இந்தியா எப்படி இணையத்துடன் இணைகிறது?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 டிச
2014
00:00

அண்மையில், ஏர்டெல் நிறுவனம், தன் இணைய இணைப்பினைத் தரும் கடலுக்கடியிலான கேபிள்களில் பிரச்னை ஏற்பட்டதால், இணைய இணைப்பில் ”தகவல் கசிவு” ஏற்படுவதாகவும், அதனால் இணைப்பு வேகம் குறைவாக இருக்கும் என்று செய்தி அனுப்பியதாகப் பலர் தெரிவித்தனர். விரைவில் இது சரியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. அப்படியே அது சரி செய்யப்பட்டது.
பலர், நாம் தான் வயர்லெஸ் இணைப்பின் மூலம் தானே, இணைய இணைப்பு கொண்டிருக்கிறோம்? பின் எப்படி கடலுக்கடியில் கேபிள் எல்லாம் இங்கு வருகிறது? என்று கேள்வி கேட்டனர். ஒரு வாசகி, பேஸ்புக்கில் இதனைப் பெரிய கேள்வியாகக் கேட்டு, அதற்குப் பலரும் பல விதமாகப் பதில் அளித்திருந்தனர்.
இதன் அடிப்படையில், இந்தியா எப்படி இணையத்துடன் இணைந்துள்ளது? என்ற கேள்வியுடன் தகவல்களைத் தேடியபோது கிடைத்த விபரங்களை இங்கு பார்க்கலாம்.
இந்தியாவில் பன்னாட்டளவிலான தகவல் அலைவரிசைக் கற்றையினைப் பயன்படுத்துவதில், நான்கு பெரிய நிறுவனங்கள் இயங்குகின்றன. அவை: வி.எஸ்.என்.எல். (விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்ற பொதுத் துறை நிறுவனமாக இயங்கி, பின்னர் டாட்டா குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிறுவனமாகும்.), பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் பி.எஸ்.என்.எல்.
இந்த நிறுவனங்களில், மிகப் பெரிய அளவில் செயல்படுவது டாட்டா குழும நிறுவனமாகும். மிகச் சிறிய அளவில் இயங்குவது பி.எஸ்.என்.எல். நிறுவனம். ரிலையன்ஸ் இந்தப் பிரிவில் வேகமாகத் தற்போது வளர்ந்து வருகிறது.
இந்தியா இணையத்துடன் நான்கு நகரங்களில் இணைகிறது. அவை: சென்னை, மும்பை, கொச்சின் மற்றும் தூத்துக்குடி. இவை அனைத்தும் துறைமுக நகரங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நகரங்கள் அனைத்திலும் தரைவழித் தொடர்பு நிலையங்களாக இயங்குகின்றன. இவை தரைவழியில் பதிக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு கேபிள்களை, கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள சப்மரைன் கேபிள்களுடன் இணைக்கின்றன.
அலைக்கற்றை வரிசை என எடுத்துக் கொண்டால், டாட்டா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் கோலோச்சுகின்றன. அதனால் தான், எம்.டி.என்.எல். நிறுவனம், அண்மையில், டாட்டா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து, அலைக்கற்றை பயன்பாட்டினை விலை கொடுத்து வாங்கியது. எப்படி, பி.எஸ்.என்.எல். போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும்போது, தனியார் நிறுவனங்கள் வசம் இந்த தொடர்பு வர்த்தகம் சென்றது என நாம் நினைக்கலாம். அரசு, 'இந்த கடலுக்கடியில் கேபிள் போடுவது, இணைப்பு தருவது போன்ற விஷயங்கள் அதிக லாபம் தரும் வர்த்தகம் இல்லை' என்று ஒதுங்கிக் கொண்டதே காரணம். இது உண்மையா என்று நாம் கேள்விக் கணை தொடுத்தாலும், பி.எஸ்.என்.எல்.மற்றும் எம்.டி.என்.எல். ஆகியவை, தங்கள் அலைக்கற்றை அலை வரிசைக்கும், இணைய இணைப்பிற்கும், ரிலையன்ஸ் மற்றும் டாட்டா நிறுவனத்தினையே நம்பி உள்ளன என்பதே உண்மை.
ஆனால், இப்போது, பி.எஸ்.என்.எல். தனக்கென ஒரு தரை வழித் தொடர்பு நிலையத்தை அமைத்து இயக்க வேண்டும் என எண்ணித் திட்டமிட்டு, மேற்கு வங்காளத்தில், இதற்கான நிலையம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இனி, இந்தியாவை உலகத்தின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் 8 சப் மெரைன் கேபிள் கட்டமைப்பு குறித்து இங்கு பார்க்கலாம்.
1. SMW3w: இதன் விரிவாக்கம் South East Asia - Middle East - Western Europe என்பதாகும். இந்த கேபிள், இந்தியாவை, மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைக்கிறது. உலகைத் தழுவியபடி கடலில் புதைக்கப்பட்டிருக்கும் இந்த கேபிளுக்கு 39 இடங்களில் தொடர்பு நிலைய இணைப்புகள் உள்ளன. இந்த கேபிள், இந்தியாவைப் பொறுத்தவரை, மும்பை நகரத்தில் இயங்கும் தரை வழி நிலையம் வழியாக முதலில் இணைக்கப்பட்டுள்ளது. பிற ஆசிய நாடுகளை, கொச்சின் நகரில் இயங்கும் தரை வழி நிலையம் வழியாக இணைக்கிறது. மும்பையில் உள்ள தரைவழி இணைப்பு மையம் முன்பு வி.எஸ்.என்.எல். என்று அழைக்கப்பட்ட, தற்போது டாட்டா குழுவிற்குச் சொந்தமான நிறுவனப் பிரிவிற்குச் சொந்தமானதாகும்.
2. SMW4: இதன் விரிவாக்கம் South East Asia -- -- Middle East - Western Europe என்பதாகும். இந்த கேபிள் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் இணைக்கப்படுகின்றன. இந்த கேபிள் 17 தரைவழி இணைப்பு இடங்களைத் தொடுகிறது. இந்தியாவில் மும்பை மற்றும் சென்னையில் உள்ள நிலையங்களில் இணைந்து கொள்கிறது. மும்பையில் உள்ள நிலையம் டாட்டாவிற்குச் சொந்தமானது. சென்னை நிலையம் பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்குச் சொந்தமானது.
3. SAFE : இதன் விரிவாக்கம் South Africa Far East Cable. தென் ஆப்பிரிக்காவில் உள்ள மெல்க்பாஸ்ட்ராண்ட் (Melkbossstrand) என்னும் இடத்திலிருந்து வருகிறது. டர்பன், மொரிசியஸ் ஆகிய இடங்களைத் தொடுகிறது. அதன் பின் இந்தியாவில் கொச்சின் நகரில் உள்ள தரைவழி நிலையத்தினைத் தொடுகிறது. கொச்சின் நகரில் உள்ள இந்த நிலையம் டாட்டாவிற்குச் சொந்தமானது.
4. FLAG : இதன் விரிவாக்கம் Fiber Optic Link Around the Globe என்பதாகும். இந்த கேபிள் சூயஸ் கால்வாய் வழியாகச் சென்று, மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கிறது. இந்தியாவில் இது மும்பை நிலையத்துடன் இணைகிறது. இந்த கேபிள் நெட்வொர்க்கினை FLAG Telecom நிறுவனம், சொந்தமாக வைத்திருந்தது. இந்நிறுவனத்தை டாட்டா நிறுவனம் விலைக்கு வாங்கியது. மும்பையில் இந்தியாவை இணைத்த பின்னர், இந்த கேபிள் தென் கிழக்கு ஆசிய நாடுகளைத் தொடச் செல்கிறது.
5. i2i : இதன் விரிவாக்கம் Airtel SIngtel ஆகும். இது சிங்கப்பூரிலிருந்து சென்னை வரை 3,100 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் மற்றும் சிங்கப்பூர் நிறுவனம் கூட்டாக இதனை அமைத்துள்ளன. இந்தியாவிற்கான இதன் தரை வழி நிலையத் தொடர்பு, சென்னையில் உள்ளது. சிங்கப்பூரில் இருந்து இந்த கேபிள் SEA-ME-WE 3 மற்றும் APCN 2 என்ற சப் மரைன் கேபிள்களுடன் இணைக்கப்படுகிறது.
6. TIC: மேலே ஐந்தில் கூறப்பட்ட i2i கேபிள் செல்லும் வழியிலேயே இதுவும் செல்கிறது. இது வி.எஸ்.என்.எல் (டாட்டா) நிறுவனத்திற்குச் சொந்தமானது. இதற்கான தரைவழி இணைப்பு நிலையம் சென்னையில் இயங்குகிறது. சிங்கப்பூரில், இது சாங்கி நகரில் தரை வழி இணைப்பிற்கென இணைக்கப்பட்டுள்ளது. இந்த கேபிளின் மொத்த நீளம் 3,175 கி.மீ.
7. Falcon: ஐரோப்பா, மத்தியகிழக்கு மற்றும் இந்தியாவை இது இணைக்கிறது. இந்தியாவில், மும்பை நகரில் உள்ள தரை வழி இணைப்பு மையத்தில் இணைகிறது. கேபிள் மற்றும் தரைவழி இணைப்பு மையம் ஆகியவை ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.
8. Indo-Sri Lanka Cable: இதற்கான தரைவழி இணைப்பு நிலையங்கள் தூத்துக்குடியிலும், இலங்கையில் கொழும்புவிலும் உள்ளன. இது பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்குச் சொந்தமானது.
மேலே சொல்லப்பட்ட 8 கடல் வழி கேபிள்களுடன், பாரதி ஏர்டெல் நிறுவனம், மேலும் 15 தகவல் தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து, உலகைச் சுற்றி Europe India Gateway என்ற ஒரு சப் மரைன் கேபிளை அமைத்து வருகிறது. இந்த கேபிள், இந்தியாவை பிரிட்டனுடன் இணைக்கும். இந்த கேபிள் அமைக்க 70 கோடி டாலர் செலவாகும் எனத் திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த கேபிள் அமைக்கப்படும் தூரம் 15,000 கி.மீ. ஆகும்.
இந்த கேபிள்களின் வழியாகத்தான், இணையப் போக்குவரத்து நடைபெறுகிறது. இவை, இதில் நல்ல அனுபவம் பெற்ற பொறியாளர்களால் பராமரிக்கப்படுகின்றன. இருப்பினும், எதிர்பாராத நேரங்களில், பழுது ஏற்பட்டு, இந்த கேபிள்கள் வழியே செல்லும் டேட்டா பாதிக்கப்படுகிறது. இவற்றில் ஒன்றில், முழுமையாகப் பழுதானாலும், மற்ற கேபிள்கள் வழி, அந்த டேட்டா போக்குவரத்து மாற்றிவிடப்பட்டு, நமக்கு இணைய இணைப்பு கிடைக்கும் வகையில், அமைக்கப்பட்டுள்ளன. எனவே, நாம் மொபைல் போனில் இணைய இணைப்பு பெற்றாலும், டேட்டா ட்ரைவ் வழியாகப் பெற்றாலும், இந்த கேபிள்களே அடிப்படையில் நமக்கு உதவுகின்றன.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X