கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (16)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2015
00:00

ஏ.வி.எம்., ஸ்டுடியோவின் மூன்றாவது படப்பிடிப்பு தளத்தில், படப்பிடிப்பின் இடைவெளியில் பத்திரிகை நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். 'வணக்கம்...' சொல்லி, என் வலது கையை, தன் வலது கையால் பற்றிக் கொண்டு, 'வாழ்த்துகள்...' என்று சொல்லியபடி குலுக்கினார். இந்த வாழ்த்து எதற்கென்று தெரியாமல் விழித்தேன்.
பதில் அவரிடமிருந்தே வந்தது... '1968ன் சிறந்த தமிழ்ப்படம், தில்லானா மோகனாம்பாள்...' என்று இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனாதிபதியின் பரிசு கிடைத்திருப்பதைச் சொல்லி, 'நீங்கள் அதில் கதாநாயகன் ஆயிற்றே...' என்று, விளக்கம் தந்தார். 'நன்றி' என்றேன்.

அவருக்கு நான் அப்படி சொல்லிக் கொண்டிருந்தபோது, படப்பிடிப்பு தளத்திற்குள் வந்து கொண்டிருந்த ஒரு ஆஜானுபாகுவான உருவத்தையும், என் கண்கள் நன்றிப் பெருக்குடன் பார்த்தன.
அந்த ஆஜானுபாகுவான உருவம், இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தருக்கே சொந்தமான உருவம். அவரைப் பார்த்ததும், தெய்வமகன் படம் ஆஸ்கர் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதும், என் நினைவுக்கு வந்தது. தெய்வமகன் ஆஸ்கர் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் செய்தியை, என்னிடம் முதலில் கூறியவரும், இயக்குனர் திருலோகசந்தர்தான். தில்லானா மோகனாம்பாள் படம் இந்திய அரசின் பரிசுக்கு, தெய்வமகன் படம் அமெரிக்க ஆஸ்கர் விருது போட்டிக்கு!
இந்த பெருமை எல்லாம் யாருக்கு?
தமிழ்க் கலைஞர்கள் அனைவருக்கும் சொந்தமானது. அப்படித்தான் நான் நினைக்கிறேன். தில்லானா மோகனாம்பாளை எடுத்துக் கொள்ளுங்கள். இதில், சிக்கல் சண்முக சுந்தரத்தையும், தில்லானா புகழ் மோகனாம்பாளையும் படைத்த கொத்தமங்கலம் சுப்புவையும் மறக்க முடியுமா?
அவர், இந்தப் பாத்திரங்களை படைத்திரா விட்டால் படம் எங்கே?
தில்லானா மோகனாம்பாள் தொடர் கதையாக வந்து முடிந்ததும், அதைப் படமாக்க விரும்பிய இயக்குனர் ஏ.பி.நாகராஜன், சுப்புவிடம் தன் எண்ணத்தை வெளியிட்டார். சுப்பு, அந்த கதையின் உரிமை, ஜெமினி வாசனிடம் இருப்பதாகச் சொல்லி விட்டார். ஜெமினியின் சார்பில், அதை, வாசன் படமாக்கலாம் என நினைத்து, ஏ.பி.என்., மேலே தொடாமல் அப்படியே விட்டு விட்டார்.
மாதங்கள் பல கடந்தன. ஜெமினி நிறுவனத்தில், 'தில்லானா'வைப் படம் எடுப்பதற்கான அடையாளங்களே தென் படவில்லை.
ஏ.பி.என்., மனதில் மீண்டும், மோகனாம்பாளின் மீதுள்ள ஆசை துளிர்விட்டது. வாசனிடம் சென்று, 'நான் மோகனாம்பாளைப் படமாக்க நினைக்கிறேன்...' என்றார்.
'நானும் அதைப் படமாக்கலாம் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறேன்; வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். நாம் இருவரும் இணைந்து, அதை எடுக்கலாம்...' என்று பதில் கூறினார் வாசன்.
'வாசன் ஒரு இமயமலை; ஜெமினி நிறுவனம் பெருங்கடல்; நாமோ சிறு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்...' என்ற எண்ணத்தில், ஏ.பி.என்., இரண்டாவது முறையாக எழுந்த மோகனாம்பாள் ஆசையை, சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார்.
மாதங்கள் பல சென்றன. மோகனாம்பாள் படத்தைப் பற்றிய பேச்சே இல்லை.
ஏ.பி.என்., சிந்தனையில் மீண்டும் மோகனாம்பாளின் முற்றுகை. 'முயல்வதை மும்முறை முனை' என்பது பழம் பெரும் தமிழ் வாக்கு.
ஏ.பி.என்., மூன்றாவது முறையாக மோகனாம்பாளைப் படமெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். வாசனிடம் சென்று, தன் எண்ணத்தை வெளியிட்டார்.
மோகனாம்பாளைப் படம் எடுப்பதில் ஏ.பி.என்.,க்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட வாசனுக்கு என்ன தோன்றியதோ, 'உரிமைகளை உங்களுக்கே தருகிறேன்; நீங்களே படத்தை எடுங்கள்...' என்று சொல்லி, தன் அனுமதியையும் தந்தார். ஏ.பி.என்., படப்பிடிப்பில் இறங்கினார்.
தில்லானா மோகனாம்பாள் படமாக வந்து, பெரும் வெற்றி பெற்றது. பெரும்பாலும், வாசகர்களிடையே அமோகமான வரவேற்பைப் பெற்ற ஒரு நாவல், திரைப்படமாக வெளியே வரும்போது, பெரும் வெற்றியைப் பெறுவதில்லை. ஆனால், ஏ.பி.என்., தில்லானா மோகனாம்பாளை ஒரு பெரும் வெற்றிச் சித்திரமாக்கி, உழைப்புக்கேற்ற பரிசைப் பெற்றார். தில்லானா மோகனாம்பாள் படம் இந்திய அரசின் ஜனாதிபதி பரிசைப் பெற்றிருக்கிறது. ஏ.பி.என்.,க்கு இப்பரிசில் பெரும் பங்கு உண்டு. அதில் நடித்த என்னைப் போன்ற கலைஞர்கள், இந்தப் படத்தை உருவாக்க உழைத்த கலை வல்லுனர்கள் எல்லாருக்கும் இதில் பங்கு இருக்கிறது.
தில்லானாவுக்கு கிடைத்த பெருமை, தமிழ்க்கலை உலகின் பொதுச் சொத்து. அமெரிக்க ஆஸ்கர் போட்டியில், சிறந்த வெளிநாட்டுப் படம் ஒன்றுக்கும் ஆஸ்கர் பரிசு தருவதுண்டு. ஒவ்வொரு நாட்டிலிருந்தும், ஒரு படத்தை மட்டுமே இந்தப் போட்டியில் சேர்த்துக் கொள்வர்.
வந்திருக்கும் வெளிநாட்டுப் படங்கள் அத்தனையும் திரையிட்டு, அவற்றில் சிறந்த படத்தைத் தேர்ந்தெடுப்பர்.
இந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு, இந்திய நாட்டின் சார்பில், தெய்வ மகன் படம் அனுப்பப்பட்டது. தில்லானாவுக்கு சொன்னது போலவே, தெய்வ மகன் படத்திற்கு கிடைத்திருக்கும் இந்தப் பெருமையும் தமிழ்க்கலை உலகின் பொதுச் சொத்து.
ஒரு கலைஞனுக்குள்ள திறமையை, மேலும் வளர்க்க உதவுவதுடன், அவன் ஈடுபட்டிருக்கும் துறையில், அவன் மேலும் உற்சாகமுடன் ஈடுபட்டு, ஊக்கமுடன் உழைத்து, சிறப்பாகப் பணியாற்றவும், இத்தகைய பரிசுகளும், பட்டங்களும் உதவுகின்றன. ஒவ்வொரு முறையும் நான் பரிசைப் பெறும்போது, 'நாம் மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்...' என்று தான் நினைத்துக் கொள்வேன்.
தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை' விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
Subramaniam - New York,யூ.எஸ்.ஏ
16-ஜன-201506:43:07 IST Report Abuse
Subramaniam APN paid some moeny (I think it was Rs.10,000.00) to Vasan. After that he met Kothamangalam Subu and paid some money. Kothamangalam subu showed him Rs.10,000.00 cheque paid by Vasan.
Rate this:
Cancel
Varadhaiyah Srinivasan - PUDHUCHERRY,இந்தியா
13-ஜன-201522:01:42 IST Report Abuse
Varadhaiyah Srinivasan நம்மை மகிழ் வித்த எ. பி . நாகராஜனையும் நடிகர் திலகத்தையும் நினைவு கூர்வோம்
Rate this:
Cancel
Varadhaiyah Srinivasan - PUDHUCHERRY,இந்தியா
13-ஜன-201521:57:54 IST Report Abuse
Varadhaiyah Srinivasan தமிழ் நாட்டிற்கே பெருமை சேர்த்த கலைங்கர்களை உண்மையில் பாராட்ட வேண்டும் மறக்க முடியுமா அந்த படத்தை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X