கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 ஜன
2015
00:00

கேள்வி: எப்போது ஒரு பைலை மூடினாலும், அல்லது அதனை உருவாக்குகையில், கண்ட்ரோல் + எஸ் கொடுத்து சேவ் செய்வது என் வழக்கம். ஆனால், இப்போது சில வேளைகளில், ஒரு பாப் அப் விண்டோ காட்டப்பட்டு, ஏற்கனவே உள்ள இதே பெயருள்ள பைல் மீது இந்த கோப்பினை எழுதவா? என்று கேட்கிறது. இதற்கு என்ன காரணம்? எங்கு தவறு உள்ளது?
என். விஜயகுமார், மதுரை.
பதில்:
பைல் ஒன்றை சேவ் செய்திட, அதனை உருவாக்கும்போதே, கண்ட்ரோல் + எஸ் என்ற சுருக்குவிசையைப் பயன்படுத்துவதற்கு முதலில் உங்களுக்கு என் பாராட்டுதல்கள். பைல் ஒன்றை சேவ் செய்திடுகையில், ஏற்கனவே அதே பெயரில் உள்ள பைல் மீது, அப்போதுள்ள டெக்ஸ்ட் அல்லது படம் பதியப்படும். அதாவது, அந்த பைல் மீது எழுதப்படும். பல நேரங்களில், நீங்கள் குறிப்பிடுவது போன்ற தகவல் எதுவும் கேட்கப்பட மாட்டாது. சில வேளைகளில், இந்த புதிய பைல் கொண்டு, பழைய பைலின் மீது சேவ் செய்திடவா? என்று கேட்கப்படும். இது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, நீங்கள் Save As என்ற கட்டளையைப் பயன்படுத்தலாம். இதற்கான ஷார்ட் கட் என்ன என்று, நீங்கள் பயன்படுத்தும் புரோகிராமில் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு புரோகிராமிற்கும் ஒரு வகையான ஷார்ட்கட் கீ இந்த செயலுக்கு உள்ளதால், நான் தரவில்லை. பைல் மெனு சென்று, அல்லது ஆபீஸ் தொகுப்பில், ரிப்பனில் கிளிக் செய்து, அதில் கிடைக்கும் மெனுவில், Save As என்பதில் கிளிக் செய்து, பைலுக்குப் புதிய பெயர் கொடுத்து சேவ் செய்திடலாம்.

கேள்வி: கம்ப்யூட்டரிலிருந்து அழிக்கபட்ட பைலை எப்படி சில அப்ளிகேஷன்கள் கண்டுபிடிக்கின்றன? இத்தகைய அப்ளிகேஷன்களில் சிறந்த ஒன்றைப் பரிந்துரைக்கவும்.
என். வசந்தி ராஜன், சேலம்.
பதில்:
பொதுவாக, பைல் ஒன்று அழிக்கப்படுகையில், அது ரீசைக்கிள் பின்னில் தங்குகிறது. பின் இங்கிருப்பதனையும் அழித்துவிட்டால், பைல் அழிக்கப்படுகிறது. ஆனால், விண்டோஸ் சிஸ்டத்தில், இத்தகைய பைல் நீக்கம் என்பது என்ன என்று பார்த்தால், உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும். பைல் ஒன்றை நிரந்தரமாக நீங்கள் அழிப்பதாக நினைத்து அழிக்கையில், அந்த பைல் அழிக்கப்படுவதில்லை. அந்த பைலை விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைக்கும் தொடர்புகளே அழிக்கப்படுகின்றன. அழித்த பைலை மீட்டுத் தரும் புரோகிராம்கள், இந்த லிங்க்கினை மீண்டும் அது நீக்கப்பட்ட வழியில் பின்னோக்கிச் சென்று கண்டறிகின்றன. பின்னர், அதன் மூலம், பைலை மீட்டுத் தருகின்றன. இந்த வகையில் Recuva என்னும் புரோகிராம், மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்த புரோகிராமினை இயக்கி, ஸ்கேன் செய்திட கட்டளை கொடுக்கையில், அது அப்போதைய நிலையில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள, மீட்கப்படக் கூடிய அழிக்கப்பட்ட பைல்களைக் கண்டறிந்து பட்டியல் இடும். அழிக்கப்பட்ட பைல்கள் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் இயக்கம், எதிர்பாராத நிலையில், முடக்கப்பட்டு செயல் இழந்து போகையில், அழிக்கப்படும் பைல்களையும், இந்த புரோகிராம் மீட்டு எடுத்துத் தரும்.
எனவே, ரெகுவா அப்ளிகேஷன் புரோகிராம், கம்ப்யூட்டரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு புரோகிராம் ஆகும். இதனை இலவசமாகவே, இதன் தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் வசதிகளுடன் கூடிய புரோகிராம் 20 டாலர் கட்டணத்தில் கிடைக்கிறது.

கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் செயல்படுகையில், பார்முலா அமைக்கும்போதும், அல்லது ஏற்கனவே அமைத்த ஒன்றினை எடிட் செய்திடும்போதும், என் மவுஸில் உள்ள ஸ்குரோல் வீல் செயல்பட மறுக்கிறது. அதற்குப் பதிலாக, வலது பக்கம் உள்ள ஸ்லைடிங் பாரினை நான் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதற்கான காரணம் என்ன? இதனைச் சரி செய்திட முடியாதா?
ஆர். சுப்புராஜ், கோவை.
பதில்:
மவுஸ் வீலைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரே ஒரு செட்டிங்ஸ் அமைப்பு உள்ளது. அதனை இயக்குவது குறித்துக் கீழே தருகிறேன்.
1. Excel Options டயலாக் பாக்ஸை முதலில் இயக்கவும். (எக்ஸெல் 2007 தொகுப்பில், ஆபீஸ் பட்டனை அழுத்தி, கீழாக வலது பக்கம் உள்ள Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2010ல், ரிப்பனில் உள்ள பைல் டேப்பினை அழுத்தவும். பின் Options என்பதில் கிளிக் செய்திடவும்.)
2. டயலாக் பாக்ஸில் இடது பக்கம் கிடைக்கும் Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. Editing Options என்ற பிரிவில், Zoom on Roll with Intellimouse என்ற செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
4. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி, மவுஸ் ஸ்குரோல் வீல் தடைபடாது.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் உள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோரரை (IE 11) மூடும் போதெல்லாம், பாப் அப் விண்டோ ஒன்று காட்டப்பட்டு, அதில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயங்கவில்லை என்ற செய்தி இரு முறை காட்டப்படுகிறது. இன் டர்நெட் எக்ஸ்புளோரர் இயங்கவில்லை என்பது உண்மையே.ஏனென்றால், நான் தான் அதனை நிறுத்துகிறேன். பின் ஏன் இந்த பிழைச் செய்தி தோன்றுகிறது?
ஆர்.முத்துக்குமரன், திருச்சி.
பதில்:
இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படுவதாக இருந்தால், பிரச்னை குறித்து வேறு எந்த தகவலும் தரப்படவில்லை என்றால், இன்டர்நெட் எக்ஸ்புளோரரை அதன் மாறா நிலைக்குக் கொண்டு செல்லலாம். கம்ப்யூட்டருடன் பதிந்த அதன் தொடக்க நிலைக்கு அனுப்பலாம். இதனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அதன் தொடக்க நிலைக்குச் செல்லும். இதனால், அதன் டூல் பார்கள், ஆட் ஆன் தொகுப்புகள் மற்றும் மாற்றப்பட்ட பிற செட்டிங்ஸ் அனைத்தும், அதன் அப்போதைய செயல்பாடுகளை இழக்கும். ஆனால், நீங்கள் உங்கள் பேவரிட்ஸ் தளக் குறிப்புகளை பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவற்றையும் இழக்க நேரிடும்.

கேள்வி: முன்பு ஒருமுறை வேர்ட் டாகுமெண்ட்களில் உள்ள வரிகளில் எண்களை அமைப்பது குறித்து டிப்ஸ் தந்தீர்கள். இதில் வரிகளுக்கு முன்னால், எண்கள் அமைய இருக்கும் நிலையை, அதாவது, எவ்வளவு ஸ்பேஸ் தூரத்தில் அமைய வேண்டும் என்பதையும் செட் செய்திட முடியுமா? நான் பல முறை முயன்றும் முடியவில்லை. தயவு செய்து டிப்ஸ் தரவும். முன் கூட்டிய நன்றி.
என். அருணாச்சலம், திருப்பூர்.
பதில்:
நல்ல கேள்வி. இதற்கான பதிலை, அதன் செட்டிங்ஸ் சோதனை செய்து பார்த்த பின்னர், கீழே தந்துள்ளேன்.
1. ரிப்பனில் Page Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. Page Setup குரூப்பில் உள்ள Line Numbers என்னும் டூலில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Line Number Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Page Setup டயலாக் பாக்ஸில் உள்ள Layout டேப்பினைக் காட்டும்.
3. Line Numbers பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது Line Numbers டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
4. அடுத்து From Text என்னும் பாக்ஸில் உள்ள அளவை, நீங்கள் வரிகளில் எந்த அளவிற்கு முன்னதாக எண்கள் இருக்க வேண்டுமோ, அதற்கேற்றார்போல் அதில் தரப்பட்டுள்ள அளவினை அமைக்கவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்து Line Numbers டயலாக் பாக்ஸை மூடவும்.
6. பின்னர், ஓகே கிளிக் செய்து Page Setup டயலாக் பாக்ஸை மூடி வெளியேறவும்.
இனி நீங்கள் விரும்பியபடி எண்களை அமைக்கலாம். உங்கள் நன்றிக்கு நன்றி.

கேள்வி: என் யாஹூ மெயில் அக்கவுண்டில் lists பிரிவை என்னால் பெற இயலவில்லை. என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 அல்லது பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துகிறேன். Contacts பிரிவு சென்றால், 'Add List'
கூட எனக்குக் கிடைப்பதில்லை. எங்கு பிரச்னை உள்ளது என்றும் தெரியவில்லை. இதற்கான தீர்வைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கா. தமிழ்ச் செல்வன், சிவகாசி.
பதில்:
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, யாஹூ மெயிலால் சப்போர்ட் செய்யப்படுவதில்லை. எனவே, அதில் பயன்படுத்தினால், அதன் அனைத்து பரிமாணங்களும் முழுமையாகக் கிடைப்பதில்லை, கிடைக்காது. பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை, நீங்கள் பதிப்பு 19 அல்லது அதற்குப் பின் வந்தவற்றைப் பயன்படுத்த வேண்டும். அல்லது கூகுள் குரோம் பதிப்பு 25 அல்லது அதற்கு மேற்பட்டதனைப் பயன்படுத்தவும்.
உங்களைப் பொறுத்தவரை, இன்னொரு சிக்கலான பிரச்னை என்னவென்றால், விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வழியாக, இணையத்தை அணுகுவது அபாயமானது. குறிப்பாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 பயன்படுத்துவது அறவே கூடாது. சென்ற ஏப்ரல் மாதமே, விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட்டினை மைக்ரோசாப்ட் வாபஸ் பெற்றுக் கொண்டது. எனவே, இதனைத் தவிர்ப்பதே நல்லது.

கேள்வி: பிரவுசரில் நாம் சென்று வந்த இணைய தள முகவரிகள் அடங்கிய தொகுப்பினை (ஹிஸ்டரி) அழிக்க முடிகிறது. இதே போல, ஆண்ட்ராய்ட் மொபைல் போனில் உள்ள, கூகுள் பிளே ஸ்டோரில் நாம் தேடியவற்றை, அதன் சார்பாக அமைக்கப்பட்டுள்ள பதிவுகளை நீக்க முடியுமா? அதற்கான வழி என்ன?
டி. ஏசுவடியான், காரைக்கால்.
பதில்:
மிக நல்ல கேள்வி. கூகுள் பிளே ஸ்டோரில், நாம் தேடிய அப்ளிகேஷன்கள் குறித்த பதிவுகள், நாம் தேடிப் பார்த்த மூவிகள், நூல்கள், பாடல்கள் மற்றும் இது போன்ற அனைத்து தேடல்கள் குறித்தும் பதியப்படுகிறது. இது நம் பிளே ஸ்டோர் அக்கவுண்ட்டில் பதியப்பட்டுள்ளது. அதே போல, இலவசமாகப் பெற்றாலும், கட்டணம் செலுத்திப் பெற்றாலும், நீங்கள் டவுண்லோட் செய்த அனைத்து அப்ளிகேஷன்களும் ““My Apps”” என்னும் பட்டியலில் இடம் பெறும். இந்த பட்டியல் நாள் செல்லச் செல்ல மிக நீண்டதாக வளரும். ஒரு கட்டத்தில் இவை எந்த கட்டுப்பாட்டிற்கும் அடங்காததாகச் சென்றுவிடும். ஆனாலும், இவற்றை நீக்கும் வழியும் எளிதானதே. ஹோம் ஸ்கிரீனில், கூகுள் பிளே ஸ்டோர் ஐகானைத் தொடவும். ''பிளே ஸ்டோர்” திறக்கப்படும். இடது மேல் ஓரமாக உள்ள மூன்று சிறிய கோடுகள் அடங்கிய மெனு ஐகானைத் தொடவும். இதில் கிடைக்கும் கீழ் விரி மெனுவில், “Settings” ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த திரையில் “Clear local search history” என்பதைத் தொடவும். உடன் நமக்கு போன் என்ன செய்கிறது என்பது காட்டப்பட மாட்டாது. சர்ச் ஹிஸ்டரி காலியாகிவிட்டதா என்று நமக்குத் தெரியாது. எனவே “Back” பட்டன் அழுத்தி, கிடைக்கும் திரையில் மேலாக உள்ள தேடல் கட்டத்தில் தொடவும். இங்கு நீங்கள் ஏற்கனவே மேற்கொண்ட தேடல்கள் கிடைக்கவில்லை என்றால், அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என்று பொருள். திரையில் மேல் இடது புறம் உள்ள அம்புக் குறியினைத் தொட்டு பிளே ஸ்டோரின் முதல் திரைக்குச் செல்லலாம்.

கேள்வி: ஒன்றுக்கு மேற்பட்டவர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் என் அலுவலகத்தில் பல உள்ளன. அனைத்திலும், விண்டோஸ் இயக்கத்தில் வந்துள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், இணைய தளங்களில் உள்ள பல படிவங்களை நிரப்புகையில், மற்றவர்கள் ஏற்கனவே தந்த டேட்டா தானாகக் காட்டப்படுகிறது. அல்லது நிரப்பப்படுகிறது. ஒருவர் தந்த டேட்டாவினை, மீண்டும் வராதபடி எப்படி அமைப்பது?
-கா. ஜெயபால், சென்னை.
பதில்:
இது கம்ப்யூட்டர் தானாக நமக்குத் தரும் வசதிதான்; ஒருவரே பயன்படுத்தினால், இதன் அருமையை உணரலாம். மீண்டும் மீண்டும் நம்மைப் பற்றிய தகவல்களை, எடுத்துக் காட்டாக, மின் அஞ்சல் முகவரி, பெயர், முகவரி, தொடர்பு எண் போன்றவை, மீண்டும் மீண்டும் அமைக்க வேண்டியதில்லை. அதனால், தவறு ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. ஆனால், இங்கு பிரச்னையாக உள்ளது என்று சொல்கிறீர்களே. இந்த வசதி, பலர் பயன்படுத்தும் இடத்தில், சிக்கலையே ஏற்படுத்தும். ஒருவரின் தகவல் மட்டுமின்றி, சில வேளைகளில் பலர் தந்துள்ள தகவல்கள் கலந்தும் கிடைக்கும். மொத்தமாக இவற்றை நீக்க இன்டர்நெட் பிரவுசரில் சில செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். இன்டர்நெட் பிரவுசரில் Tools>Internet Options>Content>Autocomplete எனச் செல்லவும். இங்கு அனைவருக்குமான ஆப்ஷன்களை அமைக்கலாம். அல்லது நீக்கிவிடலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X