ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு அரக்கன் இருக்கிறான்; ஒரு வக்கிரன் குடியிருக்கிறான். எளிதாகச் சொல்வது என்றால், 'இவனா அப்படி?' என்று நம்ப முடியாத அளவிற்கு, மோசமானவன் உள்ளுக்குள் உறைந்து கிடக்கிறான். நண்பர்களுள், நம்பிக்கை துரோகிகளாகிப் போனவர்களையும், நம்ப வைத்து கழுத்தறுத்தவர்கள் என்கிற நீண்ட பட்டியலில் இடம் பெற்றவர்களையும், நீதிமன்ற படிக்கட்டுகளை மிதித்துக் கொண்டிருக்கும் தந்தைகளையும், அவர்களது மகன்களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் அல்லது உங்களை கடந்து போயிருப்பர்.
'அவனுக்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை; அதனால், தவறு செய்யவில்லை' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
நல்லவர்களையெல்லாம் இப்படிச் சொல்லி கொச்சைப்படுத்திவிட முடியாது. ஆனால், இந்த வாக்குமூலத்தில் உண்மை உண்டு. பணம் சார்ந்தவை, பொருள் சார்ந்தவை, உடல் சார்ந்தவை, சட்டத்திற்கு புறம்பானவை மற்றும் வாய்மொழி சார்ந்தவை என்று தவறுகளை ஐந்து பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம்.
'நம்மை எப்போதும் யாரோ கவனித்துக் கொண்டே இருக்கின்றனர்...' என்று நம்புங்கள்; தவறு செய்வதற்கு தயக்கம் வந்து விடும். ஒரு தவறை செயல்படுத்தும் முன், அப்படிச் செய்ய எண்ணுபவர்கள், மனதளவில் ஒரு பெருந்தவறை முதலில் செய்கின்றனர். அது என்ன தெரியுமா? 'இத்தவறை செய்வதன் மூலம் அந்த அனுபவம் எவ்வளவு சுகமானது, எவ்வளவு இனியது, எவ்வளவு லாபகரமானது, எவ்வளவு நல்லது...' என்று மட்டுமே கற்பனை செய்கின்றனர்.
கற்பனை செய்கிறதாவது? அதற்குள்ளேயே வாழவே ஆரம்பித்து விடுகின்றனர். செய்யப் போகும் தவறின் பலன்கள் கைக்குள்ளே வந்து சிக்கி விட்ட மாதிரி மனதிற்குள் குதூகலிக்கின்றனர். திரும்ப திரும்ப இதை, வேறு வேறு கோணத்தில் காட்சிகளாய் வரைந்து பார்த்து மகிழ்கின்றனர்.
இவ்வளவு தூரம் இப்பாதையில் பயணித்து விட்ட பின், இவர்களால் பின்னோக்கி வரவே முடிவதில்லை. இப்போது இவர்கள் மனதிற்குள் என்ன ரேகை ஓடுகிறது தெரியுமா? 'என்ன ஆனாலும் சரி, இத்தவறை நிகழ்த்தியே தீருவது...' என்கிற தீர்மானத்திற்கு வருகின்றனர்.
பின், இனி யார் தடுத்தாலும் சரி, இது நிகழ்ந்தே தீரும் என்கிற வெறிக்குள் பாய்கின்றனர். இது போதும், அறிவு மழுங்கிப் போவதற்கு.
ஒரு கெட்ட எண்ணம் தோன்றியதும், 'வா... தவறு செய்...' என்று உள்ளரக்கன் ஒருவரை தவறு செய்ய தூண்டும் போதே, 'சே... வெளியில் தெரிந்தால் அவமானமல்லவா, எவ்வளவு கேவலம். காறித் துப்ப மாட்டார்களா. இது பச்சை துரோகமல்லவா, நம்மீது மதிப்பும், பிரியமும் வைத்திருக்கும் இவர் (பெயரை நிரப்பிக் கொள்க) என்ன நினைப்பர்? செய்தித்தாளில் வராதா? 'டிவி' சேனல்களில் கிழித்து, நாராக்கி விட மாட்டர்களா? அடி பின்னி விட மாட்டார்களா? வம்பு, வழக்கு, காவல் நிலையம், நீதிமன்றம் என்று மானம் போய், காலங்காலமாய் ஈட்டிய நற்பெயர், ஒரே நாளில் காற்றில் பறக்காதா, இவையெல்லாம் எனக்கு தேவை தானா...' என்று எக்கச்சக்கமான எதிர்மறை விளைவுகளை, எண்ணங்களை, கற்பனை காட்சிகளாய் விரித்து பார்க்க வேண்டும்.
இதைச் சரிவர உணர்ந்து செய்தால், தவறின் பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டோம்!
லேனா தமிழ்வாணன்