கடந்த, 2009ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட வாசகி சித்ராவிடம், நேரில் வந்து விவரம் சொல்ல நேரம் ஒதுக்கித்தர கேட்டு போன் செய்த போது, போனை எடுத்த சித்ராவின் மகள் ராதிகா, 'அம்மா ஆஸ்பத்திரியில் இருக்காங்க. அநேகமா டூர் வர்றதுக்கு வாய்ப்பு இருக்காது...' என்று சொன்னவர், இருங்க இருங்க அம்மா ஏதோ சொல்லணும்ன்னு விரும்பறாங்க...' என்றவர், தொடர்பை துண்டித்தார்.
இருபது நிமிட இடைவெளிக்கு பின் மீண்டும் என் கைபேசியில் அழைப்பு வந்தது. இந்த முறை பேசியவர் வாசகி சித்ராவேதான். 'சார், கொஞ்சம் கூடுதல் அலைச்சல். சுகர் மற்றும் பிரஷர் கூடிருச்சு; ஒரு செக்கப்பிற்காக ஆஸ்பத்திரி வந்தேன். டாக்டர் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்களேன் என்றார். அதான் இங்கே இருக்கேன். நான் இப்ப நல்லாத்தான் இருக்கேன். எம் பொண்ணுதான் பயந்துட்டா. அதெல்லாம் விடுங்க. நானும், என் பொண்ணும் கட்டாயம் இந்த டூர்ல கலந்துக்கிறோம்...' என்றார்.
'நீங்க எங்க இருக்கீங்க?' என்றார். 'புதுச்சேரி வாசகரை பார்க்க வந்தேன். கல்பாக்கம் வழியாக சென்னை திரும்புவேன் இரவு 8:00 மணி போல கல்பாக்கம் வருவேன்...' என்றதும் 'அப்ப அவசியம் வீட்டிற்கு வந்துருங்க. நான் வீட்லதான் இருப்பேன்...' என்றார்.
உடனடியாக டாக்டரிடம் போய், 'என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டில் இருக்கணும்...' என்று சொல்லியவரின், 'எனர்ஜியை' பார்த்த டாக்டர் திரும்பவும் செக்கப் செய்து, 'இப்ப நார்மலாத்தான் இருக்கீங்க. வீட்டிற்கு போகலாம்...' என்று சொல்லியிருக்கிறார்.
வீட்டிற்கு வந்தவர், எனக்கு விதவிதமான உணவுகளை சமைத்து பரிமாறியவர், தான் படித்த தடிதடியான யவனராணி, கடல்புறா, பொன்னியின் செல்வன் புத்தகத்தை எல்லாம் காண்பித்து பேசினார். பின்னர் பேச்சு வாரமலர் பக்கம் திரும்பியது. இதழ் மீது தான் வைத்திருக்கும் அபிமானத்தையும், இந்த டூருக்கு தொடர்ந்து எழுதிப்போட்டுவரும் கதையையும் உற்சாகமாக பேசி, வழியனுப்பி வைத்தார்.
வழியனுப்பும் போது இருந்த அதே உற்சாகத்துடன் டூரில் கலந்து கொண்டார். டூர் முடிந்து வீடு திரும்பியதும், உற்சாகமாக பேசினார் மகள் ராதிகா. 'நல்லவேளை நாங்க டூரை மிஸ் செய்யப் பார்த்தோம்... இப்ப அம்மா ரொம்ப நல்லா இருக்காங்க. அதுவும், அந்துமணியோட நன்றிக்கடிதத்தோடு வந்த டூர் ஆல்பத்தை பார்த்தபின், இன்னும் சந்தோஷமாகி விட்டார். டாக்டர் பார்த்துட்டு மருந்து மாத்திரை எல்லாம் குறைச்சுட்டார்னா பார்த்துக்குங்களேன்...' என்றார்.
அந்த ஆண்டு டூரில் கலந்து கொண்ட ஜெயந்தி, உமா மகேஸ்வரி, சுதா, சுந்தரி, பார்வதி ஆகியோர் பாட்டுப்பாடி மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.இவர்களுக்கு ஏற்றாற் போல வாசகிகள் பாதுகாப்புக்கு வந்த குற்றாலம் டவுன் பெண் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி இவர்களுடன் ரொம்பவே சிநேகமாகி விட்டார்.
மெயினருவியில் பெண்கள் பக்கம் விழுவதைவிட ஆண்கள் பக்கம் தண்ணீர் அதிகமாகவே விழும், கொஞ்சம் ஆவேசமாகவும். அதில், குளிப்பது ஆனந்தத்திலும் ஆனந்தம், பேரானந்தம் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி மெயினருவியில் குளித்து வந்த வாசகர்கள் சரவணன், சுந்தர், சீனிவாசன், விஜயகுமார் ஆகியோர், 'என்ன சுகம் என்ன சந்தோஷம்...' என்று சொல்லி உசுப்பிவிடவே, 'நாங்களும் அந்த பக்கம் குளிக்கணும் மேடம்...' என்று சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமியிடம் வேண்டுகோள் வைத்தனர்.
'அவ்வளவுதானே... குளிச்சுட்டா போச்சு...' என்று சிரித்தபடி சொல்லியவர், அடுத்த சில நிமிடங்களில் மெயினருவியில் ஆண்கள் பக்கத்தை சிறிது நேரம் கிளியர் செய்து, 'இப்ப போய் ஜாலியா குளிங்க சிஸ்டர்ஸ்...' என்று சொல்லி வழியனுப்பி வைத்தார்.
இது போல மெயினருவியில் ஆண்கள் பகுதியில் குளித்த பெண்கள், அநேகமாக நம் வாசகிகள் மட்டும்தான் எனலாம்.குளித்து முடித்து, அந்த சந்தோஷத்துடன் அனைவரும் ஓடிவந்து கட்டிப்பிடித்து கைகொடுத்து, தங்களது பாசத்தை காட்டியதில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமியின் உடையும், உள்ளமும் ரொம்பவே ஈரமாகி விட்டது.
அதன் பின், வாசகர்கள் பஸ் கிளம்பினால் போதும், பைலட் போல தன் ஜீப்பில், பஸ்சுக்கு முன்பாக போய்விடுவார். ஐந்தருவியில் ஓரு அருவியை தனியாக ஓதுக்கி கொடுத்தார், சிற்றருவியில் மாலை, 6:00 மணிக்கு மேல் யாருக்கும் குளிக்க அனுமதி இல்லை. ஆனால், நம் வாசகர்கள் குளிக்க அனுமதித்தார்.
அந்த ஆண்டு அப்படி என்றால், 2010ம் ஆண்டு கலந்து கொண்ட பழனி வாசகி அங்குலதாவை எந்த காலத்திலும் மறக்க முடியாது. அதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. என்ன காரணம் என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.
— அருவி கொட்டும்.
குற்றாலமும், முத்துலட்சுமியும்...
தற்போது, புளியங்குடி சப்-இன்ஸ்பெக்டராக இருக்கிறார்.
முறைப்பும் விறைப்புமாக இருக்கும் காவல்துறையில் இவர் ஒரு விதிவிலக்கு. கண்களில் அன்பையும், கருணையையும் நிறைத்துக்கொண்ட சிரித்த முகம், காவல்துறைக்கு கவுரவம் சேர்க்கும் ஒரு மரகதம்.
இந்த உலகில் கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது. எல்லாரும் நல்லவர்களே என்பது, இவர் கட்சி. சந்தர்ப்ப சூழ்நிலைதான் ஒருவனை கெடுக்கிறது. அப்படிப்பட்டவர்களை அன்பால் திருத்தினால் ஆயுளுக்கும் கெட மாட்டார்கள் என்று சொல்வார். சொல்வது மட்டுமல்ல, முடிந்தவரை செயலிலும் காட்டுவார். இதன் காரணமாக, இவர் நிலையம் இருக்கும் லிமிட்டில் குற்ற எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்.
சின்ன சின்ன பிணக்குகளை கூட தாங்காமல் பிரிய துடிக்கும் தம்பதிகள் பலருக்கு, கவுன்சிலிங் செய்து வைத்துள்ளார். அவர்களில் பலர், 'நல்லவேளை உங்கள சந்திச்சோம் நீங்கதான் பக்குவமா எடுத்துச்சொல்லி எங்களை வாழ வச்சீங்க...' என்று, தங்கள் சந்தோஷத்தின் அடையாளமான குழந்தைகளோடு வந்து அவ்வப்போது நன்றி சொல்லிச் செல்வர்.
இப்போது மாணவியர் வாழ்க்கைதான் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது. அவர்கள் எப்படி எல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பள்ளி, கல்லூரிகளில் போய் பேசுவதை ஒரு வேலையாக அல்ல வேள்வியாகவே செய்து வருகிறார்.
குற்றாலத்தில் மூன்று ஆண்டுகள் டூட்டியில் இருந்த போது, டூர் நடைபெறும் மூன்று நாட்களும் வாசகரோடு வாசகராக இருப்பார். 'இப்படி சிரித்த முகத்துடன் அன்பான பெண் காவல்துறை அதிகாரியை இப்போதுதான் பார்க்கிறோம்...' என்று சொல்லி, நம் வாசகியர்கள் இவரோடு ரொம்பவே ஒட்டிக் கொள்வர்.
அந்துமணி இவரை எப்போது பார்த்தாலும், 'வைஜெயந்தி ஐ.பி.எஸ்., மேடம் எப்படி இருக்கீங்க?' என்றுதான் விசாரிப்பார்.அன்பால் உலகை வெல்லலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் காக்கி உடையோடு, கருணை உடையையும் அணிந்து கொண்டுள்ள முத்துலட்சுமி மேடத்தை எத்தனை ஆண்டுகளானாலும் வாசகர்கள் மறக்க மாட்டார்கள்.
எல்.முருகராஜ்