என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பெயர், ராஜேஷ். அவர், நல்ல துடிப்பான 35 வயது இளைஞர். அவரது குடும்பத்தின் மீது, அவருக்கு அத்தனை பாசம்! தன் சொற்ப சம்பளத்திலும், தன் குடும்பத்தை சந்தோஷமாக நிர்வகித்து வந்தார். இன்று, அந்த சொற்ப சம்பளமும் இல்லாமல், அந்த குடும்பம் வறுமையில் வாடுகிறது. சரியாக ஆறு வருடங்களுக்கு முன்பு, அவர் என்னை சந்திக்க வந்திருந்தார்.
'நான் வெளி உணவுகளை சாப்பிட மாட்டேன். தினமும் நிறைய தண்ணீர் குடிப்பேன். புகைப்பழக்கம் கிடையாது. எப்போதாவதுதான் மது எடுப்பேன். எனக்கு எந்த நோயும் வர வாய்ப்பில்லை!' என்று கூறினார். அவருக்கு அப்போது இருந்த பிரச்னை, வயிற்று வலி!
சில பரிசோதனைகளுக்குப் பிறகு, ராஜேஷுக்கு 'குடல் இறக்கம்' இருப்பது நிரூபணமானது. அறுவை சிகிச்சை செய்தோம்; அவருடைய பிரச்னை தீர்க்கப்பட்டது.
நம் நெஞ்சு எலும்புக்கும், பிறப்புறுப்புக்கும் இடையில், ஒரு பை போன்ற சற்றே உறுதியான தசை, கீழ் வயிற்றுப்பகுதியில் இருக்கும்; இதுதான் நம் குடலை தாங்கிப் பிடித்திருக்கும். இந்த தசை சேதமாகி, தன் வலிமையை இழக்கும் போதுதான், குடல் இறங்கி விடுகிறது. அதிகப்படியான சாப்பாட்டிற்கு பிறகு வரும், மிகப்பெரிய தும்மல் அல்லது தும்மலுடன் சேர்ந்த இருமல் கூட, குடல் இறக்கத்தை தந்து விடும். சிலருக்கு இந்த பாதிப்பு அதிகமாகி, 'சிறுநீர் பை' பாதித்து, பிறப்புறுப்புக்கு அருகே மிகுந்த வீக்கத்துடன் காணப்படும்.
தற்போது, இப்பிரச்னையை
மிக எளிதாக 'நுண்துளை அறுவை சிகிச்சை' மூலம் சரி செய்து விடலாம். மிகவும் எளிதான ஆபத்தில்லாத அறுவை சிகிச்சை இது! இப்படி ஒரு சிகிச்சைக்குப் பின்னர், ராஜேஷும் நலமுடன்தான் இருந்தார். ஆனால் இன்று, ராஜேஷ் உயிருடன் இல்லை. காரணம், அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களில், இரவு மது அருந்தியிருக்கிறார். அன்று, மனைவி எவ்வளவோ மறுத்தும், தாம்பத்ய உறவில் ஈடுபட்டிருக்கிறார். அதனால், இதயத்திற்கு செல்லும் ஆக்ஸிஜன் தடைபட்டு, உடனடியாய் மரணம்.
இதை 'விதி' என்று சொல்ல என்னால் முடியவில்லை. காரணம், ராஜேஷ் நினைத்திருந்தால், விதியை தன் மதியால் வென்றிருக்கலாம்!
- டாக்டர். வெங்கடேசன்,
நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர்.