கேள்வி: பல பக்கங்கள் அடங்கிய டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில், சில பாராக்களை, அடுத்த டேப் இருக்குமிடத்தில் இண்டெண்ட் செய்திட வேண்டியதுள்ளது. இதனை எப்படி குறைவான முயற்சிகள் மூலம் அமைக்கலாம்? விண்டோஸ் 7 சிஸ்டத்தில், எம்.எஸ். ஆபீஸ் 2007ல் இதனை எப்படி அமைப்பது என விளக்கவும். நன்றி.
இரா. இளமாறன், புதுச்சேரி.
பதில்: நீங்கள் விரும்புவது, குறிப்பிட்ட பாராவிற்கு, மார்ஜின் மொத்தத்தில் இருப்பது போல் அல்லாமல், மாற்றி அமைக்க வேண்டும், இல்லையா? இதோ, அதற்கான வழிகளைப் பார்க்கலாம். மார்ஜின் மாற்றி உள்ளாக அமைக்க வேண்டிய பாராவில் கர்சரை அமைக்கவும். பின்னர், ரிப்பனில், ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் தரப்பட்டுள்ள பிரிவுகளில் Paragraph என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள ஐகான்கள் மீது மெதுவாக மவுஸின் கர்சரை நகர்த்தவும். ஒன்றின் மீது நகர்த்துகையில் Increase Indent என்று டூல் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், கர்சர் நிற்கும் பாரா அடுத்த டேப் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு நகர்ந்து கொள்ளும். நீங்கள் விரும்பிய இடத்தைக் காட்டிலும் அடுத்த டேப் மார்ஜின் சென்றுவிட்டால், இடது புறம் Decrease Indent என்று ஒரு ஐகான் இருக்கும். அதில் கிளிக் செய்திடவும். பாரா, இடது பக்கம் நகர்ந்து சென்று அமர்ந்து கொள்ளும்.
கேள்வி: வேர்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில் காட்டப்படும் பக்கத்தில், நாம் டைப் செய்த மேட்டர் சரியாக எவ்வளவு இடம் பிடிக்கும் என்று எப்படிக் கண்டறிவது. பிரிண்ட் பிரிவியூ மூலம் இதனைச் சரியாகக் கணிக்க முடியவில்லை. வேறு வழிகள் உள்ளனவா?
எஸ். மரகதம், திருச்சி.
பதில்: தங்களுடைய கேள்வியின் பொருள் புரியவில்லை. இருப்பினும், நீங்கள் விரும்புவது, ஒரு பக்கத்தில் உள்ள டைப் செய்யப்பட்ட மேட்டர், அச்சிடுகையில், அதே அளவுள்ள தாளில் எவ்வளவு இடத்தை எடுத்துக் கொள்ளும் எனத் தெரிந்து கொள்வதுதான் என்ற எண்ணத்தில் விளக்கம் தருகிறேன்.
உங்கள் டாகுமெண்ட்டை முதலில் Print Layoutல் அமைக்கவும். இதில் டெக்ஸ்ட்டைச் சுற்றி புள்ளிகளால் ஆன கோடுகள் இருக்கும். இது அச்சில் வராது. ஆனால், உங்களுக்கு நீங்கள் அமைக்கும் டெக்ஸ்ட் எந்த அளவிற்குள் இருக்கும் என்பதனைக் காட்டும். இந்தக் கோடுகளுடன் காட்டப்படும் காட்சியை உங்கள் விருப்பப்படி அமைக்கும் வழிகள் கீழே தரப்படுகின்றன.
1. Word Options டயலாக் பாக்ஸை முதலில் பெறவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, கீழாக உள்ள Word Options பட்டனை கிளிக் செய்திட வேண்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கிடைக்கும் ஆப்ஷன்ஸ் பட்டியலில் மவுஸை உருட்டிக் கொண்டு செல்லவும். Show Document Content என்ற பிரிவில் நிறுத்தவும்.
4. Show Text Boundaries என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால், டெக்ஸ்ட் எல்லைக் கோடு காட்டப்படும். எடுத்துவிட்டால் காட்டப்பட மாட்டாது.
தேவையானதை ஏற்படுத்திய பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
கேள்வி: விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களின் பட்டியலைப் பார்க்கையில், பைல்களின் முதன்மைப் பெயர்கள் மட்டுமே காட்டப்படுகின்றன. பைல்களின் துணைப் பெயர்கள் காட்டப்பட வேண்டிய தேவை ஏற்பட்டால் என்ன செய்வது? ஒரே பெயரில், doc மற்றும் pdf பைல்கள் இருந்தால், வேறுபடுத்திப் பார்க்க இது வசதியாக இருக்கும். இதனை எப்படி அமைக்கலாம்? நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன்.
என். பாத்திமா ராணி, காரைக்கால்.
பதில்: மிக எளிதாக அமைக்கலாம். உங்களின் தேவைக்கு நீங்கள் எடுத்துக் காட்டியுள்ளது மிக அருமையான எடுத்துக் காட்டு. ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, தேடல் கட்டத்தில், Folder Options என டைப் செய்திடவும். இப்போது Folder Options என்ற விண்டோ கிடைக்கும். இதில் வியூ டேப் தேர்ந்தெடுக்கவும். அதில் Advanced Settings என்பதன் கீழ் “ Hide extension for known file types" என்ற வரிக்கு எதிரே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருக்கும். அதில் கிளிக் செய்து அதனை நீக்கவும். இனி, விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களைப் பார்க்கையில், அவற்றின் பெயர்கள் முதன்மைப் பெயர்களுடன் எக்ஸ்டன்ஷன் பெயரும் சேர்த்துக் காட்டப்படும்.
கேள்வி: திடீரென என் பிரவுசரில் (கூகுள் குரோம்), எந்த இணைய தளம் செல்ல வேண்டும் என்றாலும், முதலில் ”This web page is not available” என்று வருகிறது. மீண்டும் எண்டர் தட்டினால், உடன் அந்த பக்கம் லோட் ஆகிறது. பெரும்பாலான இணைய தளப் பக்கங்களை அணுகும்போது இவ்வாறு தான் நடக்கிறது. இதற்குக் காரணம் என்ன? மால்வேர் அல்லது அட்வேர் போன்றவற்றால் இருக்குமா?இதனை எப்படி நிவர்த்திக்கலாம்?
கா. ரகுபதி, சென்னை.
பதில்: இது மால்வேர் அல்லது விளம்பர புரோகிராம்களினால் வருவதில்லை. நீங்கள் அண்மையில் இன்ஸ்டால் செய்த சாப்ட்வேர் தொகுப்போடு, உங்கள் பிரவுசரில் சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களும் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். அவை செய்கின்ற திருவிளையாடல் தான் இது. உடனடியாக, குரோம் பிரவுசரைத் திறந்து, செட்டிங்ஸ் சென்று, அனைத்து எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களையும் நீக்கவும். இதனால் எந்த பாதிப்பும் இருக்காது. அதே போல ஹிஸ்டரி பதிவுகள், குக்கீஸ் பைல்கள் ஆகிய அனைத்தையும் நீக்கவும். இனி பிரவுசரை மூடி, மீண்டும் இயக்கவும். மேற்படி பிழைச் செய்தி வராது.
கேள்வி: என் கம்ப்யூட்டரில் இணைய இணைப்பிற்கு குரோம் பிரவுசர் பயன்படுத்துகிறேன். இணைய உலா முடிந்த பிறகு, என்னுடைய தனிப்பட்ட தகவல்களை, பிரவுசரே அழித்துவிடும் வகையில் செட் செய்திட முடியுமா? அதற்கான செட்டிங்ஸ் வழிகள் என்ன?
என். பாண்டிய ராஜன், மதுரை.
பதில்: பொதுவாக, இணைய பிரவுசர்கள், நம் இணைய உலா சார்ந்த தகவல்களைப் பதிவு செய்து கொள்கின்றன. இவை ஹிஸ்டரி, குக்கி பைல்கள், தேடல்கள், டவுண்லோட் செய்தவை மற்றும் நம் இணைய உலா சார்ந்த அனைத்து தகவல்களும் பதியப்படுகின்றன. அந்த தகவல்களை, பிரவுசர் பல வழிகளில் பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால், இவற்றை நாமாகத்தான் அழித்து வருகிறோம். நாம் கேட்டுக் கொண்டால் தான், பிரவுசர் இவற்றை அழிக்கிறது. இருப்பினும் அனைத்து பிரவுசர்களும், அவையே அழித்துக் கொள்ளும் வகையில் செட் செய்வதற்கான வழிகளைக் கொண்டுள்ளன.
குரோம் பிரவுசரில் இதற்கான செட்டிங்ஸ் வழிகளைக் கீழே தருகிறேன்.
குரோம் பிரவுசரில் செட்டிங்ஸ் (Settings) திரையைப் பெறவும். இதன் கீழாக Show advanced settings என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்தால், மேலும் பல பிரிவுகள் கீழாக விரிந்து கிடைக்கும். இதில் Privacy என்ற தலைப்பில், Content செட்டிங்ஸ் பட்டனில் கிளிக் செய்திடவும்.
குக்கீஸ் (Cookies) என்பதன் கீழாக “Keep local data only until I quit my browser” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதனை அமைத்த பின்னர் சேவ் செய்து வெளியேறவும். இனி உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் குரோம் பிரவுசரை மூடுகையில் நீக்கப்படும்.
இதற்கு மாற்றாக இன்னொரு வழியும் உள்ளது. குரோம் வெப் ஸ்டோரில், Click&Clean extension என்ற ஒரு எக்ஸ்டன்ஷன் புரோகிராம் கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், Click&Clean என்ற ஒரு பட்டன் பிரவுசரின் டூல் பாரில் இருக்கும். இதனைக் கிளிக் செய்து, Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Extra என்பதன் கீழாக, “Delete private data when Chrome closes” என்பதில் enable செய்து இயக்கவும். இதில், எந்த வகை டேட்டா நீக்கப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள் வரையறை செய்திடலாம். இதன் பின்னர், உங்கள் இணைய உலா குறித்த அனைத்து தகவல்களும் நீக்கப்படும்.
ஆனால், ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் சென்று பார்த்த இணைய தளங்கள் அனைத்தின் முகவரிகளும், நினைவில் கொள்ளாமல் நீக்கப்படுவதால், இணைய தள முகவரிகள், இனி, தானாக முழுமையடையாது. நீங்கள் தான் முழுமையாக டைப் செய்திட வேண்டியதிருக்கும்.
கேள்வி: என் பெர்சனல் போல்டரில் பழைய வேர்ட் டாகுமெண்ட்களும், தற்போதைய .docx என்ற எக்ஸ்டன்ஷனுடன் கூடிய டாகுமெண்ட்களும் உள்ளன. வேர்ட் புரோகிராமில், பைல்களைத் தேடித் திறக்க முற்படுகையில், எக்ஸ்டன்ஷன்கள் காட்டப்படுவதில்லை என்பதால், அனைத்தையும் தேட வேண்டியதுள்ளது. இதற்கான சுருக்க வழிகள் ஏதேனும் உள்ளதா?
என். சம்பந்த மூர்த்தி, கோவை.
பதில்: நீங்கள் போல்டரில் இருந்து தேடுகையில், பைல்கள் கலந்து இருப்பது சிரமமாகத் தெரிகிறது. மேலும், இதில் வேர்ட் டாகுமெண்ட்கள் மட்டுமின்றி, எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் பைல்களும் கலந்திருக்கலாம். பைலைத் தேடிப் பெறும் சிரமத்தைக் குறைக்க, வேர்ட் புரோகிராமில், மெனுவில் Open அழுத்தித் திறக்கலாம். அல்லது Ctrl+O அழுத்தவும். இப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸ், அனைத்து வேர்ட் புரோகிராம்களிலும் நீங்கள் பார்த்து பழகியதே. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக, கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். நீங்கள் வழக்கமாக இல்லாத, அல்லது குறிபிட்ட எக்ஸ்டன்ஷன் கொண்ட வேர்ட் பைலைத் திறக்க வேண்டும் என எண்ணினால், File Name கட்டத்தில், *. docx எனக் கொடுக்கவும். இப்போது வேர்ட் docx என்ற எக்ஸ்டன்ஷன் கொண்ட பைல்களை மட்டும் காட்டும். பின்னர், இதிலிருந்து நீங்கள் விரும்பும் பைலைக் கிளிக் செய்து பெறலாம்.
கேள்வி: விண்டோஸ் 7 இயங்கும் கம்ப்யூட்டரில், பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி இணையம் செல்கிறேன். இன்று, திடீரென நான் இன்ஸ்டால் செய்திடாத சர்ச் டேப் ஒன்று, பிரவுசரில் காட்டப்படுகிறது. அது BING சர்ச் டேப் என்று காட்டுகிறது. இதைப் பல வழிகளில் அன் இன்ஸ்டால் செய்திட முயற்சித்தேன். முடியவில்லை. இதனை எப்படி நீக்குவது?
என். கோகிலா, திருப்பூர்.
பதில்: தற்போது வரும் பயர்பாக்ஸ் பிரவுசரில் இந்த சர்ச் டேப் இணைத்தே தரப்படுகிறது. எனவே, பிங் சர்ச் இஞ்சின் தான் உங்களின் முதல் தேர்வாகக் காட்டப்படும். நீங்கள் வேறு சர்ச் இஞ்சின் பயன்படுத்த எண்ணினால், இதன் அருகே உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால், கூகுள் மற்றும் யாஹூ சர்ச் இஞ்சின்கள் பெறுவதற்கான ஆப்ஷன் கிடைக்கும். நீங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். மாறா நிலையில், பயர்பாக்ஸ் Google, Yahoo, Bing, Amazon.com, DuckDuckGo, eBay, Titter and Wikipedia search engines ஆகிய சர்ச் இன் ஜின்களுடன் வருகிறது. அண்மையில், கூகுள் நிறுவனத்துடன் பல ஆண்டுகளாகக் கொண்டிருந்த ஒப்பந்தத்தினை, புதுப்பிக்காமல், வேறு சர்ச் இஞ்சினை ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வந்தன. இதே மெனுவில், Manage search engines கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் சர்ச் இஞ்சினை உங்கள் மாறா நிலை தேடல் சாதனமாக அமைத்துக் கொள்ளலாம். அல்லது புதிய சர்ச் இஞ்சின்களையும் சேர்க்கலாம்.