீட் செல்ல, ஐந்து முறை Ctrl+F6 கீகளை அழுத்த வேண்டும். அவ்வளவுதான்.

கேள்வி: நான், வேர்ட் மூலம் (வேர்ட் 2007) தமிழில் பல ஆவணங்களைத் தயார் செய்து வருகிறேன். ஆங்கிலத்தில் வாக்கியத்தின் முதல் எழுத்து கேபிடல் எழுத்தாக மாற்றப்பட வேண்டும் என்ற விதியின் கீழ், தமிழ் வாக்கியங்களை நான் டைப் செய்கையில், முதல் எழுத்தினை தேவையில்லாத எழுத்தாக மாற்றுகிறது. இவ்வாறு ஏற்படும் ஒவ்வொரு முறையும், அதனை அடுத்து தேவையான எழுத்தை டைப் செய்து, பின் முதலில் கிடைத்த எழுத்தை அழிக்க வேண்டியுள்ளது. இந்த செயல்பாட்டினை நிறுத்த என்ன செய்திட வேண்டும்?
தி. இளஞ்செழியன், புதுச்சேரி.

பதில்: முதன் முதலில் தமிழை வேர்ட் மற்றும் மற்ற அப்ளிகேஷன்களில் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் சிக்கல் மற்றும் பிரச்னைகளில் இதுவும் ஒன்று. இந்த முதல் எழுத்து மாற்றத்தினை நிறுத்திவிடலாம். இது வேர்ட் தொகுப்பில் மாறா நிலையில் தரப்ப்டும் டூல் ஆகும். AutoCorrect என்ற டூல் இதனை மேற்கொள்கிறது. இதன் இயக்கத்தினை நிறுத்திவிட்டால், இந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம். அதற்கான செயல்பாடுகளைத் தந்துவிட்டு, பின் நிறுத்துவதால் ஏற்படும் சிக்கல்களைக் கூறுகிறேன்.
முதலில் AutoCorrect டூல் இருக்கும் இடம் செல்லவும். இதற்கு ரிப்பனில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Word Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில், இடது பக்கம், Proofing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுத்தவுடன், Change how word corrects and formats your text என்ற விண்டோ கிடைக்கும். இதில் முதல் டூலாக Auto Correct Options என்ற டேப் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், Auto Correct என்று காட்டி, தொடர்ந்து, நீங்கள் தேர்ந்தெடுத்து அமைத்த ஆங்கிலம் (AutoCorrect:English United States) தலைப்பிட்ட விண்டோ கிடைக்கும். அதில் பல டேப்கள் காணப்படும். அதிலும் ஆட்டோ கரெக்ட் என்ற டேப்பில் கிளிக் செய்திட கிடைக்கும் பல்வேறு ஆப்ஷன்களில், ”Capitalize First letter of Sentences” என்று இருப்பதன் முன் உள்ள பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறலாம். ஆனால், ஆங்கில வாக்கியங்களை அமைக்கும்போது, முதல் எழுத்தினைச் சிறிய எழுத்தாக அமைத்தால், அது திருத்தப்பட மாட்டாது. இந்த விண்டோவில் கிடைக்கும் வசதிகள் பின்வருமாறு: Correct Two Initial Capitals, Capitalize First Letter Of Sentences, Capitalize First Letter Of Table Cells, Capitalize Names Of Days, Correct Accidental Use Of Caps Lock Key.

கேள்வி: நான் புதியதாக வாங்கிய கம்ப்யூட்டரில், டாஸ்க் பார் வழக்கத்திற்கு மாறாகப் பெரியதாக உள்ளது. இதனை எப்படி சிறியதாக மாற்றலாம்? இதில் விண்டோஸ் 8 சிஸ்டம் உள்ளது. இதனை வாங்கியதில் இருந்து அப்படியே தான் உள்ளது.
-எஸ். மஹராஜன், செங்கல்பட்டு.

பதில்: நீங்கள் விரும்பியபடி சிறியதாக இதனை அமைக்கலாம். டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் Lock taskbar என்பதில் டிக் அடையாளம் இல்லை என்பதனை உறுதிப்படுத்தவும். டிக் அடையாளம் இருந்தால், அதில் மவுஸ் கர்சர் கொண்டு கிளிக் செய்திட, அது மறைந்துவிடும். இனி, டாஸ்க்பாரின் மேலாக உள்ள கோட்டின் அருகே மவுஸ் கர்சரைக் கொண்டு செல்லவும். கர்சர் இரு அம்புக் குறி கொண்ட அடையாளமாக மாறும் வரை கோட்டின் மீதாகச் சுழற்றிச் செல்லவும். மாறிய பின்னர், அதனைக் கீழாக அல்லது மேலாக இழுத்து, டாஸ்க்பாரின் அகலத்தைத் தேவையான அளவில் அமைத்துக் கொள்ளலாம். தேவையான அளவில் வைத்தவுடன், மீண்டும் டாஸ்க்பாரின் மீது ரைட் கிளிக் செய்து, Lock taskbar என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இந்த டிக் அடையாளம், டாஸ்க் பாரின் அளவை அப்படியே மாற்றாமல் வைத்திருக்க உதவுகிறது.

கேள்வி: ஏதேனும் ஈஸ்டர் எக் ஒன்று சொல்லுங்களேன். வெகுநாட்களாக இது போன்ற டிப்ஸ் தரப்படவில்லை.
எம். சுப்ரமணி, பழநி.

பதில்: பொதுவாக ஈஸ்டர் எக் என்பவை, கம்ப்யூட்டரில் இயங்கும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் அல்லது சிஸ்டம் அப்ளிகேஷனில், அதனை வடிவமைத்தவர்கள், வேடிக்கையாக சற்று பொழுது போக்க அமைத்தவையாகும். உங்களுக்கும் அது போன்ற மனநிலை வந்துவிட்டது என நினைக்கிறேன். சரி, அனைவருக்குமாக ஒன்று சொல்கிறேன்.
கூகுள் தேடல் கட்டத்தில், “zerg rush” என டைப் செய்து பாருங்கள். தேடல் முடிவுகள் காட்டப்படும். ஆனால், அவற்றையும் மீறி, சிகப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்களில், கூகுள் என்ற சொல்லின் 'o' எழுத்து அலைகள் வரிசையாகத் தோற்றமளிக்கும். இந்த எழுத்துக்கள் தேடல் முடிவுகள் காட்டும் வரிகளைப் படிப்படியாக அழிக்கும். இறுதியின் அனைத்தையும் அழித்த பின்னர், இவை மேலே நீந்தி வந்து அனைத்து 'o' எழுத்துக்களும் சேர்ந்து “GG” (“good game”), என்னும் அடையாளத்தினை ஏற்படுத்தும். StarCraft என்னும் விளையாட்டில் இது போல ஏற்படுவது உண்டு. அதனைப் போல இதுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டின் முடிவில், Clear என்பதில் அழுத்தினால், உங்களுக்கான தேடல் முடிவுகள் மீண்டும் கிடைக்கும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X