கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2014
00:00

கேள்வி: இப்போதெல்லாம், விடுதிகள், விமான நிலையங்கள், ஏன், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில், வை பி இணைப்பு கிடைக்கிறது. சில இடங்களில் பாஸ்வேர்ட் இல்லாமலும், மற்ற இடங்களில், பாஸ்வேர்ட் கேட்டு வாங்கிப் போடும் வகையிலும் உள்ளன. கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இந்த இணைப்புகளில், நம் சாதனங்களைப் பயன்படுத்தி, இணைய இணைப்பினை மேற்கொண்டு, நம் வேலைகளை மேற்கொள்வது பாதுகாப்பான ஒன்றாக இருக்குமா?
கே. ஆர். பிரகாசம், தாம்பரம்.
பதில்:
நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களில், நமக்கு இணையம் வழி முக்கியமான வேலை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால் மட்டுமே பயன்படுத்தலாம். இணையத்திலிருந்து தகவல்களைப் பெற, இணைய தளங்களுக்குச் சென்று, நம் சாதனங்களில் பதிந்து கொள்ளலாம். நிதி சார்ந்து, வங்கித் தளங்களை அணுகுவது, வர்த்தக இணைய தளங்களில் பொருட்கள் வாங்குவது போன்ற வேலைகளைச் சற்று கவனத்துடன், அந்த நெட்வொர்க் எத்தகையது என்பதனை அறிந்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், அதே நெட்வொர்க்கினை மேலும் பலர் பயன்படுத்திக் கொண்டிருப்பதாலும், அந்த இணைப்பின்
பாதுகாப்பு எத்தன்மையது எனத் தெரியாததாலும், நம் தகவல்கள் திருடு போக வாய்ப்புண்டு. இது போன்ற சந்தர்ப்பங்களில், முன்பே இப்பகுதியில் கூறியிருந்தபடி, நம் சாதனங்கள் மற்றும் இணைய அக்கவுண்ட்களின் தன்மை கீழ்க்கண்டவாறு இருப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
1. உங்கள் கம்ப்யூட்டர் அல்லது சாதனத்தினை பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கவும்.
2. உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம், அன்றைய நாள் வரை அப்டேட் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
3. உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பும் அன்று வரை அப்டேட் செய்திருக்க வேண்டும்.
4. பயர்வால் பாதுகாப்பினை இயக்கவும். விண்டோஸ் சிஸ்டத்தில் ஒரு பயர்வால் டூல் உள்ளது. ஆனால், தர்ட் பார்ட்டி பயர்வால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
5. உங்கள் கம்ப்யூட்டரில் பைல் பகிர்ந்து கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டிருந்தால், முதலில் அதனை மாற்றி அமைக்கவும்.
பொதுவாக, இது போன்ற பொது இணைய இணைப்புகளில், வங்கி நிதி சார்ந்த பணிகளை மேற்கொள்ளாதீர்கள். https:// எனப் பாதுகாக்கப்பட்ட முன்னொட்டு உள்ள முகவரிகளைக் கொண்ட தளங்களை மட்டும் காண்பது நல்லது.

கேள்வி: இணையப் பயன்பாட்டில் Ping செய்தல் என்றால் என்ன? என் நண்பர் சேட் விண்டோவில் தொடர்பு கொள்கையில், அல்லது, மின் அஞ்சலில், தேவைப்பட்டால் தன்னை 'பிங்' செய்திடுமாறு சொல்கிறார். இதன் பொருள் என்ன? தொடர்பு கொள்வது மட்டுமா? அல்லது வேறு தகவல் தரச் சொல்கிறாரா?
எஸ்.என். சிவநேசன், வேடசந்தூர்.
பதில்:
அனைவருக்கும் தேவைப்படும் தகவல் தரப்பட வேண்டிய கேள்வி. தொழில் நுட்ப ரீதியில் இந்த சொல்லுக்கும், நண்பர்களிடையேயான தொடர்பில் பயன்படுத்தப்படும் பொருளுக்கும் சற்று வேறுபாடு உள்ளது. அதனை இங்கு காண்போம்.
உங்கள் நண்பர் அவரை ping செய்திடுக என்று கூறுவது, அவரை தொடர்பு கொள்வதுதான். எடுத்துக் காட்டாக, பேஸ்புக்கில் நீங்கள் இருவரும் நண்பர்களாகத் தொடர்பு வைத்திருந்தால், சேட் விண்டோவில், அவருடைய பெயருக்கு மெசேஜ் அனுப்பலாம். அதே போல ஜிமெயில் அக்கவுண்ட்டினை இருவரும் கொண்டிருந்தால், நீங்கள் ஜிமெயில் பார்த்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவரும் பார்த்துக் கொண்டிருந்தால், ஜிமெயில் விண்டோவில் அவருடைய பெயரைக் கிளிக் செய்து, சேட் விண்டோவில் தொடர்பு கொள்வது அவரை Ping செய்வதாகும். செய்தியைப் பெறும் அவரும் உங்களுடன் தொடர்பு கொள்வார்.
தொழில் நுட்ப ரீதியாக, ஓர் இணைய தளத்தினைத் தொடர்பு கொள்வதும் ping செய்வதாகும். இது ஒரு கட்டளைச் சொல்லாகப் பயன்படுகிறது. ஓர் இணைய தளம் நமக்கு பிரவுசரில் கிடைக்கவில்லை என்றால், அந்த தளம் சரியாக இயங்கி, நாம் அணுக விரும்பும் கட்டளைய ஏற்று, நமக்குப் பதில் அனுப்புகிறதா என்று அறிய இந்த கட்டளைச் சொல்லைப் பயன்படுத்தலாம். நாம் அவ்வாறு அனுப்பும் வேண்டுகோளை Echo Request எனக் கூறுவார்கள். அதாவது, நாம் அனுப்பும் வேண்டுகோளுக்கு எதிரொலி போல, ஒரு பதில் தானாக வர வேண்டும். அத்துடன் நாம் அனுப்பி எவ்வளவு நேரத்தில் பதில் வருகிறது போன்ற தகவல்கள் அப்போது கிடைக்கும். ஒன்றுமே தகவல் இல்லை என்றாலும், அதுவும் காட்டப்படும்.

கேள்வி: இப்போதெல்லாம், Secure Boot என்று அடிக்கடி கம்ப்யூட்டர் இயக்கத்தினைக் கூறுகிறார்கள். அப்படியானால், பாதுகாப்பு இல்லாத கம்ப்யூட்டர் இயக்கம் (insecure boot) என்று ஒன்று உண்டா? செக்யூர் பூட்டில் உள்ள சிறப்பான தன்மைகள் என ஏதேனும் ஒன்று உண்டா? அல்லது இது பழைய செயல்பாட்டிற்கான புதிய சொல்லா?
என். கலா ராணி, செய்யாறு.
பதில்:
நல்ல கேள்வி. “இங்கு நல்ல மீன்கள் கிடைக்கும்” என ஒரு கடையில் விளம்பரம் செய்தால், ”அப்படியானால், மற்ற கடைகளில் கெட்ட மீனா விற்கிறார்கள்?” என்பதைப் போன்றது இது. தொழில் நுட்ப ரீதியாகச் சற்று மேம்படுத்தப்பட்ட டூல் இது. பாதுகாப்பான கம்ப்யூட்டர் இயக்க தொடக்கம் (Secure Boot) என இதனைக் கொள்ளலாம்.
பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள் இணைந்த அமைப்பு Secure Boot என்ற ஒரு வரையறையை வகுத்துள்ளது. இதனைக் கொண்டுள்ள ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம், வழக்கமான BIOS அமைப்பு இல்லாமல், கம்ப்யூட்டரிலேயே அமைக்கப்பட்ட UEFI firmware சிஸ்டத்தை இயக்கும். இதில் இந்த அமைப்பு சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் மட்டுமே இயங்கும். இதனால், பயாஸ் அமைப்பில் அமர்ந்து கொண்டு இயங்கிய ரூட் கிட் போன்ற கொடிய வைரஸ்கள் இயங்குவது தொடக்கத்திலேயே தடுக்கப்படுகிறது. பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், இதனை முழுமையாகப் பின்பற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் அறிய http://www.makeuseof.com/tag/what-is-uefi-and-how-does-it-keep-you-more-secure/ என்ற இணைய தளப் பக்கத்தில் உள்ள தகவல்களைப் படிக்கவும்.

கேள்வி: ஜங்க் போல்டருக்கும் ஸ்பேம் போல்டருக்கும் என்ன வேறுபாடு? ஸ்பேம் போல்டர் மட்டுமே காட்டப்படுகிறது. ஜங்க் போல்டர், நம் ஆண்ட்டி வைரஸ் உள்ள போல்டரில் ரகசியமாக இருக்குமா? அதில் சேரும் பைல்கள் தானாக நீக்கப்படுமா? ஸ்பேம் போல்டர்களில் உள்ள பைல்களைத் திறந்து படிக்கலாமா? அதனால், கெடுதல் ஏற்படுமா?
ஆர். சீனிவாசன், சிவகாசி.
பதில்:
குப்பைத் தொட்டி குறித்து எத்தனை கேள்விகள். நம் கம்ப்யூட்டரின் செயல்பாடுகள் குறித்தும், அதனைச் சரியாகப் பராமரிக்க நாம் என்ன செய்திட வேண்டும் என்பது குறித்தும், நாம் அறிந்து கொள்வது நல்லதுதான். முதலில் ஒன்றைக் கூறிவிடுகிறேன். ஜங்க் போல்டரும், ஸ்பேம் போல்டரும் ஒன்றுதான்.
ஜங்க் போல்டர் என்பது, இன்றைக்கு மின் அஞ்சல் சேவையினை வழங்கும் பல தளங்களில் உள்ள ஸ்பேம் போல்டர் (spam folder) தான். வர்த்தக ரீதியாகத் தேவையின்றி, அல்லது பெறுபவரின் விருப்பமின்றி அனுப்பப்படும் மெயில்கள், இமெயில் சேவை நிறுவனத்தால், ஜங்க் போல்டரில் தள்ளப்பட்டிருக்கும். பெறுபவரின் அட்ரஸ் புக்கில், இத்தகைய மெயில்களின் அனுப்புநர் விலாசம் இல்லையேல், முதல் சந்தேகத்திற்கு இவை ஆளாகும். அல்லது விற்பனை, தொடர் அஞ்சல்களுக்கான லிங்க்குகள் இருக்கையில், அவை சந்தேகத்திற்கு ஆளாகி, இந்த போல்டரில் வைக்கப்படும். இவற்றைப் பெறுபவர், இந்த அஞ்சல்களைப் பின் ஒரு நாளில் நிதானமாகப் படித்துப் பார்த்து, இவை தேவைதானா என முடிவெடுக்கலாம். அல்லது அனுப்புபவரின் முகவரியைக் கொண்டே முடிவெடுக்கலாம். அந்த நிலையிலேயே, திறந்து பார்க்காமல் அழித்துவிடலாம். புதிய நிறுவனங்களிடமிருந்து அஞ்சல் வரும்போது, அவை உண்மையானவையாக இருந்தாலும், இந்த போல்டருக்கு அனுப்பப்பட்டுவிடும். எனவே தான், அத்தகைய நிறுவனங்கள், நமக்கு அஞ்சல்களை அனுப்புகையில், வேறு கடிதத் தொடர்பின் போது, இன்பாக்ஸில் அஞ்சல் இல்லை எனில், ஸ்பேம் மெயில் பாக்ஸில் பார்க்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.
இவற்றைத் திறந்து பார்க்கலாம். உறுதி செய்யப்பட்டவரிடமிருந்து இல்லை என்றால், அதில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்திடாமல், அதனை அழித்துவிடுவதே நல்லது. ஏன் அழிக்கச் சொல்கிறேன் என்றால், பின் ஒரு நாளில் நம்மையும் அறியாமல், அதில் கிளிக் செய்து, திறந்து பார்க்க முயற்சிப்போம் அல்லவா?

கேள்வி: நம் நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்களா? சரியான வழிகளில் பயன்படுத்தி, கல்வி கற்றலுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்கிறார்களா? இது குறித்து சரியான தகவல்களை எதிர்பார்க்கிறேன்.
என். நமசிவாயம், திருச்சி.
பதில்:
என்ன இப்படி கேட்டுட்டீங்க? அண்மையில் HT Digital and IMRB ஆகிய அமைப்புகள் இணைந்து ஓர் ஆய்வை, உங்களுக்குப் பதில் தரும் வகையில் மேற்கொண்டன. அதில் கிடைத்த தகவல்களை, உங்கள் சொற்களில் கூறுவதாக இருந்தால், சரியான தகவல்களை, இங்கு தருகிறேன்.
ஏழு நகரங்களில், 1042 மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள், இந்திய இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை 30 கோடியை எட்டும். இதில் இளைஞர்களே அதிக இடம் பிடித்துள்ளனர், குறிப்பாக மாணவர்கள். ஏனென்றால், இவர்கள் கல்வி கற்றல் சார்பாக கூடுதல் தகவல்களை இணையத்தில் இருந்து பெறுகின்றனர். இணையத்தைப் பயன்படுத்தும் மாணவர்களில், 53% பேர், இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் நம்பகத் தன்மை கொண்டதாக இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். 91% மாணவர்கள், தாங்கள் படிக்க விரும்பும் கல்வி நிலையங்கள், ஆய்வு நிலையங்கள் குறித்தும், கல்விக்குப் பின்னர், வேலை வாய்ப்புகள் குறித்து அறியவும், இணையத்தை நாடுகின்றனர். எந்த பட்ட வகுப்புகள் எங்கு கிடைக்கும், அதற்கான செலவு என்னவாக இருக்கும், மாணவர்களுக்கான உதவித் தொகை கிடைக்குமா, அதற்கான தகுதிகள் என்ன போன்றவற்றை அறியவே, மாணவர்கள், இணையத்தை நாடுகின்றனர்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தாங்கள் தேடும் கல்வி நிலையங்கள் குறித்து, வேறு வழிகளில், பத்திரிக்கைகளில், நூல்களில், பிறர் வழியாக, மாணவர்கள் தெரிந்து கொண்டாலும், அவை சரிதானா என்று அறிய இணையத்தையே நாடுகின்றனர். மொத்தத்தில் 46% பேர் மட்டுமே, தகவலுக்கு முதல் இடமாக இணையத்தை நாடுகின்றனர்.

கேள்வி: நான் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எம்.எஸ்.ஆபீஸ் 2007 பயன்படுத்துகிறேன். இதில் உள்ள வேர்ட் தொகுப்பில், டாகுமெண்ட்டில் லைன் ஸ்பேஸ் 2 ஆக உயர்த்துவது எப்படி எனத் தெரியவில்லை. ரிப்பன் அமைப்பு என நீங்கள் எழுதுவதும் குழப்பமாக உள்ளது. விளக்கவும்.
என். சுப்ரமணி, ஆண்டிபட்டி.
பதில்:
புதியதாக ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷனுக்கு அறிமுகம் ஆகும்போது, ஏற்கனவே தெரிந்த சில விஷயங்களை மேற்கொள்ளும் வழிகள் சற்று மாறியிருப்பது நமக்கு சிரமமாக இருக்கும். பழகிக் கொண்டால், இது சரியாகிவிடும். முதலில், டாகுமெண்ட்டைத் தயார் செய்து முழுமையாக சேவ் செய்திடவும். அடுத்து Ctrl+A அழுத்தி, அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும். இப்போது ரிப்பனில், ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு பாராகிராப் குரூப்பைக் கண்டறியவும். இது மூன்றாவதாக இருக்கும். இதில் ஐந்தாவது ஐகானாக, மேலும் கீழும் அம்புக் குறி கொண்ட ஐகான் ஒன்று இருக்கும். இதில் கீழ் நோக்கிய அம்புக் குறி ஒன்றும் காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், கிடைக்கும் மெனுவில் 1.0 முதல் ஆறு வகையான லைன் ஸ்பேஸிங் இருக்கும். இதில் நீங்கள் விரும்பும் வரி இடைவெளியினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். அல்லது இதிலேயே Line Spacing Options என்று ஒரு ஆப்ஷன் காட்டப்படும். அதில் கிளிக் செய்தால், பாராகிராப் என்ற தலைப்பில் ஒரு விண்டோ கிடைக்கும். இதில் வரி இடைவெளி உட்பட பல விஷயங்களை செட் செய்திடலாம்.

கேள்வி: நான் புதியதாக வாங்கிய நோட்புக் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 8 பயன்படுத்தி வருகிறேன். இதில் ஸ்டார்ட் மெனு இல்லாததால், சிஸ்டம் ஷட் டவுண் செய்வது எப்படி என்று தெரியவில்லை. பவர் ஸ்விட்ச் ஆப் செய்து ஷட் டவுண் செய்திடும் வழியைக் கற்றுக் கொடுத்தார்கள். அது சரியா? இல்லை எனில் வேறு வழி என்ன?
என். சிவராமன், திருப்பூர்.
பதில்
: பவர் ஸ்விட்ச் பயன்படுத்த வேண்டியதில்லை. சார்ம்ஸ் பார் இயக்கவும். கிடைக்கும் திரையில், Settings தேர்ந்தெடுத்து, பின்னர் அதில் உள்ள Power ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மூன்று ஆப்ஷன்கள், Sleep, Shut down, மற்றும் Restart, கிடைக்கும். இதில் Shut down என்பதில் கிளிக் செய்திட, சிஸ்டம் மூடப்படும்.
நீங்கள் டெஸ்க்டாப் திரையில் இருந்தால், ஆல்ட் + எப் 4 கீகளை ஒரு சேர அழுத்தினால், ஷட் டவுண் விண்டோ கிடைக்கும். இதில் உள்ள கீழ் விரி மெனுவினைத் திறக்கவும். இங்கு Switch user, Sign out, Sleep, Shut down, மற்றும் Restart என்ற ஆப்ஷன்களைப் பார்க்கலாம். இங்கேயும், Shut down என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, சிஸ்டத்தை முழுமையாக மூடலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X