சேலம் ஓட்டல் அறை ஒன்றில் நண்பர்கள் கூடியிருந்த சமயம், 'டிவி'யில் கிரிகெட் மேட்ச் பார்த்துக்கெண்டிருந்தவர்கள், திடீரென, 'டோனி... டேய் டோனி...' என, அனைவரும் 'கோரசா'கக் கத்தியபடியே என்னை பார்த்தனர். சிறிது நேரத்திற்கு பின், உற்சாக பான பாட்டில்களைத் திறந்து, தாக சாந்தி செய்து கொண்டனர். பேச்சு திசை மாறியது...
நண்பர் பேச ஆரம்பித்தார்: நேத்து, 'நைட்டு' உடம்பு வெலவெலத்துப் போகும் சம்பவம் ஒண்ணு நடந்துச்சுப்பா... கல்யாணத்திற்காக, மதுரை மாவட்டத்திலிருந்து ஒரு அன்பர் வந்திருந்தார். அவருக்கு கராத்தே, யோகா, சித்து போன்ற பல கலைகள் தெரியும். அவர் தன்னுடனேயே எடுத்து வந்திருந்த, 'டி.வி.டி.,' பிளேயரில், பலான ஆங்கிலப்படம் ஒன்றை போட்டு காட்டிக் கொண்டிருந்தார்... அத்துடன் உற்சாக பானத்தையும் ஏற்றிக் கொண்டிருந்தார். திடீரென என்ன தோன்றியதோ தெரியவில்லை... என்னை மட்டும் ரூமில் இருக்கச் சொல்லி, மற்றவர்களை ரூமை விட்டு வெளியேறச் சொன்னார்...
அனைவரும் வெளியேறியதும், ஒரு மான் தோலை எடுத்து தரையில் விரித்து, கால் மேல் கால் போட்டு யோக நிலையில் அமர்ந்தார். மூச்சு சப்தம் மட்டும் பயமூட்டும் அளவில் பெரிய ஒலியுடன் வெளியாக ஆரம்பித்தது. அமர்ந்த நிலையிலேயே, திடீரென, தரையை விட்டு இரண்டு, மூன்று இஞ்சுகள் உயர்ந்து, பிடிமானம் இல்லாமல் அந்தரத்தில் அமர்ந்தார். பின்னர், கண்களை உருட்டியபடியே, 'என்ன வேண்டும் கேள்...' என அதிகார
தோரணையில் கேட்டார்.
நான் பயந்த நிலையில் இருந்ததால், எதுவுமே பேச வாய்
எழ வில்லை. 'இந்தா, இது தான் உனக்குத் தேவை...' எனக் கூறியபடியே, தன் உள்ளங்கையைத் திறந்தார். அதில், சிறிய சிவலிங்க சிலை ஒன்று இருந்தது. 'இந்த சிலையை உன் வீட்டு பூஜை அறையில் வைத்து, தினமும் பூஜை செய்...' எனக் கூறியவர், சிறிது, சிறிதாக தன் பழைய நிலையை அடைந்து, சகஜ நிலைக்கு வந்தார். இதோ... இது தான் அந்தச் சிலை!' என, சிறிய சிலை ஒன்றை எடுத்துக் காட்டினார்.
நண்பர் கூறிய அனைத்தையும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த லென்ஸ் மாமா, தன் உற்சாக பான கிளாசை பத்திரமாக, ஒரு ஓரமாக வைத்துவிட்டு, 'ஏம்பா, அந்த மனுஷன் வெற்று உடம்போட இருந்தாரா? சட்டை போட்டு இருந்தாரா?' எனக் கேட்டார்.
'சட்டை போட்டு இருந்தார்!'
'முழுக்கை சட்டையா? அரைக்கை சட்டையா?'
'முழுக்கை ஜிப்பா போட்டு இருந்தார்...'
'சரிதான்... இது வழக்கமான பிராடு வேலைதான்...' என்றார் லென்ஸ் மாமா.
'அதெப்படிச் சொல்கிறீர்கள்?' என, என்னை தவிர அனைவரும் ஒரே குரலில் கேட்டனர்.
'யோகாசனம் நன்கு கற்றவர்களால் பூமியை விட்டு இரண்டு, மூன்று இஞ்சுகள் அமர்ந்த நிலையில் உயர முடியும். முழுக்கை சட்டைக்குள் மறைத்து வைத்திருக்கும் பொருட்களை உள்ளங்கைக்கு கொண்டு வந்து, 'மாஜிக்' செய்வதும் சுலபம்தான். இதில் சித்து, புத்து ஒன்றும் கிடையாது...' என ஓங்கிய குரலில் அடித்துக் கூறினார்.
சுற்றி அமர்ந்திருந்த நண்பர்களால் மாமாவின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
'சரிப்பா... அடுத்த முறை அந்த ஆசாமி இதுபோன்ற, 'மேஜிக்' வேலை செய்யும் போது, 'பூசணிக்காய் வேணும்...'ன்னு கேளுங்க, ஆசாமி மயக்கமடிச்சு விழறானா, இல்லையான்னு பாருங்க... பூசணிக்காயை முழுக்கை சட்டைக்குள் மறைத்து வைக்க முடியாதல்லவா...' என லென்ஸ் மாமா கூறவும், ரூமே வெடிச் சிரிப்பில் ஆழ்ந்தது.
அடுத்த முறை நண்பர்கள், 'பூசணிக்காய் வேண்டும்!' என்று கேட்டால், சித்து... பித்து எனக்கூறி அலையும் ஆசாமி கூறப்போகும் பதில் என்னவாக இருக்கும் என்பதை இப்போதே கூறி விடுகிறேன் நான்... 'பக்தா... உனக்கு என்ன வேண்டும் என்பது எனக்குத் தெரியும். பிடி இதை...'
நான் கூறுவது சரிதானே!
சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க, பராமரிக்க வேண்டிய போலீசார், அதுவும் உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை இவ்வாசகியின் கடிதம் சொல்லும்:
எனக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. ஏழு வயதில் ஒரு பெண், ஐந்து வயதில் ஒரு ஆண் பிள்ளை. நானும், என் கணவரும் விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டோம். ஆனால், அது என் மாமியாருக்கோ, என் நாத்தனாருக்கோ பிடிக்கவில்லை. என் வீட்டுக்காரரும், என்னை குறை சொல்லி, அவர்களிடம் அவமானப்படச் செய்வார்.
என் கணவர் திருமணத்திற்கு முன் தங்கக்கம்பி தான். ஆனால், திருமணம் ஆனபின், ஒரு சிறு தவறு என்றாலும் அடி, உதை தான். கர்ப்பமானவள் என்றும் பாராமல் கண், மண் தெரியாமல் அடிப்பார். இப்படியே ஏழு ஆண்டுகள் சந்தோஷம் இல்லாமல் வாழ்ந்து விட்டேன்.
பிறகு, என் வீட்டின் எதிரில் குடியிருந்த ஒருவர் மீது ஆசைப்பட்டேன். அவர் இன்னும் திருமணம் ஆகாதவர். அவரை அந்த தெருவிலேயே நல்லவர் என்று புகழ்வர். நான்தான் முதலில் ஆசைப்பட்டேன். அவர் மறுத்தார்; பிறகு, சம்மதிக்க வைத்தேன்.
இந்த விஷயம் என் கணவருக்குத் தெரிந்து எங்களைப் பிரித்தார். பிரித்ததும் இல்லாமல், போலீஸ் கேஸ் கொடுத்தார். அங்கு டி.எஸ்.பி., விசாரித்தார். பின் டி.எஸ்.பி., என்னை பயமுறுத்தி, தன்னுடன் படுக்கச் சொல்லி இரு முறை பயன்படுத்திக் கொண்டார். உண்மையிலேயே இந்த ஜென்மத்தில் பெண் பிறவி எடுத்தவர்கள், அடுத்த பிறவி ஒன்று வேண்டவே வேண்டாம் என்பர். அந்தளவு நான் கஷ்டப்பட்டு விட்டேன்.
டி.எஸ்.பி., என்னை பயன்படுத்திக் கொண்டதும், என்னை விரும்புபவருக்குத் தெரியும். இதைத் சொன்ன பிறகும், 'என் வாழ்வு உன்னோடுதான்!' என்கிறார்.
— இந்த வாசகியின் செயல் சரியா, தவறா என்ற பிரச்னையை ஓரம் கட்டி விடுவோம். ஆனால், நியாயம் வழங்க வேண்டிய ஒரு உயர் அதிகாரியே இப்படி நடந்து கொண்டால், சாதாரண மக்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்?