குழந்தைகளுக்கும் வாய்ப்பு அளிக்கலாமே!
ஆண் - பெண் இருபாலரும் படிக்கும் தனியார் பள்ளி ஒன்றில் சமீபத்தில், 'பெற்றோர் விழிப்புணர்வு முகாம்' நடைபெற்றது. அதில், தங்களது பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம், ஆளுமை மற்றும் தனித்திறன்களை வளர்ப்பது குறித்தும், குழந்தை கடத்தல், பாலியல் தொல்லைகளை தவிர்ப்பது பற்றியும், விவாதங்கள் நடைபெற்றன.
சில சமூக ஆர்வலர்களும், அதிகாரிகளும் கலந்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அதில், ஓர் அதிகாரி சில சமூக பிரச்னைகளை கேள்விகளாக எழுப்பி, பெற்றோரிடம் பதில் கேட்டார். பல்வேறு கேள்விகளுக்கு, சில பெற்றோர் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தனர்.
அப்போது, 'நாட்டில் கொள்ளை, திருட்டு, பணத்தை பதுக்குவது, கறுப்பு பண விவகாரம் போன்றவற்றுக்கு, ஏதாவது தீர்வு உண்டா?' என, ஒரு அதிகாரி கேட்டார். பலரும் சிந்தித்துக் கொண்டிருந்த அமைதியான வேளையில், ஒரு மாணவி, 'ரூபாய் நோட்டுக்கும், மற்ற பொருட்களைப் போல எக்ஸ்பெய்ரி டேட் (காலாவதி) போடலாமே...' என்றாள். உடனே, அந்த பெண் குழந்தையின் அம்மா, 'ஏய், சும்மா இரு...' என்று அதட்டி, அமர செய்தார்.
இதை கவனித்த அந்த அதிகாரி, 'அந்த பாப்பாவை கூப்பிடுங்க...' என்றதோடு, அவளை பாராட்டி, அந்த சிறுமியின் கருத்தில் உள்ள உண்மையை விளக்கினார். அதோடு, சிறுமியைப் பாராட்டியும் கவுரவித்தார். கூடியிருந்த அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
'எந்த ஒரு விஷயமோ, பிரச்னையோ, வளரும் இளம் தலைமுறையினரின் கருத்துகளை அடக்கி, ஒடுக்காதீர்கள். அவர்களிடமிருந்து சிறந்த சிந்தனையின் வெளிப்பாடுகள், தீர்வுகள் கிடைக்கலாம்...' என்று கூறினார்.
நமக்குத்தான் எல்லாம் தெரியும், குழந்தைகளுக்கு என்ன தெரியும் என்று அலட்சியம் செய்வது கூடாது என்பதை நானும் உணர்ந்தேன். குழந்தைகளுக்கு வாய்ப்பு அளித்தால், தன்னம்பிக்கை வளரும்தானே!
— எஸ்.குருலட்சுமி, மதுரை.
பெண்களுக்கும் மனம் உண்டு!
பதினைந்து ஆண்டுகளுக்கு முன், மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்த மாணவ - மாணவியர் சந்திப்புக்கு, முன்னாள் மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருப்பதாக, பள்ளியிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருந்தது. உடன் படித்த அனைவரையும் நீண்ட காலத்திற்குப் பின் சந்திக்கப்போகும் ஆவலில் சென்றேன். ஆண்கள் தான், அதிக அளவில் வந்திருந்தனர். பெண்களில் சிலர் மட்டுமே வந்திருந்ததால், பெருந்த ஏமாற்றம் அடைந்தேன். வராத தோழிகளின் மொபைல் போன் நம்பர்களைப் பெற்று, அவர்களிடம் பேசி, வராத காரணத்தைக் கேட்டபோது அதிர்ந்தேன்.
அவர்கள் எல்லாரும் சொல்லி வைத்த மாதிரி, ஒரே மாதிரியாக, 'என் புருஷன் சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார். உடன் படித்த மாணவர்களிடம், நான் நட்புடன் தான் பழகினேன் என்றாலும், அதை, அவர் நம்ப மாட்டார். அவர்களில் யாரையோ நான் காதலித்திருப்பதாக அவர் நினைக்கத் துவங்கிவிட்டால், குடும்ப நிம்மதி அதோ கதிதான். அதனால்தான், அங்கு வருவதை தவிர்த்து விட்டேன்...' என்றனர்.
பெண்களுக்கான முழுமையான சுதந்திரம் எப்போது தான் கிடைக்குமோ, மனைவியை, தோழியாக கருதாமல், அடிமையாக எண்ணும் போக்கை, ஆண்கள் கைவிடுவது குடும்பத்துக்கு நல்லது.
— ஜி.ஜனனி, புதுப்பாளையம்.
எங்க வீட்டு ஜாலக்காரி!
எங்கள் வீட்டு செல்லக்குட்டியின் அட்டகாசங்களை கொஞ்சம் கேட்கறீங்களா...ஒன்றரை வயதே ஆகும் என் மகள், இந்த வயதிலேயே எல்லாரையும் எப்படி, 'கவர்' செய்றா தெரியுமா?
அவங்க அப்பா பெயரை கேட்டா, சுத்தி முத்தி பாத்துட்டு அவர் பெயரை சொல்லுவா; அவங்க அப்பா பக்கத்துல இருந்தா, அவரோட பெயரைச் சொல்லாம, 'அப்பா'ன்னு சொல்லி சமாளிப்பா. எப்பவும் அப்பா செல்லம்; சில நேரங்களில், என் முகம் போற போக்கை பார்த்து, அப்பப்ப எனக்கு ஒரு, 'முத்தா' கொடுத்து, என்னை சரி செய்திடுவா. பாட்டியை கண்டதும், 'ஸ்லோகம்' சொல்றதும், வெளியே, 'வாக்கிங்' போனா. 'பாட்டி பர்ஸ் எடுத்துக்கோ'ன்னு மறக்காம சொல்லுவா. அப்பதானே, அவளுக்கு இஷ்டமானதை வாங்கலாம்.
தாத்தாவ பார்த்ததும், 'குளிச்சிட்டியா; சாமி கும்பிடு'ன்னு சொல்லுவா. இப்படி ஒவ்வொருத்தரையும், அவரவர், 'வீக்' பாயின்ட்ல தட்றா... வேலைக்காரியிடம், 'இந்த டம்ளர கழுவு; இங்க தண்ணி இருக்கு தொட...' என அதிகாரம் செய்றதும் தாங்க முடியல.
பிசினஸ்... பிசினஸ் என்று ஆபீசையே கட்டிக்கிட்டு அழும் என் மாமனார், இந்த ஜாலக்காரியை பார்ப்பதற்கென்றே எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு, சீக்கிரமா வீட்டுக்கு வந்துடறார்ன்னா பார்த்துக்கோங்களேன். ஊருக்கு போயிட்டா, 'வாட்ஸ் அப்'ல பேத்தியோட குறும்புகளை அனுப்பச் சொல்வார். அப்படி எல்லாரையும் மயக்கி வச்சிருக்கா, இந்த குட்டி ஏஞ்சல்.
'காலிங்பெல்' அடிச்சா போதும், 'யாரது? இதோ வந்துட்டேன்'ன்னு அதிகாரத் தோரணையில் சொல்வதும், அவர்களை விசாரித்து வரவேற்பதும் தாங்க முடியல... மாலையில் பாட்டிகிட்ட போய் உட்கார்ந்துகிட்டு, 'நீ மட்டும் தைலம் தேய்ச்சிக்கிறியே... எனக்கும் தேய்ச்சுவிடு. நடந்து நடந்து கால் வலிக்கிறது...' என்பாள்.
இதற்குதான், அந்த காலத்துல சொன்னாங்களோ, 'குழல் இனிது யாழினிது என்பர் மழலைச் சொல் கேளாதோர்...' என்று. இந்த காலத்து இளம் ஜோடிகளுக்கு ஒரு, 'அட்வைஸ்' செய்றேன்... லேட்டா குழந்தையை பெத்துக்கலாம்; லைப்ல செட்டில் ஆயிட்டு பெத்துக்கலாம் என்று நினைத்து குழந்தை பிறப்பை தள்ளி போடாதீங்க. அது மிகவும் ஆபத்து. உடனுக்குடன் பெத்துகிட்டு, இந்த குட்டி பிசாசுகளின் செல்ல அட்டகாசங்களை, 'என்ஜாய்' செய்யுங்க!
—கி.ரஞ்சனி, சென்னை.
விருந்தில் ஓட்டல் சூழல் வேண்டாமே!
சமீபத்தில் நண்பர் ஒருவரின் திருமண வரவேற்புக்கு சென்றிருந்தேன். மணமக்கள் இருந்த மேடையில் மொய்ப்பணம், பரிசு கொடுப்பவர்களை அறிமுகப்படுத்துவதற்காக, மணமக்களின் பெற்றோர் நின்றிருக்க, இதர நெருங்கிய உறவினர்கள் விருந்து பரிமாறும் இடத்தில் நின்று, சாப்பிட வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை கவனித்துக் கொண்டனர். விருந்து பரிமாறுவதற்கு, 'கான்ட்ராக்ட்' முறையில் ஏற்பாடு செய்து இருப்பதால், பரிமாறுபவர்கள் தொழில் ரீதியாக பரிமாறுவர். இதனால், சாப்பிடுபவர்களுக்கு ஓட்டலில் சாப்பிடுவது போன்ற எண்ணம் ஏற்படக் கூடும். இதை தவிர்க்கவே நெருங்கிய உறவினர்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபட செய்ததாக நண்பர் கூறினார்.
இதை, மற்றவர்களும் தங்கள் வீட்டு திருமணத்தில் பயன்படுத்தலாமே!
— ரா.சாந்தகுமார், கூடுவாஞ்சேரி.
அரசு பள்ளிக்கு அன்பளிப்பு!
நண்பர் ஒருவரின் மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு மறுநாள் நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். திருமணத்திற்கு அன்பளிப்பாக வந்த பத்துக்கும் மேற்பட்ட சுவர் கடிகாரங்களை அடுக்கி வைத்து, அதில், 'அன்பளிப்பு...' என்று தன் பெயரை ஸ்டிக்கராக ஒட்டிக் கொண்டிருந்தார்.
'எதற்காக?' என்று கேட்டேன்.
'இத்தனை சுவர்கடிகாரம் நமக்கு எதற்கு? வீட்டில் ஒன்று அல்லது இரண்டு சுவர்கடிகாரமே போதும். ஏற்கனவே, கூடுதலாகவே கடிகாரம் இருக்கிறது. இந்த கடிகாரங்களை எங்கள் ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இலவசமாக வழங்கப் போகிறேன். தேவையை விட கூடுதலாக இருப்பது நமக்குச் சுமை தான். இது பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பயன்படட்டும்...' என்றார்.
அவரின் இந்த நல்ல மனதைப் பாராட்டி விட்டு வந்தேன்.
— சோ.ராமு, செம்பட்டி.