கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2014
00:00

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரில், சிங்கிள் கிளிக் கொண்டு பைல்களைத் திறக்க விரும்பினால், அதற்கான செட்டிங்ஸ் எப்படி அமைக்க வேண்டும்?
கா. சுப்ரமணி, தேனி.
பதில்:
மிக எளிது. ஸ்டார்ட் மெனு செல்லவும். இதில் கிளிக் செய்தால் தேடல் கட்டம் கிடைக்கும். இந்த தேடல் கட்டத்தில் Folder Options என டைப் செய்து என்டர் தட்டவும். கிடைக்கும் பல முடிவுகளில் Folder Options முதல் விடையாக இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இனி திறக்கப்படும் விண்டோவில், Select single-click to open an item என்ற வரி கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, ஒரு பைலைத் திறக்க, ஒருமுறை மவுஸால் கிளிக் செய்தால் போதும்.

கேள்வி: என் விண்டோஸ் 8 லேப்டாப் கம்ப்யூட்டரை, மிகக் கஷ்டப்பட்டு, ஒரு மணி நேரம் செலவழித்து, விண்டோஸ் 8.1க்கு மாற்றினேன். சில சிரமங்கள் இருந்தாலும், நன்றாகவே இயங்குகிறது. இதன் மூலம் விண்டோஸ் ஸ்டோர் சென்றேன். முற்றிலும் மாறுதலுக்குள்ளானதாக உள்ளது. இது மைக்ரோசாப்ட் தந்த அதே விண்டோஸ் 8க்கான ஸ்டோர் தானா? அல்லது முற்றிலும் புதியதாக, இன்னொன்று அமைக்கப்பட்டுள்ளதா?
ஆர். கிருஷ்ணசாமி, சென்னை.
பதில்:
இப்போது, விண்டோஸ் ஸ்டோர் முற்றிலும் புதிய தோற்றம் கொண்டதாக உள்ளது. பக்க வாட்டில், அப்ளிகேஷன் வகைகளைப் பார்ப்பதைக் காட்டிலும், அவற்றைத் தேர்ந்தெடுக்க எளிதான வழி கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டோரில் ஓர் அப்ளிகேஷனைத் தேர்ந்தெடுத்தவுடன், அது குறித்த காட்சி நமக்குத் தெளிவைத் தருகிறது. விண்டோஸ் 8ல் இது டேப்கள் வழியாகச் சற்று குழப்பத்தினைத் தந்தது. மேலும், ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கும், அதன் செயல்திறன் மதிப்பீடு (ratings) மிகப் பெரிய அளவில் காட்டப்படுகிறது. 1 முதல் 5 வரையிலான நட்சத்திர மதிப்பீடு அட்டவணை, குறிப்பிட்ட அப்ளிகேஷன் குறித்து அறிய சந்தர்ப்பம் அளிக்கிறது. அது மட்டுமின்றி, டாப் டென் லிஸ்ட் எனக் கட்டணம் செலுத்திப் பெறும் அப்ளிகேஷன்கள் மற்றும் இலவச அப்ளிகேஷன்கள் பட்டியல் தரப்படுகிறது.

கேள்வி: விண்டோஸ் 8 கொண்ட சிஸ்டம் சென்ற ஆண்டில் வாங்கினேன். தற்போது அதனை விண்டோஸ் 8.1க்கு உயர்த்த உள்ளேன். அது இலவசம் என்றும் சொல்கிறார்கள். விண் 8.1 தரும் மாற்றங்களில் சிறந்த மாற்றம் எது? அதன் சிறப்பியல்புகள் என்ன?
என். மார்கரட் முல்லை, திருச்சி.
பதில்
: விண்டோஸ் 8.1ல் புதியதாகவும், மாற்றத்துடனும் தரப்படும் அனைத்துமே சிறந்தவைதான். இருந்தாலும் எனக்குப் பிடித்த ஒன்றைப் பற்றி இங்கு குறிப்பிடுகிறேன். இது குறித்து ஏற்கனவே கம்ப்யூட்டர் மலரிலும் குறிப்பிட்டுள்ளேன். அது போட்டோ எடிட்டிங் அப்ளிகேஷன் தான். விண்டோஸ் 8ல் தரப்பட்ட போட்டோ அப்ளிகேஷன் ஏமாற்றத்தினையே தந்தது. விண்டோஸ் 8.1ல், இது மிகப் பயனுள்ளதாகவும், அதிக செயல் திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. போட்டோக்களை எடிட் செய்வதற்கு பல வகை டூல்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் டேப்ளட் பிசியில் போட்டோ எடுக்கும் பழக்கம் உள்ளவராயின், விண்டோஸ் 8.1 பல புதிய வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளதைப் பார்க்கலாம். கேமரா ரோல் பட்டன், எக்ஸ்போஷர் டூல், டைமர், வீடியோ செட் செய்தல் ஆகிய டூல்கள் அனைத்தும், சார்ம் பாரில் உள்ள செட்டிங்ஸ் செக்ஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது. (மவுஸின் வீல் போட்டோ அப்ளிகேஷனில் பல புதிய பயன்பாடுகளைத் தருகிறது. இந்த அப்ளிகேஷனில் மட்டுமின்றி, பல்வேறு அப்ளிகேஷன்களிலும், மவுஸின் வீல் பயன்பாடு குறிப்பிடத்தக்கது.)

கேள்வி: டிஜிட்டல் தொழில் நுட்பத்தில், அடிக்கடி மெகா ஹெர்ட்ஸ் மற்றும் கிகா ஹெர்ட்ஸ் என்று குறிப்பிடப்படுகிறது. இதில் ஹெர்ட்ஸ் என்பது எதனைக் குறிக்கிறது? இதன் அலகு எதனை அளக்கிறது?
ஆர். விக்னேஸ்வரன், கோவை.
பதில்:
ஹெர்ட்ஸ் என்பதனைச் சுருக்கமாக Hz என்று எழுதுகிறோம். இது Hertz என்பதன் சுருக்கம். ஜெர்மன் பிசிக்ஸ் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர் ஹெர்ட்ஸ். ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை, மெட்ரிக் முறையில் அளந்திட இந்த பெயர் வைக்கப்பட்டது. ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு (ரேடியோ அலைவரிசையில்). கம்ப்யூட்டரைப் பொறுத்த வரை இது மானிட்டருடன் அதிகம் சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது. சி.ஆர்.டி. மானிட்டர் (பழைய டிவி பெட்டி போல இருப்பது) அதன் ஸ்கிரீன் இமேஜை தொடர்ந்து காட்டாமல் விட்டு விட்டுத் தான் காட்டுகிறது. ஆனால் அதனை நாம் நம் கண்களால் பார்த்தால் கண் கெட்டுப் போகும். எனவே தான் விநாடியில் பலமுறை இது விட்டு விட்டுக் காட்டப்படுகையில் இடைவெளி தெரிவதில்லை. எடுத்துக் காட்டாக 85 Hz என்பதில் விநாடி நேரத்தில் 85 முறை இமேஜ் பின் வாங்கப்பட்டு மீண்டும் காட்டப்படுகிறது. அத்தனை முறை காட்டப்படுவதனாலேயே இமேஜ் அப்படியே நிலையாக நிற்பது போல நாம் உணர்கிறோம்.
மெஹா ஹெர்ட்ஸ் Mehahertz (MHz) ஒரு மெஹா ஹெர்ட்ஸ் என்பது பத்து லட்சம் சுற்றுகளாகும். அதாவது ஒரு விநாடியில் பத்து லட்சம் சுற்றுகள் ஏற்படுகின்றன. இது எப்படி ஏற்படுகிறது என்பதனை படமாகவோ அல்லது வேறு வழியாகவோ விளக்குவது கஷ்டம். கம்ப்யூட்டர் பிராசசரைப் பொறுத்தவரை மெஹா ஹெர்ட்ஸ் என்பது மிகவும் சாதாரணம். ஒரு கம்ப்யூட்டர் பிராசசர், உள்ளாக அமைந்த ஒரு கடிகாரத் துடிப்பினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப்படுகிறது. எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பதுதான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் என அழைக்கப்படுகிறது. இந்த வேகம் மெஹா ஹெர்ட்ஸ் என்பதில் அளக்கப் படுகிறது.
கிஹா ஹெர்ட்ஸ் Gigahertz (GHz): கம்ப்யூட்டர் உலகில் இது கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ். முதலில் வந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் 4.77 மெஹா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசசர்களைக் கொண்டிருந்தன. அதாவது விநாடிக்கு ஏறத்தாழ 48 லட்சம் கிளாக் துடிப்புகள். தற்போதைய ப்ராசசர்களின் வேகம் கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் காட்டப்படுகிறது.

கேள்வி: என்னிடம் விண்டோஸ் 7 அல்டிமேட் உள்ளது. இது ஒரு 64 பிட் கம்ப்யூட்டர். இதில் எப்8 அழுத்தி சேப் மோட் செல்ல முயற்சித்தால், கிடைக்க மறுக்கிறது.
டி.பெஞ்சமின், காரைக்கால்.
பதில்
: கவலைப்பட வேண்டாம், பெஞ்சமின். இதற்கு மாற்று வழி ஒன்று விண்டோஸ் 7 வைத்துள்ளது. ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து, கட்டத்தில் “msconfig” என டைப் செய்து எண்டர் தட்டவும். இது, System Configuration டூல் காட்டும். இதில் Boot என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
Safe Boot என்பதற்கு அடுத்து உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். “Minimal” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்வு செய்தவுடன் ஓகே கிளிக் செய்திடவும். இதனை அடுத்து காட்டப்படும் பாக்ஸில் ஓர் எச்சரிக்கை செய்தி இருக்கும். உங்களுடைய கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடக் கேட்டுக் கொள்ளும். அதாவது, உங்களுடைய கம்ப்யூட்டரை நீங்கள் சேப் மோடில் இயக்கலாம். இதில் Restart என்பதில் கிளிக் செய்திடவும். அல்லது நீங்கள் அப்போது கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் பணியினை முடிக்க வேண்டும் என்றால், ரீ ஸ்டார்ட் செய்திடாமல், அந்த வேலையை முடிக்கவும். அதன் பின் ரீஸ்டார்ட் செய்திடவும். இப்போது கம்ப்யூட்டர் சேப் மோடில் இயங்கத் தொடங்கும்.
நீங்கள் சேப் மோடில் இருக்கும்போது, நீங்கள் எதை எல்லாம், கம்ப்யூட்டரில் சரி செய்திட வேண்டும் எனத் திட்டமிட்டீர்களோ, அவை அனைத்தையும் முடித்துவிடவும். பின் மீண்டும் எம்.எஸ். கான்பிக் கொடுத்து System Configuration utility விண்டோ பெறவும். இங்கு சேப் மோட் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இல்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டர் தொடர்ந்து சேப் மோடில் தான் இயங்கத் தொடங்கும்.

கேள்வி: புளுடூத் என்பது குறித்து சுருக்கமாக விளக்கம் தர முடியுமா? எதற்காக இதனைக் கையாள வேண்டும்? பயன்கள் என்ன? இது இருக்கும் சாதனங்கள் என்ன என்ன?
என். சுகன்யா ஸ்ரீ, இராஜபாளையம்.
பதில்:
எத்தனை வரிசைக் கேள்விகள். போன், டேப்ளட் பி.சி., லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் சில ஸ்மார்ட் டெலிவிஷன் ஆகிய எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு இடையே ஏற்படுத்தப்படும் வயர் இணைப்பில்லா, குறுகிய தூர இணைப்பிற்கு புளுடூத் தொழில் நுட்பம் என்று பெயர். இவற்றுடன் ஹெட்போன், மவுஸ், கீ போர்ட், ஸ்பீக்கர், மைக் ஆகியவை தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு செயல்பட முடியும். உங்களிடம் புளுடூத் ஹெட்செட் இருந்தால், அதனை உங்கள் போனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, போனை பாக்கெட்டில் வைத்தவாறே, போனில் அழைப்பவர்களுடன் பேச முடியும். லேப்டாப்பினைச் சற்று தொலைவில் வைத்துவிட்டு, அதில் ஒரு பாடலை இயக்கி, புளுடூத் ஸ்பீக்கரில் கேட்க முடியும். லேப்டாப் கம்ப்யூட்டரை வயர்மூலம் எல்.சி.டி. டிவியுடன் இணைத்துவிட்டு, லேப்டாப் கம்ப்யூட்டரை மூடிவைத்துவிட்டு, புளுடூத் கீ போர்ட் மூலம், டிவியைப் பார்த்தவாறே, கம்ப்யூட்டரை இயக்கலாம். இதுவே ஸ்மார்ட் டிவி என்றால், வை பி இணைப்பு மூலம் டிவியில் இணைய உலா வரலாம். இதன் மூலம் டேட்டாவை மாற்றிக் கொள்ளலாம். பைல்களை அனுப்பலாம். வயர்கள் இணைப்பு இல்லாமல், குறுகிய இடத்தில் இணைப்பு பெறும் வசதியை இந்த புளுடூத் தொழில் நுட்பம் வழங்குகிறது.

கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பியை விட்டுவிட்டு விண்டோஸ் 7 கொண்ட கம்ப்யூட்டர் தற்போது வைத்துள்ளேன். ஆனால், என் நண்பர்களிடமும், குறிப்பாக அலுவலகம் நடத்தும் நண்பர்கள் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி வைத்துள்ளார்கள். எப்படி இவர்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லாமல் இருக்கிறார்கள். மாறிக் கொள்ளுங்கள் என்று நீங்கள் தொடர்ந்து எழுதினீர்களே?
-ஆர். சரவணக் குமார், திண்டுக்கல்.
பதில்
: உங்கள் ஆதங்கம் புரிகிறது. பணம் செலவழித்து எக்ஸ்பியை விட்டுவிட்டு, விண்டோஸ் 7க்கு மாறிவிட்டேன். ஆனால், அவசரப்பட்டுவிட்டோனோ என்று எண்ணுகிறீர்கள். ஏனென்றால், உங்கள் நண்பர்கள் எக்ஸ்பி சிஸ்டத்துடன் இன்னும் இயங்கி வருகின்றனர் என்பதுதான். நீங்கள் மாறிக் கொண்டது சரியான நடவடிக்கை. அவர்களுக்குப் பாதிப்பு இல்லையே என்று கவனிக்கிறீர்கள் இல்லையா? மீண்டும் சொல்கிறேன். உங்கள் எக்ஸ்பி கம்ப்யூட்டர் இணைய இணைப்பு இல்லாமல் இருக்கும் வரை பிரச்னையே இல்லை. பழைய சாப்ட்வேர் அப்ளிகேஷன்களுடன் மட்டுமே இயங்கினால் போதும் என்றால் சிக்கல் எதுவும் வராது. அதே போல, பைல்களை யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து மாற்றும்போது, அவற்றுடன் வைரஸ், மால்வேர் எதுவும் வராமல் இருக்க வேண்டாம். அவ்வாறு வந்துவிட்டால், அவற்றுடன் போராடுவது கஷ்டம். நீங்கள் இந்தப் பிரச்னை எதுவும் இல்லாமல், பயமின்றி, இணையத்தில் உலா வரலாம். முன்னேறி வரும் நீங்கள், பின்னால் உள்ளவர்களை ஏன் பார்த்து நானும் அங்கேயே இருந்திருக்கலாமே என்று எண்ணுகிறீர்கள்.

கேள்வி: என் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் போல்டர் ஒவ்வொரு ட்ரைவிலும் ஒரு மாதிரியாகக் காட்டப்படுகிறது. ஏன் அனைத்திலும் ஒரே மாதிரியாகக் காட்டப்பட வில்லை. இதற்கான செட்டிங்ஸ் வழி என்ன? நான் ஒவ்வொன்றிலும் வியூ அழுத்தி, மாற்றி அமைக்க வேண்டியதுள்ளது. எப்படி ஒரே மாதிரியாக அனைத்து போல்டர்களிலும் அமைக்கலாம்?
-எச். வில்லியம் சாமுவேல், திருப்பூர்.
பதில்
: எக்ஸ்புளோரர் செட்டிங்ஸ் அமைக்கையில், ஒவ்வொரு போல்டரும் ஒருவிதமாகக் காட்டப்படும். வியூ மெனுவில் பல ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் உங்களைப் போல பலரும், ஒரு குறிப்பிட்ட வியூவினையே விரும்புவார்கள். இதனையே அனைத்து போல்டர்களும் காட்ட வேண்டும் எனவும் விருப்பப்படுவார்கள்.
இதில் தவறேதும் இல்லை.
அப்போதுதான் ஒரே மாதிரியான பணி நிலை கிடைக்கும். இதற்கு போல்டர் ஒன்றைத் திறந்து Organize என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் பின் Folder and search options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு வியூ டேப்பிற்குச் சென்று மேலாக உள்ள Apply to folders என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இனி இதுதான் உங்களின் மாறா நிலையில் உள்ள (Default) போல்டராக அமைந்துவிடும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X