ஜன.,15 - பொங்கல்
பறவை, விலங்கு, ஏன்...மனிதனுக்கும் கூட இருட்டைக் கண்டால் பயம் வந்து விடுகிறது. பொழுது புலர்ந்ததும் மகிழ்ச்சியில் பறவையினங்கள் தங்கள் இனிய குரலில் கூவுகின்றன. இரை தேடக் கிளம்புகின்றன. இவ்வகையில் சூரியன் பயம் போக்குபவராகவும், உழைப்பின் சின்னமாகவும் திகழ்கிறார்.
சூரிய புராணத்தில் ஒரு கதை இருக்கிறது.
ஒரு சமயம் துர்வாச முனிவர், பாண்டவர்களின் தாய்வழி தாத்தாவான குந்திபோஜனின் அரண்மனைக்கு வந்திருந்தார். சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ள இருந்த அவருக்கு பணிவிடை செய்ய, தன் மகள் குந்தியை அனுப்பி வைத்தான் குந்திபோஜன். இளவரசி குந்தியும் முனிவருக்கு பணிவிடைகளை முறையாகச் செய்து, அவரது ஆசியைப் பெற்றாள்.
முக்காலமும் உணர்ந்த முனிவரான துர்வாசர், வருங்காலத்தில் குந்திக்கு, அமையவிருக்கும் அவளது கணவன் பாண்டுவின் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்காது என்பதை ஞானதிருஷ்டியால் அறிந்தார். அதனால், மகப்பேறு அளிக்கும், 'புத்திரலாபம்' என்னும் மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார். குந்தி அந்த மந்திரத்தின் தன்மையை சோதித்துப் பார்க்க விரும்பினாள். கண்கண்ட தெய்வமான சூரியதேவனை மனதில் எண்ணி அந்த மந்திரத்தை ஜெபித்தாள். அவள் முன் சூரியன் நேரில் தோன்றி, அவருடைய அம்சமாக ஆண்குழந்தையை அளித்து திரும்பினார். அந்தப் பிள்ளையே கர்ணன்.
சூரியனின் மகனாகிய இப்பிள்ளையே, தன் தந்தையைப் போல, வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாதபடி தானம் செய்தவன். கொடைவள்ளல் என்று போற்றப்பட்டவன். சூரியனும், நல்லவர் கெட்டவர் என்ற வேறுபாடின்றி எல்லாருக்கும் ஒளி தருபவர். தானியங்கள் விளைய காரணமாக இருப்பவர். அவர் இல்லாவிட்டால், உலகில் உணவே கிடைக்காது. சூரிய ஒளியிலிருந்து தான் தாவரங்கள் கூட, தங்களுக்குரிய உணவைத் தயாரிக்கின்றன என்பது அறிவியல் உண்மை.
சூரியனுக்குரிய வாகனம் குதிரை. ஏழு குதிரைகள் சூரியனின் தேரை இழுத்துச் செல்கின்றன. மாதம் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்வது அவரது தொழில். சூரியனின் ஒரு ராசியில் நுழையும் நாளையே தமிழ் மாத பிறப்பாகக் கொள்கிறோம். மாதம் ஒரு ராசிக்கு மாற வேண்டும் என்பதால், ஆற்றலுடன் ஓடும் குதிரைகளை வாகனமாகக் கொண்டிருக்கிறார். சூரியலோகத்தில் தண்டி, பிங்கலன் என்னும் இரு துவார பாலகர்கள் காவல் புரிகின்றனர். இதில், சூரியனுக்குரிய நித்ய கர்மாக்களை (தினமும் நடக்க வேண்டிய பணிகள்) வகுத்துக் கொடுப்பவர் தண்டி. காலையில் ஒளியையும், மாலையில் இருளையும் பிரித்தளிக்கும் செயலைச் செய்கிறார் பிங்கலன்.
சூரியனுக்குரிய விழா பொங்கல். இது, சுறுசுறுப்பைக் குறிப்பது, அதிகாலையில் எழ வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சூரியன் எப்படி, தன் பணியைச் செய்ய தவறுவதில்லையோ, அதேபோல, நாமும் நம் பணிகளில் ஒன்றைக் கூட ஒத்தி வைக்காமல் உடனடியாக முடித்து விட வேண்டும். இந்த சுறுசுறுப்பு நம்மோடு என்றும் ஒட்டியிருக்க, பொங்கல் நன்னாளில் சூரிய பகவானை வேண்டுவோம்.
தி.செல்லப்பா