கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 டிச
2014
00:00

கேள்வி: என் லேப்டாப் கம்ப்யூட்டரில் Share It என்ற புரோகிராமினைத் தவறுதலாகவோ, நானாகத் தேர்ந்தெடுத்தோ, தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்துவிட்டேன். அதனை Add or remove புரோகிராம் மூலம் நீக்க முடியவில்லை. இதனை நீக்குவதற்கான வழியைக் கூறவும்.
டி.இஸ்மாயில், உத்தமபாளையம்.
பதில்
: இஸ்மாயில், உங்களிடம் லெனோவா லேப்டாப் கம்ப்யூட்டர் உள்ளது என்று எண்ணுகிறேன். Share it என்பது, அந்த நிறுவனம் பதிந்து கொடுக்கும் ஒரு புரோகிராம் ஆகும். இது ஸ்பேம் புரோகிராம் இல்லை. இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்களுடன் பைல்களை வை பி மூலம் பகிர்ந்து கொள்ளலாம். இதனை நீங்கள் அறியாமலேயே, உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்திருக்க முடியாது.
எப்படி இருந்தாலும், இதனை எளிதில் நீக்கலாம். ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, All Programs தேர்ந்தெடுக்கவும். இங்கு Share It புரோகிராமிற்கான பட்டனில் கிளிக் செய்தால், சிறிய மெனு கிடைக்கும். இதில் Uninstall என்று இருப்பதில் கிளிக் செய்தால், புரோகிராம் நீக்கப்படும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பாதுகாப்பில்லை என்றால், ஏன் இன்னும் மைக்ரோசாப்ட் அதனை இயக்க விட்டு வைக்கிறது? எக்ஸ்பியுடன் தரப்பட்ட எஸ்.பி. 1,2 மற்றும் 3 பேட்ச் பைல்கள் எல்லாம், தற்காலிகமாக பாதுகாப்பு என்ற பெயரில் தரப்பட்டவை என்றே நினைக்கிறேன். எக்ஸ்பியை இப்போது இயக்குவது தேய்ந்து போன டயரோடு காரை ஓட்டுவது மாதிரி. பின் ஏன் மைக்ரோசாப்ட் அதை அனுமதிக்கிறது?
ஆர்.கே. பிரகாஷ் குமார், விருத்தாசலம்.
பதில்:
2001ல் அறிமுகப்படுத்தப்பட்டு, நிலையாக இயங்கக் கூடிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகப் பல ஆண்டுகள் உலா வந்த விண்டோஸ் எக்ஸ்பி, இப்போது அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது. தற்போது, கம்ப்யூட்டர்கள் அனைத்தும் பெரும்பாலும் இணையத்தில் இணைக்கப்பட்டே இயங்குகின்றன. அதனால், ஆபத்தினைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களும் அதிகமாகி உள்ளன.
நீங்கள் தந்துள்ள தேய்ந்து போன டயர் எடுத்துக்காட்டுக்கு வருகிறேன். டயர் தேய்ந்து போனது உண்மை தான். ஆனால், தேயும்போது அவ்வப்போது மைக்ரோசாப்ட் அதனைச் சரி செய்து கொண்டு வந்தது. காரை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்த பின்னர், விற்பனை செய்த நிறுவனம், 'காரை ஓட்டாதே' என்று கூற முடியாது. அதே போல, மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர் ஒவ்வொருவரையும், விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவதை நிறுத்து எனக் கட்டளையிட முடியாது. காருக்கான ஆபத்து, பழுது எங்கு ஏற்படும் எனத் தெரியும். ஆனால், பெர்சனல் கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை ஆபத்து எங்கிருந்து வரும் எனக் கணிப்பது மிகவும் சிரமமான செயலாகும்.
தகவல் தொழில் நுட்பத்தில் பல்லாண்டு ஆய்ந்து அறிவு பெற்ற ஒரு குழு, ஒவ்வொரு வகை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வழியாகவும், அவை இயங்கும் கம்ப்யூட்டர்களில் புகுந்து தங்களுக்கு வேண்டிய தகவல்களைத் திருடிக் கொண்டே இருக்கின்றன.
இந்த ஆபத்து தற்போது விண்டோஸ் இயக்கத்திற்கு மட்டுமல்ல. ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ். ஏன் மிகப் பாதுகாப்பானது என்று கருதப்படும் லினக்ஸ் சிஸ்டத்திற்கும் கூட ஏற்படுகிறது. எனவே, நாம் தான் கவனத்துடன் செயல்பட வேண்டும். மைக்ரோசாப்ட் உங்களிடம் எக்ஸ்பியைப் பயனப்டுத்தாதே என்று கூறாது. நீங்கள் தான் முடிவெடுத்து செயல்பட வேண்டும்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட் செல்களில் பார்டர் கோடுகளை எப்படி அமைக்கலாம்? எக்ஸெல் தரும் கோடுகளைப் பயன்படுத்துவதைக் காட்ட்டிலும் நானே, பார்டர் லைன் வரைய விரும்புகிறேன். ஏனென்றால், சற்று வித்தியாசமாக எதனையும் அமைக்க வேண்டும் என விரும்புபவன் நான். நான் விண்டோஸ் 7 மற்றும் ஆபீஸ் 2007 பயன்படுத்துகிறேன். வழி சொல்லவும்.
என். சித்ரா கணேசன், மயிலாடுதுறை.
பதில்:
இதற்கு வழக்கமான வழி, பார்டர்களை அமைக்க வேண்டிய செல் அல்லது செல்களைத் தேர்ந்தெடுத்து, பின்னர் Format Cells டயலாக் பாக்ஸில், Border டேப்பினைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், எக்ஸெல் புரோகிராமில் செட் செய்த கோடுகள் இடப்படும். நீங்கள் கூறியபடி, நீங்களே வரைய வேண்டி விரும்பினால், அதற்கு ஒரு சுருக்க வழி உள்ளது.
ரிப்பனில் ஹோம் டேப்பினைத் திறக்கவும். இதில் உள்ள Font குரூப்பில், Border டூலில் உள்ள கீழ்நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். Borders தேர்ந்தெடுக்கவும். இனி, மவுஸ் கர்சர் சிறிய பென்சிலாக மாறும். இதனைக் கொண்டு நீங்கள் விரும்பியபடி பார்டரை அமைக்கலாம்.

கேள்வி: என் லேப் டாப் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7. இதன் டாஸ்க் பாரில் வலது பக்கம் உள்ள ஸ்பீக்கருக்கான வால்யூம் கண்ட்ரோல், நெட்வொர்க் குறித்த அறிவிப்பு, மின் சக்தி அளவு காட்டல் ஆகியவற்றை மறைத்திட விரும்புகிறேன். ஏனென்றால், இவற்றை நான் பயன்படுத்துவதே இல்லை. இவற்றை மறைத்திட என்ன வழி? இவற்றை மறைப்பதால், ஏதேனும் செயல்பாட்டில் பிரச்னை ஏற்படுமா?
எம். கந்தசாமி, சென்னை.
பதில்:
முதலில் இதனை எப்படி மேற்கொள்வது என்பதற்கான வழிகளைச் சொல்கிறேன். டாஸ்க் பாரின் வலது பக்கத்தில், மேல் நோக்கிய சிறிய அம்புக் குறி ஒன்று காட்டப்படும். இதன் அருகே, மவுஸ் கர்சரைக் கொண்டு செல்லவும். அப்பொது 'Show Hidden Icons' என்று காட்டப்படும். இதில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் 'Customize' என்பதில் கிளிக் செய்திடவும். கண்ட்ரோல் பேனலில் "Notification Area Icons" என்ற விண்டோ காட்டப்படும். இந்த விண்டோவின் கீழாக உள்ள "Turn system icons on or off" என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது இந்த விண்டோ "Turn system icons on or off" என்பதாக மாறும். இதில் "Clock", "Volume" (the speaker), "Network", "Power", and "Action Center" என்பவை வரிசையாகக் காட்டப்படும். இதில் "On" அல்லது "Off" என்பதனை உங்கள் விருப்பம் போல் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். அனைத்தும் தேர்ந்தெடுத்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். நீங்கள் Off செய்தவற்றுக்கான ஐகான் இனி காட்டப்பட மாட்டாது.
இந்த மாற்றத்தை மேற்கொண்டு நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? இதனால், ஸ்கிரீனில் உங்களுக்குக் கூடுதல் திரை கிடைக்காது. எனவே, இதனை அப்படியே வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது பயன்படுத்துவதே எளிதான செயலாகும். இல்லை எனில், தேவைப்படுகையில், மேலே சொன்ன அனைத்து செயல்பாடுகளையும் மீண்டும் மேற்கொண்டு, தேவையானதன் அருகே On என்பதில் கிளிக் செய்திட வேண்டியதிருக்கும்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான உதவிக் குறிப்புகள் காட்டும் விண்டோவில், எழுத்துகள் மிகச் சிறியதாக இருப்பதால், அவற்றைப் படித்துத் தெரிந்து கொள்வது மிகக் கடினமாக உள்ளது. எனக்கு வயது 69. இதனைப் பெரியதாகக் காட்ட, ஏதேனும் வழி உள்ளதா?
என்.சீனிவாசகம், புதுச்சேரி.
பதில்:
நான்கு அளவுகளில் இந்த உதவிக் குறிப்புகளுக்கான எழுத்து அளவினை அமைக்கலாம். முதலில் மானிட்டர் திரையில் வேறு எந்த புரோகிராம் விண்டோவும் இல்லாதபோது, எப் 1 கீ அழுத்தவும். இப்போது விண்டோஸ் ஹெல்ப் அண்ட் சப்போர்ட் (Windows Help and Support) என்ற விண்டோ கிடைக்கும். இதன் மேலாக வலது மூலையில் "Options" என்னும் பட்டனில் அழுத்தவும். இப்போது கிடைக்கும் மெனு விண்டோவில் "Text Size" என்பதைக் காணலாம். இதனைத் தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் பட்டியலில், Largest, Larger, Medium, Smaller மற்றும் Smallest என்ற பிரிவுகள் இருக்கும். இதில் Medium என்பது மாறா நிலையில் இருக்கும். இனி, நீங்கள் உங்களுக்குப் பிடித்த பெரிய அளவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். மீண்டும் எந்த அளவிற்கு வேண்டுமானாலும், மேலே சொல்லப்பட்டுள்ள வழி சென்று மாற்றி அமைக்கலாம்.

கேள்வி: புதியதாக விண்டோஸ் 8 உள்ள சிஸ்டம் பயன்படுத்துகிறேன். இதனை வாங்கியவர்களுக்கு, ஸ்கை ட்ரைவில் இதில் உருவாக்கப்படும் பைல்கள், தானாக சேவ் செய்யப்படும் என்று கூறினார்கள். ஆனால், சேவ் செய்யப்படுகிற மாதிரி தெரியவில்லை. இதற்கான காரணம் என்ன? எப்படி செட் அப் செய்வது?
-ரா. இளைய ராணி, திருப்பூர்.
பதில்:
விண் 8 சிஸ்டத்தில், கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், மைக்ரோசாப்ட் அமைத்துள்ள ஸ்டோரேஜ் ட்ரைவ் தான் ”ஸ்கை ட்ரைவ்” ஆகும். விண் 8 சிஸ்டம் முழுமையாக, ஸ்கை ட்ரைவுடன் இணைந்து செயல்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டம் கட்டணம் செலுத்தி வாங்கும்போதே, குறிப்பிட்ட அந்த உரிமத்திற்கு என ஸ்கை ட்ரைவில் 7 ஜிபி இடம் ஒதுக்கப்படுகிறது. நம் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம் லாக் இன் செய்தால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நீங்கள் உருவாக்கும் பைல்கள் அனைத்தும் அதில் சேவ் செய்து ஸ்டோர் செய்யப்படுகிறது. தொடர்ந்து நீங்கள் பைல்களைத்திருத்துகையில், அப்டேட் செய்யப்படுகிறது. எனவே, நீங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உருவாக்கும் பைல்களை, உலகின் எந்த மூலையில் இருந்தும், விண் 8 சிஸ்டம் பயன்படுத்தும் எந்த சாதனத்தின் வழியாகவும் பெற்று பயன்படுத்தலாம். இந்த வழிமுறையை (“Fetching”) என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. தமிழில் “தருவித்தல்” என அழைக்கலாம். ஸ்கை ட்ரைவில் நாம் கட்டாயமாக நம் பைல்களை ஸ்டோர் செய்திட வேண்டியதில்லை. நாம் விரும்பினால் மட்டுமே இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விரும்பவில்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டரிலேயே இந்த பைல்கள் சேவ் செய்யப்படும். ஆனால், உங்கள் கேள்வியைப் பொறுத்தவரை, ஸ்கை ட்ரைவில் பைல்கள் சேரவில்லை என்று எதைக் கொண்டு சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. முதலில் நீங்கள் பணியாற்றுகையில், இணைய இணைப்பில் உள்ளீர்களா? என்று உறுதி செய்து கொள்ளவும். வண்டியில் ஏறாமலேயே, ”இன்னும் ஊர் வரவில்லையே?” என்று கேட்பது போல் உள்ளது, நீங்கள் சொல்வது. நீங்கள் இணைய தொடர்பில் இல்லாமல், விண் 8 சிஸ்டத்தில் பணி புரிந்தால், நீங்கள் உருவாக்கும் பைல்களை ஸ்கை ட்ரைவில் சேமிக்க முடியாதே. அதுதான், உங்களைப் பொறுத்தவரை நடந்து வருகிறது. நீங்கள் விருப்பப்பட்டால், ஸ்கை ட்ரைவினை இலவச ஸ்டோரேஜ் சிஸ்டமாகப் பயன்படுத்தலாம்.

கேள்வி: நல்ல தரமான கடையில் ஒரு யு.எஸ்.பி. டேட்டா ப்ளாஷ் ட்ரைவ் வாங்கினேன். அதன் கொள்ளளவு 32 ஜி.பி. எனப் போட்டிருந்தது. அதன் அட்டையிலும் அவ்வாறே பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. வீட்டில் அதனைக் கம்ப்யூட்டரில் இணைத்து, விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் பார்க்கையில், 32,027,770,880 என்று போட்டு, தொடர்ந்து 29.8 ஜி.பி. எனப் போட்டிருந்தது. இது ஏன்? இந்த இரண்டு அளவுகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளதே? உண்மையான அளவு என்ன? அல்லது நான் ஏமாந்துவிட்டேனா?
டி. ஸ்வர்ணமதி, சிவகாசி.
பதில்:
முதலில் நீங்கள் ஏமாற்றப்படவில்லை என்பதை மனதில் கொண்டு அமைதியாக இருக்கவும். இதற்காக, யு.எஸ்.பி. அட்டை எல்லாம், படமாக எனக்கு கேள்வியுடன் அனுப்பியிருக்க தேவையே இல்லை. சரி, இனி பிரச்னைக்கு வருவோம்.
யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ்கள், ஹார்ட் ட்ரைவ் மற்றும் பிற ஸ்டோரேஜ் மீடியாக்களைப் போலவே பைட்ஸ் (bytes) என்ற அளவில் கணக்கிடப் படுகின்றன. இதில் என்ன பிரச்னை என்றால், megabyte/gigabyte ஆகியவற்றிற்கான விளக்கமானது,
கம்ப்யூட்டரில் அளக்கப்படுவதற்கும், இந்த ஸ்டோரேஜ் மீடியாக்களைத் தயாரிப்பவர்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரு kilobyte என்பதனை கம்ப்யூட்டர் 1024 பைட்ஸ் எனச் சொல்லும். ஒரு மெகா பைட் என்பதனை 1024 கிலோ பைட்ஸ் எனச் சொல்லும். எனவே ஒரு மெகா பைட் என்பது (பத்து லட்சம் பைட்ஸ் ஆகும்). ஆனால், இது சரியாகச் சொல்வதென்றால், 10,48,576 பைட்ஸ் ஆகும். 32 கிகா பைட் பெற நீங்கள் 1024 (bytes) x 1024 (kilobytes) x 1024 (megabytes) x 32 (gigabytes) எனப் பெருக்கிப் பார்க்க வேண்டும். இது 34,35,97,38,268 பைட்ஸ் என்ற விடையைக் கொடுக்கும். இருப்பினும், கம்ப்யூட்டர் மற்றும் ஸ்டோரேஜ் மீடியா தயாரிப்பவர்கள், புத்திசாலித்தனமாக ஒரு வழியைப் பின்பற்றுகிறார்கள்.
அவர்கள் ஒரு கிகா பைட் என்பதனை ஒரு பில்லியன், அதாவது, 100 கோடி என்று கொள்கிறார்கள். நாம் ஏன், கம்ப்யூட்டரை வடிவமைக்கும்போது யாரோ போட்ட 1024 பைட்ஸ்= ஒரு கிலோ பைட் என்ற கணக்கினைப் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். எனவே தான், 32 ஜி.பி. என்பது அவர்கள் கணக்கில் 32,000,000,000 பைட்ஸ் ஆகவும், கம்ப்யூட்டர் கணக்கில் சற்றே குறைவாகவும் உள்ளது. இதை நினைத்து குழப்பமடையாமல் அதனைப் பயன்படுத்துங்கள், ஸ்வர்ணமதி.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X