மல்லன் மாறப்பன் (16)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2014
00:00

சென்றவாரம்: விஜயநகரம் நோக்கி புறப்பட்ட மாறப்பன் வழியில் விஜயநகரப் படைத்தளபதியிடம் ஏற்பட்ட பிரச்னையால் வேறு திசையில் சென்றான். அச்சுராயரின் மகளை காண குதிரையை திருப்பினான். வெங்கண்ணா, லஷ்மியை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினான். இனி-

""நான் அதைக் கூறமாட்டேன். போலிகளால் தயாரிக்கப்பட்டு நான் ஏமாற்றப் படலாம். எனக்கும் என் அப்பாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் அது. "ஒருவேளை நான் போர்க்களத்தில் இறக்க நேருமானால், அதை யாரிடமாவது கொடுத்தனுப்புவேன். அதைக் கொண்டு வருபவர், என் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார். அவர் கூறுவது என் அறிவுரையாகவே இருக்கும். அதன்படி நீ நடந்து கொள்' என்று கூறிப்போனார் என் தந்தை. ஆகவே, அதற்குப் பின்னரே என் திருமணம்,'' என்று திட்டவட்டமாகக் கூறினாள் இளவரசி லஷ்மிதேவி.
""ஒருவேளை அவர் கூறியபடி செயல்பட முடியாத நிலையில் அவருக்கு மரணம் ஏற்பட்டிருக்குமானால்...?'' என்றான் வெங்கண்ணா.
""விதி அப்படி விளையாடுமானால், அது வேறு விஷயம்...''
சங்கடமான வேளையைத் தவிர்க்க விரும்பிய லஷ்மி, ""சிறிது காலம் பொறுத் திருப்பேன். நான் முடிவெடுக்க அவகாசம் தேவை. அதுவரை என்னைத் தொந்தரவு செய்யாதே வெங்கண்ணா!'' என்று அவனிட மிருந்து விலகிப் போனாள்.
லஷ்மி அவன் வற்புறுத்தலுக்கு இணங்காது போகவே, அவன் அரசவைக் குருவின் உதவியை நாடினான்.
வயோதிகரும், அறிவாளியுமான அவருடைய பேச்சுக்கு அரச குடும்பத்தின ரிடையே மதிப்பும், மரியாதையும் உண்டு. வெங்கண்ணா பொல்லாதவன் என்பதை அவர் அறிவார். ஆனால், அதிகார பலத்தின் முன்னால் பாவம் அறிவாளியான அவர் எவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்க முடியும்? அச்சுதர் இறந்து விட்டார் என்று அவர் வாய் மொழியால் கூறினால் லஷ்மி நம்புவாள். அதன் பிறகு, தான் அவளைச் சுலபமாக மணக்க முடியும் என்று திட்டமிட்டான் வெங்கண்ணா.
""ஓர் அபலைப் பெண்ணைப் பொய் சொல்லி ஏமாற்றமாட்டேன் வெங்கண்ணா,'' என்றார் குரு.
""மாமா அச்சுதரோ போர்க்களத்திலிருந்து திரும்பவில்லை. என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை. இந்த நிலையில் நாட்டின் நலனை நாம் பார்க்க வேண்டாமா? லஷ்மியின் மனம் மாறுவதற்கு, தன் தந்தை வீர மரணம் அடைந்தார் என்பதை அவள் நம்ப வேண்டும். நீங்கள் கூறினால்தான் அவள் அதை ஏற்பாள். நீங்கள் பொய் சொல்ல வேண்டாம். இத்தனை நாள் மாமா வரவில்லை என்றால், அவர் போர்க்களத்தில் மாண்டதாகத்தானே ஆகிறது? சடலம் கிடைக்கவில்லை என்பதற்காக அவர் உயிருடன் இருக்கிறார் என்று கூறமுடியுமா? அப்படி அவர் உயிருடன் இருந்தாலும் இந்த விஷயத்தில் நாட்டின் நலன் கருதி நீங்கள் பொய் கூறுவதில் தவறில்லை,'' இப்படிப் பலவாறு பேசி, குருதேவரைத் தன்வயப் படுத்திவிட்டான் வெங்கண்ணா.
அவரிடம் ஒரு கடிதச் சுருளை நீட்டியவன், ""இந்த செய்தியைப் போர்க்களத்திலிருந்து படுகாயமுற்ற ஒரு வீரன் உங்களிடம் கொடுத்ததாக நீங்கள் லஷ்மியிடம் கூற வேண்டும். உங்கள் வார்த்தையை மட்டுமே அவள் நம்புவாள்,'' என்றான்.
அப்போதும் நேர்மையாளரான அவர் தயங்கினார். அதை வாங்கிக் கொள்ள அவர் கை உயரவில்லை.
""ஏன் இப்படித் தயங்குகிறீர்கள்? பாரதப் போரில் தரும புத்திரர் துரோணரைச் செயலிழக்கச் செய்ய, உயிரோடிருக்கும் அவர் மகன் அசுவத்தாமன் இறந்து விட்டதாகப் பொய் கூறவில்லையா? ஒரு நல்ல காரியத்துக் காகப் பொய் கூறுவதில் தோஷமில்லை,'' என்று கூறியவாறு பட்டுத் துணிச் சுருளை, ராஜ குருவின் நடுங்கும் கைகளில் திணித்தான்.
மனச் சாட்சிகள் குத்தலினால் முகம் வெளிறிச் சோகமே உருவாக ராஜகுரு அந்தப் பொய்க் கடிதத்தை இளவரசியிடம் கொடுத்து, தலை கவிழ்ந்து நின்றார். வெங்கண்ணாவின் பலிகடாவாக்கப்பட்ட அவரால் பேச முடியவில்லை.
குரு தேவரின் நிலை, லஷ்மி அந்தக் கடிதத்தை நம்பும் படிச் செய்தது. கடிதத்தைப் படித்ததும் குரு தேவரை கண்களில் நீர் திரளப் பார்த்தாள் லஷ்மி.
""உண்மைதானம்மா... போர்க்களத்தி லிருந்து வெங்கடாத்திரி என்ற தளபதி, ஒரு வீரன் மூலம் இதை எனக்கு அனுப்பி இருந்தான். உன் தந்தையின் அருகிலிருந்து போரிட்டவன் வெங்கடாத்திரி. படுகாய மடைந்த அச்சுதர் அவனிடம் ஏதோ கூறி, எதையோ கொடுக்க முயன்றாராம். ஆனால், அதற்குள் எதிரிகள் பெருமளவில் வந்து, இவனைத் தாக்கிவிட்டு, உன் தந்தையின் உடலையும் தூக்கிச் சென்று விட்டார்களாம். இக்கடிதத்தை எழுதி ஒரு வீரனிடம் கொடுத்து என்னிடம் சேர்ப்பிக்கும்படி அனுப்பிய தளபதி வெங்கடாத்திரியும், படுகாயத்தினால் போர்க் களத்திலேயே மாண்டான்.
""இக்கடிதத்தை நான்தான் உன்னிடம் காட்டவில்லை. நீ சோகப்பட்டு வேதனையடைவாயே என்று. ஆனால், உண்மையை மறைக்கக்கூடாது என்ற மனச்சாட்சியின் உறுத்தலினால், இன்று இதை உங்களிடம் காட்டும் படியாயிற்று. என்னை மன்னித்து விடுங்கள் இளவரசி,'' என்றார் குருதேவர்.
அவர் மன்னிப்புக் கேட்டது. தான் வெங்கண்ணாவின் கைப் பாவையாகி விட்டதற்காகத்தான்!
""வணக்கத்துக்கு உரியவரே! உங்களை நான் மன்னிப்பதா? வேண்டாம் குருதேவா. என் தந்தையின் முடிவைப் பற்றி நீங்களே கூறியபின், இனி அவர் உயிரோடிருக்கலாம் என்ற நம்பிக்கைக்கே இடமில்லை,'' என்றாள் லஷ்மி.
ஆனாலும் அவள் உள் மனம் இன்னமும் சமாதானமடைய வில்லை.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, வெங்கண்ணா மறுபடியும் லஷ்மியிடம் போனான். ராஜ குருவிடமிருந்து, தான் விஷயமறிந்ததாக நாடகமாடிப் போலிக் கண்ணீர் வடித்தான். பிறகு, வழக்கப்படி அவளிடம் அவள் திருமணத்தைப் பற்றிப் பேசினான்.
லஷ்மி அவனுக்குப் பதில் கூறவில்லை.
ரொம்ப நேர்மையாளனைப் போல, ""லஷ்மி! இன்னுமா உனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை? ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாய்? நாட்டு மக்களின் நலன் என்ன வாவது? மன்னரை இழந்த துக்கத்தை நீ அரசியானால் மறந்து மகிழ்வர்!'' என்றான்.
""எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அப்பாவை இழந்ததனால் ஏற்பட்ட மனப்புண் ஆற வேண்டாமா?'' என்று கூறி விலகிப் போனாள் லஷ்மி.
ஆனால், அந்த அபலைப் பெண்ணினால் அதிக நாள் காலங்கடத்த முடியவில்லை. வெங்கண்ணா விலங்காக மாறுவானோ என்று பயப்படலானாள்.
ஆகவே, ஒருநாள் அவனிடம், ""உங்கள் விருப்பப்படியே திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்,'' என்று கூறினாள்.
""இதுதான் புத்திசாலிப் பெண்ணிற்கு அழகு!'' என்று மகிழ்ந்து போன வெங்கண்ணா, உடனே திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபடலானான்.
இந்த வேளையில் தான் மாறப்பன் சந்திரகிரிக்கு வந்தான். நகரம் விழாக் கோலத் தில் இருப்பதையும், மக்களின் குதூகலத்தை யும் பார்த்தவன் வியந்து, திகைத்துப் போனான்.
""மன்னர் அச்சுதராயர் இறந்தது இவர்களுக்குத் தெரியாதா? நகர மக்கள் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்களே!'' என்று குழம்பியபடி ஒரு சத்திரத்துக்குப் போனான். தன் குதிரையை அங்கிருந்த லாயத்தில் ஒப்படைத்து விட்டுச் சத்திரத்து நிர்வாகியிடம் நகரின் கோலாகலத்துக்கான காரணம் பற்றிக் கேட்டான்.
""இளவரசி லஷ்மி தேவிக்கும், அவரது அத்தை மகனான வெங்கண்ணாவிற்கும் திருமணம் நடக்கப் போகிறது. சந்திரகிரியின் ராணியாகப் போகிறார் லஷ்மிதேவி. மக்களின் மகிழ்ச்சி குதூகலத்துக்குக் காரணம் அதுதான்!'' என்றார் சத்திரத்து நிர்வாகி.
மாறப்பனின் மனக் கண்ணில், அச்சுதராயர் கூறியதெல்லாம் நிழலாக வட்டமிட்டன.
""இளவரசிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் தானா?'' என்று கேட்டான் அவரிடம்.
""மன்னர் அச்சுதராயர் உயிரோடிருந்தால், இந்தத் திருமணம் நடக்காது. வெங்கண்ணாவை வெறுப்பவர் அவர். ஆனால், இளவரசியால் என்ன செய்ய முடியும்? அதெல்லாம் ராஜாங்க விஷயம், நமக்கெதற்கு?'' என்றார் சத்திரத்துக்காரர்.
மாறப்பன் சிந்தனை வயப்பட்டான்.
- தொடரும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X