சி.அன்பரசு, மேலப்பொன்னகரம்: வன்முறை எண்ணங்கள் எப்போதும் மனதில் தோன்றிக் கொண்டிருக்கிறதே...
உங்களின் எல்லா நடவடிக்கைகளிலும், எண்ணத்திலும் பலவீனம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளது. பலவீனமாக இருக்கும் போது ஒருவனுக்கு பலாத்கார சிந்தனைகள் தோன்றும்! எனவே, உங்கள் பலவீனங்களை பட்டியலிட்டு அதிலிருந்து வெளியே வர முயலுங்கள்!
வி.ரஞ்சிதம், வீரபாண்டி: 'அன் லெட்டட் பெட்ரோல்' என்கின்றனரே... அப்படி என்றால் என்ன?
அமெரிக்க விஞ்ஞானி ஒருவர்,1921ல் ஒருவகை ஈயத்தைக் கண்டுபிடித்து, பெட்ரோலில் கலந்தார். இதனால், வாகன ஓட்டம் எளிதானது. ஆனால், இந்த ஈயம் கலந்த பெட்ரோலால் சுற்றுச் சூழல் கெட்டு, மனித உடல் நலத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதால், ஈயம் கலக்காத பெட்ரோலை நம் நாட்டில் அறிமுகப்படுத்தினர். அதையே, 'அன்லெட்டட் பெட்ரோல்' என்கின்றனர் ஆங்கிலத்தில்!
ஜெ.முருகேசன், கீழ்புவனகிரி: அந்திமக் காலத்தில் பெற்றோரைக் கலங்காமல் காப்பாற்றுபவர்கள் பெற்ற மகளா, மகனா?
இருவருமே அல்லர்... பணம் தான்! கடைசி காலம் வரை வாழத் தேவையான பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளாவிட்டால், மகனாவது, மகளாவது!
க.கிருபாகரன், அழகாபுரி: நான் எப்போதுமே, எதிலுமே தோல்வியையே சந்தித்து வருகிறேனே...
பயமும், தயக்கமும் குடி கொண்டிருக்கும் வரை தோல்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்! அவைகளைக் களையுங்கள். அடுத்து, 'வெற்றி பெற்றே தீருவேன்' என, மனதில் சங்கல்பம் மேற்கொள்ளுங்கள். இதுவே வெற்றியின் அடிப்படை!
க.விஜயலட்சுமி, திருவல்லிக்கேணி: 'ஐந்து ஹார்ஸ் பவர் மோட்டர், பத்து ஹார்ஸ் பவர் மோட்டர்' என, நீர் இறைக்கும் மோட்டர்கள் பற்றி பேசும் போது குறிப்பிடுகின்றனரே... 'ஹார்ஸ் பவர்' என்றால் என்ன?
ஒரு நொடிப் பொழுதில், 1,210 கிலோ எடை உள்ள ஒரு பொருளை ஒரு அடி உயரத்திற்கு தூக்கத் தேவையான சக்தியை ஒரு ஹார்ஸ் பவர் - ஒரு குதிரையின் சக்தி எனக் கணக்கிட்டு கூறினர் பிரிட்டிஷார். இப்போது, இதை கிலோ வாட் எனக் குறிப்பிடுகின்றனர்!
பெ.கீதா, நங்கநல்லூர்: போயிங் விமானங்கள், ஒரு மணி நேரம் பறக்க எவ்வளவு எரி பொருள் செலவாகும்?
மயக்கம் போட்டு விடாதீர்கள்... 14 ஆயிரத்து 200 லிட்டர் பெட்ரோல் செலவாகும். ஆனாலும், 920 கி.மீ., சென்று விடும். ஒரு கொசுறு தகவல்: தன் வாழ்நாளில் ஒரு முறை கூட காந்திஜி விமானத்தில் பயணம் செய்தது இல்லை. தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு கப்பல் மூலமே சென்று வந்தார்!
எம்.ஜீவானந்தம், மந்தவெளி: என் மனம் அமைதி இழந்து தவிக்கிறது. யாரிடம் ஆலோசனை கேட்டால் மன அமைதி திரும்பும்?
அவரவர் மன அமைதி வேண்டி, அவரவரே தவித்துக் கொண்டிருக்கும் காலம் இது; எனவே, யாரிடம் சென்று ஆலோசனை கேட்டாலும் பயன் இல்லை. உங்களைத் தவிர, உங்களுக்கு மன அமைதியைத் திரும்பத் தேடித் தர ஆள் கிடையாது. நிதானமாக யோசியுங்கள்...மன அமைதி இழந்ததற்கான காரணம் புரிபடும். அவற்றை களையுங்கள்; ஓடிவரும் மன அமைதி!