அகில இந்திய வானொலி புதுடில்லி நிலையத்தில், தமிழ், செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் சரோஜ் நாராயணசாமி. எழுத்தாளர், விமர்சகர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர் என்ற பல முகம் உண்டு இவருக்கு. சமீபத்தில், காலமான இயக்குனர் கே.பாலசந்தர் பற்றிய தன் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்:
கடந்த, 1960 மற்றும் 1970ம் ஆண்டுகளில், ஒரு தமிழ் சினிமாவை பார்ப்பதற்கு முன், அதில் இடம் பெறும் கதாநாயகி அல்லது கதாநாயகன் யார் என்பதை அறிந்த பின் தான், பலரும் திரையரங்கிற்குச் செல்வர். ஆனால், இயக்குனர் கே.பாலசந்தரின் இயக்கத்தில், அரங்கேற்றம் படம் அரங்கேறியது முதல், பெண் குலத்தார், ஒரு படத்தில் முதலில் கவனித்தது, படத்தின் இயக்குனர் பெயரைத் தான்.
அப்பெண்கள் வரிசையில் நானும் ஒருத்தி. அதிலும், அந்த இயக்குனர் கே.பாலசந்தராக இருந்து விட்டால், கண்டிப்பாக அப்படத்தை தவறாமல் உடனே பிளாக்கிலாவது டிக்கெட் வாங்கி பார்த்து விடுவேன்.
காரணம், இயக்குனர் கே.பி.,யின் அந்த தனி முத்திரையை, வேறு எந்த இயக்குனரிடமும் நான் கண்டதில்லை. அதேபோல், தமிழ்ப்பட இயக்குனர் கே.பி.,யின் படங்களில், முக்கால்வாசி படங்களை நான் பார்த்திருக்கிறேன். அதுமட்டுமல்ல... தேசிய திரைப்பட விருதுகளுக்காக தலைநகர் டில்லிக்கு அனுப்பி வைக்கப்படும் பெரும்பாலான தமிழ்ப் படங்களையும், 'ஜூரி' உறுப்பினர்களுக்கு உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்லும் பொறுப்பும், எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அத்தகைய ஓரிரு சந்தர்ப்பங்களில், இயக்குனர் கே.பி.,யின் சில படங்களை நடுவர் குழுவில், தமிழ் தெரியாத பிற மாநில, 'ஜூரி' உறுப்பினர்களுக்கு, உடனுக்குடன் தமிழிலிருந்து, ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து சொல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அப்போது, கே.பி.,யை நேரில் பார்த்து சில வார்த்தைகள் பேசியிருக்கிறேன்.
இத்தகைய சந்தர்ப்பத்தில் தான், அவள் ஒரு தொடர்கதை படத்துக்கு, காதில் ஹெட் போனை மாட்டிக் கொண்டு, மிகச் சிறிய அறையொன்றில் அமர்ந்தவாறே, தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கொண்டிருந்தேன். அத்தருணத்தில், கே.பி.,யின் முத்திரை பதித்த அந்த அருமையான, 'பஞ்ச்' டயலாக் வந்தது. 'கல்யாணம் ஆகிறதுக்கு முன்னாலே கர்வமா இருக்கலாம்; கர்ப்பமாக தான் இருக்கக்கூடாது...' என்று. இதை, உடனே ஆங்கிலத்தில், அழகிய வார்த்தைகளுடன் மொழி பெயர்த்து சொன்னவுடன், 'ஜூரி' உறுப்பினர்கள் அனைவருமே கை தட்டி, வாய் விட்டு சிரித்தனர்.
பாலசந்தரின், அவர்கள் திரைப்படத்தில், ஒரு காட்சியில் கதாநாயகி, 'மிஸ்டர் ராமநாதன்...' என்று கர்ஜிக்கும் குரலில் கூப்பிடும் போது, எதிரில் நிற்கும் ரஜினிகாந்தே நடுங்கிப் போய் விடுவார். இயக்குனர் சிகரம், அப்படத்தில் இமயத்தையே தொட்டு விட்டார் என்று சொன்னால் மிகையாகாது.
பெண் விடுதலையை போற்றிப் பாடிய சுப்ரமணிய பாரதியின் மணியான சிந்தனைகளையும், கொள்கைகளையும் அப்படியே தம் படைப்புகளில் படம் பிடித்துக் காட்டியவர் கே.பி., அரங்கேற்றம், அவர்கள், அபூர்வ ராகங்கள், சிந்து பைரவி, நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், இரு கோடுகள், வறுமையின் நிறம் சிவப்பு, மறுபக்கம் மற்றும் தண்ணீர் தண்ணீர் இவை போன்ற, முத்து முத்தான படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக படைக்கப்பட்டவை அல்ல; சினிமா ரசிகர்களிடையே சமூக ரீதியிலான விழிப்புணர்ச்சியை தோற்றுவித்து, பெண்மையின் மதிப்பை, இந்த சமுதாயத்திற்கு சிறப்பாக உணர்த்திடச் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த சிறப்பான படங்கள் மக்களை திரும்ப திரும்ப பார்க்கச் செய்த படைப்புகள்.
கே.பாலசந்தர் உருவாக்கிய பிரபல நடிக -நடிகைகள், 65க்கும் மேற்பட்டவர்கள் இருப்பர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகேஷ், சுஜாதா, ஜெயப்பிரதா, சரிதா மற்றும் ஸ்ரீதேவி போன்ற எத்தனையோ நடிக - நடிகைகளை சினிமா உலகிற்கு அடையாளம் காட்டி, பிரபல நட்சத்திரங்களாய், 'செல்லுலாய்ட்' உலகில் கொடி கட்டிப் பறக்கச் செய்த பெருமை, பாலசந்தரையே சாரும்.
சின்னத்திரையில்கூட, வெற்றி வாகை சூடி, வலம் வந்தவர் பாலசந்தர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் கொடி கட்டிப் பறந்தார். இந்தி மொழியில் அவர் படைத்த, ஏக் துஜே கேலியே என்ற படம், வசூலில் சக்கைபோடு போட்டது. ஏன் ஒரு சில தமிழ்ப்படங்களிலும், 'டிவி' தொடர்களிலும் கூட பாலசந்தர் தலைகாட்டியிருக்கிறார் என்றால் பாருங்களேன். இத்தனை சாதனைகளுக்கும், அவருடைய மேடை நாடக அனுபவமே, காரணம் எனலாம்.
எண்ணற்ற நண்பர்களையும், கலை உலக கலைஞர்களையும், திரை உலகத் துறையில் அளவில்லா அனுபவத்தையும், ஆற்றலையும் பெற்று விளங்கிய அந்த தமிழ் திரையுலக ஜாம்பவான், இன்று நம்மிடையே இல்லை. உண்மையாகவே ஒரு சகாப்தம் ஓய்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
சரோஜ் நாராயணசுவாமி