தெலுங்குக்கு தாவும் தனுஷ்!
தமிழை தொடர்ந்து, இந்தியிலும் நடித்து வரும் தனுஷுக்கு, அடுத்தபடியாக, தெலுங்கு சினிமாவிலும் காலூன்ற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில், சுப்ரமணியம் பி.டெக் என்ற படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட அவர், தன் ஆசையை வெளிப்படையாக பேசியுள்ளார். அதோடு, 'இதுவரை நான் ஜாலியான, ரொமான்டிக் கதைகளில்தான் அதிகமாக நடித்திருக்கிறேன்; ஆனால், அமிதாப்பச்சனுடன் நடித்து வரும், ஷாமிதாப் படத்தில் சீரியசான ரோலில் நடிக்கிறேன். அதனால், இதையடுத்து, அந்த மாதிரி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன்...' என்றும், தன் மனநிலையை தெலுங்கு இயக்குனர்கள் முன் வைத் திருக்கிறார் தனுஷ்.
— சினிமா பொன்னையா
டாப்சியின் டார்கெட்!
ஆடுகளம் டாப்சிக்கு, எதிர்பார்த்தபடி கோலிவுட்டில் படங்கள் இல்லை. இருப்பினும், தன்னை மார்க்கெட்டில் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஆரம்பம் மற்றும் வை ராஜா வை போன்ற படங்களில், சிறிய வேடங்களில் நடித்த அவர், தற்போது லாரன்சின் இயக்கத்தில் நடித்து வரும், முனி 3 கங்கா படத்தை ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இதே படத்தில், நித்யா மேனனும் இன்னொரு நாயகி என்றபோதும், படத்தின் லீடு ரோலான பேய் வேடத்தில் இவர்தான் நடிக்கிறார். அதனால், மேலும், இதுவரை சாப்ட்டான நடிகையாகவே தன்னை வெளிப்படுத்தியிருக்கும் டாப்சி, இந்த படத்தில் முதன்முறையாக ஆவேச நடிப்பையும், வெளிப்படுத்தியிருக்கிறார். அதோடு, இந்த படம் வெளியான பின், ஆக் ஷன் ரோல்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ள டாப்சி, 'என் டார்கெட்டே அதிரடியான நாயகியாக வேண்டும்; இந்தியா முழுக்க பேசப்பட வேண்டும் என்பதுதான்...' என்று, 'பில்டப்' கொடுத்து வருகிறார். இருக்க இருக்க எல்லாம் இசைவாகும்.
— எலீசா
ஹன்சிகா திடீர் முடிவு!
பல படங்களில், 'சிங்கிள்' ஹீரோயினியாக நடித்து வந்தபோதும், சில படங்களில், 'டபுள் ஹீரோயினி' ரோலிலும் நடித்துள்ளார் ஹன்சிகா. ஆனால், அப்படி நடித்த படங்களில், இவரது வேடங்களை, 'டம்மி' செய்து வந்ததால், 'இனிமேல், 'டபுள் ஹீரோயினி' வேடத்தில் நடிப்பதில்லை...' என்று முடிவெடுத்திருக்கிறார். ஹன்சிகாவின், இந்த முடிவுக்கு முக்கிய காரணமே, தற்போது விஜய்யுடன், அவர் நடித்து வரும், மாரீசன் படம்தான். இந்த படத்தில், ஸ்ருதிஹாசனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஹன்சிகாவை, 'டம்மி' செய்து விட்டனர். ஆரம்பத்தில், விஜய் படம் என்பதால், அந்த வாய்ப்பை கைப்பற்ற, கடும் முயற்சி எடுத்த, அவர் இப்போது, 'இந்த மாதிரி, ஒரு கேரக்டர் ரோலுக்கா இப்படி மெனக்கெட்டேன்...' என்று 'பீல்' செய்துகொண்டிருக்கிறார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
— எலீசா
'கெட்அவுட்' சொல்லும் விஜயசேதுபதி!
கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஜிகர்தண்டா மற்றும் திருடன் போலீஸ் உள்பட சில படங்களில், 'கெஸ்ட்' ரோலில் நடித்திருந்தார் விஜயசேதுபதி. ஆனால், இதெல்லாமே நட்புக்காக அவர் செய்தது. விளைவு, அவருக்கு முன்பின் பழக்கமில்லாதவர்களும், இப்போது அவரை, 'கெஸ்ட்' ரோலில் நடிக்குமாறு கேட்டு, படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், டென்ஷன் ஆன விஜயசேதுபதி, 'கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது; இந்த படங்களில் நடிக்கவே நேரமில்லை. அதனால், என்னை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்...' என்று அவர்களை விரட்டியடித்து வருகிறார். இருப்பினும், படையெடுப்பு தொடர்கிறது. அதனால், 'கெஸ்ட்' ரோலில் நடிக்க கேட்டு யாராவது வந்தால், அலுவலகத்திற்குள்ளேயே விட வேண்டாம் என்று தன் எடுபிடிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
முன்பெல்லாம் பப்ளிமாஸ் நடிகையின் தாய்குலம் படவாய்ப்புகளுக்காக, கதாநாயகர்களை காக்கா பிடித்து வந்தார். ஆனால், இப்போது மகளுக்கு மார்க்கெட் வந்து விட்டதால், நடிகர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அதுமட்டுமின்றி, மகள் நடிகை, நடிகர்களுடன் பார்ட்டிகளுக்கு செல்வதற்கும் தடை போட்டு விட்டார். இதனால், ஒருகாலத்தில் பப்ளிமாஸ் நடிகைக்கு விழுந்து விழுந்து சிபாரிசு செய்து வந்த சில இளவட்ட கதாநாயகர்கள், இப்போது அவரது மார்க்கெட்டை கவிழ்க்கும் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
வருத்தப்படாத படத்தில் அறிமுகமான அந்த நடிகை, ஆந்திராவில் நடித்து வந்தபோது, சில ஹீரோக்களுட,ன் 'கிசுகிசு'க்களில் சிக்கி ரொம்பவே சிதைந்து போய்தான் கோலிவுட்டுக்கே வந்தார். அதன் காரணமாகவே, இங்கு வந்ததில் இருந்து, நடிகர்களுடன் கோடு போட்டு பழகி வந்தார். ஆனால், சமீபகாலமாக அம்மணி போட்ட கோட்டை சிலர் அழித்து விட்டனர். அதோடு வலுக்கட்டாயமாக, அவரை கேரவனுக்குள் இழுத்து, கடலை போடுகின்றனர். இனிமேல், தன் கட்டுக்காவல் வேலைக்கு ஆகாது என்பதால், நடிகையும் கேரவனுக்குள் கூத்தடிக்கும் வேலையை துவங்கி விட்டார்.
சினி துளிகள்!
* மூன்றாம் தட்டு கதாநாயகர்களுடன் நடித்து வரும் ஸ்ரீதிவ்யா, இரண்டாம் தட்டு கதாநாயகர்களிடம் நடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறார்.
* பாலாவின், தாரை தப்பட்டை படப்பிடிப்பு தஞ்சாவூரில் நடந்ததையடுத்து, அடுத்தகட்டமாக அந்தமான் செல்லவிருக்கிறது.
* காத்தாடி படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது, சில, 'குடிமன்னர்'கள் தன்னிடம் தகராறு செய்ததை அடுத்து, பலத்த செக்யூரிட்டியுடன் செல்கிறார் தன்ஷிகா.
* துல்கர் சல்மான் மற்றும் நித்யாமேனன் நடிக்கும், ஓ.கே., கண்மணி படத்தின் வசன காட்சிகளை இரண்டு மாதத்தில் முடித்து விட்டார்
மணிரத்னம்.
அவ்ளோதான்!