ஊர் சொத்து!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2014
00:00

''ஏய்... நீலா... பிள்ளைய அங்க உக்கார வெச்சி கால் கழுவாதேன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன். எங்க மாமனார் பாத்தா சண்டைக்கு வரப் போறாரு... எதுக்கு உனக்கு பொல்லாப்பு,'' என்றாள் கோலம் போட வெளியில் வந்த லட்சுமி.
மாமனார் மேல் வைத்திருக்கும் மரியாதையை விட, அவர் போடும் சண்டையால் நீலாவுடனான தன் நட்பு கெட்டு விடக் கூடாது என்பதாலேயே அப்படி கூறினாள்.
நீலாவும், அவள் கணவன் பெரியசாமியும், லட்சுமி வீட்டருகில் குடித்தனம் வந்த போது, நடுத்தர உயரத்தில் இருந்த அந்த வேப்பமரத்தின் பின்னணி, முதலில் கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தது. ஆனால், தினமும் ஒரு முறையாவது, அந்த வேப்பமரத்தின் பிரதாபத்தை, லட்சுமியின் மாமனார் வேதாசலம் யாரிடமாவது சொல்லிக் கொண்டிருப்பது சிலருக்கு அலுப்பையும், சிலருக்கு வியப்பையும் தந்தது. நீலாவுக்கு, சில நேரம் அந்த வேப்பமரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், சில நேரம் அந்த மரத்தின் மேல் வேதாசலம் கொண்ட வாஞ்சையும், அவர் அதை வெளிப்படுத்தும் விதமும் கொஞ்சம் முரட்டுத்தனமாகவே தோன்றும்.
வாழ்க்கையில் மிகவும் கஷ்டப் பட்டு முன்னேறி, இப்போது குடியிருக்கும் இந்த வீட்டைக் கட்டினார் வேதாசலம். குழந்தைப் பிராயத்தில் கிராமத்து வீடு எரிந்து, தந்தையும் தீக்கிரையாக, பக்கத்து வீட்டு வேப்ப மரத்தில் தூளி கட்டி இவரைப் படுக்க வைத்தது, வயற்காட்டில் அவர் தாயார் வேலை செய்யும்போது, வேப்ப மரத்தில் தூளி கட்டி அதில் தூங்க வைத்தது, வளர்ந்த பின் அந்த மரத்திலேயே ஊஞ்சல் கட்டி ஆடுவதுமாக வளர்ந்த வேதாசலத்துக்கு, வேப்ப மரம் என்பது அவர் மூச்சில் கலந்து விட்ட விஷயமாகி விட்டது.
அதன் தொடர்ச்சியாகவும், இருக்க வீடின்றி அவர் பட்ட கஷ்டமும், அவரின் உழைப்பை விதையாக்கி, ஊக்கத்தை உரமாக்கி, வாழ்வில் முன்னேறி தனக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொண்டவர், வேப்ப மரத்தின் மேல் இருந்த பற்றின் காரணமாக, மரத்திற்காக நிறைய இடம் ஒதுக்கி, வீட்டை சிறியதாக கட்டிக் கொண்டார்.
ஆரம்பத்தில், பல வகைகளில் முயற்சித்து, தோற்று கடைசியில், அரசு தாவரவியல் துறைக்குச் சென்று, வேப்ப மரம் வளர்ப்பதற்கான பயிற்சியும், வேப்பங் கன்றையும், உரம், பூச்சி மருந்து, மரம் வளர்ப்பு தொடர்பான புத்தகங்கள் என்று, அந்த வேப்ப மரத்திற்காக
ரொம்பவே மெனக்கெட்டார்.
'வெச்சா வளந்துட்டுப் போவுது... இதுக்கு இவ்வளவு மெனக்கெடணுமா...' என்று, தெரியாத்தனமாக மனைவி கேட்டு விட, அவர் மனைவியைப் பார்த்து, 'நம்ம பையனை இந்த வருஷம் எந்த பள்ளியில சேக்கலாம்ன்னு நினைக்கிற...' என்று கேட்டார். உடனே, 'ஒண்ணாங் கிளாஸ் தானே... தாகூர் ஸ்கூல்ல சேத்திடுவோம்; அங்க படிக்கிற பிள்ளைங்க தான் நல்லா படிக்கிறாங்களாம்...' என்றாள்.
'அரசுப் பள்ளியில சேக்கலாம்ன்னு இருக்கேன்...' என்றவுடன், 'என்னது! அரசு பள்ளியிலா... அவன் வாழ்க்கை நல்லா இருக்க வேணாமா...' என்றவளை கையமர்த்தி, 'சேத்து விட்டா படிச்சிட்டுப் போறான்...' என்றார். அப்போது தான் அவளுக்கு உரைத்தது, தான் மரத்துக்கு சொன்னதை, இவர் மகனுக்கு சொல்கிறார் என்று!
'முதல்ல அரசுப் பள்ளியைப் பத்தின உன்னோட அபிப்ராயத்த மாத்திக்க. மரமோ, மனுஷனோ அவங்க வாழ்க்கை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு முக்கியமில்ல... நாம அவங்கள எப்படி வழி நடத்துறோம்ங்கிறது தான் முக்கியம்...' என்றார்.
நாட்கள் போகப் போக மரத்தின் மேல் இருந்த அன்பும், அக்கறையும் கூடிக் கொண்டே போக, கண்ணும் கருத்துமாக வேப்பமரத்தை வளர்க்க ஆரம்பித்தார்.
மகனுக்கு மணமான கையோடு வேலையிலிருந்து ஓய்வு பெற்ற வேதாசலம், ஓய்வு காலத்தை வீணாக்காமல், ஆர்வமுள்ளவர்களுக்கு மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை விளக்கி, உதவி செய்யவும் துவங்கினார்.
'ஏன் சார்...பயன் தராத இந்த வேப்ப மரத்தை விட, பயன் தர்ற ஒரு தென்னை மரத்தை வளர்க்கலாமே...' என்று, தினமும் அவ்வழியே நடை பயிற்சி போகும் வழிப்போக்கர் ஒருவர், ஒரு நாள் கேட்டார்.
'சாருக்கு பிள்ளைங்க எத்தனையோ?' என்று விசாரித்தார் வேதாசலம்.
'ஒரு பொண்ணு, ஒரு பையன். பையனை நல்லா படிக்க வச்சு அமெரிக்காவுக்கு அனுப்பி வெச்சேன்; இப்ப கை நிறைய சம்பாதிச்சி, எனக்கு வேண்டிய அளவு பணம் அனுப்பறான். என்ன பிரயோஜனம்... அவனை நேரிலே பாத்து பல வருஷமாச்சு...' அங்கலாய்த்துக் கொண்டார்.
'அப்ப உங்க மக...'
'அவ இங்கதான் பக்கத்திலே இருக்கா... பையனுக்கு நிறைய செலவழிச்சதால, அவள சுமாரான இடத்தில தான் கட்டிக் கொடுக்க முடிஞ்சது. ஆனா, மாப்பிள்ளை தங்கமானவர்; நீங்க எங்களோட வந்து இருங்கன்னு சொல்றார்.
'மனைவிய இழந்துட்டுத் தனியா இருக்கிற எனக்கு, என் மக குடும்பம் தான் ஆதரவு; அப்பப்ப அவ வீட்டுக்குப் போய் பேரன், பேத்தியைப் பாத்துட்டு வருவேன்; மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்...' என்றார்.
'இதுதான் தென்னை மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் உள்ள வித்தியாசம்...' என்றதும் புரியாமல் விழித்தவரைப் பார்த்து, 'நீங்க சொல்ற மாதிரி தென்னைமரம் பணம் காய்ச்சி மரம் தான்; நல்ல பலன் கிடைக்கும். ஆனா, அதோட நிழல்ல நிக்க முடியுமா... அந்த மரம் உயரமா இருக்கிறதாலே, அதோட நிழலையே பாக்க முடியாது; அதான் உங்க மகன். ஆனா, வாழும்போது பலன் தராத மாதிரி தெரியற வேப்பமரம் நீங்க வெயில்ல வாடி, வதங்கி வர்றப்ப ஒரு தாயைப் போல, மகளைப் போல அரவணைச்சு, நிழல் கொடுத்து, நல்ல காற்ற தரும். அந்த மரத்தோட நுனிக் கிளையில் உள்ள கொழுந்து இலை கொடுக்கிற நிழல் கூட, நம்மையும், இந்த பூமியையும் குளிர வைக்கும், உங்க மகளப் போல...' என்று வேதாசலம் சொல்லி முடித்தவுடன், அகமகிழ்ந்து போனார் அந்த வழிப்போக்கர்.
தன் மகனை நேரில் காண முடியாமல் ஏற்படும் புத்திர சோகத்தையும், மகளால் கிடைக்கும் மன சந்தோஷத்தையும், மரங்களுடன் ஒப்பிட்டு அழகாக விளக்கி விட்டாரே என, அவருக்கு ரொம்ப சந்தோஷம்.
'இந்த காஞ்ச வேப்பலைக் குப்பைய அள்ளிப் போடற தோட்டக்காரி வேலையப் பாக்கறதுக்குத் தான் என்னை கூட்டி வந்திருக்கான் போல...' என்று புலம்பினாள் நீலாவின் கணவன் பெரியசாமியின் சின்னம்மா அங்கம்மா. நீலாவின் இரண்டாவது பிரசவத்திற்கு உதவி செய்ய வந்திருந்தவள், வீட்டிற்கு முன் உதிர்ந்த வேப்பிலைச் சருகுகளை அள்ளிப் போட அலுத்துக் கொண்டாள்.
வேப்ப மரத்திலிருந்து உதிரும் இலைகளை, உரமாக்குவதற்காக வேதாசலம் வெட்டி வைத்துள்ள குழியில், காய்ந்த சருகுகளைத் தள்ளி விடுவது ஒரு பெரிய வேலை இல்லை என்றாலும், அடுத்தவர் செய்யும் நல்ல காரியத்திற்கு, மனதாலும் ஆதரவு கொடுத்துவிடக் கூடாது என்று நினைக்கும் குரூர புத்தி கொண்டவள் அங்கம்மா.
அவளுடைய குணம் தெரிந்திருந்தும், உதவி செய்ய உறவினர்கள் யாரும் இல்லாததால், வேறு வழியில்லாமல் அவளை அழைத்து வந்திருந்தான் பெரியசாமி.
வந்த சில தினங்களில் வேப்ப மரம் பற்றியும், வேதாசலம் பற்றியும் அறிந்து கொண்ட அங்கம்மாள், 'இதென்ன கிறுக்குத்தனமா இருக்கு... இந்தாளுக்கு புடிக்குங்கறதுக்காக, நம்ம வீட்டு வாசல்ல இவ்வளவு குப்பைய வெச்சிக்கறதா... இருக்கட்டும்! கொஞ்ச நாள் இங்க இருக்கறதுக்குள்ளே, இதுக்கொரு முடிவு கட்டுறேன்...'என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
'அட இவ்வளவு இருக்கா இந்த வேப்பமரத்துல... அப்ப என்னாலான உதவியா, நானும் தினமும் ஒரு குடம் தண்ணிய மரத்தைச் சுத்தி தெளிச்சிடறேன். தரை குளிர்ச்சியா இருந்தா, நிழலும், 'குளுகுளு'ன்னு இருக்கும்...' என்று இயற்கை ஆர்வலர் போல் நடித்து, வேதாசலத்திடம் அனுமதி வாங்கினாள் அங்கம்மா.
இலையுதிர் காலம் முடிந்து, மழைக் காலம் துவங்கியது. ஆடிக் காற்றில் உதிர்ந்த இலைகளுக்கு பதிலாக, மழைக் காலம் தொடங்கியவுடன் துளிர்க்கும் வேப்பங் கொழுந்துகளைப் பார்த்துப் பார்த்து பூரித்துப் போவார் வேதாசலம்.
ஆனால், இந்த வருஷம் இலைகள் உதிர்ந்து, மழை பெய்யத் துவங்கியும், தளிர்கள் துளிர்க்காதது கண்டு ஆச்சரியம் கொண்டார். போகப் போக மரம் நிறமிழப்பதையும், கிளைகளின் முனைகள் ஒடிந்து விழுவதையும் கவனித்த வேதாசலத்திற்கு, மனதில் இனம் புரியாத பயம் ஏற்பட்டது.
'பெருசா வளந்த மரத்தை அவ்வளவு சீக்கிரம் நோய் தாக்காது சார்; வேற ஏதாவது பிரச்னை இருக்கும். எதுக்கும் இந்த மழை சீசன் முடியட்டும்... நேரில வந்து பாக்குறேன். ஒண்ணும் கவலைப்படாதீங்க... சரி செய்துடலாம்...' என்று வேதாசலத்தின் நண்பரான தாவரவியல் அதிகாரி தைரியம் சொல்லி அனுப்பினார்.
மழை சாரலாக பெய்து கொண்டிருந்தது. மூடிய ஜன்னல் கதவு ஒன்று, காற்றில் திறந்து கொள்ள, அதைப் பூட்ட வந்த வேதாசலம், அலுமினியப் பானையை துணியில் பிடித்தவாறு அங்கம்மாள் வேப்ப மரத்தை நோக்கி வருவதைப் பார்த்தார்.
'அட... இந்தம்மா அக்கறையில என்னையும் மிஞ்சிடும் போலிருக்கே... கொட்டுற மழையில போயி யாராச்சும் மரத்துக்கு தண்ணி ஊத்துவாங்களா...' என்று வியந்தவர், 'ஆமா, பானையை எதுக்கு துணியில பிடிச்சிட்டு வருது...' என்று உற்றுப் பார்த்தவருக்கு, தலை வெடித்து, ரத்தம் சிதறுவது போலிருந்தது. பானையிலிருந்து புகை போல் ஆவி வெளியேறுவதைக் கண்டு!
அவர் சுதாரிப்பதற்குள், அந்த பானையிலுள்ள வெந்நீரை, 'சளசள'வென வேப்ப மரத்தைச் சுற்றி கொட்டி விட்டு, 'விடுவிடு'வென வீட்டிற்குள் சென்று மறைந்தாள் அங்கம்மா.
தன் உயிரான வேப்ப மரம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருப்பதற்கான காரணம் விளங்கியது.
கதவைத் திறந்து, வேகமாக வேப்ப மரத்தின் அடியில் அங்கம்மாள் தண்ணீர் தெளித்த இடத்திற்கு சென்றார் வேதாசலம். கொட்டும் மழையின் குளிர்ச்சியையும் மீறி, தரை சுட்டதை கால்களால் உணர்ந்தவர், இது நாள் வரை என்ன நடந்திருக்கும் என்று புரிய வரவும், 'நல்லவள் போல் பேசியவளை நம்பி, என் குழந்தையைக் கொல்ல நானே தலையாட்டி விட்டேனே...' என, நினைத்தவருக்கு, இதயம் வலிப்பது போல் இருக்க, நெஞ்சைப் பிடித்தார்.
டீ டம்ளருடன் வெளியில் வந்த வேதாசலத்தின் மனைவி, கணவன் கொட்டும் மழையில் நனைந்தவாறு நெஞ்சைப் பிடித்து தள்ளாடி நிற்பதைக் கண்டவள், நிலைமையின் விபரீதத்தை நொடியில் புரிந்து, ''என்னங்க,'' என்று பதறியவாறு ஓடி வந்தாள். அலறல் சத்தம் கேட்டு, தங்கள் அறையிலிருந்து வெளியே வந்த மகனும், மருமகளும் பதற்றமாகி, அவரை வீட்டிற்குள் அழைத்து வந்து, படுக்க வைத்தனர்.
வேதாசலம் படபடப்பு குறையாமல், ''வேப்ப மரம்... அங்கம்மா... வெந்நீ...'' என்று முணங்கியவாறு அங்கம்மாளின் வீடு இருக்கும் திசையை நோக்கி காட்டியவரின் கை, பொத்தென்று மனைவியின் மடி மீது விழுந்தது.
மனைவி, மகன், மருமகளின் அலறல் சத்தம் காற்று, மழையின் சத்தத்தையும் மீறி, பெரியசாமியின் வீடு வரை கேட்கவும், நீலாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவும் சரியாக இருந்தது. ஆட்டோவை அழைக்க வெளியில் வந்தவனின் கால்கள், தானாகவே வேதாசலத்தின் வீட்டை நோக்கி ஓடின.
''ஐய்யோ... வேதா சார் போயிட்டீங்களா...'' அவன் பங்குக்கு அலறவும், 'டொர்ரக்' என்ற சத்தம் கேட்டு திரும்பினான். சில அடிகள் பின்னால், அலட்டிக் கொள்ளாமல் குடையுடன் நின்று கொண்டிருந்த அங்கம்மாளின் குடைக்கு மேல் விழுந்து கொண்டிருந்தது அந்த வேப்ப மரத்தின் பிரதான கிளை.
''ஐயோ...'' என்று அலறியவாறு, எந்த மரம் அழியச் செய்தாளோ, அந்த வேப்ப மரத்தின் அடியில் சாய்ந்தவளை, அந்த மரத்தின் பெரிய கிளை, தன்னுடைய கைகள் போன்ற சிறு கிளைகளுடன் எழ முடியாதவாறு அழுத்திப் பிடித்து, தன்னையும், தன் தகப்பனையும் கொன்ற மனித அரக்கியை, சூர சம்ஹாரம் செய்து, பழி தீர்த்துக் கொண்டது.
''இப்ப நெனச்சாலும் புல்லரிக்குது... அப்பா இறந்த அதிர்ச்சியிலே, நீலாவுக்கு இங்கேயே பிரசவம் ஆகி, ஆண் குழந்தை பிறந்திடுச்சி. அப்பப்பா... அன்னைக்கு கொஞ்ச நேரத்திலே என்னென்ன நடந்திடுச்சி. எங்க சின்னம்மா இவ்வளவு கேவலமா நடந்திருப்பாங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பாக்கல... அவங்க உயிரோட இருந்திருந்தா, நான் கூட இவ்வளவு பெரிய தண்டனையைக் குடுத்திருக்க முடியாது. இயற்கையே அவளை தண்டிச்சிடுச்சி.
''எங்க சின்னம்மா செஞ்ச பாவத்துக்கு பரிகாரமா, என் மகனுக்கு, அவர் பேரத் தான் வெச்சிருக்கேன். அவன் கையாலே ஒரு வேப்ப மரத்தை வெச்சி வளத்து, அவரோட ஆத்மாவை சாந்தியடையச் செய்வேன். அவர் உங்களுக்கு சொத்து சேர்த்து வெச்சிருந்தா அது, உங்களுக்கு மட்டும் தான் பயன்படும். ஆனா, அவர் சேத்து வெச்சதோ தன் குடும்பம்ன்னு இல்லாம யாரு வந்து நின்னாலும் நிழலும், நல்ல காற்றையும் குடுக்கற இயற்கை சொத்து. அப்படிப்பட்ட ஊர்ச்சொத்து அழியறதுக்கு, என் குடும்பத்தில இருந்த ஒருத்தரே காரணமாயிட்டதுக்கு வெக்கப்படுறேன். நடந்த தப்புக்கு பிராயச்சித்தமாக, நம்ம ஊருல சாலை யோரங்களில் மரங்களை நட்டு வளக்கப் போறேன்...' என்று, வேதாசலத்தின் மகனிடம் ஆதங்கத்துடன் சொன்னான் பெரியசாமி.

பத்மபாலா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOPILINGAM - Singapore  ( Posted via: Dinamalar Android App )
17-டிச-201416:40:35 IST Report Abuse
GOPILINGAM அருமையான கதையை படித்த திருப்தி நீண்ட நாட்கள் கழித்து கிடைத்தது
Rate this:
Share this comment
Cancel
Mekala Ramesh - Mumbai,இந்தியா
14-டிச-201412:52:39 IST Report Abuse
Mekala Ramesh Arumai
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X