அறிவை நாடுவதும், அதற்கான தேடல் முயற்சியில் ஈடுபடுவதும், மனிதரின் இயல்புகளில் ஒன்று! அறிவு, அனுபவம் மூலம்தான் கிடைக்கிறது. ஆனால், ஒவ்வொரு உயிரினமும், அனைத்தையும் அனுபவப்பட்டுதான் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், வாழ்நாள் போதாது!
இந்த சூழலில்தான், சக மனிதர்களின் கற்பனைகளும், அனுபவங்களும், காவியங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள், புராணங்கள், மற்றும் இலக்கியங்களாக உருவெடுத்தன; காலப்போக்கில், வளர்ச்சி மாற்றம் மற்றும் தேவையின் காரணமாக புத்தகங்களாக உருமாறின! இதுதான், புத்தகத்தின் வரலாறு!
'புத்தகக் கல்வி மூலம், மனிதனின் அறிவு மேம்படும்' என்று, அறிவின் தேடல், புத்தகத் தேடலாக அடையாளப்படுத்தப்பட்டது. புத்தகத்தை கையகப்படுத்துவதால், அறிவை கையகப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டது! இதன் காரணமாக, பலரும் புத்தகத்தேடலில் ஈடுபட்டனர்.
ஆனால், சமீபகாலமாய், இந்த புத்தகத் தேடல், சக்தி, நேரம், காலம், பொருள் இவற்றை விரயமாக்குகிறது. பெரிய அளவில் உடலுக்கும், மனதிற்கும் சங்கடத்தை தருகிறது. 'பணம் கொடுத்து வாங்கிய புத்தகத்தை படிக்கவில்லையே; படிக்க நேரம் இல்லையே' என்ற குற்ற உணர்வைத் தருகிறது. எது ஒன்று இப்படிப்பட்ட சங்கடத்தை ஏற்படுத்துகிறதோ, அது விரைவில் நோயாகி விடும். இதில், எச்சரிக்கை அவசியம்!
ஆக, தன்னையும், மற்றவர்களையும் சங்கடப்படுத்தாமல் அறிவைத் தேடுவதே சிறந்தது! எனவே, புத்தகத் தேடலை தவிர்த்து, அறிவைத் தேடுங்கள்; அதுவே, வாழ்வை அனுபவித்து வாழ சிறந்த வழி!
- மா.திருநாவுக்கரசு, மனநல மருத்துவர்.