கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 டிச
2014
00:00

கேள்வி: நான் விண்டோஸ் 8.1 வரை அப்டேட் செய்து என் லேப் டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகிறேன். இப்போது இந்த நிலையில், நான் என் டேட்டா பைல்களை பேக் அப் எடுக்க ப்ளாஷ் ட்ரைவ் அல்லது போர்ட்டபிள் ட்ரைவ்களைப் பயன்படுத்த வேண்டுமா? அல்லது, க்ளவ்ட் ட்ரைவில் பேக் அப் எடுப்பதுடன் விட்டுவிடலாமா? எப்படி க்ளவ்ட் ட்ரைவில் பேக் அப் பைல்களைக் கொண்டு செல்வது?
என். பிரகாஷ் சீலன், சென்னை.
பதில்:
பிரகாஷ், நீங்கள் தாராளமாக, OneDrive வசதியினை உங்கள் பேக் அப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பழைய ஸ்கை ட்ரைவ் தான், இப்போது ஒன் ட்ரைவ் என அழைக்கப்படுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களுடைய மல்ட்டி மீடியா மற்றும் டாகுமெண்ட் பைல்களைத் தானாகவே, ஒன் ட்ரைவில் பேக் அப் பைல்களாக சேவ் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட்டரிலும் இவற்றைப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். இதற்கான வழிமுறைகள் இதோ:
முதலில் PC Settings செல்லவும். பின்னர் SkyDrive தேர்ந்தெடுக்கவும். Save documents to SkyDrive by default என்பதனை இயக்கி வைக்கவும். இதுதான் ஒன் ட்ரைவ். எனவே, குழப்பமடைய வேண்டாம். நீங்கள் எந்த புதிய டாகுமெண்ட் ஒன்றை சேவ் செய்தாலும், அது மாறா நிலையில் OneDrive/SkyDriveல் சேவ் செய்திடப்படும். உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரிலும் சேவ் செய்து கொள்ளலாம். OneDrive/SkyDriveல் சேவ் செய்யப்பட்ட பைல் மீது ரைட் கிளிக் செய்து, கம்ப்யூட்டரில் சேவ் செய்திடும் வகையிலும் அமைக்கலாம். இது நீங்கள் இணைய இணைப்பில் இல்லாத போது பயன்படும்.
இனி, உங்களுடைய கேள்விக்கு வருவோம். ப்ளாஷ் ட்ரைவ் மற்றும் கையில் எடுத்துச் செல்லக் கூடிய ஹார்ட் ட்ரைவிலும் உங்கள் பைல்களுக்கு பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளலாம். முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது தானே. இருப்பினும், க்ளவ்ட் ட்ரைவில் சேமித்து வைப்பதுவும் நல்லதுதான்.

கேள்வி: என்னிடம் எச்.பி. லேப்டாப் கம்ப்யூட்டர் உள்ளது. அதனை ஷட் டவுண் செய்த பின்னரும், இடது கீழ் புறத்தில், மூன்று சிறிய விளக்குகள் எரிந்த வண்ணம் உள்ளன. முதல் விளக்கு மின் சக்த்தியைக் காட்டும் வகையில் தொடர்ந்து எரிந்த வண்ணம் உள்ளது. இரண்டாவது லைட்னிங் அடையாளமாக உள்ளது. மூன்றாவது ஹார்ட் ட்ரைவ் இயக்கம் குறித்தது. நடுவில் இருப்பது, விட்டு விட்டு எரிகிறது. இதற்கு என்ன காரணம்? எப்படி இவற்றை எரியாமல் வைப்பது? நான் இணையத்தில் பதில் தேடி அலுத்துவிட்டேன். வழி காட்டவும்.
என். சுபத்ரா தேவி, திருமங்கலம்.
பதில்:
லைட்னிங் அடையாளத்துடன் கூடிய சிறிய விளக்கு பேட்டரியின் நிலையைக் காட்டுவதாகும். இது பேட்டரி சார்ஜ் செய்யப்படுகையில் மட்டுமே எரிய வேண்டும். அல்லது, மிகவும் குறைவாக மின் சக்தி இருப்பதையும், விரைவில் முழுமையாகக் காலியாகிவிடும் நிலையில் இருப்பதையும் காட்டும். இது சிஸ்டம் ஆப் செய்த நிலையில், பேட்டரி சார்ஜ் ஆகாத நிலையில் எரிந்து கொண்டிருந்தால், பேட்டரியில் ஏதோ பிரச்னை இருக்கிறது.
லேப்டாப் கம்ப்யூட்டரை மின்சக்தியுடன் இணைக்கும் வயர் கேபிளை நீக்கவும். பேட்டரியை லேப்டாப் கம்ப்யூட்டரிலிருந்து நீக்கவும். பவர் பட்டனை 30 விநாடிகளுக்கு தொடர்ந்து அழுத்திய வண்ணம் இருக்கவும். பின்னர், மீண்டும் பேட்டரியை, கம்ப்யூட்டரின் உள்ளே வைக்கவும். இப்போது பவர் கார்ட் இணைப்பு கொடுத்து சார்ஜிங் நிலையில் வைத்து கவனிக்கவும்.
இப்போதும் தொடர்ந்து விட்டுவிட்டு எரிந்தால், பவர் கேபிளை எடுத்துவிட்டு, கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்தவும். பின் மீண்டும் இயக்குகையில், இயக்கம் தொடங்கும்போதே, எஸ்கேப் கீயை அழுத்தவும். உடன் F2 கீயைத் அழுத்தவும். இப்போது F2 System Diagnostics அமைப்பு கிடைக்கும். இப்போது கிடைக்கும் மெனுவிலிருந்து Battery Test என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி, பவர் கேபிளை இணைத்துவிட்டு, Start Battery Test என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த சோதனையில், பேட்டரியில் எதுவும் சிக்கல் உள்ளதா என்று காட்டப்படும். நாம் பயன்படுத்தத் தொடங்கி ஓரிரு ஆண்டுகளில், பேட்டரிகள் தங்கள் திறனை இழக்கின்றன. உங்கள் பேட்டரி முழுமையாகச் சார்ஜ் ஆகும் திறனை இழந்திருக்கும். பேட்டரியினை மாற்ற வேண்டியதிருக்கும்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் பூட் ஆகும்போது “Smartbar has stopped working.” என்ற செய்தி காட்டப்படுகிறது. இதனை இயக்க வேண்டுமா? இப்படிப்பட்ட ஒன்று இல்லாமலேயே, என் கம்ப்யூட்டர் நன்றாக இயங்குகிறது.
என். சந்திரா சதீஷ், கோவை.
பதில்:
Smartbar என்பது தேவையற்ற ஒரு ப்ளக் இன் சமாச்சாரம். இது மற்ற புரோகிராம்களுடன் இணைந்து தரப்படுகிறது. அந்த புரோகிராம்கள் இயங்குகையில், ஸ்மார்ட் பார் உங்கள் பிரவுசரின் ஹோம் பேஜினை மாற்றுகிறது. அத்துடன், உங்கள் கம்ப்யூட்டர் குறித்த தகவல்களைத் திரட்டிக் கொள்கிறது. இதனை நீங்கள் நீக்க வேண்டும். இதற்கு Control Panel > Programs > Uninstall a Program எனச் செல்லவும். இப்போது இயங்கும் புரோகிராம்களின் பட்டியல் ஒன்று கிடைக்கும். தேடல் கட்டத்தில் மேல் வலது மூலையில் smartbar என டைப் செய்திடவும். தேடலுக்கான முடிவுகளில், Smartbar என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், Uninstall என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஸ்மார்ட் பார் செயல்படுவது நின்றுவிடும்.

கேள்வி: ஆங்கிலச் சொற்களின் மூலம், மற்றும் அதன் பொருள் மாறியவிதம் குறித்து அறிய, இணையத்தில் நமக்குக் கிடைக்கும் நல்ல தளம் ஒன்றினைக் கூறவும். அடிக்கடி, இது போல சொற்களின் வளர்ச்சி குறித்து அறிய வேண்டிய தேவை ஏற்படுகிறது.
என். கிருஷ்ணன், சென்னை.
பதில்:
உங்களுக்கு மட்டுமல்ல, ஆங்கில மொழியினை ஐயம் எதுவுமின்றிக் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள், ஆங்கிலச் சொல் ஒன்று எப்படி பொருள் தருகிறது, எப்படி அது பல ஆண்டுகளில் வளர்ந்து, பிற சொற்களுடன் இணைந்து, பொருள் மாற்றம் அடைந்து இன்றைய நிலைக்கு வந்துள்ளது என்று தெரிந்து கொள்வது நல்லது. இதனால், ஆங்கில மொழிப் பயன்பாடு குறித்து நாம் அன்கு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு ஒரு சொல் குறித்து, அதன் பாரம்பரிய மாற்றம் குறித்து பயில்வதனை etymology of a word என்று கூறுவார்கள். இதற்கான பல தளங்கள் இருந்தாலும், http://www.etymonline.com என்ற முகவரியில் உள்ள தளமே, சிறப்பாக இயங்கி, எளிய முறையில் சொல் குறித்த தகவலைத் தருவதாக அமைந்துள்ளது. இந்த தளத்தைப் பயன்படுத்துவது எளிது. தளத்தின் முகப்பில் தரப்பட்டுள்ள கட்டத்தில், நாம் எந்த சொல் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறோமோ, அதனை டைப் செய்து எண்டர் தட்ட வேண்டும். உடன் அந்த சொல், மற்றும் அந்த சொல் இணைந்த சொல் தொகுதி என அனைத்தும் காட்டப்படும். எடுத்துக் காட்டாக, நான் button என்ற சொல் குறித்து அறிய விரும்பியபோது, button, buttonhole, push-button, என்பனவுடன், இன்னும் பல சொல் தொகுதிகள் காட்டப்பட்டன. ஒவ்வொன்றிலும், அந்த சொல் எந்த வகையில் (parts of speech) ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது என்ற விளக்கமும் தரப்பட்டது. அந்தச் சொல்லின் பொதுவான விளக்கமும் தரப்படுகிறது. பின் எப்படி அந்த பொருள், இந்த சொல்லால் குறிக்கப்பட்டது எனவும் விளக்கப்படுகிறது.
இத்துடன், அகரவரிசைப்படியும் தேடி அறியும் வசதி உள்ளது. எடுத்துக் காட்டாக, தேடல் கட்டத்தில் p என டைப் செய்தால், p என்பதில் தொடங்கும் சொற்கள் அனைத்தும் வரிசையாகத் தரப்படும். இந்த வகையில் சொற்களைப் பார்த்து அறிவதும் நமக்கு ஆர்வமூட்டும் செயலாக உள்ளது. எடுத்துக் காட்டாக, 'l' என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களோடு, எந்த பின் இணைப்புகள் இணையக் கூடும் (-ly, -logue, -ling, மற்றும் பிற) என்பதனை நாம் அறிய முடிகிறது.

கேள்வி: வை பி ரெளட்டர் சாதனத்தைப் பயன்படுத்தி இணைய இணைப்பு பெற்று வருகிறேன். என்னுடைய டேப்ளட் பி.சி.யில், என்னுடைய ரெளட்டரின் பெயர் காட்டப்படுகிறது. ஆனால், அதில் இணைய முயற்சிக்கையில், “authentication problem” என அறிவிப்பு கிடைக்கிறது. இதில் எங்கு தவறு ஏற்படுகிறது?
எஸ். சொர்ண மாலா,தூத்துக்குடி.
பதில்:
நல்ல கேள்வி. பலருக்கு இந்த பிரச்னைகள் அடிக்கடி ஏற்படலாம். இதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் கீழே தருகிறேன். பெரும்பாலும், (எப்போதும் இல்லை) நீங்கள் பாஸ்வேர்ட் வழங்குவதில் ஏதேனும் தவறிழைத்திருக்கலாம். இது போன்ற சாதனங்களுடன் இணைகையில், பாஸ்வேர்ட் அமைக்கும்போது, அதனை ஒவ்வொரு எழுத்தாகப் பார்க்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. அதற்கான செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தினால், பாஸ்வேர்ட் அமைக்கையில், ஒவ்வொரு எழுத்தாகக் காட்டப்பட்டு பின் அது புள்ளியாக மாறும். அமைக்கும்போது, சரியாக அமைக்கப்படுகிறதா என்பதை, அமைப்பவர் சரி பார்த்துக் கொள்ளலாம். ஆனால், இதனை எப்போதும் அல்லது அனைத்து பாஸ்வேர்ட்களுக்கும் இவ்வாறு திரையில் தோன்றும்படி அமைக்கக் கூடாது. அடுத்தவர் இதனை அறியும் வாய்ப்பு ஏற்படும். மேலும், பாஸ்வேர்ட்களை அமைக்கையில், சிறிய, பெரிய (lower case and upper case) எழுத்துக்களைச் சரியாக அமைக்க வேண்டும். இதில் மாற்றங்கள் இருந்தால், அது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டு அனுமதி மறுக்கப்படும்.
இதன் பின்னரும் சரியாகவில்லை என்றால், உங்கள் ரெளட்டர் அல்லது மோடம் சாதனத்தை, 10 விநாடிகளுக்கு மின் இணைப்பைத் துண்டித்து, பின் மீண்டும் இயக்கவும். அதன்பின், உங்கள் டேப்ளட் பி.சி.யில் இணைப்பிற்கு முயற்சிக்கவும். இப்போதும் பிழைச் செய்தி கிடைத்தால், தனிப்பட்ட முறையில், உங்கள் ரெளட்டர் பாஸ்வேர்ட், டேப்ளட் பி.சி. மற்றும் வை பி செட்டிங்ஸ் ஆகியவற்றைச் சோதனை செய்திடவும்.

கேள்வி: என் மனைவி தன் கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், திடீரென எந்தப் பணியும் செய்யமுடியாதபடி, அப்படியே திரை உறைந்த நிலைக்குச் சென்றுவிடுகிறது. எந்த நடவடிக்கையும் கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மீண்டும் கொண்டு வரவில்லை. மீண்டும் அனைத்து பணிகளையும் அப்படியே விட்டுவிட்டு கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திட வேண்டியதாயிற்று. இது எதனால் ஏற்படுகிறது?
ஆர். கே. சுந்தர மகாலிங்கம், மதுரை.
பதில்:
நீங்கள் குறிப்பிட்ட சுழ்நிலைக்குத் தள்ளப்பட்ட போது கம்ப்யூட்டரில் என்ன என்ன அப்ளிகேஷன்கள் இயங்கிக் கொண்டிருந்தன என்று துல்லியமாகத் தெரியாதவரை, இது போன்ற உறைநிலைக்கான காரணம் இதுதான் என்று கூற இயலாது. ஏனென்றால், இந்நிலை பல காரணங்களினால் ஏற்படலாம். ஒரே நேரத்தில் பல வேலைகளை எடுத்துச் செய்ய கம்ப்யூட்டரை அதனை இயக்குபவர் கொண்டு சென்றிருக்கலாம். கம்ப்யூட்டரின் திறனை எல்லாம், அதில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் சில வேலைகளை எடுத்துச் செய்ய முற்பட்டால், கம்ப்யூட்டர் தன் இயக்கத்தை சட் என நிறுத்திக் கொள்ளும். இந்த சூழ்நிலையில் Ctrl+Alt+Delete என்ற கீகளை அழுத்தி, டாஸ்க் மானேஜரை இயக்குங்கள். இதில் Processes என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுத்தால், அப்போது கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும் பட்டியலிடப்படும். அவை சி.பி.யு.வின் திறனை எந்த அளவிற்கு உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன என்று காட்டப்படும். அதே நேரத்தில் அவை பயன்படுத்தும் ராம் மெமரியின் அளவும் காட்டப்படும். இவை அதிகமாகும்போது, நிச்சயம் கம்ப்யூட்டர் வேறு வழி தெரியாமல், அதாவது முறையாக, அப்ளிகேஷன்களை மூடுவதற்குக் கூட இடமின்றி கம்ப்யூட்டரின் நிலை இருப்பதால், அது அப்படியே செயலற்று நின்றுவிடும். கம்ப்யூட்டர் ஒரு பணியை முடிக்க அதற்கு நேரம் கொடுக்கவும். பின் அடுத்த பணிக்கு அதனைக் கொண்டு செல்லவும். அதிக பணி மேற்கொள்ளும் நிலை தொடர்ந்து ஏற்பட்டால், கம்ப்யூட்டரின் உள்ளே மிக அதிகமான அளவில் வெப்பம் ஏற்பட்டும், கம்ப்யூட்டர் உறை நிலைக்குச் செல்லலாம்.

கேள்வி: விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றை என் மகன் எனக்கு வாங்கித் தந்துள்ளார். இதற்கான மேனுவல் எனப்படும் பயிற்சிப் புத்தகம் எதுவும் இல்லை. இதனை எங்கிருந்து பெறலாம். விலை கொடுத்தாவது பெற முடியுமா?
ஏ.என். ஆராவமுதன், சோழவந்தான்.
பதில்
: எலக்ட்ரானிக் சாதனங்களுடன், தடிமனான அதன் செய்முறை நூல், தரப்பட்டது எல்லாம் மலையேறிவிட்ட பழக்கமாக மாறிவிட்டது. அதற்குப் பதிலாக, சாதனத்துடன் தரப்படும் சி.டி. ஒன்றில் கிடைக்கிறது. உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டருடன் அது தரப்படவில்லை என்றால், அதனை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணைய தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது, உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரை தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து, டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

கேள்வி: ஐபேட் சில மாதங்களாகப் பயன்படுத்தி வருகிறேன். அவ்வப்போது நிறைய எண்ணிக்கையில், அப்ளிகேஷன் புரோகிராம்கள், கேம்ஸ் ஆகியவற்றை நிறுவினேன். இப்போது சில தேவை இல்லை. இவற்றின் ஐகான்களை நீக்குவது எப்படி?
என். ராஜேந்திரன், சிவகாசி.
பதில்
: ஐபேட் திரையில் (ஹோம் ஸ்கிரீன்) அமைந்துவிட்ட ஐகான்களை நீக்குவது மிக எளிது. திரையில் உள்ள ஐகான் எதன் மீதாவது விரலை வைத்து அழுத்தவும். இரண்டு அல்லது மூன்று விநாடிகள் தொடர்ந்து அழுத்தினால், அனைத்து ஐகான்களும், ஆடத் தொடங்கும். எந்த ஐகான்களை எல்லாம், நீக்க முடியுமோ, அதன் இடது மேல் மூலையில் ஓர் எக்ஸ் அடையாளம் இருக்கும்.
அந்த எக்ஸ் அடையாளம் மீது தட்டவும். ஐகான் நீக்கப்படும். ஒரே முறையில் நீங்கள் பல ஐகான்களை நீக்க விரும்பினால், பல கேம்ஸ்களில் மேற்கொள்ளும் முறை போல, ஒரு ஐகானை இன்னொன்றின் மீது இழுக்கவும். இது ஒரு போல்டரை உண்டாக்கும். இதற்கும் ஒரு பெயரை நீங்கள் கொடுக்கலாம். இதில் எந்த அப்ளிகேஷனையும் இழுத்துச் சென்று, அதில் தனியே வைத்துக் கொள்ளலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X