பல படங்களில் கமலுடன் ஜோடியாக நடித்திருக்கும் சிறந்த நடிகையும் இயக்குநருமான ஜெயசித்ரா கமலின் ஆரம்ப காலங்களிலிருந்து உடனிருந்து கலைப் பயணத்தைத் தொடர்ந்தவர். அவர் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
"தசாவதாரம்' படத்தில் பல்ராம் நாயுடு கேரக்டரில் கமலைப் பார்த்தபோது எழுபதுகளின் ஆரம்பத்தில் நடனக் குழு நடத்தி வந்த பிரசாத் என்ற ஒருவர்தான் எனக்கு உடனே நினைவுக்கு வந்தார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே கமலும் நானும் டான்ஸர்கள் என்பதால் பிரசாத் மாஸ்டர் நடத்திவந்த நாட்டியக் கழுவின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறோம். நாங்கள் இருவரும் சேர்ந்து நாட்டியமாடியது இல்லை என்றாலும், அவரது குழுவில் தனித்தனியாக அவரவர் அணியினரோடு பங்கேற்று இருக்கிறோம். அப்போது பிரசாத் மாஸ்டர் தெலுங்கு கலந்த தமிழில் பேசி நாங்கள் இரண்டு பேருமே கேட்டிருக்கிறோம். அதைத்தான் கமல் "தசாவதாரத்தில்' ஒர ஸ்டைலாகவே மாற்றிக் கலக்கிவிட்டார்.
"பட்டாம்பூச்சி' படத்தில் தான் எங்கள் இருவருக்கும் ஹீரோ-ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றாலும், அதற்கு முன்பாகவே நாங்கள் படங்களில் சேர்ந்து ஒர்க் பண்ணியிருக்கிறோம். அப்படி நாங்கள் சேர்ந்து நடித்த முதல் படம் "குறத்தி மகன்'. அதில் நான் ஹீரோயின்; ஹீரோ மாஸ்டர் ஸ்ரீதர். கமல், ஸ்ரீதருடைய நண்பராக வருவார். படத்தில் கமல் ரோல் சிறியது என்றாலும் அவர் அதை படு சீரியசாக எடுத்துக் கொண்டு, தன் சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தார். அந்த வயதில் அவருக்கு இருந்த அழகான, அப்பாவித்தனமான முகம் எவரையும் எளிதில் கவர்ந்துவிடும்.
நாங்கள் இருவரும் டைரக்டர் பாலசந்தர் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்பதால், "அரங்கேற்றம்', "சொல்லத்தான் நினைக்கிறேன்' படங்களில் நடித்தபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் ஒரு குடும்பம் போலப் பழகுவோம். எல்லோரையும் உட்காரவைத்து, டைரக்டர் பாலசந்தர் வசனம் எழுதிய காகிதங்கள் கொண்ட ஒரு பேடை கையில் வைத்துக் கொண்டு, எங்களுக்கெல்லாம் சீன்களை விளக்கி, நடிப்பு சொல்லிக் கொடுப்பார். கமலஹாசன் மட்டும் டைரக்டர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு தானாகவே அதை இன்னமும் இம்ப்ரூவ் செய்து நடிப்பார்.
"பட்டாம்பூச்சி' படத்தில் நாங்கள் நடித்தபோது, நடித்த ஒரு சம்பவத்தை நான் இப்போது நினைத்தாலும் மனம் பதறும். ஒரு பாடல் காட்சி அது. ஒரு நட்சத்திர ஓட்டலின் மொட்டை மாடியில்தான் அந்தப் பாடல் காட்சியை எடுத்தார்கள். நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஆடும் காட்சியை எடுத்து முடித்த பிறகு கமல் மட்டும் சோலோவாக ஆடும் ஷாட்களை எடுப்பதற்கு ஒத்திகை பார்த்தார்கள். சின்ன மேடை போல இருக்கும். அதில் நடுநாயகமாக ஒரு கம்பம் இருக்கும். கமல் ஓடிவந்து அந்த மேடையில் ஏறி அந்தக் கம்பத்தைப் பிடித்தபடியே ஒரு சுற்றுச் சுற்றி வர வேண்டும். இதுதான் சீன்.
கேமரா சுழல ஆரம்பித்தது. வேகமாக ஓடிவந்த கமல்ஹாசனை ஸ்டைலாக கம்பத்தைப் பிடித்து ஒரு சுற்றுச் சுற்றினார். அவ்வளவுதான். அந்தக் கம்பம் அப்படியே சரிந்து கீழே விழுந்தது. நல்ல காலம், மொட்டை மாடியில் கைப்பிடி சுவரை ஒட்டி அந்த மேடையும் அதில் கம்பமும் இருந்தபோதிலும் கம்பம் உட்புறமாக விழுந்ததால் கமல் அதிக காயம் ஏதுமில்லாமல் தப்பித்துக் கொண்டார். அந்தக் கம்பம் தப்பித்தவறி மொட்டைமாடி கைப்பிடிச் சுவருக்கு வெளிப்பக்கமாக விழுந்திருந்தால், ஐயோ... என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.
"சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் சில சவாலான காட்சிகளில் கமலின் நடிப்பை செட்டில் ஒரு சககலைஞர் என்ற முறையில் வியந்து பார்த்திருக்கிறேன். ஷூட்டிங் பிரேக் நேரங்களில் தன் எதிர் காலக் கனவுகள் பற்றி மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வார். அவருக்கு அந்தக் காலத்திலேயே எதிலும் சிறப்பாக நடிக்கணும், டான்ஸ் ஆடணும், பாடணும், பாட்டு எழுதணும், படம் டைரக்டர் பண்ணணும் என்ற ஆர்வங்கள் அதிகம். அதை இப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
டைரக்டர் கே. பாலசந்தர் தலைமையில் திரை நட்சத்திரங்கள் அடங்கிய குழு கலை நிகழ்ச்சி நடத்த சிங்கப்பூருக்குப் போனது. அதில் நானும் கமல்ஹாசனும் இடம் பெற்றிருந்தோம். பஸ்ஸில் பயணம் செய்வதை வைத்து எழுதியிருந்த ஒரு நாடகத்தில் நானும் கமலும் நடித்தோம். அதன் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? நாடகத்தில் ஒரு வரி வசனம் கூட கிடையாது. எல்லாமே சைகைதான். கமல் அதில் அசத்தியிருந்தார். அந்த சைலன்ட் நாடகம் முடிந்தபோது அரங்கத்தில் கைத்தட்டல் வானைப் பிளந்தது.
"சத்தியம்' என்ற படத்தில் சிவாஜிக்கு ஜோடி தேவிகா, அவருக்குத் தம்பி கமல், எனக்கும் ஒர பவர்ஃபுல் ரோல் கொடுத்திருந்தார்கள். படத்தின் டைரக்டர் ஏஸ்.ஏ. கண்ணன் கமல்ஹாசனை வைத்து ஒரு பரதநாட்டிய பாடல் காட்சியை எடுக்கத் திட்டமிட்டார். ஆனால், கடைசியில் அந்தப் பரதநாட்டிய பாட்டை எடுக்கும் எண்ணத்தையே டைரக்டர் கைவிடும்படியானது. காரணம், "பரதநாட்டியம் ஆடும்போது மீசை வேண்டாம்; எடுத்து விடுங்கள்' என்று டைரக்டர் சொன்னதற்கு கமல் சம்மதிக்கவில்லை. கமல் சில விஷயங்களில் உறுதியானவர்.
கமல், ரஜினி இருவரது திரை வாழ்க்கையிலுமே ஒரு முக்கியமாவன படம் "இளமை ஊஞ்சலாடுகிறது'. இதற்கு பிறகு அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. டைரக்டர் ஸ்ரீதர் இயக்கிய அந்தப் படம் ஒரு சூப்பர் ஹிட் படம். இளைய தலைமுறை ரசிகர்கள் அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அந்த படத்தில் எனக்கு விதவைப் பெண் வேடம். அதில் நடிக்க நான் தயங்கியபோது டைரக்டர் ஸ்ரீதர், "உன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள சீன்களை படத்தில் வைத்திருக்கிறேன். மறுக்காதே!' என்று சொல்ல, நான் சம்மதித்தேன்.
அப்போது நான் தமிழிலும் தெலுங்கிலும் ரொம்ப பிசியாக இருந்த நேரம். மிகவும் குறைந்த நாட்களே அவருக்கு நான் கால்ஷீட் கொடுத்திருந்தேன். அதைப் பயன்படுத்தி ஒரு பாடல் காட்சியை எடுத்து, முடித்துவிட அவர் முடிவு செய்தார். ஆனால் பாட்டு ஒலிப்பதிவாகி வரவில்லை. ஆனாலும் என் கால்ஷீட்டை வீணாக்க விரும்பாத ஸ்ரீதர் என்னையும் கமல்ஹாசனையும் அழைத்து, "இன்றைக்கு ஒரு பாட்டு ஷூட் பண்ணப்போகிறேன். ஆனால், பாட்டு இன்னமும் ரெடியாகவில்லை. எனவே, நானும் டான்ஸ் மாஸ்டருமாகப் பாடல் காட்சிக்கான ஸ்டெப்ஸ் என்னவென்று சொல்லி விடுகிறோம். அதை நீங்கள் அப்படியே ஆடி விடுங்கள். படம் பிடித்துவிடலாம். பின்னால் அந்தக் காட்சிக்கு ஒர பாடலை ஒலிப்பதிவு செய்து ÷ர்த்துக் கொள்ளலாம்' என்று சொல்லிவிட்டார்.
நாங்கள் டான்ஸர்ஸ் என்பதால் கமலுக்கும் எனக்கும் இது ஒரு சவாலாகவே இருந்தது. டைரக்டரும் டான்ஸ் மாஸ்டரும் ஸ்டெப்ஸ்களை சொல்லித்தர நாங்கள் டான்ஸ் ஆட "பாட்டு கைவசமில்லை' என்பது ஒரு குறையாகவே இல்லாமல், நன்றாகப் பாடல் காட்சி எடுத்து முடிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த நடனத்துக்கு ஏற்ப ஒரு ஃபாஸ்ட் பீட் பாட்டை எழுதி ஒலிப்பதிவு செய்தார் டைரக்டர் ஸ்ரீதர். அந்தப் பாட்டு பெரிய அளவில் ஹிட் ஆனது. அது தான் "தண்ணி கருத்திருச்சு'.
இந்தப் படத்தில் கமல் மைக்பிடித்து டான்ஸ் ஆடியபடியே பாடுகிற "என்னடி மீனாட்சி நீ சொன்னது என்னாச்சு?' பாட்டும் மிகப் பெரிய அளவில் ரசிகர்களைக்கவர்ந்தது. அந்தப் பாட்டைப் படம் பிடித்த போது "கையில் எப்படி வித விதமாக மைக் வைத்துக் கொள்ள வேண்டும்' என்று கமல் ஆர்வம் பொங்க எனக்குச் செய்துகாட்டியது இன்னமும் நினைவில் உள்ளது.
கமல் அந்தக் காலத்திலேயே சினிமாதான் தனக்குரிய இடம் என்பதை தீர்மானித்துக் கொண்டிருந்தாலும், கூடுதலாக பரதநாட்டியம் உள்ளிட்ட பல கலைகளைக் கற்றுக்கொண்டது அவர் உலக நாயகன் ஆவதற்கு அச்சாணி. அப்போதே வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்ததை நான் கவனித்தேன். அன்று நான் விதையாகப் பார்த்த கமல் இன்று பெருவிருட்சமாக வளர்ந்திருக்கிறார்.
எஸ். சந்திரமௌலி