சென்னை ஐ.ஐ.டி.,யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த இன்ஜினியரிங் மாணவன் நாகா நரேஷ், தற்போது, பெங்களுரு கூகுள் அலுவலகத்தில் பணி புரிகிறார். ஆண்டுதோறும் ஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், பிரபல கார்ப்ரேட் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது, 21 வயது நரேஷுக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா?
படிப்பறிவு இல்லாத பெற்றோருக்கு மகனாக பிறந்த நரேஷுக்கு, இரண்டு கால்களும் கிடையாது; வீல் சேர் தான் துணை. எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வரும் இவர், ஆந்திராவில் கோதாவரி நதிக்கரையில் உள்ள தீபாரு என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். நரேஷின் அப்பா லாரி டிரைவர்; அம்மா குடும்ப தலைவி.
கிராமத்தில் எல்லா சிறுவர்களையும் போல ஓடி, ஆடி உற்சாகமாக வலம் வந்த நரேஷுக்கு, ஜன.,11, 1993ல் நேர்ந்த ஒரு விபத்து, இவரது வாழ்க்கையில் சோக இடியாக இறங்கியது.
பொங்கல் விடுமுறையில், பாட்டியை பார்ப்பதற்காக, அருகில் உள்ள ஊருக்கு குடும்பத்தினருடன், லாரியில் பயணம் செய்த போது ஏற்பட்ட விபத்தில், இரு கால்களையும் இழந்தார்.
அரசு மருத்துவமனையில் மூன்று மாத சிகிச்சைக்கு பின், நினைவு திரும்பியதும் அம்மாவை பார்த்து, இவர் கேட்ட முதல் கேள்வியே, 'அம்மா என் இரு கால்கள் எங்கே?' இக்கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், இவரது தாய் கதறி அழுததை இன்னும் நினைவு கூர்கிறார்.
'நான் இரு கால்களை இழந்து விட்டாலும், என் குடும்பத்தினருடன், ஒட்டு மொத்த கிராமமே, என் பின்னால் நின்றது. மருத்துவமனையிலிருந்து கிராமத்திற்கு திரும்பிய முதல் நாளில், வீடு முழுவதும் மக்கள் கூட்டம். 'காலில்லாத நரேஷை எப்படி காப்பாற்ற போகிறீர்கள்?' என பரிதாபப்பட்ட கிராமத்தினர், தின்பண்டங்களை வாங்கி குவித்து விட்டனர். இந்த இக்கட்டான நேரத்திலும், நான் கடவுளை நம்பினேன். என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அவர் தான் நடத்தி வைக்கிறார். எனக்கு நேர்ந்தது விபத்தில்லை; என் விதி...' என்கிறார்.
இதன்பின், காலில்லாமலேயே இவரது ஓட்டம் துவங்கியது. அருகிலுள்ள நகர மிஷினரி பள்ளியில் இவரது சகோதரியுடன் படிப்பை துவங்கினார்.
பள்ளியில் கணக்கு வாத்தியார் மற்றும் சீனியர் மாணவர் ஒருவரும் பெரிதும் உற்சாகப்படுத்தி, பல வழிகளிலும் பக்கபலமாக இருந்துள்ளனர். இதனால், பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் இடம். அதே உற்சாகத்துடன், பிளஸ் 2 படிப்பை முடித்து ஐ.ஐ.டி., போட்டித் தேர்வில் மாநில அளவில் நல்ல ரேங்க் எடுத்ததால், சென்னை ஐ.ஐ.டி.,யில் இடம் கிடைத்தது.
'சென்னை ஐ.ஐ.டி., சீனியர் மாணவர் கார்த்திக், பேராசிரியர் பாண்டு ரங்கன், ரயில் பயணத்தின் போது சந்தித்த நண்பர் சுந்தர், ஐ.ஐ.டி., மற்றும் ஜே.இ.இ., தேர்வில் டாப் டென் மாணவர், கே.கே.எஸ். பாஸ்கர் உட்பட பலரும் உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் செய்த உதவிகளை காலத்திற்கும் மறக்க முடியாது. என்னை சுற்றி இத்தனை நல்ல உள்ளங்கள் இருக்கும் போது, என் சந்தோஷத்திற்கு எந்த குறைவும் இல்லை. முதலில், 'மார்கன் ஸ்டேன்லி' என்ற நிறுவனத்தில் தேர்வான நான், என் பாடப்பிரிவுக்கு ஏற்ற வேலை கிடைத்ததால், கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தேன். இப்போது நான் சுதந்திரமானவன்; நான் ஒரு அதிர்ஷ்டக்காரன். நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியும், கடவுள் எனக்கு கொடுத்த பரிசு...' என்கிறார்.
ஊனத்தை கண்டு வீட்டுக்குள் முடங்கி விடாமல், வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு சாதித்துக் காட்டிய நாகா நரேஷ் உண்மையில் அதிர்ஷ்டசாலி தான்!
முத்துவாப்பா