நடிகன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2014
00:00

காலை, 7:00 மணிக்கே, டைரக்டர் சூர்யசந்தரின் வீடு கம்-ஆபீஸ் கட்டட வாசலில், ஆஜர் ஆனான் கதிர் காந்த். ஏற்கனவே, அங்கே, ஒரு கூட்டம் அலைமோதியது. தெருக்கோடியில் டீ, காபி வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது.
இன்றைய தேதியில், டாப் சினி டைரக்டர் சூர்யா தான். கோலிவுட்டில் மட்டுமல்ல, சில பாலிவுட் தயாரிப்பாளர்கள் கூட, இவருடைய கால்ஷீட் கிடைக்குமா என்று காத்திருந்தனர்.
எப்போதாவது ஒரு முறை, புதுமுகங்களுக்கு தேர்வு நடத்துவார் இயக்குனர். ஒரு, 'டிவி' நிகழ்ச்சியில் குறும்பட நிகழ்ச்சிக்காக, நீதிபதியாக சென்றபோது, அவரை அசத்திய சில இயக்குனர்களை அசிஸ்டென்டுகளாக வைத்து, சில சொந்த தயாரிப்புகளுக்கு, பூஜை போட்டிருந்தார். எனவே, அப்படங்களில் நடிக்க சில புதுமுகங்கள் தேவை.
கிராமத்து இளைஞனான கதிர்வேலனுக்கு, இயற்கையிலேயே நடிப்புத் திறமை இருப்பதாக பலர் சொன்னதால், சினிமாவில் கதாநாயகனாகி விட வேண்டும் என்பது அவனுடைய லட்சியமாகி விட்டது.
ஒரு சினிமா ஹீரோவுக்கு கதிர்வேலன் என்ற பெயர் சற்று அன்னியமாக இருக்கும் என்பதால், கதிர் என்று மாற்ற நினைத்தான். கூட இருந்த நண்பர்களோ, 'கதிர்' உடன் ஒரு, 'காந்த்'தையும் ஒட்ட வைத்துக் கொண்டால், ரஜினிகாந்த், விஜயகாந்த் மாதிரி பெரிய நடிகனாக வரலாம் என்று, சென்டிமென்ட் சங்கை ஊதினர்.
கதிர்வேலன் பிளஸ் 2வைத் தாண்ட முடியாமல் தவிக்கும் நிலையில், விஷயத்தை அப்பாவிடம் சொல்லி, கெஜட் மூலம் பெயரை மாற்றப் பணம் கேட்டால், பெல்ட்டால் நாலு வாங்கு வாங்குவார் என்பதால், அம்மாவின் சமையல் அறை ஸ்விஸ் பாங்கில், அவள் சேமித்து வைத்திருந்த பணத்தை, 'ஆட்டை'யை போட்டு, கன கச்சிதமாக காரியத்தை முடித்துக் கொண்டான்.
பள்ளியில், இவனுக்கு நாலு ஆண்டு சீனியரும், இவனை போலவே படிப்பு ஏறாத சினிமாப் பைத்தியமுமான, செந்தில்குமரன் ஏற்கனவே கிராமத்திலிருந்து, 'எஸ்கேப்' ஆகி திருட்டு ரயில் ஏறி, கோடம்பாக்கத்தில் அலைந்து திரிந்து, ஒரு கேமராமேனுக்கு உதவியாளராக செட்டில் ஆகி விட்டான். கேமரா மற்றும் உபகரணங்களைத் தூக்கி வந்து செட் செய்ய, டிராலி தள்ள, கிரேன் ஆபரேட் செய்வது போன்ற இத்தியாதி வேலைகளைச் செய்து, தன் செலவு போக, ஊருக்கு பணம் அனுப்பும் அளவு வசதியாக உள்ளான்.
போன தீபாவளிக்கு ஊருக்கு வந்தவன், 'இங்க இருந்து என்னத்த குப்பை கொட்டப் போறே...சென்னைக்கு வாடா மாப்ளே... கோலிவுட்ல உனக்கு ஒரு, 'ஓபனிங்' கிடைக்காமலா போயிடும். நீ, என் கூட தங்கிக்கலாம்டா... தெரிஞ்சவங்க கிட்டே சொல்லி வச்சிருக்கேன்...' என்று உசுப்பி விட்டான்.
ஒரு சுபயோக சுபதினத்தில், அம்மாவிடம் மட்டும் சொல்லி விட்டு, சென்னைக்கு வந்த கதிர், நடிகர் சங்கத்தில் மெம்பராகி ஆறு மாதம் ஓடிவிட்டது. பத்தோடு பதினொன்றாக கூட்டத்தில் நிற்கும் அல்லது நீல டிரஸ், சிகப்பு முண்டாசு சகிதம் நடனமாடும் ரோல்கள் மட்டுமே கிடைத்தன. பாலைவனத்தை ஒத்த வெப்பத்தை கக்கும், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த இரண்டாம் மாடி அறையில் வாழ்வது ரொம்ப கஷ்டமாக இருந்தாலும், சினிமாவில் வெற்றி பெற்ற பலர், இப்படித் தான் இருந்திருப்பர்; நாம் எந்த மூலை என்று மனதை தேற்றிக் கொண்டான்.
நெடுநாள் ஆசையும், அலைச்சலும், வெறியும், வேதனையும் பலனளிக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.
நேற்று தான் செந்தில் அவன் தோளில் கை வைத்து சொன்னான்... 'மச்சான்... கெஞ்சிக் கூத்தாடி உனக்கு இந்த, 'இன்டர்வியூ' வாங்கியிருக்கேன். சூர்யா சார் படத்தில், கூரியர் பாய் ரோல் கிடைச்சாலே பெரிய விஷயம். இன்னிக்கு முன்னணி கதாநாயகர் எல்லாரும், அவர்கிட்ட குட்டு வாங்கினவங்க தான். ஒரே ஒரு சிக்கல். அவர் ஒரு, 'எக்சென்டிரிக்!' தமிழில் சொன்னா கிறுக்கன். உனக்கு நடிப்பு வருமான்னு ஒரு டெஸ்ட் வைப்பாரு. அதுல பாஸ் செய்தா, அதிர்ஷ்ட தேவதை உன்னை அணைச்சுக்கிட்டான்னு அர்த்தம். இல்லன்னா அடுத்த ரயில்ல ஊருக்குத் திரும்பி போயி, விவசாயம் பார்க்க வேண்டியது தான். வாய்ப்ப நழுவ விட்டுடாதே...' என்றான்.
'என்ன டெஸ்டு வைப்பாரு அண்ணே?'
'அது தெரிஞ்சா... நான் ஏன்டா இப்படி இருக்கேன்... சொன்னேனே அந்த ஆளு ஒரு கிறுக்கன்னு... பத்தாவது மாடியிலிருந்து பல்டி அடிக்க சொல்லுவான்; இல்லே, முதலை முதுகு மேலே ஏறி சவாரி போகச் சொல்லுவான். மூடு இருந்தால் மூணாம் வாய்ப்பாடு சொல்ல சொல்லிக்கூட ஓ.கே.,செய்வான்; எதுக்கும் தயாராக இரு...'என்றான்
'நான் தயார்; செய் அல்லது செத்து மடின்னு முடிவு செய்துட்டேன். டைட்டில் கார்டுல, என் பேர் வராம, நான் ஊர் பக்கமே போக மாட்டேன்...' என்றான் கதிர்.
பத்து மணிக்கு கதவு திறந்தது. கான்பரன்ஸ் ஹாலில் உட்காரச் சொன்னான் செக்யூரிட்டி. ஹாலில், 100 பேர் அமர்ந்திருந்தனர். உதவி இயக்குனர் வசனம் பேச சொல்லி, அதில் பலரை வடிகட்டி, இறுதியாக பதினைந்து பேரை மட்டும் அறைக்குள்ளே அனுப்பினார். அந்த, 15 பேரில் கதிரும் அடக்கம்.
எல்லாரும் இயக்குனரின் வரவுக்காக, அறையின் வாசலையே டென்ஷனுடன் பார்த்துக் கொண்டிருக்க, பின்புற கதவு வழியாக, புயல் மாதிரி நுழைந்தார் சூர்யா.
''பிரண்ட்ஸ்... என்னை பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க... நான் கொஞ்சம் வித்தியாசமானவன். நீங்க எல்லாரும் சூப்பரா நடிச்சு, என்னை கவர் செய்யணும்ன்னு நினைச்சு பயிற்சி எடுத்திருந்தா, மன்னிச்சுடுங்க. நான் அதை பரிசோதிக்கப் போறதில்ல; நடிப்பை, நான் கத்துக் கொடுப்பேன். ஆனா, தகுதி இருக்கான்னு பார்க்க, உங்களை பல கட்டமா டெஸ்ட் செய்வேன். என்ன டெஸ்ட், எப்ப செய்வீங்கன்னு கேக்காதீங்க; என் இஷ்டத்துக்கு செய்வேன். உங்க, ஒவ்வொரு நடவடிக்கையையும், கேமரா மூலம் கண்காணிப்போம்.
''அதுக்கு முதல்ல, காலையிலிருந்து கால் கடுக்க நின்னுகிட்டு இருந்துருப்பிங்க. அதனால, முதல்ல எல்லாருக்கும் மினி டிபன். அப்புறம்... காபி, டீ என்ன வேணும்ன்னு, சமையற்காரர்கிட்ட கேட்டு வாங்கி சாப்பிடுங்க. உங்கள, 15 நிமிடத்திற்கு அப்புறமா சந்திக்கிறேன்,'' என்று சொல்லி வெளியே போனான். டென்ஷனுடன் எல்லாரும் பெருமூச்சை வெளியேற்றினர்.
டிபன் முடிந்ததும், ஒவ்வொருவரும் கேட்டிருந்தபடி காபி, டீ, பால் என்று கூறி, மூன்று தனித்தனி பிளாஸ்க் மற்றும் கப் அன் சாஸருடன், அவர்கள் முன் வைத்தார் சமையல்காரர்.
பிளாஸ்க்கை எடுத்து கப்பில் கவிழ்த்தான் கதிர். ஒரு சொட்டு கூட விழவில்லை; முழித்தான். பார்த்தால் பிளாஸ்க் காலி.
சரியாக, 15 நிமிடம் கழித்து உள்ளே வந்த சூர்யா, ''எல்லாரும் டிபன் சாப்பிட்டாச்சா... யாருக்காவது ஏதாவது பிரச்னை இருக்கா?'' என்று கேட்டார்.
''சார்.. நான் காபி கேட்டிருந்தேன். பிளாஸ்க்குல... ஒண்ணுமேயில்ல,'' என்றான் கதிர். இயக்குனருடன் தனிப்பட்ட முறையில் பேச முடிந்தது என்பதே, அவனுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
''வாட்... இன்னும் யாருக்காவது இப்படி ஆச்சா?''
இரண்டு பேர் தயக்கத்துடன் கையைத் தூக்கினர்.
''சமையல்காரரை கூப்பிடு,'' என்று கொதித்தார் சூர்யா. சமையற்காரர் வந்ததும், அவரை ஓங்கி ஒரு அறை விட்டார். ''என்னய்யா வேலை பாக்குறே நீ... வந்தவங்களுக்கு ஒழுங்கா காபி, டீ தரக்கூடத் துப்பில்லையா? போய்யா போய்... இவங்களுக்கு என்ன வேணுமோ, அதை சீக்கிரம் கொடு,'' என்று கத்தினார்.
மூவருக்கு காபி, டீ வந்தது. குடித்ததும், ''ஆக முதல் கட்டத் தேர்வு முடிந்தது; அதில் மூன்று பேர் தோல்வி. முதலாவது ஆள் கதிர்காந்த்,'' என்று அறிவித்தார் சூர்யா.
''சார்... தேர்வு முடிஞ்சுதா?'' என்று அதிர்ச்சியுடன் கேட்டான் கதிர்.
''ஆமாம் தம்பி... என்னடா இந்த கிறுக்கு இயக்குனர் உளர்றான்னு நினைக்கறியா... உனக்கு காபி இல்லாத பிளாஸ்க் கொடுத்தாங்களே... அது ஒரு செட்டப். உனக்கும், இன்னும் நாலு பேருக்கும் வைக்கப்பட்ட டெஸ்டு அதான். அதுல காபி இல்லன்னாலும் இருப்பதா நினைத்து, கப்புல ரொம்ப ஜாக்கிரதையா ஊற்றி ருசிச்சு குடிக்றாப்புல, பாவனை செய்திருந்தால், உன்கிட்டே சமயோசிதமும், நடிகனாவதற்கு ஒரு திறமையும் இருக்குன்னு தெரிஞ்சிருக்கும். நீயோ உள்ளே காபி இல்லையேன்னு, மலங்க மலங்க முழிச்சுகிட்டு இல்லே இருந்தே... காபி, டிபன் சாப்பிடவா இங்க வந்தீங்க? ரெண்டு பேரு மட்டும் நாங்க எதிர்பார்த்த மாதிரி நடிச்சு, அதுல தேறிட்டாங்க. அடுத்த முறை வாய்ப்பிருந்தா பார்க்கலாம்; இப்ப நீங்க மூணு பேரும் கிளம்பலாம்.''
முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த பேட்ஸ்மேன் போல, தொங்கிய முகத்துடன் கிளம்பினான் கதிர்.
ஓரிரு மாதங்களுக்குப் பின்...
கதிரின் மொபைல் அடித்தது.
''ஹலோ கதிர்காந்த் ஹியர்.''
''சார்... நாளைக்கு, வி.ஜி.பி.,யில் ஷூட்டிங்; ஞாபகப்படுத்தறோம்.''
''ஓ.கே., ஞாபகமிருக்கு.''
மறுபடி போன்.
''கதிர் சார்... ஹார்பர்ல ஷூட்டிங் சனிக்கிழமை மறந்துடாதீங்க.''
''எப்படி மறப்பேன்; டயரில நோட் செய்திருக்கேனே...''
இன்னொரு போன்.
''சார்... பொள்ளாச்சியில், ஒரு வாரம் ஷூட்டிங்.''
''இப்ப தான் புரட்யூசர் போன் செய்து, ஞாபகப்படுத்தினாரு... டன்.''
இப்போதெல்லாம், முக்கால்வாசி சினிமா படங்களின் டைட்டிலிலும், கதிர்காந்த் பெயர் காட்டப்படுகிறது. ஆமாம், சினிமாவில் ஹீரோவாக முடியாது என்று தெரிந்ததும், நண்பன் செந்தில்குமரன் மூலம், ஒரு பாங்க் மேனேஜரைப் பிடித்து, அவுட்டோர் ஷூட்டிங்குகளுக்கு, சாப்பாடு, டிபன் சப்ளை செய்ய லோன் வாங்கி, ஒரு கேட்டரிங் சர்வீஸ் ஆரம்பித்து, சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறான் கதிர்.
செந்தில் வேலனும், தன் எடுபிடி வேலையை விட்டு விட்டு, கதிர் கேட்டரிங்கில் மேனேஜராக ஐக்கியமாகி விட்டான். இன்டஸ்டிரியில், இன்னிக்கு கதிரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை.
'உணவு உபசரிப்பு - கதிர்காந்த் கேட்டரிங் சர்வீஸ்...' என்று டைட்டிலில், கொட்டை எழுத்தில் காட்ட வேண்டும் என்பது தான், அவன் தயாரிப்பாளர்களுக்கு போடும் கண்டிஷன். எந்த டிபன், காபியினால், அவன் நடிகனாகும் வாய்ப்பை இழந்தானோ... அந்த அயிட்டங்கள் இன்று அவனை அமோகமா வாழ வைச்சிட்டிருக்கு!

மாலதி ரகோத்தமன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman - Porur, Chennai,இந்தியா
19-டிச-201401:28:06 IST Report Abuse
Anantharaman கதை சூப்பர் மாலதி மேடம்....
Rate this:
Share this comment
Cancel
P.Subramanian - Chennai,இந்தியா
17-டிச-201411:19:44 IST Report Abuse
P.Subramanian சினிமா உலகம் இப்படித்தான் இருக்கும் என்பதை 'நடிகன்' சிறுகதை வித்தியாசமாக எழுதிஉள்ளார் எழுத்தாளர்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-டிச-201410:17:55 IST Report Abuse
D.Ambujavalli சபாஷ் பிழைக்கிற பிள்ளை இப்படித்தான் இருக்க வேண்டும். நல்ல, விழிப்புணர்வுக் கதை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X